பத்ரியிடம் சொல்லிவிட்டேன் எழுதுகிறேன் என்று. ஆனால் எப்படி எழுதுவது, என்ன format சரி வருமென்று இன்னும் யோசித்துக் கொண்டிருக்கிறேன். இப்படியே விட்டால் எழுதவே மாட்டேன் எனவே சுருக்கமாக விஷயத்திற்கு வருகிறேன்.

தமிழ் மரபு அறக்கட்டளை ஈட்டுமுனைப்பற்ற தன்னார்வக் குழு. தமிழ்ப் பண்பாடு சம்மந்தமான அனைத்து ஆவணங்களையும் (god willing) இலக்கப்படுத்த வேண்டுமென்று ஆசை. கலை, இலக்கியம், அறிவியல். எல்லாத்துறையிலும் தொடர்புகள் ஏற்படுத்தியுள்ளோம் காரியங்கள் பகுதி பகுதியாக பல படி நிலைகளில் நடந்தேறும்.

பண்பாடு இரண்டு நிலைகளில் செயல்படுகிறது. ஒன்று நிகழ் பண்பாடு. இது சமகாலப் பயன்பாடு. பழசுதான் பாதுகாக்கப்படவேண்டுமென்றில்லை. கண்ணெதிரே அழியும் நிகழ்காலப் பண்பாடும் உண்டு. உதாரணம் சமகால எழுத்து. இது முறையாக தொகுக்கப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்றே. இந்த அக்கறையில்தான் நான் வலைப்பூவில் தமிழ் மரபு அறக்கட்டளை பங்கு பெறும் என்றேன். இந்த பிரக்ஞை ஒரு தன்னார்வக்குழுவிற்குத்தான் இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை. தனி நபர்கள் தாராளமாகச் செய்யலாம். அதற்கு வலைப்பதிவு இடமளித்துள்ளது. சம கால ஆக்கங்கள் நேரடி பல்லூடக மின்பதிப்பாக நிரந்தமாக இத்தொழில் நுட்பம் வகை செய்கிறது. எனவே வலைப்பூவர்களுடன் கூட்டுமுயற்சியில் ஈடுபட வேண்டியுள்ளது. எனக்கு ரெண்டு பக்கம் உண்டு. தனிப் பூவர், தமிழ் மரபுக் குழுவின் நிருவாகரென்று. இரண்டும் பேசும், பல சமயங்களில்.

வரப்போகிற மின்னிதழின் அடக்கம் பற்றி பின்பு பேசலாம். ஆனால் இந்த முயற்சியில் த.ம.அ நேரடி ஈடுபாடு உண்டு. காரணத்தைச் சொல்லிவிட்டேன். உதாரணமாக ஹரன் பிரசன்னா நிறையக் கவிஞர்களின் ஆக்கங்களை மின்பதிப்பாக்கி வைத்திருக்கிறார். அது முதுசொம்! எங்களைப் பொறுத்தவரை. சபாநாயகம் இலக்கிய வரலாறு எழுதுகிறார் அதுவும் கவனிக்க வேண்டிய ஒன்றே. அறிவியல் சம்மந்தமாக வலைப்பதிவில் வரும் கட்டுரைகளும் சேகரிக்கப்பட வேண்டியவையே. இதே முறையில் வருகின்ற இதழில் இலக்கியம், கலை சார்ந்த மின்னாக்கங்களெல்லாம் பாதுகாக்கப்படலாம். எப்படி சேர்ந்து செயல்படலாமெனப் பேசுவது நல்லது.

த.ம.அ பழைய விஷயங்களை மின்பதிப்பாக்கி வருகிறது. அது எல்லோருக்கும் தெரிந்தே இருக்கிறது. உதாரணமாக, விரைவில் மறைந்து வரும் ஓலைச் சுவடிகளை பாதுகாத்தல், மின்னாக்கம் செய்தல், பழைய புத்தகங்களை மின்பதிப்பாக்கல், அறியப்படாத ஓவியர்களை சாஸ்வதப்படுத்தல், தமிழ் இலக்கிய உலகின் நட்சித்திரங்களை தொகுத்தல், தமிழ்பழமை கூறும் சான்றுகளை இலக்கப்படுத்துதல், தமிழ் இசை பற்றிய சுட்டிகள், என்று பல.

அதே நேரத்தில் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி ஆங்கில வலைப்பதிவிதழ் நடத்துவது, தமிழின் வட்டார வழக்கைப் பதிவு செய்வது, மூத்த எழுத்தாளர்களின் இலக்கிய நினைவை பதிப்பித்தல் போன்ற ஆக்ககரமான வேலைகளும் நடைபெற்று வருகின்றன.

த.ம.அ என்ற பெயர் பெரிசாகத் தோன்றினாலும் கூட்டி கழிச்சு பார்த்தால் நாலைஞ்சு பேர்தான் மாக்குப்பட வேண்டியிருக்கிறது. எனவேதான் மதியின் வார்த்தை மிகவும் புண்படுத்துவதாக இருந்தது [தமிழ்மரபுக்கட்டளையின் பணிக்ளில் ஈடுபாடு இருக்கிறது. (எனக்கு) ஆனால் அதே சமயம் வலைப்பதிவுகளுக்கும், எந்த ஒரு குழுவிற்கும் முடிச்ச்சுப்போடுவதை நான் விரும்பவில்லை. சுதந்திரமாக செயல்படுவதே வலைப்பதிவின் பெரிய பலம். இப்படி முடிச்சுப்போட்டு அதை தொலைக்கவேண்டாம் நாம்.] இது கொஞ்சம் அதிகப்படியான பிரயோகம். அவர் வலைப்பூ இதழுக்கு ஆசிரியராக வாருங்கள் என்றாலோ இல்லை மரத்தடி இதழுக்கு எழுதுங்கள் என்றாலோ 'உன் சோலியப் பாத்துக்கிட்டு போ! அது என் வேலையில்லை" என்று விலகிக்கொண்டால் எப்படியிருக்கும்? ஏன் எழுத வேண்டும்? ஏன் மதியின் செயல்பாடுகளைப் பற்றி அவர் கேட்காமலே புகழ்ந்து எழுத வேண்டும்? தமிழ் வளர்ச்சிக்கு தோழமை மிக அவசியம். பரஸ்பர ஊக்குவித்தல் அவசியம். எடுத்தவுடனே நீ விளையாட்டுக்கு வரவேண்டாமென்று சொல்வது என்ன தோழமை? எனக்கு வேணும்ங்கிறபோது வந்து விளையாடு வேண்டாத போது வரவேண்டாம் என்பது பரஸ்பர நட்பல்ல.

பரி சொல்வது போல் யாரும் வலிந்து முடிச்சுப் போடவில்லை. முடிச்சு ஏற்கனவே இருக்கு. அதை நான் பார்க்கிறேன். மற்றவர் பார்க்கவில்லை. அவ்வளவுதான்.

வலைப்பதிவு என்ற சமாச்சாரம் பிரபலமடைவதற்கு முன்பே திரு.மாலனுடன், திரு.சுஜாதாவுடன், திரு.சுந்தர ராமசாமியுடன் தமிழ் இணையத்தின் வளர்ச்சி பற்றி அக்கறையுடன் செயல்பட்டு வந்திருக்கிறேன். பத்ரி சொல்லுகிற மாதிரி யாராவது ஒருவர் மெனக்கிட்டுக்கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது. இல்லையெனில் நெருப்பு அணைந்துவிடும்.

எனவே நான் எப்படி ஆர்வமுடன் உங்களது அனைத்து செயல்பாடுகளிலும் கலந்து கொள்கிறேனோ அதுபோல் நீங்களும் மற்றொரு தன்னார்வ இயக்கமான த.ம.அ ஈடுபடுங்கள் என்று கேட்பது மிகையா?

நாலு பேர் சேர்ந்து இழுத்தால்தான் தேர் நிலைக்கு வரும். மேலும் த.ம.அ.வில் என்றும், எப்போதும் பங்களிப்பவர்தான் முக்கியப்படுத்தப்படுவார். நிருவாகஸ்தர்கள் அல்ல. அதை அந்த வலைப்பக்கம் போனால் தெரிந்து கொள்ளலாம். எனவே கூட்டு முயற்சியென த.ம.அ கை நீட்டினால் அது உங்கள் வளர்ச்சி/தமிழ் வளர்ச்சி குறித்த அக்கரையினாலே தவிர வேறில்லை.

ஒரு FAQ தயாரித்துக் கொண்டிருக்கிறேன். மேலும் கேள்விகள் இருந்தால் தொடுங்கள். பதில் சொல்லக் காத்திருக்கிறேன்.

0 பின்னூட்டங்கள்: