பனிச்சறுக்கு!விஞ்ஞானிகள் பெரும்பாலும் 'அக்கடா' வென்று ஆய்வகத்தில் உழல்பவர்கள். ஆனால் அடிப்படையில் விஞ்ஞானி என்பவன் குழந்தை மனமுடைய பெரியவன் என்ற விளக்கத்தின்படி சில நேரங்களில் விஞ்ஞானிகள் தீர விளையாட்டுக்களில் ஈடுபட வேண்டிய சூழல் வந்துவிடுகிறது :-)

கொரியாவின் 75% மலைப்பகுதிகளே! இருந்தாலும் அவை ஆல்ப்ஸ் மலை உயரத்திற்கு வளராததால் சுவிஸ்ஸில் உள்ள அளவு இங்கு பனி மலைகள் இருப்பதில்லை. ஆயினும் தென் கொரியாவின் மத்தியிலுள்ள மலைகள் டிசம்பர் முதல் மார்ச் வரை பனி மூடி உள்ளன.எங்கள் தீவிலிருந்து 3 மணி நேரத்தில் ஒரு Ski resort இருக்கிறது. அங்கு போகலாமென தீர்மானித்து இங்கிருந்து வாடகை வண்டியில் சட்டி முட்டி சாமான்களுடன் வெள்ளியன்றே போய் சேர்ந்தோம். அன்சான், புசான் என்று பல நகரங்களிலிருந்து சக விஞ்ஞானிகள் வந்து சேர மொத்தம் ஒரு 25 பேர் தேறி விட்டோ ம். இதில் பாதி பல்வேறு நிலை மாணவர்கள்.அடுத்த நாள் காலை அதிகாலையில் கிளம்பிவிட்டோ ம். அப்படிப்போயும் அங்கு ஜேஜே என்று கூட்டம். சில நண்பர்களின் குழந்தைகள், மனைவிமார்கள், தோழிமார்கள் என்று வந்ததால் ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கு சறுக்கு கத்துக்கொடுக்க இரண்டு கோச் ஏற்பாடாகியிருந்தது. பனிச்சறுக்கின் முதல் கஷ்டம் நாம் அதற்கெனத் தனியாக தயாரிக்கப்பட்டுள்ள பாதணிகளை அணிந்து கொண்டு நடை பழகுவதே! சறுக்குவது பின்னால் இருக்கட்டும்! இது காலை இறுகக் கட்டுக் கொண்டுவிடுவதுடன் அதை முன்னே, பின்னே மடங்க விட மாட்டேன் என்கிறது!நீங்கள் தொலைக்காட்சியில் பார்த்திருக்கலாம், அனைத்து சறுக்கர்களும் பக்கவாட்டில் மடக்கி, மடக்கி சறுக்குவார்களே தவிர முன்னே, பின்னே படக்குவதில்லை. மடங்க இந்த பூட்ஸ் விட்டால்தானே! காரிலிருந்து இந்த பளுவைத்தூக்கிக் கொண்டு கையில் bladesசைச் சுமந்து கொண்டு skiing area-விற்குள் போவதற்குள் பாதி சக்தி போய்விடும்! போகும் போது 'தடால்' என்று விழுபவருண்டு. ஏனெனில் வழி பூரா பனி இறுகி பாளமாக இருக்கிறது!ஆதனால் முதல் பாடமே கீழே விழுந்து எப்படி எந்திருப்பது என்பதுதான். இதில் சிக்கல் என்னவென்றால் அங்கு 20 வயதிலிருந்து 40க்கும் மேல் உள்ள வயதினர். கொரியப்பெண்களுக்கு சின்ன உடம்பு. மெலிதான தேகம். கீழே விழுவது தெரிவதில்லை எந்திருப்பது தெரிவதில்லை. நம்மை மாதிரி முழங்கை வழிய நெய் உண்டு வளர்ந்தவர்களுக்கு உடம்பு கொஞ்சம் கனமாகிப் போகிறது. யானைகளை குளிப்பாட்டும் போது பாகன் அதை கீழே விழு, விழு என்பான். யானைக்கல்லவோ தெரியும் விழுந்து எழுந்திருப்பதன் கஷ்டம் :-)

ஒரு மாதிரி காலில் நீண்ட blade-ஐ மாட்டியவுடன் இருந்த balance-ம் போய்விடும். ஏனெனில் அதன் பின் தரை கீழே நிற்காது. நழுவிக்கொண்டே இருக்கும். இதை வைத்துக்கொண்டு மேலே கீழே ஏறி இறங்க வேண்டும்! சர்ரென்று சத்தம் கேட்கும், அப்போதுதான் ஒருவர் crash landing ஆயிருப்பார். இன்னொருவர் வந்த வேகத்தில் மேட்டில் ஏறிவிட்டு கீழே இறங்கமுடியாது திரிசங்கு லோகத்தில் இருப்பார். இன்னொருவர் கீழே விழுந்து குச்சி ஊன்றி எழுந்திருக்க முயலும் போது என்ன செய்யப் போகிறோம் என்று ஒன்றும் அறியாது மோதி நிற்பார் இன்னொருவர். இரண்டும் விழுந்து கிடக்கும். இதைப்பார்த்து சிரித்துக்கொண்டு பிராக்கு பார்த்துக்கொண்டிருக்கும் போது உங்கள் கால் நழுவும். பின் நீங்கள் அவர்களுக்கு காட்சிப்பொருளாவீர்.

பனிச்சறுக்கின் தத்துவம் இரண்டு. நீர் திரவமாய் இருக்கும் போது நீச்சல் பழகினால் ஒழிய அதைக்கடக்க முடியாது. அது திட ரூபம் அடையும்போது அதன்மீது நமது புவியீர்ப்பு விசையை சரியானபடி பிரயோகித்து கீழே விழாமல் நழுவ வேண்டும். திரவத்தில் என்ன மெனக்கிட்டாலும் அவ்வளவு வேகம் போகமுடியாது. ஆனால் திடரூபத்தில் வேகம்தான் பிரதானம்! வேகத்தை எப்படிக்கையாள்வது, நழுவும் பூமியில் எப்படி நடப்பது என்ற இரண்டுமே நாம் கற்றுத்தேற வேண்டிய விஷயம். தேர்ந்தால் மேலிருந்து கீழிறங்கும் போது ஒரு பரவசம் கிடைக்கிறது. அதுதான் பரிசு.

இந்த அனுபவத்தை இவ்வளவு கஷ்டமில்லாலும் sludge கொண்டு அனுபவிக்க முடியும். ஜெர்மனியில் பனி பெய்து விட்டால் குழந்தையுள்ள பெற்றோர்கள் இந்த நழுவு நாற்காலியைச் சுமந்து கொண்டு பனிவயலுக்குச் செல்வதைக் காணலாம். அது வெறும் விளையாட்டு. ஆனால் Ski ஒரு தீர விளையாட்டு. பயிற்சி எடுக்க வேண்டும்.

தமிழ்நாட்டின் பனிக்காலத்தைப்பற்றி எழுதிய கவிஞர் நா.விச்வநாதன் 'இந்தமுறை ஒரே குளிரு! சட்டை போட வேண்டியதாய் போச்சு!' என்றார். அவர்கள் இங்கு வந்தால் விரைத்துப்போவது உறுதி.

செயிண்ட் எக்சுபெரியின் 'குட்டி இளவரசன்' சொல்வது போல் முதலில் நாம் பனியுடன் "பழக வேண்டியுள்ளது"

0 பின்னூட்டங்கள்: