சோமயாஜுலுஇந்தப் பெயரைக் கேட்டவுடனே நமக்கு 'சங்கராபரணம்' சங்கர சாஸ்திரிகள்தான் ஞாபகத்திற்கு வரும். என்ன நடிப்பு! மானசஸ சஸ்சரரே...என்னும் பாடலில் விட்டுப் போன அடியைத் தூக்கத்திலிருந்து எடுத்துக் கொடுப்பாரே. அடடா! இந்தப்படம் பார்த்த காலத்தில் இசையில் ஆழமான பிடிப்புக் கிடையாது. ஏதோ கொஞ்சம் கேள்வி ஞானம் உண்டு. இந்தப்படப் பாடல் பாலமுரளிகிருஷ்ணா ஒருவரால்தான் முடியும் என்று எண்ணியிருந்த என் அபிப்பிராயத்தை மாற்றி எஸ்.பி. ஒரு உயர்ந்த இடத்தைப் பிடித்தார். பின்னால் எனது ஜெர்மன் நண்பன் பிறந்த நாள் பரிசாக ரவிசங்கர் இசைவித்த நான்கு தொகுப்புகள் கொடுத்தான். அதில் ரவிசங்கர் சிதார் மட்டுமில்லாமல் வாய்ப்பாட்டும் பாடி இசையமைத்திருக்கிறார். அதில் 'ஹே! நாத்!' என்ற பாடலை அவர் ஆரம்பிக்க பின்னால் எஸ்.பி தொடருவார். எஸ்.பி தனது ஆரம்ப காலங்களில் இந்திய அளவில் முத்திரை பதித்திருப்பதைக் காட்டும் பாடல் அது. தியானம் கூட வேண்டுமென்றால் இந்தப்பாடலை ஒருமுறை கேட்டால் போதும்.

தெலுங்கு ஒரு வார்த்தை புரியாமல் படம் முழுவதும் பார்த்தேன். (இதில் இரண்டு மூணுமுறை வேறு!) படம் 'அக்கா' என்ற அழைப்புடன் ஆரம்பிக்கும். அடடா! புரியும் போல என்று உட்கார்ந்தால் அதற்கப்புறம் ஒன்றும் புரியவில்லை! ஆனால் இந்தப்படம் தமிழத்தில் ஒரு புரட்சியே செய்தது!

இந்தப்படம் வந்த பிறகு சோமயாஜுலு என்றால் அய்யர் வீட்டு மாமா என்று ஆகிவிட்டது. சங்கராபரணத்திற்குப் பின் சதங்கை ஒலி, அது இதுவென்று பழசைத்தூக்கிப்பிடிக்கும் படங்களாக வந்து சங்கராபரணம் கிளப்பிய ஆர்வத்தில் மண்ணைப் போட்டுவிட்டது.

கந்தர்வன் மறைந்து விட்டார். சோமயாஜுலுவும் போய் சேர்ந்துவிட்டார். ஒரு டெபுடிக் கலெக்டர் நடிப்பின் ஆசையால் வேலையை விட்டுப்புட்டு 150 படம் நடித்து முடித்திருக்கிறார் என்றால் அது அசுர சாதனைதான்.

சோமயாஜுலு கொல்டி என்றாலும் தமிழகம் ஞாபகம் வைத்திருக்கும்!

வேள்வி

எழுத்தென்ற வேள்வி தொடர்ந்து நடந்து கொண்டிருக்க வேண்டும்.

பிறந்தவுடனே இனிப்பும் கசப்பும் கலந்த லாலிபாப் மிட்டாயை கையில் கொடுத்து தெருவில் விட்டு விடுகிறான் இறைவன். சுவை இனிப்பாக இருக்கும் போது சப்புக்கொட்டிக் கொண்டு வாழ்வை சுவைக்கிறோம். கசப்பு வரும்போது அழுது வழிகிறோம்.

கசப்பும் சுவைதான் என்றறிக.

புத்தன் சொன்னமாதிரி சாவு இல்லாத வீட்டைக் காட்டவியலுமோ? துக்கமில்லாத மனிதன் உண்டோ ? ஒரு வீட்டில் இழவு இன்னொரு வீட்டில் கல்யாணம் என்றுதான் வாழ்வு ஓடிக்கொண்டிருக்கிறது. ஒன்றிற்காக ஒன்று நிற்பதில்லை. மனித துக்கத்திற்கு மதி மயங்கினாலோ? சூரியன் சலனப்பட்டாலோ என்ன ஆகும்?

காற்று வீசுகிறது. அது தொடர்ந்து வீசும். அது வேள்வி.
கதிரவன் ஒளி பாய்ச்சும். அது வேள்வி.
கார் மேகம் மழை பொழியும். அது வேள்வி.

எமக்குத்தொழில் கவிதை. அது இயங்கு சக்தி.

Appachi by Meena

நமது ரங்கமீனாவின் அப்பச்சி தொடர் முடிந்துவிட்டது. உண்மையில் இதுவொரு குறுநாவல். அழகாக வந்திருக்கிறது. ஒரு சிறு பெண்ணின் பார்வையில் கதை போகிறது. கதை என்று நான் சொல்வதற்குக் காரணம், ஒருவரின் வாழ்கையை மற்றவருக்குச் சொல்லும் போது அது கதையாகிவிடுகிறது. அனுபவம் எழுத்துரு பெறும் போது புனைவு என்பது ஒரு துளியாவது சேர்ந்துவிடும். எனவே முழுக்க முழுக்க உண்மை என்று எதுவும் கிடையாது. எல்லாமே புதினம்தான். நேர்காணலில் கூட ஓரளவு புதினம் சேர்த்துச் சொல்லலாம் என்பது ஜெயமோகனின் கூற்று. எனது வைகைக்கரை காற்றே! ஒரு நாவல்தான். அதை மீனா சொன்னதுபோல், காசி சொன்னதுபோல் ஒரு குறுநாவல், சிறுகதை வடிவிலும் சொல்லிவிட முடியும். ஆனால் வாழ்வு ஒரு நீரோட்டம். கொஞ்சம் அதன் கூட படகு விட ஆசையாய் உள்ளது. அதனால்தான் இதுவரை 40 அத்தியாயங்கள் வந்துவிட்டன. இன்னும் வரும்.


'அப்பச்சியின்' மறைவு அவரைப்போலவே நம் எல்லோரையும் தாக்கியது. காரணம் நம் எல்லோருக்கும் ஒரு 'அப்பச்சி' உண்டு. அந்த அப்பச்சி மீது அப்பழுக்கற்ற பாசமும் உண்டு. குடும்பங்கள்தான் நம் கதைக்களம். மீனா இன்னும் எழுதலாம்.

நெஞ்சம் மறப்பதில்லை!

நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்து உலகு


அவரு பாட்டுக்கு சொல்லிட்டுப் போயிட்டாரு! இன்னிக்கோட இரண்டு நாள் ஆச்சு! சௌந்தர்யா போனது அதிர்ச்சிதான். அவர் ரசிகன் என்றில்லை. ஆனால் அவள் அழகி. இரண்டு படத்திலே எனக்கு அவங்களைப் பிடிச்சது. ஒண்ணு கார்த்திகோட பைத்தியமா நடிச்சது. அந்தக் காலத்து மூன்றாம் பிறை ஸ்ரீதேவிக்குப் போட்டி! இன்னொன்னு ஒரு பாடகியா வருவாங்க (இவன்). பார்த்திபனோட ஒரு அட்டகாசமான பாட்டு. அப்படிப்பாக்கிறதுன்னா வேணாம்!. அது இளையராஜாவின் ஸ்டாம்பு. ரொம்ப அழகா இருப்பாங்க. தூங்கப்போறப்ப பாத்த கடைசிப் படம் அவர் முந்தின நாள் ஒரு கட்சிக் கூட்டத்தில் பேசியது. இவர் இறப்பால் பலரது டாலர் கனவுகள் உடைந்தன. பல ரசிகர்கள் மனமும் உடைந்திருக்கும். யாராவது தீக்குளித்தார்களா என்று தெரியவில்லை.

அழகிகள் இனிமேல் சாகக்கூடாது என்று சட்டம் கொண்டு வர வேண்டும்.

[இப்படி லேட்டா செய்தி சொல்லறது வலைப்பூவின் ...மன்னிக்க வலைப்பதிவின் வழியல்ல என்று யாராவது டெக்கி சொல்லக்கூடும். பரவாயில்லை, இப்பெல்லாம் தினமும் பூ பறிக்க முடியல்ல...]

தமிழுக்கு மதுவென்று பேர்!

திடீரென்று உயிரெழுத்தில் தமிழ் மணம் மதுரை மல்லிகை மணம் போல் வீசத்தொடங்கியுள்ளது. ஏன் ஒரு மொழி பலருக்கு இப்படியானதொரு மயக்கத்தைத் தருகிறது?

ஆராய வேண்டிய விஷயம்!

மொழி என்பது சிந்தனையின் பாற்பட்டது. எனவே மொழியின் மீது காதல், அது தரும் இன்பக்கிளர்ச்சி இவையெல்லாம் ஒரு வகையில் சுய இன்பம்தான். ஒரு மொழியை பெண்ணாக வைத்துப் பார்பதிலிருந்து இதை ஒருவாறு புரிந்து கொள்ளலாம். (உயிரெழுத்தில் உள்ள படம் சரஸ்வதியா? தமிழ் அன்னையா?!!)

பாரதி, பாரதிதாசன் போன்றோர் தனது குடும்பத்தையும் விட்டு மொழிக்காக உயிரைக் கொடுத்தது உளவியல் ரீதியில் ஆராயவேண்டிய சமாச்சாரம். பிராய்டிசம் இதைப்பற்றி என்ன சொல்லும் என்று தெரியவில்லை!

ஆனால் இந்த வகையான இன்பம் கற்றவர் மத்தியில் மட்டுமே உள்ளது என்பது காணத்தக்கது. பாமரனுக்கு தாம்பத்திய இன்பத்திற்கே நேரமில்லாத போது இந்த வகையான சுய இன்பத்திற்கு நேரமிருக்காது. ஒருவகையில் தமிழ் குடி நகரமயமாக்கப்பட்டதின் (urbanisation) விளைவா இது என்று தெரியவில்லை. ஆனால் தமிழனின் சுய அடையாளத்திற்கு, ஒரு கௌரவத்திற்கு தமிழ் மொழி ஆழ்வார்களாலும் தூக்கி வைத்துக் கொண்டாடப்பட்டுள்ளது.

ஆனால் இன்று உலகமயமாகிவரும் தமிழினத்தின் இரண்டாவது தலைமுறையிடம் இப்படியான அதீத மொழி உணர்வைக் காட்டினால் 'அரசியல்' பிரக்ஞையுள்ள (political neutrality) அவர்கள் இதை 'நாட்சிசம்' (nazism) என்று சொல்வார்கள். ஆனால் நமக்கிது narcissism :-)

The Womenkind

மீனா சொல்லித்தான் பெண்ணினம் பற்றி அறிந்து கொண்டேன். பெண்மொழி கேட்க இனிமையாக இருக்கிறது. இது மிக நல்ல முயற்சி. வாழ்த்துக்கள். நம்ம மீனாவிற்குள் ஒரு கலைஞர் இருக்கிறார் என்று எனக்குத்தெரியும். எனவேதான் அவரை செட்டிநாட்டு மொழி பேசச்சொல்லி பதிவு செய்தேன். எனது தேர்வுகளான காசியும், மீனாவும் இன்று வலைப்பூ வானில் கொடிகட்டிப் பறப்பது மகிழ்வாக இருக்கிறது.

அப்பச்சி தொடர் மிக அழகு. எந்தப் பாசாங்குமில்லாத சொல்லாடல் அதனளவில் அழகு. காசியின் தொடரும் இப்படித்தான் பலரின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டது. அப்பச்சி 8-ல் அதிர்ச்சி காத்திருப்பது போல் படுகிறது. கதை சொல்லிகள் சோகத்தை தள்ளிப்போடுவது வழக்கம். உதயசெல்வியும் பதறுகிறார். அதுவே கதையின் வெற்றி! வாழ்க.

வைகைக்கரை காற்றே!......040


அந்த மண்ணில் வன்முறையும் அன்பும் கலந்தே இருந்தன. முக்குலோத்தோர் பூமியான அங்கு தேசிய சின்னம் திருப்பாச்சேத்தி அருவாள் என்றாலும் முக்குலத்தோர் தலைவர் பொன்.முத்துராமலிங்கத்தேவர் ஏறக்குறைய ஒரு கடவுள் ஸ்தானத்தில் வைத்து வழிபடப்பட்டார். எப்படி அக்கிரஹாரத்து ஜனங்களுக்கு காஞ்சிப்பெரியவர் ஒரு ஆன்மீகச் சின்னமாகத் தென்பட்டாரோ அது போலவே முக்குலத்தோருக்கு முத்துராமலிங்கத்தேவர் இருந்தார். அவரைப்பற்றி பல்வேறு தொன்மங்கள் உண்டு. அவர் சுத்த பிரம்மச்சாரியாக வாழ்ந்தவர். எந்த விந்துப்பாய்ச்சலும் இல்லாததால் அவ்விந்து கட்டிப்பட்டு நாகபூஷணக்கல்லாக மாறிவிடுமாம். அக்கல் பிரகாசமான ஒளியுடன் தேவர் அவர்கள் அறையில் இருக்குமாம். தேவர் மாபெரும் முருக பக்தர். முருகன் தமிழ்க்கடவுள். குறிஞ்சித்தெய்வம். தேவர் வீட்டில் எப்போதும் மயில்கள் நடமாட்டம் உண்டு. மற்ற மானுடர் போல் தேவர் அருகில் போனால் மனுஷ நாற்றம் வருவதில்லை, அதற்குப்பதில் தெய்வீகமான சந்தன மணம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். இப்படிப்பல தொன்மங்கள்.

நந்துவிற்கு தொன்மங்கள் பிடிக்கும். அதில் மறைந்துள்ள மாயாஜாலம் பிடிக்கும். பெரியவர் வருகிறார் என்றவுடன் அவரைப்பற்றி பல கதைகள் பேசப்பட்டன. காஞ்சிப்பெரியவர் மாயாஜாலத்தில் நம்பிக்கையற்றவர். பிராமண சமூகத்தில் சாயிபாபாவின் உள்ளோட்டத்தை தடுக்கும் ஒரு எதிர் சக்தியாக காஞ்சிப்பெரியவர் இருந்தார். அவர் சுத்த பக்தி செய்யச்சொன்னார். பெரியவர்கள் வழியில் நடக்கச் சொன்னார். இறைவன் ஒன்றே என்றார். அதற்கு அவர் தந்த விளக்கங்கள் பாதிப்பேருக்கு புரியாமலே இருந்தது. சிறுவர்களுக்கும், பெரியவர்களுக்கும் மாயாஜாலம் வேண்டியிருந்தது. எனவே இவரை விட்டுவிட்டு ஆதி சங்கரர் பற்றிக்கதைகள் உலாவ ஆரம்பித்தன. பாலனுக்குக் கேரளத்தொடர்பு இருந்ததால் ஆதிசங்கரர் பற்றிய ஒரு கேரளக்கதை விட்டான். ஆதி சங்கரர் தாகவிடாயாக பயணப்பட்டிருந்தார். அவர் கால் நடையாகவே இந்தியா முழுவதும் சுற்றியவர். அப்படி பயணப்பட்டிருந்தபோது கொல்லன் உலை ஒன்று வழியில் இருந்தது. கொல்லன் இரும்பைக் காச்சிக் கொண்டிருந்தான். கைவேலையாக இருந்த அவனிடம் சங்கரர் குடிக்க ஜலம் கேட்டிருக்கிறார். அவனுக்குக்கிருந்த ஆத்திரத்தில், "ஏனைய்யா நான் கைவேலையாக இருப்பது தெரியவில்லை. உனக்கு குடிக்க தண்ணி ஊத்தற நிலையிலேயா இருக்கேன். அவசரமுண்ணா இந்தக் காச்சின இரும்பை ஊத்தறேன் குடிச்சுக்கோ என்றானாம். சர்வமும் ஒன்று என்று காணும் அத்வைதியான சங்கரருக்கு நீரணுவிற்கும், இரும்பு அணுவிற்கும் அவ்வளவு பெரிய வித்தியாசம் தெரியவில்லை. "பரவாயில்லை ஊத்தேன்! குடிக்கிறேன்!" என்றாராம். இவனுக்கு வந்த ஆத்திரத்தில் இவன் ஊற்ற அவர் குடித்தே விட்டாராம். நந்துவிற்கு இந்தக்கதை பிடித்தது.

வாழ்வு என்பது அமானுஷ்யமானது என்றவன் நம்பினான். பெருமாள் கோயிலுக்கருகில் இருந்த சுப்ரமணிய ஸ்வாமி கோயில் எப்போதாவதுதான் திறக்கும். தைப்பூசம் அன்று திறக்கும். ஆண்களும், பெண்களும் பால்காவடி எடுப்பர். அப்போது தென்படும் சூழல் அவனுக்குச் சாதாரணமாகப்படாது. நாக்கில் வேல் குத்தியிருப்பார்கள். அருள் வந்து ஓடுவார்கள்.

எல்லா குலத்திலும் இந்த அமானுஷ்யம் பரந்து கிடந்தது. பனையூரம்மன் என்று ஒரு தெய்வம். பக்கத்து ஊரிலிருந்து ஒரு பெரியவர் எப்போதாவது வருவார். மிகப்பெரிய மரக்காலணி அணிந்து வருவார். மிக நேர்த்தியான கணையாழி அவர் காலை அலங்கரிக்கும். கையில் ஒரு சாட்டை வைத்துக் கொண்டு படீர், படீர் என்று தன் முதுகில் அடித்துக் கொள்வார். சவுக்கு நுனி பட்ட இடத்தில் ஆறாப்புண் ஒன்று இரத்தச்சிவப்பாக இருக்கும். அவருக்கு உடல் ஒரு பொருட்டாக இல்லாதது ஆச்சர்யத்தைக் கொடுக்கும் நந்துவிற்கு. அவர் கையில் சாட்டை வைத்திருந்தாலும் கண்களில் ஒரு சாந்தமும், அருளும் எப்போதுமிருக்கும். அவர் கையால் திருநீறு வாங்க அக்கிரஹாரத்து ஜனங்கள் வரும் போது அவர் மிகப்பணிவுடன் விபூதி தருவார். பலர் அவர் பாதங்களைத் தொட்டு நமஸ்கரிப்பர். அவர் தெரு முக்கில் தென்பட்டாலே 'பனையூரம்மா! பனையூரம்மா!' என்று சிறுவர்கள் கத்த ஆரம்பிப்பர்.

புதூர்காரர்கள் என்றாலே குத்து, வெட்டு என்றுதான் ஊரில் பேச்சு. ஆனால் ஊரைப் பயப்பட வைக்கும் மனிதர்களெல்லாம் பங்குனி மாதத்தில் தெய்வீகமாக மாறிவிடுவது அந்த ஊரின் ஆச்சர்யம். மச்சக்காளை வருகிறார் என்றால் அழுத குழந்தை கூட வாய் நிறுத்திவிடும். அவ்வளவு பயம். அவர் அக்கிரஹரத்துப் பக்கம் வருவதே இல்லை. ஆனால் மாரியம்மனுக்கு நேந்து கொள்ளும் போது தீச்சட்டியுடன் அக்கிரஹாரத்தில் நுழைவார். அவர் வீரம் அவர் கண்களில் தெறிக்க கையில் தீச்சட்டி தவிர ஒன்றும் ஒருக்காது. பெரும்பாலான ஜனங்கள் வைக்கோலை சட்டியின் கீழே வைத்திருப்பர். கையைச் சூடு பதம் பார்த்து விடாமல் தடுக்க. ஆனால் மச்சக்காளைக்கு நெருப்பு ஒரு பொருட்டாகப்படாது. அவர் வீடு தோறும் வரும் போது சட்டியில் நெய் அல்லது எண்ணெய் விட வேண்டும். மாமிகளுக்கு ஒரே பயம். அவரைப்பார்க்கவே பயம். கோகிலத்திற்கு எந்த பயமும் கிடையாது. அவருக்கென்று நெய் வைத்திருப்பாள். அம்மா நெய்விடும் போது சட்டியில் தீச்சுவாலை பறக்கும். இருவர் கண்களிலும் அச்சுவாலை ஒளிவிட்டு பிரகாசிப்பதைப் பார்க்க நந்துவிற்கு பிரம்மிப்பாக இருக்கும். கோகிலத்தின் தைர்யம் ஊர் அறிந்தது. அவளைப் பாப்பாத்தி என்று யாரும் சொல்வதில்லை. "அவ தேவர் வீட்டிலே பொறந்திருக்க வேண்டியவ! அக்கிரஹாரத்திலே தப்பிப் பொறந்திட்டா!" என்றுதான் சொல்வார்கள்.

இராமேஸ்வரம் போகும் வழியில் திருப்புவனம் இருப்பதால் சில நேரம் வடநாட்டு சாதுக்கள் வருவதுண்டு. அக்கிரஹாரத்து ஜனங்கள் தப்பும் தவறுமாக சமிஸ்கிருதம் பேச அவர்களும் புரிந்து கொண்டு தலையாட்டுவர். ஒருமுறை இப்படித்தான் ஒரு சாது வந்தார். வெளியே வந்த அம்மாவிடம் ஏதோ கேட்டிருக்கிறார். அவர்களுக்கு சாதம் போடக்கூடாது. அரிசிதான் போட வேண்டும். அவர்கள் ஆசாரம் என்னவென்று இவர்களுக்குத் தெரியாததால் ஒரு கைப்பிடி அரிசி அம்மா போட்டாள். அதிலிருந்து கொஞ்சம் எடுத்து சாது திருப்பிக்கொடுத்தார். அது ஸ்வாமி பிரசாதமென்று அம்மா வாங்கி ஸ்வாமி அறையில் வைத்து விட்டாள்.

சில மாதங்கள் கழித்து ஏதேட்சையாகப் பார்த்தபோது அரிசி செக்கச்செவேலென்று சின்னச் சின்ன புஷ்பங்களாக மாறி இருந்தது. நந்துவிற்கு இதைப்பற்றி ஊரெல்லாம் சொல்வதில் பெருமையாக இருந்தது!

வாழ்வே பிரம்மிப்பாக நந்துவின் கண்களுக்குப் பட்டது. பெரியக்கா இரண்டாவது பிரவத்திற்கு வந்திருந்தாள். முரளி பிறந்து இரண்டு நாள் ஆகியிருக்கும். ஆஸ்பத்திரியில் போய் நந்து பார்த்தபோது முரளியும் அச்சிவப்பு புஷ்பம் போல் சிறிதாக அக்கா மடியில் கிடந்தான். இரண்டு பேரையும் கண் கொட்டாமல் நந்து பார்த்துக் கொண்டிருந்தான்!

வைகைக்கரை காற்றே!......039அன்று மாலை சாயரட்ச பூஜைக்கு முன்பு காஞ்சிப் பெரியவர் கோயில் மட்டபத்தில் பேசினார். கழக அலை வீசிக்கொண்டிருந்த காலகட்டத்தில் கோயில் காரியங்களுக்கு குறைவாகவே மக்கள் வந்தனர். பெரும்பாலும் அருளுரை கேட்க வந்திருந்தவர்கள் அக்கிரகாரத்து ஜனங்களாகவே இருந்தனர்.

"நா இந்த ஊருக்குக் காரணமாத்தான் வந்தேன்" என்று ஆரம்பித்தார் பெரியவர்.

"நா வரேன்னுட்டு பெரியவா வேத கோஷம் செய்தா. குழந்தைகள் தனக்குத் தெரிந்ததை சொல்லிண்டே வந்ததுகள். இந்தக் கோயில் வாசலிலேயே கோமடம் இருக்கு. ஆனா! பசுக்களைத்தான் காணலே! வேதபாடசாலைன்னு போர்டு போட்டிருக்கு! ஆனா வேதம் படிக்கத்தான் ஆளக்காணோம்!

குழந்தைகள்ளெல்லாம் ஸ்கூலுக்குப் போய் பாணிபட்டு யுத்தம் பத்தி படிக்கிறதுகள். ஆனா நம்ம மூதாதையர் பற்றித் தெரிஞ்சிக்கிற ஆர்வமில்ல. ஆதிசங்கரரைப்பத்தி ஸ்கூலிலே சொல்லித்தர மாட்டா! ஏன்னா அது செகுலர் எஜுகேஷன்! குமார பட்டர் யார்? அவர் என்ன தத்துவம் சொன்னார் கேட்டா நம்ம குழந்தைகளுக்குத் தெரியாது! இதுதான் நிலமை.

பிராமணன் வேதம் படிக்கணும்ன்னுதான் இவ்வளவு வசதியும் ஊர்க்காரா செஞ்சு வச்சிருக்கா! ஆனா பிராமணன் மிலிட்டரியிலே போய் யுத்தம் பண்ணறான். ஹோட்டல் வெச்சு நடத்தறா. வேற வியாபாரமெல்லாம் பண்ணறா. விவசாயம் பாக்கறா. போலீஸ் உத்தியோகம் கூட பண்ணறா. ஆனா, வேதம் சொல்லிக்க மாட்டேங்கறா! இந்த ஊரிலே ஐயங்கார் இருக்கா. அவாளுக்கு வேதமும் சொல்லணும். நாலாயிரதிய்வப்பிரபந்தமும் சொல்லணும்ன்னு வச்சிருக்கு. அவா ரெண்டும் சொல்லறதில்லே! வெறுமே பஞ்சாங்கம் பாத்துண்டு இருக்கா!

ஆனா! என்னிட்ட மறக்காம கார்த்தாலே கேட்டா, ஏன் இந்த வைகை ஆத்திலே குளுக்கலேன்னு. சாயந்திரம் சொல்லறேன்னேன்.

ஆத்துக்கு அக்கரையிலேதான் மாணிக்கவாசகர் பொறந்த பூமி இருக்கு. எத்தனை பேருக்குத் தெரியும்?"

பூகோளம், சரித்திரம் இவையெல்லாம் தெரியாத அப்பாவி ஜனங்கள். ஏதோ பெரியவர் நாலு வார்த்தை பகவத் விஷயமாச் சொல்லுவார். கேட்கலாம்ன்னு வந்தா. மனுஷன் வாரோ வாருன்னு வாரரார். அக்கிரகாரத்து ஜனங்களுக்கு முகத்தில் ஈயாடவில்லை. எப்போ பூஜை ஆரம்பிக்கும்ன்னு காத்திருந்தனர்.

"மாணிக்கவாசகர் புஷ்பவனேஷ்வரரை தரிசிக்க வரார். ஊட நதி ஓடறது. கடக்கலாம்ன்னு காலை வச்சா! பூமிக்குள்ள பூரா லிங்கமா இருக்கு. எவரை தரிசிக்கப் போறோமோ அவர் தலையிலே நடந்துண்டா போக முடியும்? எனவே ஊரெல்லாம் சுத்திட்டு வந்து இந்தக் கோயிலைப்பத்தி பாடி வச்சுட்டுப் போறார். அப்பேர்ப்பட்ட ஊர் இது. இங்க போய் நான் எப்படி நதி நீராட முடியும்? இந்த ஆத்துத்தண்ணிலே அஸ்தியைக் கரைக்கலாம்னா அது புஷ்பமா மாறரது. அவ்வளவு விசேஷம் இங்க.

இனிமேலாவது இந்த ஊர் ஜனங்கள் இந்த ஸ்வாமியின் அருமை தெரிந்து உற்சவங்கள், விழாக்களை ஒழுங்காச் செய்யணும். நான் வரப்ப மட்டும் புருஷசூக்தம் சொல்லிட்டு நாளைக்கு சும்மா இருக்கக்கூடாது. தினமும் சொல்லணும். அப்பதான் மங்களம் நிரந்தரமா இந்த ஊரிலே தங்கும்!"

பூஜை நேரமாகிவிட்டது. ஒத்து ஊதுபவர் மெதுவாக சுருதி கூட்ட ஆரம்பித்தார். அன்று விசேஷமாக பூஜை நடந்தது.

நந்துவிற்கு அவர் சொன்னதில் பாதி புரிந்தது. மீதி புரியவில்லை. ஆனால் அன்றைய சிவ பூஜை அவனுள் ஏதோ ஒன்றைப்புரட்டிப் போட்டது.

வைகைக்கரை காற்றே!......038

காஞ்சிப் பெரியவர் அந்த ஊருக்கும் வந்தார் என்று சொல்வது பிழை. காஞ்சிப் பெரியவரின் புகழ் ஓங்கியிருந்த காலமது. ஆனால் அந்த ஊரின் புகழ் பல நூற்றாண்டு சரித்திர மாற்றத்தில் குறைந்திருந்ததும் உண்மை. காஞ்சிப்பெரியவர் அந்த ஊரின் புகழறிந்தே வந்திருக்கிறார் என்பது போகப்போகத் தெரிந்தது. அந்த ஊர் ஜனங்களுக்கு தங்கள் ஊரின் பெருமை தெரியாது இருப்பதும் அப்போதுதான் புரிந்தது.

தமிழ் மண்ணில் பல்வேறு ஆக்கிரமிப்புகள் காலம் காலமாக தொடர்ந்து நடந்து வந்திருக்கின்றன. போர்க்காலங்கள், அன்னியர் ஆட்சிக்காலங்கள் போன்ற காலக்கட்டங்களில் நமது பெருமை பற்றி அதிகம் பீற்றிக் கொள்ள முடியாது. அன்னியர்கள் எப்போதும் ஆக்கிரமித்த மக்களை தாழ்வு மனப்பான்மையிலேயே வைத்திருக்க முயல்வர். பின் அதுவே பழகிப்போய் சுய கௌரவம் என்பது ஒரு காலக்கட்டத்தில் முற்றும் அழிந்து போய் விடுகிறது. நந்து வளர்ந்த காலத்தில் 200 வருட ஆங்கில ஆட்சி தமிழ் மக்களின் சுயத்தை ஏறக்குறைய அழித்திருந்தது. பல்வேறு பெரியவர்கள் இழந்த பெருமையை மீண்டும் மக்களுக்குச் சொல்லிக்கொண்டிருந்தனர். பாரதியார், வள்ளலார், காஞ்சிப்பெரியவர் போன்றோர் சமயப் பின்புலத்தில் பண்டைய பெருமையைக் கொண்டு வந்தனர். தந்தை பெரியார் சமயத்தை மறுதலிப்பதின் மூலம், இந்து ஆளுமையின் பிடியிலிருந்து சாதாரணனை விடுவிப்பதின் மூலம் அவனுக்கொரு புதிய அடையாளத்தைத் தர முயன்று வந்தார். சுயமரியாதை இயக்கம் உச்சத்தில் இருந்தது. அண்ணாவும் சகாக்களும் அரசியல் நோக்குடன் அவ்வியக்கத்திலிருந்து பிரிந்திருந்தனர். அவர்கள் தமிழனுக்கு வேறொரு அடையாளத்தைக் கொடுப்பதில் தீவிரமாக முனைந்திருந்தனர். அது சமயச்சார்பு இல்லாமல் இருந்தது. பெரியார் தர முயன்று கொண்டிருந்த ஆங்கில மொழி ஆதரவு இன்றி இருந்தது. தமிழ் மொழி, தமிழினம் என்ற பொது அடையாளத்தை அது வலியுறுத்தியது. அது காட்டுத்தீ போல் பரவிக்கொண்டிருந்தது.

ஆனால் பெரியார் பாசறையிலிருந்து இவர்கள் வந்ததால் பிராமண எதிர்ப்பை இவர்களால் ஆரம்ப காலக்கட்டத்தில் ஒதுக்க முடியவில்லை. பிராமணர்கள் தமிழர் அல்லாதோர் என்ற பிரம்மையை பிராமணர்களிடையேயும் உருவாக்கி வைத்திருந்தனர். அது அவர்களுக்கொரு மயக்கத்தை தந்திருந்தது. வீட்டில் தமிழ்தான் எல்லோரும் பேசுகிறார்கள். பண்டைய குருகுல வாழ்வு முற்றும் அழிந்திருந்தது. குலக்கல்வி என்பதும் அழிந்து போயிருந்தது. அதை மீண்டும் கொண்டு வர முயன்ற ராஜாஜியின் முயற்சி தி.மு.கவினரால் முறியடிக்கப்பட்டு அரசியல் பிழையாகிப் போனது. புதிய ஜனநாயக கல்விமுறை அமுலுக்கு வந்திருந்தது. எனவே பசு மடத்தில் வேதம் சொல்லித்தர முன்வந்த கனபாடிகளுக்கு ஆதரவு இல்லாமல் போயிருந்தது. ஆயினும், திராவிடக்கழகம் தொடர்ந்து பிராமண எதிர்ப்பை ஆயுதமாகப் பயன்படுத்தி வந்தது. அவர்களின் முக்கிய இலக்காக சனாதன தர்மம் பேசும் காஞ்சி மடம் இருந்தது. இந்த இயக்கத்தின் பெருத்த மக்கள் ஆதரவிற்கு முன் எதிர்நீச்சல் போடும் ஒற்றைப்போராளியாகக் காஞ்சிப்பெரியவர் இருந்தார்.

அவரை நந்து பார்த்த போது அவர் போராளி போல் தெரியவில்லை. நோயாளி போல் இளைத்து துரும்பாய் இருந்தார். அவர் கோயில் நந்தவனத்தில் தங்குவதாக ஏற்பாடாகியிருந்தது. அவருக்கென்றொரு சின்னக்குடில் அங்கு அமைக்கப்பட்டிருந்தது. அவரது குடிலுக்கு 50 அடி தள்ளி அந்த ஊர் ஜனங்கள் கூடியிருந்தனர். வெறும் வேடிக்கை பார்க்க மட்டுமில்லாமல் ஏதாவது உதவி தேவைப்பட்டால் செய்யலாமே என்ற எண்ணமும் காரணமாக இருந்தது. முனிகளில் அவர் மாமுனியாகத் திகழ்ந்தார். அவருக்கு கைங்கர்யம் செய்தால் தம் பழம்வினை அறுந்து போகும் என்று மக்கள் நம்பினர். அவரிடம் யாராவதொருவர் அவ்வப்போது போய் பேசி விட்டு வந்தனர். ஒரு கை இடுப்பிலும், இன்னொரு கை வாய் பொத்தியும் இருந்தது நந்துவிற்கு வேடிக்கையாக இருந்தது. முதலில் போனவருக்கு பல்வலி என்று நினைத்தான். பின்னால்தான் தெரிந்தது எல்லோருமே அப்படிச் செய்தது. அது சபை மரியாதை என்பது போகப் போகத்தெரிந்தது. நந்து கோமா மாமிகிட்ட போய் நின்று கொண்டான். மாமி மடிசாரில் கூடுதல் அழகாக இருந்தாள்.

"மாமி! இவர் ஏன் இவ்வளவு ஒல்லியா இருக்கார்?"

"அவர் எங்கடா சாப்பிடறார். ஏதோ ஜீவனை வைச்சிருக்க ஒரு வாய். அதிலே பாவாக்காய் அது இதுன்னு உப்பு சப்பில்லாத சாப்பாடு வேறு."

"நம்ம மாதிரி அவர் சாப்பிட மாட்டாரா?"

"ஊகூம். நமக்கு பால், தயிர், நெய் இல்லாட்ட சாப்பாடு இறங்க மாட்டேங்கிறது. அவர் சாமியாரச்சே! அப்படிச் சாப்பிட முடியுமா?"

"ஏன் சாப்பிடக்கூடாது? மதுரை ஆதீனம் நன்னா சாப்பிட்டு கொழு, கொழுன்னு இருக்காரே?" என்றான். இந்த மதுரை ஆதீனத்தைப் பார்த்தது ஒரு கதை!

"நேக்கு அதெல்லாம் தெரியாது. இவர் சாப்பிடறதில்லை. இவர் மகான்."

ஊமையனிடம் சொல்லி பெரிய ஓடுகால் பிரத்தியேகமாக பெரியவருக்காக வெட்டி வைத்திருந்தனர். பெரியவர் ஆற்றில் நீராட வரமாட்டேன் என்று சொல்லி விட்டார். அந்த ஊர் ஜனங்களுக்கு தாங்கள் ஏதோ அபச்சாரம் செய்து விட்டோ மென்று தோன்றியது. இதை எப்படிப் பெரியவரிடம் முறையிடுவது? யார் பூனைக்கு மணி கட்டுவது?

அக்கிரகாரத்தில் செல்வாக்கு உள்ளவர் கிருஷ்ணய்யர் ஒருவர்தான். அவர் சாதாரணமாகப் பேசுவதே யாருக்கும் புரியாது. இப்போது முறைப்பாடோ டு காஞ்சிப்பெரியவரிடம் பேசச்சொன்னால் உள்ளதும் புரியாமல் போய்விடும். இருந்தாலும் அவரையே பேசச்சொன்னார்கள். ஆனால் அவர் சமயோஜிதமாக, அவரது மச்சினன் கோபாலனை அனுப்பிவிட்டார். கோபால மாமாதான் கிருஷ்ணய்யரின் அத்தனை நிலபுலன்களையும் பராமரித்து வந்தார். கிராமத்து சனங்களுடன் ஊடாடி, ஊடாடி அவருக்கு பேச்சுத்திறமையும், தைர்யமும் வந்திருந்தன.

"பெரியவாள் ஏன் ஆத்திலே குளிக்காமல் கோயில் கிணத்திலே குளிக்கிறார்ன்னு ஊர் ஜனங்கள் கேக்கிறா? ஏதாவது அபச்சாரம் நடந்திருத்தா"?

தன் குடிலிருந்து தலையை வெளியே நீட்டினார் பெரியவர்.

"யாரது?"

"கோபலய்யர்" என்றார் மடத்து ஆசாமி.

"சாயந்தரமா காரணம் சொல்லறேன். எல்லாரையும் போய் அவா, அவா வேலையை கவனிக்கச் சொல்லு!" என்று உத்திரவிட்டார் பெரியவர்.