தமிழ் மரபு அறக்கட்டளை சில விளக்கங்கள் (part 1)

பத்ரி: தமிழ் மரபு அறக்கட்டளை (மற்றும்) முதுசொம் காப்பகம்: அச்சிலேயே வராது ஆங்காங்கே ஓலைச்சுவடிகளாக இருப்பதை இலக்கப் பதிவுகளாக்கி, முதலில் படங்களாக அவற்றினைக் காப்பது. பின்னர் அவற்றினை எழுத்துகளாக மாற்றியே ஆக வேண்டும். வெறும் படங்களாக இருப்பதில் அதிக பிரயோசனமில்லை. எனக்கு இங்குதான் சில குழப்பங்கள் வருகின்றன. கண்ணன் விளக்க வேண்டும். ஓலைச்சுவடிகளில் மட்டுமின்றி அச்சுப்புத்தகங்களிலும் த.ம.அ கவனம் செலுத்துகிறதென்றால் த.ம.அ வுக்கும் ம.தி க்கும் என்ன வித்தியாசம்? இரண்டும் ஒன்று சேர்ந்து ஆர்வலர்களை சரியான திசையில் செலுத்தக்கூடுமல்லவா?

உண்மைதான். கடைசியில் எல்லாம் எழுத்துருவானால்தான் தேடமுடியும். ஆனால் மினெழுத்தாகமே மிக, மிக மெதுவாக நடந்துவருகிறது. தமிழின் இலக்கிய வளத்தை நோக்கும் போது ஒரு மதுரைத்திட்டம் போதாது. பற்பல வேண்டும். இதனால்தான் த.ம.அ. வெளிநாட்டிலிருக்கும்/இந்தியாவிலிருக்கும் அரிய தமிழ் நூற்களை இலக்கப்பதிவாக்க முயன்று வருகிறது. நம்ம ஊர் மாதிரி வெளிநாட்டில் ஓசிக்கு யாரும் புஸ்தகம் தருவதில்லை. பிரித்தானிய நூலகத்தில் சில புத்தகங்களை வாசகர்கள் தொடக்கூட முடியாது. தேர்ந்த தொழில்நுட்பர் (technician) நகலெடுத்து தருவர் அதை வைத்துக் கொண்டு நாம் பாதுகாக்க வேண்டும். இதற்கு காசு செலவாகும். எனவேதான் ம.தி நீட்சியான த.ம.அ ஒரு அறக்கட்டளையாக உருவாக்கப்பட்டுள்ளது. இதை உருவாக்கியவர்கள் முனைவர்.கல்யாணமும், நானும். இப்போதைக்கு இரண்டு திட்டங்களும் complementing each other but cautious on redundancy என்று செயல்பட்டு வருகிறது. இரண்டிற்கும் நல்ல ஒத்திசைவுண்டு.

எனவே ம.தி சில செயல்பாடுகள் த.ம.அ யால் உந்துவிக்கப்பட்டுள்ளன. உதாரணமாக சென்னை அண்ணா பல்கலைக்கழக வசதிகளைப் பயன்படுத்தி தமிழக எழுத்தாளர்கள் சேகரிப்பிலுள்ள நல்ல நூல்களை இலக்கப்பதிவாக்க த.ம.அ முயல்கிறது. யார் எதைச் செய்கிறார்கள் என்பதை விட யார் எதை விரைவில் செய்கிறார்கள் என்பதே இங்கு முக்கியம். ஏனெனில் பல தமிழ் பொக்கிஷங்கள் கண்ணெதிரே அழிந்து வருகின்றன. சமீபத்திய பேட்டி ஒன்றில் பிரபல ஓவியர் கோபுலு தான் வரைந்த ஓவியங்களே பாதுகாப்பின்றி செல்லரித்துப் போவதாகச் சொல்கிறார். இதை யார் விரைவில் காப்பது என்பதே இங்கு முக்கியம். பல நல்ல புத்தகங்கள் மறுபதிப்பு காணாது அழிந்துவிடுகின்றன. கொலோன் பல்கலைக்கழக தமிழ் ஆய்வாளர் தாமஸ் மால்டன் சொல்வது போல் தமிழ் புத்தகங்களின் வாழ்வு வெறும் பத்து ஆண்டுகளே! அதன் பின் அவை அழிந்துவிடுகின்றன. எனவேதான் ஒரு அவசரம். யார் முந்துகிறார்களோ அவ்வளவுக்கு நல்லது.


பத்ரி: மதுரைத் திட்டம் முழுக்க முழுக்க ஆர்வலர்களைக் கொண்டு கல்யாணசுந்தரத்தினால் வழிநடத்தப்படுகிறது. தமிழ் மரபு அறக்கட்டளை ஒரு அறக்கட்டளை அமைப்பாக நிறுவப்பட்டுள்ளது. இந்த அறக்கட்டளை தன் நோக்கத்தைக் குவியப்படுத்தி இன்னென்னதில்தான் இப்பொழுதைக்கு ஈடுபடுவேன், இவையே எங்கள் மைல்கற்கள், இன்னென்னவற்றை இன்னென்ன நாட்களுக்குள் அடைய முற்படுவோம், அதற்கு இத்தனை செலவாகும், இத்தனை ஆட்கள் தேவைப்படுகின்றன என்றதொரு சரியான குறிக்கோளாக நிறுவி வெளியிட வேண்டும். அவ்வாறு இல்லையேல் குழப்பங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

ஒத்துக் கொள்கிறேன். த.ம.அ க்கு ஆசைகள் நிறைய இருந்தாலும் அதற்கான ஆள் பலமோ, பண பலமோ இல்லை. எனவே, தமிழகத்தில் ஓலைச் சுவடி பாதுகாப்பிலும், இங்கிலாந்தில் பழைய புத்தக மீட்டெடுப்பிலும் கவனம் செலுத்த உள்ளோம். அதே நேரத்தில் இந்தியாவில் பழம் புத்தகங்களை இலக்கப்பதிவாக்க இந்திய மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் பிற இந்திய நிறுவனங்களுக்கு நிதி உதவி அளித்துள்ளன. அவர்களுக்கு கைகொடுக்க த.ம.அ உறுதி எடுத்துள்ளது. இதற்கான உந்துதல் ம.தி இல்லை. எனவே த.ம.அ இதை முன்னெடுத்துச் செல்லவுள்ளது. எனவே நல்ல தமிழ் புத்தகங்கள் யாருடைய சேகரிப்பிலிருந்தாலும் தகவல் தாருங்கள். இலக்கப்பதிவாக்கிவிட்டு திரும்பத்தருகிறோம். உங்களுக்கு உங்கள் புத்தகத்தின் இலத்திரன் வடிவு இலவசமாக சிடியில் அடித்துத்தரப்படும்.

0 பின்னூட்டங்கள்: