திசைகள் புதிய மலர் வந்துவிட்டது. அதில் எனது கட்டுரையின் பழைய வடிவமே வந்துள்ளது. திரு.மாலன் அவர்கள் கடந்த மாதம் திசைகள் இயக்கத்தின் காரணமாக மிகவும் 'பிசி'யாக இருந்ததால் எனது இரண்டாவது 'version' -ஐ வாசித்து இணைக்கமுடியாமல் இருந்திருக்கலாம். எனவேதான் இந்த இணைப்பு. கடைசி பத்தியில்தான் அதிக மாற்றங்கள் செய்துள்ளேன். அது வராமல் போனதில் எனக்கு வருத்தமே.

தொன்று நிகழ்ததனைத்தும்....

தமிழின் புதிய திணை

நா.கண்ணன்
தென்கொரியா

தமிழ் மரபு அறக்கட்டளை உருவாக்கப்பட்ட அதே ஆண்டு, தமிழிணைய மாநாடு 2001-ஐ ஒட்டி பினாங் நகரில் ஒரு செய்மதிக் கருத்தரங்கை அமைத்திருந்தார் பேராசிரியர் கார்த்திகேசு. அச்சமயம் 'தமிழும் இணையமும்' பற்றி என்னைப் பேச அழைத்திருந்தார். தமிழ் டாட் நெட்என்னும் மடலாடற் குழுவின் மூலம் எனக்கு அறிமுகமான முனைவர் கார்த்திகேசு தன் எழுத்தால், கூர்மையான விமர்சனப் பார்வையால் என்னை ஈர்த்திருந்தார். இந்த நட்பு என்னை பினாங்வரை கொண்டு சென்றது. எனது முதல் பயணத்திலேயே அவர் என்னைப் பினாங் தமிழ் எழுத்தாளர்கள் மத்தியில் அறிமுகப்படுத்தியிருந்தார். அக்காலக்கட்டத்தில் நான் இலக்கியகர்த்தா என்ற கோதாவிலிருந்து இணையத் தமிழ் மேம்பாட்டளாக வளர்ந்து கொண்டிருந்தேன். இணையம் எவ்வவகைகளில் தமிழ் மேம்பாட்டிற்கு உதவும் என்று கணித்துக் கொண்டிருந்தேன். மேலும் இந்தத்தொழில் நுட்பத்தைப் புரிந்து கொள்வதிலும், இதை எவ்வாறு தமிழ் இலக்கியகர்த்தாக்களிடமும், தமிழ் ஆர்வலர்களிடமும் அறிமுகப்படுத்துவது என்றும் ஆய்ந்து கொண்டிருந்தேன். தமிழ் டாட் நெட் மடலாடலில் ஒருமுறை கார்த்திகேசு இணையத்தின் விந்தை பற்றி எழுதினார். அதில் நாளை எழுதிய கடிதம் எப்படி நேற்று வந்து சேர்ந்தது என்பது பற்றிக் குறிப்பிட்டிருந்தார். மின்வெளியின் விந்தை பற்றிச் சிந்தித்திக்கொண்டிருந்த எனக்கு இது சுவாரசியமாகப்பட்டது! அதாவது உலகம் ஒரு கதியில் சுழலும் போது பகல்-இரவு தோன்றுகிறது. ஆனால் இந்த வேகத்தை விஞ்சும் ஒரு செயற்பாடு நடந்தால் கால அளவு நம்மைப் பொருத்தவரை பிறழ்வுற்றுப் போகிறது. இலத்திரன் கதியில் இயங்கும் இணையத்தில் ஊடாடல் என்பது நொடியில் நிகழ்ந்து விடுகிறது. முதலில் கிழக்கே வெளுக்கும் நாடுகளான ஜப்பான், கொரியா போன்ற நாடுகளில் ஒருவர் கடிதம் எழுதும் போது அவர் ஒரு நாள் முந்தி விடுகிறார். அக்கடிதம் எழுதும் போது அமெரிக்காவில் அது இன்னும் பழைய நாளிலேயே இருக்கும். ஆனால் கடிதம் அனுப்பிய அடுத்த நொடியில் அது அமெரிக்கா சென்று விடுவதால் 'நாளை எழுதிய கடிதம் நேற்று' போய் சேரும் விந்தை நிகழ்கிறது!

இணையம் தோன்றி, அதில் தமிழ் வேர் விட்ட கொஞ்ச காலத்திலேயே இணையத்தில் தமிழ் இதழ் தொடங்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. சென்னை ஆன் லைன் தொழில் வித்தகர்கள் அப்போது தமிழ் டாட் நெட்டில் எழுதிக் கொண்டிருந்தனர். இணையத்தில் ஓர் இதழ் ஆரம்பித்தால் என்ன பெயரிடுவது என்றெல்லாம் பேசப்பட்டது. "ஆறாம்திணை" என்ற பெயர் தமிழின் முதல் இணைய இதழுக்கு இடப்பட்டது. அப்போது மதுரைத்திட்டமென்னும் இலக்கிய மின்னாக்கல் தொடங்கியிருந்தது. அதன் வளர்ச்சி குறித்து எழுதிய "எழுதாக் கிளவி (வேதம்) முதல் இலத்திரன் பதிப்பு வரை!" என்ற என் கட்டுரையில் அது 5வது தமிழ்ச்சங்கம் என்று குறிப்பிட்டு எழுதியிருந்தேன். தமிழுக்கு மின்வெளியில் ஒரு சங்கம் கிடைத்துவிட்டது, ஒரு புதிய திணையும் கிடைத்துவிட்டது என்று உணர்ந்தேன். எனவே இத்திணைக்கோட்பாட்டை இன்னும் ஆழமாக எடுத்துச் செல்ல விரும்பி அது பற்றிப் பேசப்போவதாக பேரா.கார்த்திகேசுவிடம் சொல்லியிருந்தேன்.சிங்கப்பூரும், மலேசியாவும் போட்டி போட்டுக்கொண்டு இப்புதிய தொழில் நுட்பத்தை தமிழ்மயப்படுத்துவதில் ஆர்வம் காட்டின. சிங்கப்பூர் தமிழ் இணைய மாநாடு ஒரு பெரிய வெற்றி. அரங்கம் நிரம்பிய கூட்டம் எப்போதும்! இதை விஞ்ச வேண்டுமென்ற ஆவல் மலேசியர்களுக்கு இருந்தது அடுத்த மாநாடு நடந்த போது புரிந்தது. மலேசியாவின் பள்ளியாசிரியர்கள் எல்லோரும் அனேகமாக இம்மாநாட்டில் கலந்து கொண்டனர். அம்மாநாட்டின் அமைப்பாளர்களில் ஒருவரான 'அஞ்சல்' முத்து நெடுமாறன் அவர்கள் முதல் நாள் நிகழ்ச்சியில் இணையத்தின் முக்கியத்துவத்தை தமிழ் ஆசிரியர்களிடம் இட்டுச் செல்லுமாறு என்னைக் கேட்டுக் கொண்டிருந்தார். முதல் நிகழ்ச்சி என்பதால் எங்களுக்கு குறைந்த கால அளவே கொடுக்கப்பட்டது. 15 நிமிடங்கள் என்று ஞாபகம். அதற்குள் திணைக் கோட்பாட்டையும், இணையத்தின் புதிய வாய்ப்புகள் பற்றியும் அறிமுகப்படுத்தினேன். அதற்கு பெருத்த ஆதரவு இருந்ததோடல்லாமல் அதிகம் பேச என்னை அனுமதிக்கவில்லை என்ற குறைபாட்டையும் பல ஆசிரியர்கள் அமைப்பாளர்களிடம் சொன்னார்கள். அது எங்களுக்கு வெற்றிச் செய்தியாக எட்டியது. எனவே பினாங் மாநாட்டில் அதை படங்களுடன் ஒரு மணி நேர விளக்க உரையாக அளித்தேன். ஆசிரியப் பெருமக்களுக்கு இணையத்தின் மீதிருந்த அச்சம் விலகி அது தமிழின் ஒரு திணை என்பதை உணர்ந்தபோது மகிழ்ச்சி பொங்கியது. சிறிய அளவில் நடத்தத் திட்டமிட்டிருந்த அச்செய்மதி மாநாடு எதிர்பாராத அமோக வெற்றி பெற்றது. அம்மாநாட்டிற்குப் பின் எனக்கு பல ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளிலிருந்து பேச அழைப்பு வந்தது.

இந்த மாநாடுகள் நடந்த சமயத்தில் நான் முன்பு தமிழ் டாட் நெட்டில் இரண்டரை வருங்களாக எழுதி வந்த பாசுரமடல் கட்டுரைகளைத் தொகுத்து, இசை, ஓவியம் மற்றும் பிற பல்லூடக வசதிகளைச் சேர்த்து ஒரு குறுந்தகடு செய்து அதை முரசு அஞ்சல் பூத்தில் பரிசோதனை விற்பனைக்கு வைத்திருந்தேன் சிறு குடிசைத்தொழில் போல் அதை எச்டிஎமெல் (HTML) மொழியில் வீட்டிலேயே தயாரித்துக் கொண்டு போயிருந்தேன். தமிழ் எழுத்தாளர்கள் முயன்றால் தாங்களே பதிப்பாளராகவும் முடியும் என்பதைக் காட்டவே அந்த மின்னூலை ஆக்கியிருந்தேன். நான் எதிர்பார்த்ததையும் விட அது அமோகமாக விற்றுப் போனது. லாப நோக்கில் இல்லாமல் அது தமிழ் வளர்ச்சிக்கு உந்துதலாக இருக்க வேண்டுமென்று 10 ரிங்கெட் விலைக்கு விற்றேன். பினாங் வரும் போது மிகக்குறைந்த எண்ணிக்கையிலேயே சிடிக்கள் என்னிடமிருந்தன. எல்லாம் விற்றுப் போவதற்குள் எனக்கொன்று கொடுங்கள் என்று பேரா.கார்த்திகேசு என்னிடமிருந்து ஒரு சிடி பெற்றுக் கொண்டார். அது முழுதும் பினாங்கில் விற்று முடிந்தது. பின்னால் அதை இன்னும் சீர் செய்து பிடிஎப் (PDF) எனும் வடிவத்திலும் அதை கலிபோர்னியா மாநாட்டில் வைத்தேன். ஆழ்வார்கள் செய்வித்த ஈரப்பாசுரங்கள் மின்வடிவிலும் அமோக வரவேற்புப் பெற்றது மகிழ்ச்சியாக இருந்தது.

மின்வெளி என்பது தமிழின் 'ஆறாம்திணை" என்ற கோட்பாட்டின் ஆரம்பகால குறிப்புகளை என் வலையகத்திலுள்ள இரண்டு கட்டுரைகளில் காணலாம். 1) தகவல், தமிழ், வாழ்வு 2) தமிழ் கூறும் நல்லுலகம் ஒரு உணர்வா இல்லை இடமா?

கணினி என்பது தமிழன் முன்பு நினைத்துப்பார்த்திராத அளவு அவனது வாழ்வில் புகுந்து விட்டது. வானொலி, தொலைக்காட்சி, ரயில் பயணம், பேருந்துப் பயணம், சமையல், சாப்பாடு என்று எல்லாவற்றிலும் கணினியின் ஆளுமையுள்ளது. ஆனாலும் தமிழர்களுக்கு கணிப்பொறி என்றவுடன் எழுத்தாளர் சுஜாதா முன்பொருமுறை சொன்ன மாதிரி ஏதோ எலிப்பொறி என்பது போன்றதொரு அச்சவுணர்வு வருகிறது. இதை டெக்னோபோபியா என்பார்கள். நவீன தொழில் நுட்பங்களின் மீதான இனம் புரியாத அச்சம். பல இலக்கியவாதிகள் இவை இன்னும் ராக்கெட் டெக்னாலஜி என்றே எண்ணி வருகின்றனர். இது வீட்டுப் பசு வைவிட சாதுவான ஒன்று என்றும், வாலைக் குழைத்து வரும் நாயை விட உற்ற தோழன் என்றும் புரிய வைக்க வேண்டிய கடமை நமக்குள்ளது. தமிழ் படித்தவர்களுக்கு, இணையம், பாண்ட்வித், இலத்திரன் பரிமாற்றல் என்றெல்லாம் சொல்லி பயமுறுத்துவதை விட இணையம் என்பது ஒரு புதிய திணை. அத்திணைக்களம் மின்வெளியில் அமைந்துள்ளது என்று சொன்னால் எளிதாகப் புரிந்து கொள்வார்கள். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்பது போல் இதுவொரு திணை இதன் பண்புகள் இன்னின்ன என்று விளக்கினால் புரிந்து கொள்வார்கள். இதைத்தான் நான் செய்தேன். இது 'ஆறாம்திணை' என்பதை கோட்பாட்டளவில் விளக்கினேன். இது ஆய்வுக் கட்டுரையாக சஞ்சிகையில் வெளிவர வேண்டுமென்று கொலோன் பல்கலைக் கழக (ஜெர்மனி) ஆய்வாளர் உல்ரிக்க நிக்லாஸ் என்னிடம் சொன்னர். அவர் கேட்டுக் கொண்டபடி அதையொரு ஆய்வுக்கட்டுரையாகஉலகத் தமிழ் தகவல் தொழில் நுட்ப மையம் (உத்தமம்) ஆரம்பவிக்கவிருந்த சஞ்சிகைக்கு அனுப்பினேன்.

தமிழகம் சென்ற போது காந்தி சீனிவாஸ் அரங்கில் இலக்கிய சிந்தனை அமைப்பு என்னை இது பற்றி தமிழ் நாட்டு இலக்கியவாதிகளுக்கு எடுத்துச் சொல்லக் கேட்டுக் கொண்டது. அன்று தமிழக, இலங்கை எழுத்தாளர்கள் மத்தியில் இக்கோட்பாடு விளக்கப்பட்டது. திரு.சுஜாதா அவர்கள் கடைசி வரை இருந்து கேட்டார். இப்போது ஏறக்குறைய பலருக்கு இது அறிமுகமாகியிருக்கிறது. ஈழத்துக் கவிஞர் சேரன் காலச்சுவடில் மின்வெளியை ஏழாம் திணையென்றும் புகலிட எழுத்தை ஆறாம்திணையென்றும் குறிப்பிடுகின்றார். புகலிட எழுத்து பெரும்பாலும் பனிவெளியில் எழுகிறது. அதன் இலக்கணம் இனிமேல்தான் வரையறுக்கப்படவேண்டும்.ஆறாம்திணையின் இலக்கணங்கள் தெளிவாக என் கட்டுரையில் விளக்கப்பட்டுள்ளன. தமிழ் மரபு அறக்கட்டளை என்பதை நாங்கள் மின்வெளியின் தமிழ் பூங்கா என்றுதான் உருவகித்தோம். அதுவொரு பூங்காவெனில் அதன் நில அமைவு (landscape) அதை ஒரு திணையாக்கிவிடும். அது விஸ்தாரமான ஒரு நிலம். அங்கு நாம் வேண்டுவதை இ(ந)ட்டுக் கொள்ளலாம்.

ஆறாம்திணை பற்றிப் பேசும்போது புதிதாக உருவாகிவரும் 'வலைப்பதிவு இலக்கியத்தை' (Blog Literature) தொட்டுச் செல்லாமல் இருக்கமுடியாது. வலைப்பதிவு தரும் புதிய சுதந்திரத்தில் இதுவரை எழுத்துப் பத்திரிக்கையில் அனுபவப்படாத புத்தம் புதிய எழுத்தாளர்கள் உருவாகியுள்ளனர். இவர்களெல்லாம் மின்வெளிக் குழந்தைகள். ஆறாம்திணையின் வாரிசுகள். இவர்கள் எழுத்தில் ஒரு புதுமை இருக்கிறது. ஒரு இளமையின் துள்ளல் இருக்கிறது. புதிய முயற்சிகள் இருக்கின்றன.

உதாரணமாக காசி ஆறுமுகம் இன்று வலைப்பதிவுலகில் மிகப்பிரபலமடைந்திருக்கும்'சித்தூர்க்காரனின் சிந்தனைச் சிதறல்கள்' எனும் வலைப்பூவை உருவாக்கி நடத்திவருகிறார். இவர் தனது எழுத்துலகப் பிரவேசத்தை இப்படிக் கூறுகிறார் "உண்மையில் இந்த வலைப்பதிவு உலகத்திற்கு மட்டுமில்லாமல் இணையத்தில் தமிழுக்கே நான் புதியவன். தினமலர், குமதம், விகடனுக்கு மேல் இணையத்தில் தமிழ் இருக்கிறதென்பதே எனக்கு இந்த ஒரு வருடமாகத் தான் தெரியும். எந்த மடலாடற்குழுவிலும் உறுப்பினனாக இருந்ததில்லை. கதை, கவிதை, இலக்கியமெல்லாம் அவ்வளவாய் பரிச்சயமில்லை. அதனாலேயே எனக்கு இந்தவடிவத்தை மிகவும் பிடித்துப் போனது. என்னைப்போல கூச்ச சுபாவம் உள்ளவர்களுக்கு இது மிகவும் ஏற்ற வடிவமாகப் படவே, 'என்னாலும் எதையாவது கிறுக்கி வலைநிலத்தில் உலவவிட முடிகிறது பார்' என்ற சாத்தியம் என்னை இதில் ஈடுபட வைத்தது என நினைக்கிறேன்." ஆனால் இப்படிப்பட்டவர்கள்தான் ஆறாம்திணையில் சாதிக்கின்றனர். உதாரணமாக இவர் நியூக்கிளியஸ் எனும் நிரலி கொண்டு 100% தமிழாக்கப்பட்ட வலைப்பூவை உருவாக்கி பரிசோதனையில் வைத்திருக்கிறார். இதனால் உலகில் எங்கிருந்தாலும் தமிழில் வாசிக்கமுடியும். இப்போதுள்ள யுனிகோட் தொழில்நுட்பம் அதற்கு இடமளிக்கிறது. கொரியாவின் தலைநகரான சோல் (Seoul) நகரில் Coex என்றொரு மால் இருக்கிறது. அங்கு இணையத்தொடர்பு இலவசமாக தொலைபேசியுடன் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு சென்று வேடிக்கையாக சில வலைபூக்களை சோதித்துப் பார்த்தேன். இலக்கிய உலகினூடாக வராத இணைய எழுத்தாளர் சுபாவின் வலைப்பூவை சோதித்துப்பார்த்தேன். தெளிவாக தமிழ் வந்தது.சுரதாவின்புதுவை கொண்டு இணையத்தினூடாக எங்கிருந்தாலும் செந்தரமாக்கப்பட்ட தஸ்கி குறியீட்டு தமிழில் எழுதலாம். நியூக்கிளியஸ் வலைப்பூக்கள் அதிகமாக மலரும் போது சர்வமும் தமிழில் இருக்கும். ஆங்கிலத்திற்கு ஈடாக தமிழாலும் வலைப்பூவாக்கம் எங்கிருந்தாலும் செய்யலாம். அப்படிவரும் போது தமிழ் வலைப்பூக்களில் என்ன காணவேண்டுமென்று காசி ஆசைப்படுகிறார் என்றால்: "'நம் கவிதைகளை, கதைகளை வெளியிட இந்த வடிவம் ஒரு நல்ல வாய்ப்பு' என்று எண்ணி வருபவர்கள் வலைப்பதித்தால் மட்டும் போதாது. பல வேறு துறைகளில் ரசனைகள், எண்ணங்கள், அனுபவங்கள், கருத்துகள், யோசனைகள், செயல் விளக்கங்கள் ஆகிவற்றைப் பொதுவில் வைக்க விரும்பும் தமிழர்களுக்கான ஒரு வடிவம் என்று இதைப் பார்க்கவேண்டும் என்று நான் நினைக்கிறேன். உண்மையில் ஆங்கிலத்தில் வரும் ப்லாக்குகள் அப்படிப்பட்ட வடிவத்தில் தான் இருக்கின்றன. தமிழில் இன்னும் இலக்கியத்துக்கு அப்பாற்பட்ட வலைப்பதிவுகள் அதிகம் வரவில்லை."

ஆறாம்திணையின் இன்னொரு ஆச்சர்யமான குழந்தை இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்டு இப்போது கனடாவில் வசிக்கும் சந்திரமதி. இவரும் இணையத்தில் எழுத ஆரம்பித்தவர். இணையத்தின் ஊடாக (மதுரைத்திட்டம்) பண்டைய தமிழ் இலக்கியப் பரிட்சயம் பெற்று இப்போது சில வலைப்பூக்களை மலரவிட்டுள்ளார். அதுமட்டுமில்லாமல் மரத்தடிஎனும் மடலாடற்குழுவையும் வெற்றிகரமாக நடத்துகிறார். இவர்கள் முன்னேற்றம் எந்த அளவு உள்ளது என்றால், வணிக இதழுடன் போட்டி போட்டுக் கொண்டு கதை, கவிதைப் போட்டி வைத்து பரிசு தருமளவில் உள்ளது!!

ஆறாம்திணை ஆல்டஸ் ஹக்ஸ்லி சொன்னது போல் ஒரு Brave New World ஆக உருவாகலாம். காலம் விடை சொல்லும்.

இன்னும் வரும்....

0 பின்னூட்டங்கள்: