தமிழ் மரபு அறக்கட்டளை சில விளக்கங்கள் (part 2)

பத்ரி: மதுரைத் திட்டம் முழுக்க முழுக்க ஆர்வலர்களைக் கொண்டு கல்யாணசுந்தரத்தினால் வழிநடத்தப்படுகிறது. தமிழ் மரபு அறக்கட்டளை ஒரு அறக்கட்டளை அமைப்பாக நிறுவப்பட்டுள்ளது. இந்த அறக்கட்டளை தன் நோக்கத்தைக் குவியப்படுத்தி இன்னென்னதில்தான் இப்பொழுதைக்கு ஈடுபடுவேன், இவையே எங்கள் மைல்கற்கள், இன்னென்னவற்றை இன்னென்ன நாட்களுக்குள் அடைய முற்படுவோம், அதற்கு இத்தனை செலவாகும், இத்தனை ஆட்கள் தேவைப்படுகின்றன என்றதொரு சரியான குறிக்கோளாக நிறுவி வெளியிட வேண்டும். அவ்வாறு இல்லையேல் குழப்பங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

இதற்கு இன்னொரு பதில். ம.தி ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் நாங்கள் நிறைய "brain stroming' Tamil.net -ல் நடத்தியிருக்கிறோம். அது மாதிரி பரந்த முன் தயாரிப்பு இல்லாத வகையில் ஒரு அசாதாரண சந்தர்பத்தில், ஒரு மாநாட்டில் த.ம.அ உருவானது. இதை எனது திசைகள் (டிசம்பர்-03)கட்டுரையில் விளக்கியுள்ளேன். திசைகளில் பல கட்டுரைகளில் த.ம.அ யின் தோற்றம், வளர்ச்சி, செயல்பாடுகள், திட்டங்களை இவைகளை விளக்கியுள்ளேன். எமது வலைப்பக்கத்தில் நீங்கள் கூறியபடி கால அட்டவணைபோட்டுத்தான் செயல்படுகிறோம். எந்தக் குழப்பமும் இல்லை. வேலை நேரம் போக மீதி நேரங்களில் செய்வதால் new updates வர சில நேரங்களில் கால தாமதமாகிவிடுகிறது. ஆனால் பின்னால் வேலை நடந்து கொண்டே இருக்கிறது.

திரு.கல்யாணசுந்தரத்தின் பங்களிப்பென்ன? ஏன் அவர் ம.தி வெளியே தெரிகின்ற அளவு த.ம.அ தெரிவதில்லை? காரணம், த.ம.அ எனது தமிழ் இணையக் கட்டுரைக்குக் கிடைத்த பரிசினால் ஆரம்பிக்கப்பட்டது. "2001-ம் ஆண்டின் சிறந்த மனிதர்" என்ற பட்டம், புகழ் எல்லாம் நமது பாரம்பரியத்தை காப்பதற்கான வழி முறைகள் சொன்னதால் கிடைத்தது. எனவே என்னையே தலைமையேற்று நடத்துமாறு சொல்லிவிட்டார். அவருக்கு ம.திட்டத்திலுள்ள அதே அக்கறை த.ம.அ யிலும் உண்டு. பின்னிருந்து செயல்படுகிறார்.

ம.திட்டத்திற்கும் த.ம.அ க்கும் செயல்படும் விதத்தில் சில வித்தியாசங்களுண்டு. ம.தி மாதிரி உட்கார்ந்த இடத்திலிருந்து கணினி முன் செயல்பட த.ம.அ யில் முடியாது. களப்பணி கட்டாயம் தேவை. எனவேதான் முதல் இரண்டு வருடங்களில் அரவமில்லாமல் களப்பணி செய்து "இது சாத்தியம்" என்பதைக் காட்டினேன். இனி வரும் காலங்களில் இந்தியச் செயலகம் ஒன்று உருவாக்கப்படும். அங்கிருந்து களப்பணி மேற்கொள்ளப்படும்.

அடுத்த முக்கிய செயல்பாடு, த.ம.அ மற்ற இந்திய. வெளிநாட்டு நிறுவனங்களோடு சேர்ந்து செயல்பட உள்ளது. வெறும் தன்னார்வக் குழுவாக இருந்தால் MOU போன்றவற்றில் கையெழுத்திடல் சிரமம். எனவேதான் த.ம.அ ஒரு ஈட்டு முனைப்பற்ற (non-profit) அறக்கட்டளையாக பதிவு செய்யப்படவுள்ளது. இதற்கென தனியான செயற்குழு உருவாகிக் கொண்டிருக்கிறது. பின் வரும் காலங்களில் மக்களாட்சி முறையில் (democratically) செயற்குழு தேர்வு செய்யப்படும்.

அப்படியே இருந்தாலும் த.ம.அ ஏன் தனக்கென ஊழியர்களை வைத்துக் கொள்ளக்கூடாது? - அவ்வளவு நிதி இல்லை. எனவேதான் இந்தியாவைப் பொறுத்தவரை அது தன்னார்வக் குழுவாக செயல்படவே விரும்புகிறது. இந்தியாவில் இல்லாத மனித வளம் வேறெங்கும் இல்லை! மாணவர்களின், எழுத்தாளர்களின், ஆர்வலர்களின் 1% பங்களிப்பு இருந்தால் கூட எவ்வளவோ சாதிக்க முடியும். இருக்கிற சொற்ப உதவி கொண்டே த.ம.அ எவ்வளவோ சாதித்துள்ளது!

0 பின்னூட்டங்கள்: