தமிழ் மரபு அறக்கட்டளை சில விளக்கங்கள் (part 3 - last)

பத்ரி:உயிர்ப்பூ என்பது மேலிரண்டிலிருந்தும் சற்றே மாறுபட்டு, நேரிடையாக டிஜிட்டல் வடிவிலேயே பதிவுகளைத் தருவது. இதில் முக்கியமாக சொல்ல வேண்டுமென்றால் அது சிட்டியின் வாழ்க்கைப் பதிவுகள். சபாநாயகம் அவர்களின் நினைவுத்தடங்களும் இந்த வகையில் வருவதே. எனக்கு இரண்டிலும் நிறைய வருத்தங்கள் உண்டு. சிட்டியின் குறிப்புகள் ஆங்கிலத்தில் மட்டுமே வருகிறது. இதைத் தமிழ்ப்படுத்த வேண்டும். மேலும் தள வடிவமைப்பு மிகவும் ஒழுங்கு படுத்தப்பட வேண்டும். சபாநாயகத்தின் நினைவுத்தடங்களிலும் நிறைய 'editing' வேலை உள்ளது. இரண்டும் நமக்கு தமிழ் இலக்கிய, சமூக வாழ்வின் கடந்த 80 ஆண்டு கால வரலாற்றினை அளிக்கும்போது அவற்றை ஒழுங்குபடுத்துவதும், இன்னமும் அதிகமாக சேர்ப்பதும் முக்கியம் என்று தோன்றுகிறது.

பத்ரி! நீங்க சரியான சுப்பபுடுதான் :-) உங்களை திருப்திப்படுத்துவது கடினம் :-) வலைப்பூ சரியில்லை, வலைஞர்களும் சரியில்லை என்று தைர்யமாகச் சொல்லிக்கொண்டு 'வலைப்பூ' ஆசிரியராக ஒரு வாரம் ஓட்டிவிட்டீர்கள் :-))

சிட்டி தமிழிலும் தமிழ் இலக்கிய வரலாறு எழுதியுள்ளார். அவர் சிவபாதசுந்தரம், தி.ஜா போன்றோருடன் எழுதியவையெல்லாம் இன்னும் மின்னாக்கம் பெறவில்லை. சபாநாயகம் சாருக்கு நானே எழுதலாமென இருக்கிறேன். நீங்க சொன்னதா இந்தப் 'பாயிண்டையும்' போட்டு விடறேன். சிட்டியின் ஆங்கில வலைப்பதிவு மிக முக்கிய ஆவணம். ஏனெனில் நவீன தமிழ் வரலாறு கூறும் ஆங்கில நூல்கள் குறைவு. மலேசியாவிலேயே தமிழ் இலக்கியத்திற்கு பல்கலைக்கழகத்தில் இடம் கிடையாது. ஏனெனில், தமிழ் இலக்கியம் பற்றிய ஆங்கிலப்புத்தகங்கள் இல்லாததே காரணம்!


பத்ரி: மேலும் இவையெல்லாம் ஆங்காங்கு கிடைக்கும் பல இலவச, அதனால் தரங்குறைந்த இணையத்தளங்களில் இருப்பது கவலைக்குறிய விஷயம். எப்பொழுதுவேண்டுமானாலும் இவை காணாமல் போகலாம். சரியான படங்களைச் சேர்க்கும் வசதியில்லாததால் இவற்றுள் சேர்க்கப்பட்டுள்ள படங்கள் (சிட்டி....) அவ்வளவு சரியாக இல்லை. வடிவ நேர்த்தி, நான் முன்னமே சொன்னது போல், குறைவுதான். இதற்கெல்லாம் சரியான தன்னார்வலர்கள் தேவை.

பத்ரி! இதை நீங்கள் அடிக்கடி சுட்டுகிறீர்கள். ஆனால் Blogger போன்ற தளங்கள் மூன்றாம் தரமானவை என்று என்னால் ஒத்துக் கொள்ள முடியவில்லை. Rediff Blogs வேண்டுமானால் சொல்லலாமென்று தோன்றுகிறது. தொழில்நுட்பம் தெரிந்தவர்கள் உதவினால் இதையெல்லாம் சரி செய்துவிடலாம். சுபா மலேசிய நண்பர்களின் மூலமாக அங்கு த.ம.அ கென பிரத்தியேக சேவி வைத்துக் கொள்ள ஆகும் செலவுகளை விசாரித்து வருகிறார்கள். நண்பர்கள் இது குறித்து உதவினால் நாங்கள் தனியாக ஒரு சேவிக்கு மாறுவதே மேல். அப்போது நியூக்கிளியஸ் நிரலியில் வலைப்பதிவுகள் செய்யலாம்.

பத்ரி:இதுவும் பரவலாகாததன் காரணம், யார் எழுத வேண்டும், எதை எழுத வேண்டும் என்ற குவியம் இல்லாததே. கண்ணன் எனக்கு இதுபற்றி ஒரு அஞ்சல் அனுப்பியுள்ளார். நான் அதனைக் கூர்ந்து படித்து, பின்னர் அவருக்கு பதில் எழுத வேண்டும்.

இந்த நிலையில் வலைஞர்களிடம் இந்த உள்ளடக்க "Content" பிரக்ஞை பற்றிப் பேசுவது too early என்று தோன்றுகிறது. த.ம.அ கை குலுக்கியதற்கே பயந்து விட்டார்கள். யார் என்னவேண்டுமானாலும் எழுதட்டும். இந்த பிரக்ஞை வந்தவர்கள் என்ன எழுதுவது என சிந்திக்கலாம்.

நான் உங்களிடம் கேட்கும் ஒரு உதவி நீங்கள் 'திசைகள் பயிற்சிப் பட்டறை' மற்றும் சென்னைக் கல்லூரி மாணவர்களைக் காணும் போது வலைப்பதிவு பற்றிச் சொல்லி அதில் தரமான எழுத்தைப் பதிப்பிப்பது பற்றிச் சொல்லித்தாருங்கள். அவர்கள் இ-சுவடியில் சேர்ந்தால் அவர்கள் வளர்ச்சி பற்றி ஆலோசனை கூறமுடியும். Tamil Blogger's Consortium ஒன்று கூடிய சீக்கிரம் உருவானால் சில விஷயங்களை செந்தரமாக்கமுடியும். பல விஷயங்களை பகிர்ந்து கொள்ளமுடியும். இல்லையெனில் தனித்தனியாக வேட்டையாட வேண்டியுள்ளது. கடந்த சில மாதங்களில் வலைப்பதிவில் ஏற்பட்ட வளர்ச்சியே கூடுதல் என்று தோன்றுகிறது. வலைப்பூ இல்லாமல் என்னால் எங்கு, என்ன நடைபெறுகிறது என்று கண்டுகொள்ள முடிவதில்லை.


பத்ரி:எல்லோரும் ஒருவரோடொருவர் தீவிரமாக சண்டை போடவும். சண்டை போடும்போதுதான் புதுக்கருத்துகள் தோன்றுகின்றன:-) மேலும் தீவிரம் வலுக்கிறது. பின் சற்று ஆற அமர சிந்திக்கும்போது சிந்தனைகள் தெளிவடைகிறது.

நமக்கு ஒரு விஷயம் புரியவில்லையெனில் நமக்கு எரிச்சல்தான் முதலில் வருகிறது. அந்தப் பொழுதுகளில் எழுதும் போது வார்த்தை பிறழ்ந்து விடுகிறது. violence begets violence என்கின்ற பிராயம் பிறகு சிந்தனை ஓட்டத்தில் ஒரு காரம் சேர்ந்துவிடுகிறது. இதை எளிதாகத் தவிர்க்கலாம். ஒரு விஷயத்தைப் பற்றி முன் அபிப்பிராயம் நாமே உருவாக்கிக்கொண்டு புரிந்துகொள்ள முயலுவதைவிட நேரிடையாக கேட்டுத்தெரிந்து கொள்வது எவ்வளவோ மேல். இது ஒருவகையான brain stroming என்றே நான் எடுத்துக் கொண்டுள்ளேன்.

உயிர்ப்பூ (உயிர்ப்பு + வலைப்பூ) த.ம.அ ஒரு புதிய முயற்சி. இதை அப்படியே ஆர்வமுள்ளவர்களிடம் கொடுத்துவிட்டு அடுத்தா வேலையைப் பார்க்கக் காத்துக் கொண்டிருக்கிறேன். பலருக்கு எழுதிவிட்டேன். இன்னும் சரியான காலம் கனியவில்லை போலும். அதை ஒரு சுதந்திரமான செயற்பாடகவே நடத்த ஆசை. த.ம.அவுக்கு ஒரு இணைப்பு இருந்தால் போதும்! பார்ப்போம்.

கடைசியாக! கேள்வி கேட்டபின் எல்லோரும் ஜோரா கைதட்டி விட்டுப் போவதற்காக இவ்வளவு நேரம் செலவழித்து பதில் சொல்லிக்கொண்டிருக்கவில்லை. ஆர்வலர்களை கவர்வதற்வதற்காகவேதான் இந்தப் பதில்கள். கேள்வி கேட்பது மிக சுலபம். ஆனால், ஒரு முனைப்புடன் செயல்படுவது கடினம். எனவே ஏதாவது தமிழுக்குச் செய்ய வேண்டுமென்ற உந்துதல் உள்ளவர்கள் 'வாருங்கள்!" சேர்ந்து செயல்படுவோம்!

0 பின்னூட்டங்கள்: