வைகைக்கரை காற்றே!......037கோயிலுக்கு போய்விட்டு திரும்பிக்கொண்டிருந்த பிச்சுமணியை மடக்கினார் விடுதி ஐயங்கார். இவர் செட்டியார் கட்டிவைத்திருந்த கல்யாண விடுதியை பராமரிப்பதால் அப்படி அழைக்கப்பட்டார். அந்தக் கிராமத்தில் பலரின் உண்மைப் பெயர் தெரிவதே இல்லை. விடுதி ஐயங்கார். பஞ்சாங்க ஐயங்கார், பால்கார பாட்டி இப்படி..

"ஓய் பிச்சுமணி இங்க வாரும்!"

"என்ன சுவாமி! என்ன விசேஷம்?"

"அத, நீரல்லவோ சொல்லப்போறீர்! ஆமா! காஞ்சிப் பெரியவர் நம்மவூருக்கு வரப்போறதா பேசிக்கிறாளே! உண்மையா?"

"மடத்திலேர்ந்து அப்படித்தான் சேதி வந்திருக்கு. காலாற நடந்தே அவர் லோகமெல்லாம் சுத்தறவர். இராமேஸ்வரம் போற வழியிலே இந்த க்ஷேத்திரத்திற்கும் வரப்போறாராம். வெங்கிடராமய்யர்தான் எல்லா ஏற்பாடும். ஜெகத்குருவை சரியானபடி வரவேற்று மரியாதை செய்ய வேண்டியது இந்த பிராமண சமூகத்தின் பொறுப்புன்னு எல்லாரிடமும் சொல்லச் சொன்னார்".

"வரட்டுமே, தாராளமா. ஆனா! அதென்ன ஜெகத்குருன்னு ஒரு போடு போடறீர்! அவரை ஜெகத்குருன்னு யார் சொன்னா?"

"ஏன்? எல்லாரும்தான் சொல்லறா! நீர் ஒத்துக்க மாட்டீரோ?"

"எல்லாரும்ன்னா யார்? உங்க ஆளுங்கதான் சொல்லறா. நான் ஏன் ஒத்துக்கணும்? எங்க ஆச்சார்யன் அகோபில மடத்திலே இருக்கார்."

"இப்ப ஜெகத்குருன்னு சொன்னா என்ன கொறைஞ்சு போச்சு? கையெழுத்துப் போடறப்ப அவரும் உங்க மாதிரி "நாரயண ஸ்மிருதி" அப்படின்னுதானே ஐயா! போடறார்".

"கையெழுத்துப்போடறப்பதானே! எப்பவுமே, "உண்ணும் சோறு, பருகும் நீர், தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன்" அப்படின்னு இருக்கனும் ஐயா! வெளியே பட்டை, உள்ளே அம்பாள், வாயிலே நாராயண ஸ்ம்ரணம் அப்படின்னா என்ன அர்த்தம்?"

"அதான் அத்வைதம்!"

"இல்லை சாம்பார்!"

"என்ன சுவாமிகளே, காலங்கார்த்தாலே என்ன சர்ச்சை?" என்று சொல்லிக்கொண்டு எல்.வி சார் வந்தார்.

"வாரும் ராயர்வாள்! நீரே சொல்லும். இவா காஞ்சிப்பெரியவரை ஜெகத்குருன்னு சொல்லறது நியாயமா?"

"ஓகோ! அந்தப்பிரச்சனைக்கு வரலேளா! ஜெகத்குரு மாத்வாச்சாரியர் அல்லவோ!"

"யாரய்யா? மாத்வர்? நாங்க கேள்விப்பட்டதே இல்லையே?" என்றார் பிச்சுமணி.

"நீர் இந்த ஊரை விட்டு நாலு இடம் போனாத்தானே தெரியும். கர்நாடக போய் பாரும் மாத்வாச்சாரியாரின் பெருமை அறிய"

"கன்னட தேசத்திலே இருக்கிற ஒருத்தர் எப்படி எங்களுக்கு குரு ஆகமுடியும்?"

"அப்படி வந்து மாட்டிக்கும். உங்க நியாயத்தின் படி, காஞ்சியிலே இருக்கிற சுவாமிநாதன் என்கிற சந்திரசேகேந்திர சரஸ்வதி எப்படி ஜெகத்துக்கெல்லாம் குருவாக முடியும்?"

பிச்சுமணிக்கு என்ன சொல்லி சமாளிப்பது என்று தெரியவில்லை. ஐயங்கார் சேர்ந்து கொண்டு அடுத்த பிரயோகம் செய்தார்.

"இங்க பாரும் பிச்சுமணி. இந்த சாராதாம்பாள் டீச்சர்கிட்ட போய் யார் ஆச்சர்யன்னு கேளும். அவாளுக்கு சிருங்கேரி மடம். அவா காஞ்சிமடம் சங்கராச்சாரியர் ஸ்தாபிச்சதே இல்ல அப்படிம்பா! பால்கார பாட்டிக்கு ஆச்சார்யன் எங்காவது ஆந்திராவிலே இருப்பார். பஞ்சாங்க ஐயங்காருக்கு வானமாமலை ஜீயர் மடம். இப்படி லோகாச்சாரம் இருக்கிறச்சே, நீர் எப்படி ஜெகத்குரு வரார், எல்லோரும் வாங்கோன்னு சொல்ல முடியும்?"

"இப்ப என்ன சொல்லறேள்? ஒரு பெரிய மனுஷர் நம்ம ஊர் தேடி வரச்சே அவர ஒத்துமையா வரவேற்க்கக்கூட இந்த பிராமண சமூகத்துக்கு துப்பில்லை அப்படீங்கறேளா?"

"வரட்டுமே ஐயா. யார் வேண்டாங்கறா? இந்த கோயில்ல மணியடிக்கிற சிவாச்சாரியாரே அவர குருவா ஏத்துக்க மாட்டார். அதுதான் நிலமை. அவர் பாட்டுக்கு வரட்டும். வந்து பெருமாள சேவிச்சுட்டு போகட்டும்".

"பெருமாளை எங்கே? இன்னும் கோயிலே கட்டிமுடிக்கலையே! அவர் வரது புஷ்பவன நாதரைச் சேவிக்க!"

"யோவ்! எல்லாம் பெருமாள்தாய்யா! உமக்கெங்கே புரியப்போறது!"

இப்படி இவர்கள் ஆளாளுக்கு ஒரு ஆச்சார்யனை வைத்துக் கொண்டு வழிபட்டுக் கொண்டிருக்கும் போது தேமேனென காஞ்சிமுனி அந்த ஊருக்கு வந்துவிட்டார். அத்வைதிகள் என்று சொல்லக்கூடிய நாலு குடும்பம் விழுந்து அடித்துக்கொண்டு, மடிசார் மாமிகள் சகீதம் பூரணகும்ப மரியாதை செய்தது. ராயர்கள், தெலுங்கர்கள், ஐயங்கார்கள் மற்றும் பல குடும்பங்கள் வெறும் வேடிக்கை மட்டும் பார்த்தன. ஆனால் எல்லாக் குடும்பங்களிலிருந்தும் சிறுவர்கள் பேதமின்றி பங்கேற்றனர்.

"அம்மா! நானும் போகட்டுமா?" என்றான் நந்து.

"டீ பங்கஜம். டிரங்கு பெட்டிலேர்ந்து அந்த பட்டு வேஷ்ட்டியை எடுத்து நந்துக்கு கட்டி விடு!"

"வேட்டியை எங்க கட்ட? அந்த அங்கவஸ்திரத்தை வேணா கட்டிவிடறேன். இவன் இன்னும் குள்ளமாதானே இருக்கான்!"

ஜெய, ஜெய சங்கர! ஹர, ஹர சங்கர! என்ற கோஷம் கோயில் மதிலில் பட்டு ஊருக்கே எதிரொலித்தது.

காஞ்சிப் பெரியவர் அந்த ஊருக்கும் வந்தார்.

0 பின்னூட்டங்கள்: