வைகைக்கரை காற்றே!......032

நந்து பிறந்த போது காந்தித் தாத்தா இல்லை. அவர் விட்டுச் சென்ற ராட்டிணம்தான் தமிழ்நாட்டில் இருந்தது. கதராடை அணிவது பரவலாக இருந்தது. காங்கிரஸ்காரர்கள் கட்டாயம் கதரில் இருக்க வேண்டும். சிலர் நேரு தொப்பி அணிந்தும் வேலை செய்வதுண்டு. சர்வோதய இயக்கத்தின் கடைகளில் பஞ்சு நூலுக்குச் காசு கொடுத்தனர். எனவே அந்த ஊரில் பலர் சின்ன தக்ளி கொண்டு எப்போது பார்த்தாலும் நூல் நூற்றுக் கொண்டேயிருந்தனர். நந்துவின் குடும்பம் அவ்வப்போது நூல் நூற்பதுண்டு. நந்துதான் கடையில் போல் பஞ்சு வாங்கி வருவான். ஓரணா, இரண்டணா கொடுத்தால் கைவிரல் போல் நீண்டிருக்கும் பஞ்சுக் கம்புகள் கொண்ட ஒரு கட்டு கிடைக்கும். கை பிடிக்க வாகாக இருக்கும் பஞ்சு விரல் கொண்டு தக்ளியில் செருகிக் கொள்ள வேண்டும். பின் தக்ளியை தொடையில் வைத்து அழுத்தமாக சுழற்ற வேண்டும். சுழற்றிய வேகத்துடன் தக்ளியை தொங்க விட வேண்டும். அப்போது பஞ்சிலிருந்து நூல் பிரிந்து வளர்ந்து கொண்டே வரும். அவரவர் கை நீளத்திற்கு வந்தவுடன் சுழற்சியை நிறுத்தி விட்டு இதுவரை உருவாக்கிய நூலை தக்ளியின் காம்பில் சுற்ற வேண்டும். நூல் ஏற, ஏற தக்ளி குண்டாகிக் கொண்டே வரும். இனிமேல் தக்ளி தாங்காது என்னும் போது அதைத்தூக்கிக் கொண்டு சர்வோதயா துணிக்கடைக்குப் போய் கொடுத்து காசு வாங்கி வர வேண்டும். தக்ளி நூற்பதில் பல வல்லுநர்களை அவன் பார்த்திருக்கிறான். மிக, மிக அழகாக மெல்லியதாக நூற்பவருண்டு. திண்டு, திண்டாய் வாங்கி வந்த பஞ்சை விட கொஞ்சம் மெலிதாக திரி, திரியாய் நூற்பவருண்டு. சில நேரங்களில் கடையில் எடுத்துக் கொள்ள மாட்டார்கள். அதுவரை நூற்றது எல்லாம் பழுதாகிவிடும். நந்து எவ்வளவுதான் முயன்றாலும் பிருந்தா அக்கா நூற்பது போல் மெல்லிதாக நூற்க முடிவதில்லை. நந்து குட்டைப்பையன். எனவே நீளமாக நூற்க முடியாது. அடிக்கடி சுற்ற வேண்டும். நந்து பார்த்தான், இவ்வளவு கஷ்டப்பட்டு நூற்று ஓரணா, ரெண்டணா என்று சேர்பதற்குப் பதில் வேறு வகையில் சம்பாதிக்க முடியும் என்று கற்றுக் கொண்டான்.

குட்டிப்பட்டருக்கு கோயிலுக்குள் போனால் நிறைய காசு கிடைக்கும். தட்டில் விழுகின்ற காசையெல்லாம் எடுத்து அவசர, அவசரமாய் வேட்டி மடிப்பில் வைத்து சுருட்டி விடுவார். நேரமாக ஆக மடியில் கனம் கூடும். வேட்டி கழண்டுவிடும் என்ற நிலை வரும் போது கோயிலுக்கு அருகிலிருக்கும் தன் வீட்டில் வந்து கத்துவார். மனைவி கை வேலையை அப்படியே போட்டு விட்டு ஓடி வருவாள். குட்டி பட்டர் கதவைச் சார்த்திவிட்டு வேட்டியை அப்படியே உருவுவார். சேர்த்த காசெல்லாம் அப்படியே தரையில் கலீரென்று கொட்டும். பிராக்கு பார்க்காமல் விழுந்த காசை எடுக்க வேண்டியது மனைவியின் கடமை. குட்டி பட்டர் பிள்ளை துரை இருந்தால் அவனும் காசு பொறுக்குவான். ஆனால் அவன் பொறுக்கிய காசு அவனுக்குத்தான். அம்மாவிடம் கொடுக்க மாட்டான். எவ்வளவு வந்தாலும் சரி. இப்படியே இவன் பொட்டலம், பொட்டலமாக காசு சேர்த்து வைத்திருந்தான். அவனுக்கு அவ்வளவு நண்பர்கள் கிடையாது. நந்துவிற்கு பகைவர்கள் கிடையாது. எனவே அவ்வப்போது வந்து ஒட்டிக் கொள்வான். சேர்த்து வைத்த காசை நந்துவுடன் செலவழிப்பான்.

நந்துவிற்கு வேறு வகையிலும் காசு கிடைக்கும். சித்தியா பெருமாள் கோயில் வாசலில் ஜோசியம் பார்ப்பார். சாயந்திரமானால் கிருஷ்ணய்யர் ஹோட்டலுக்குப் போய் ஸ்பெஷல் தோசை சாப்பிட வேண்டுமென்ற ஆசை மெதுவாய் வளர்ந்து வெறியாகும். சித்தி பையன் சேதுவை மெதுவாக கணக்குப்பண்ணுவான் நந்து. சேது பயந்து, பயந்து கோயிலுக்குப் போய் சித்தியா முன்னால் நிற்பான். சித்தியாவிற்கு கெட்ட கோபம் எப்போதும் கூடவே நிற்கும். எனவே முதலில் திட்டுதான் விழும். பிறகு அவருக்கு வந்த காசிலிருந்து ஒரு ரூபாய் எடுத்து தூக்கி வீசுவார். சேது பொறுக்கிக்கொண்டு ஓடி வந்துவிடுவான். ரெண்டு பேரும் அந்தக் காசில் ஹோட்டலில் போய் சாப்பிடுவர். நந்து நிற்பதைப் பார்த்து விட்டு இருவருக்கும் சேர்த்தே காசு போடுவார் சித்தியா. ஆனால் இது மிகவும் முரட்டுத்தனமாக நந்துவிற்குப்படும். சித்தியாவிடம் நாம் காசு கேட்டால் பிடிக்காது. அவராக ஏதாவது அல்வா அது இது என்று வாங்கிவருவார். அதைச் சாப்பிடவேண்டும். எனவே காசு கேட்டு அன்புடன் கொடுத்தது என்று சரித்திரத்தில் கிடையாது.

இதற்கொரு மாற்று காலப்போக்கில் வந்தது. அண்ணாவிற்கு திருப்புவனம் தாலுகா ஆபீஸில் ரெவின்யூ இன்ஸ்பெக்டராக வேலை கிடைத்தது. அதற்கென்ற பரிட்சையில் அண்ணா தேறியிருந்தார். தாலுகா ஆபீஸ் ஆத்தோரத்தில்தான் இருந்தது. சாயந்தரம் ஆபீஸ் விட்டு வரும் போது அண்ணாவுடன் யாராவது வருவார்கள். அவர்களுக்கு காரியம் ஆக வேண்டியிருக்கும். சாமியைப்பிடிச்சா ஆகுமென்று கிராமத்தில் சொல்லி அனுப்பியிருப்பார்கள். இவர் பின்னால் சுற்றி, சுற்றி வருவர். "சாமி வாங்க! காபி சாப்பிட்டுட்டு போலாம்" என்று கிருஷ்ணா கபேக்கு கூட்டிக் கொண்டு போவர். ஹோட்டலுக்கு வீட்டு வழியாகத்தான் போக வேண்டும். எனவே நந்து காத்துக் கொண்டிருப்பான். வண்டி கிராஸ் ஆகிறபோது அதில் ஏறிக்கொள்வான். ஐயரு வெறும் காப்பிதான் சாப்பிடுவார் என்றாலும் ஐயர் பிள்ளை ஸ்பெஷல் தோசைதான் சாப்பிடுவார் என்பது பாவம்! கூட வர கிராமத்து ஆசாமிக்குத் தெரியாது.

இப்படித்தான் தக்ளி நூற்று ஒரு காந்தியவாதியாகியிருக்க வேண்டிய நந்துவை கிராமத்து ஊழல் கெடுத்துவிட்டது!

0 பின்னூட்டங்கள்: