வைகைக்கரை காற்றே!......036

ஈடன் தோட்டத்தில் எல்லோரும் எல்லாமும் பெற்றிருந்ததால் பொறாமை இல்லாமல் இருந்தது. உடைமை என்பது இல்லாமல் இருந்ததால் காமம் என்பதும் இல்லாமல் இருந்தது. ஆனால் இந்த சைத்தான் செக்ஸ் என்ற சமாச்சாரத்தை ஈடன் தோட்டத்தில் கொண்டு வந்து விட்ட பிறகு ஒரே கசாமுசா ஆகிவிட்டது. ஈடன் தோட்டம் சீரழிந்த நிலையில் அந்தக்கிராமம் இருந்தது.

தாவணி போட்டு ஒரு குச்சியைக் கொண்டு போனாலும் இளவட்டங்கள் விசிலடித்தன. அநியாயமான செக்ஸ் ஜோக்குகளை ஆணும் அடித்தனர், சளைக்காமல் பெண்களும் அடித்தனர். ஏண்டா இப்படி போற வரவளைப்பாத்து விசிலடிக்கிறீங்க என்றால் "வத்தலானாலும், தொத்தலானும்....." என்று பதில் வரும். சின்னச் சண்டை என்றாலும் 'நோத்தா' என்று ஆரம்பித்து குடும்பத்தையே நடு ரோட்டில் கற்பழிப்பார்கள். பெண்கள் சண்டையென்றால் கேட்கவே வேண்டாம். "தூமியக்குடுக்கி, சாண்டக்குடுக்கி" என்று ஆரம்பித்து தலையை விரித்துக் கொண்டு ஒரு நர்த்தனமே அடிவிடுவர். சில நேரங்களில் எது காட்டப்படாமல் காக்கப்பட வேண்டுமோ அது காக்கப்படாமல் காட்டப்படும். நந்து சில நேரம் அப்படியே மெய்மறந்து இந்தக்காட்சிகளில் மூழ்கிவிடுவான். பின்னால், அவன் பெரியவன் ஆன பின்பு ஒரு பிரெஞ்சு மாது தமிழ்க் கெட்டவார்த்தைகளில் ஆய்வு செய்ய வந்த போது நந்து கொடுத்த பட்டியல் அவளுக்கு மிகவும் உதவியது. கிராமத்தில் இலவசமாகக் கிடைத்தது!

கோயிலுக்குள் போனாலும் இந்த சமாச்சாரம் விடுவதில்லை. வாசலிலேயே திருமலை நாயக்கரின் மனைவிகள் கச்சையில்லாமல் சாமி கும்பிட்டுக் கொண்டிருப்பர். பக்கத்தில் நாயக்கர் ஆறுமாத கர்பிணி போல் நின்று கொண்டிருப்பார். எப்படி அவர் மனைவியின் மார்பகத்தை சிலை செதுக்க விட்டிருப்பார். செதுக்கியபின் கொண்ணு போட்டிருப்பாரோ?

பத்ம நிலையத்திற்கு அருகில் பாட்டு டீச்சர் பரிமளா வந்து குடிபுகுந்து விட்டார். கல்யாணமாகாத பெண். விதவை அக்கா துணைக்கு. அவ்வப்போது ஸ்கூல் வாத்தியார்கள் சாப்பாட்டு நேரத்தில் வந்து போவது அஞ்சு பெண்களை குதிர் போல் வீட்டில் வைத்திருக்கும் கோகிலத்திற்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை. எப்போதும் இந்த சோதரிகளை கரிச்சுக் கொட்டிக் கொண்டே இருப்பாள்.

புதிதாக பல வாத்தியார்கள் அந்தப்பள்ளிக்கு வந்து சேர்ந்தனர். எல்லோரும் சொல்லி வச்ச மாதிரி காலையிலே மேற்கே போகும் ரயிலில் வந்து இறங்குவார்கள். சாயந்தரம் மதுரைக்குப் போகும் ரயிலில் போய்விடுவர். நந்துவின் கிளாஸ் டீச்சர் பெருத்த மார்புடைய கல்யாணி டீச்சர். இருப்பதற்குள் இவர்தான் பார்க்க லட்சணமாக இருப்பார் என்பதால் பல வாத்தியார்கள் பள்ளிக்கூட நேரத்திலேயே வந்து அரட்டை அடித்துக் கொண்டிருப்பார்கள். நந்து முதல் பெஞ்சு. கல்யாணி டீச்சரும், சீனிவாசன் சாரும் சுவாரசியமாகப் பேசிக்கொண்டிருந்தனர். நந்து ஏதோ கதை கேட்பது போல் கேட்டுக் கொண்டிருந்தான். கொஞ்ச நேரத்தில் தன்னையே மறந்து கதையுடன் கதையாகி விட்டான். சார் டீச்சரை சாயந்தரம் கோயிலுக்கு அருகில் வரச் சொன்ன விவரத்தில் பிழை இருந்தது. நந்து பூகோளத்தில் கெட்டி. எனவே தவறான செய்தி டீச்சருக்குப் பொய்விடக்கூடாதே என்ற ஆதங்கத்தில், கதையின் அங்கமாகிவிட்டிருந்த நந்து இடையில் புகுந்து சரியான விவரம் தந்தான். டீச்சரின் அன்பான அரவணைப்பு கிடைக்கும் என்று பெஞ்சிலிருந்து உந்திய அவனுக்கு சீனிவாசன் சாரின் கை பலமாக இவன் கன்னத்தைப்பதம் பார்க்குமென்று எதிர்பார்க்கவில்லை. அவ்வளவிற்கும் அவர் இவனுக்கு எந்தப்பாடமும் எடுப்பதில்லை. டீச்சர் முன்னாடி இப்படி அடித்து விட்டது நந்துவிற்கு பெருத்த அவமானமாகப் போய்விட்டது. ரொம்ப நேரம் அழுது கொண்டிருந்தான். அன்றிலிருந்து அம்மா சொல்வது நியாயம் என்று புரிந்தது. பழிக்குப் பழி வாங்க புதிதாகக் கட்டி முடித்திருந்த வைகை ஆத்துப்பாலத்தின் கண்களில் ஒன்றில் சீனிவாசன் சார் பற்றி கன்னா பின்னாவென்று கரியால் எழுதிவிட்டான். கிராமத்தில் நடக்கும் கிசு, கிசு சேதியெல்லாம் ஆத்துப்பாலத்தின் அடியில் அம்பலமாகிவிடும்.

ஆனால் அவனுக்குத்தெரியாது அடுத்த வாரமே 'நந்துவிற்கும் நவநீத சுந்தரிக்கும் காதல்' என்று எவனோ கரியால் எழுதி விடுவானென்று. இது அபாண்டமாக நந்துவிற்குப் பட்டது. அவன் கிளாஸில் நவநீதசுந்தரி அழகிதான். அவள் மேல் இவனுக்கும் ஒரு கண்தான். இருந்தாலும் இன்னும் 'காதல்' அளவிற்குப் போகவில்லை. அவள் ஆத்தங்கரைக்கு வந்தால் இவன் சகாக்களுடன் பத்து அடி பின்னாலேயே போவான். பாலியல் என்பதை நாய், பன்றிகளிடம் கற்றுக் கொண்ட அளவில் நவநீத சுந்தரியை எப்படி வசியப்படுத்துவது என்று சகாக்களுடன் மந்திராலோசனை நடத்துவான். அதில் நாகன் சொன்ன யோசனை சுவாரசியமாகவும், கஷ்டமாகவும் இருந்தது. கூரையில் தேடி பல்லி முட்டையை எடுக்க வேண்டும். எடுத்து அதை நவநீத சுந்தரி அறியாத வண்ணம் அவள் பாவடைக்குள் போட்டு விட வேண்டும். பின் அவள் இவனைத்தேடி அலைவாள் என்றான் நாகன். நந்து பல்லி அங்குமிங்கும் அலைவதைப்பார்த்திருக்கிறான். ஆனால் அவை எங்கு முட்டையிடுமென்று அவனுக்குத்தெரியாது. அப்படியே நாகனின் தயவால் அது கிடைத்தாலும் சுந்தரி அருகில் போய் அவள் பாவடைக்குள் எப்படிப் போடுவது. ரொம்பச் சிக்கலாக இருந்தது. இந்தச்சிக்கலை விடுவிக்கும் முன் ஆத்துப்பாலத்தில் எழுதி வைத்துவிட்டான்கள். வீட்டில் யாராவது பார்த்தால்? எனவே முதல் நடவடிக்கையாக எழுதியதை அழிப்பது என்று முடிவானது. படுபாவி ஒவ்வொரு கண்ணிலும் எழுதி வைத்திருந்தான்! அழித்து முடித்த போது காதல் ஆசை காம்போடு பறிக்கப்பட்டது.

அக்கிரகாரத்து பெண்களுக்கு தையல் மெஷின் கற்றுக் கொடுக்க பஞ்சாயத்து தீர்மானித்து கேரளாவிலிருந்து ஒரு டீச்சரைக் கொண்டு வந்து அக்கிரகாரத்து நடுவில் வைத்திருந்தது. மலையாளச் டீச்சரை நந்துவிற்குப் பிடித்திருந்தது. அவள் இவனுக்கு மலையாளம் கற்றுக் கொடுக்க ஒரு 'வித்யாபஹன்' கொடுத்தாள். கொஞ்ச நாள் மலையாள அட்சரம் எழுதிக் கொண்டிருந்தான். ஆனால் இவன் ஆசையில் தாலுகா ஆபீஸ் வேங்கிடநாயுடு மண்ணைப் போட்டுவிட்டார்.

வழக்கம் போல் தையல் பாடமெல்லாம் முடிந்து எல்லோரும் போனபின்பு, கொஞ்சம் கருக்கலில் டீச்சரைப் பார்க்க நந்து போனான். சத்தமே இல்லாமல் இருந்தது. மெதுவாக மரக்கதவை தள்ளியவாறு உள்ளே போன போது வேங்கிடநாயுடு டீச்சருக்கு முத்தம் கொடுத்துக் கொண்டிருந்தார். அவர்களின் நெருக்கம் நந்துவிற்குப் பிடிக்கவில்லை. பார்த்துக்கொண்டே இருந்தான். அவர்களும் பூனை போல் இவன் நுழைந்ததைக் கவனிக்கவில்லை. கொஞ்சம் நேரம் கழித்து திரும்பிய ஒரு நிலையில் நாராயணயங்காரின் கொடுக்கு (பிள்ளை) தன்னை கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டு இருப்பதை நாயுடு பார்த்துவிட்டார். அவர் முகத்தில் ஈயாடவில்லை. அவர் இவன் தந்தைக்கு கீழே வேலை பார்ப்பவர். ஒன்றுமே பேசாமல் வேட்டியைச் சரி செய்து கொண்டு ஒரு பத்து ரூபாயை இவன் கையில் திணித்தார். "அப்பாட்டே இங்க நடந்ததைச் சொல்லாதே! என்ன?" என்று சொன்னார். அவன் ஒன்றும் பதில் சொல்லவில்லை. தையல் டீச்சர் ஒன்றுமே நடவாதது போல் மாராப்பு சேலையை மேலே போட்டுக் கொண்டு. "நந்து பின்ன வாரா, டீச்சர் டீ போட்டுக் கொடுக்குண்ணு" என்றாள். டீச்சருடன் தனிமைப் பொழுதுகள் கிடைத்த மகிழ்வில் இந்தப் பத்து ரூபாய் போனஸ் என்று எண்ணிக் கொண்டு கிருஷ்ணய்யர் கிளப்பை நோக்கி நடந்தான் நந்து.

0 பின்னூட்டங்கள்: