வைகைக்கரை காற்றே!......038

காஞ்சிப் பெரியவர் அந்த ஊருக்கும் வந்தார் என்று சொல்வது பிழை. காஞ்சிப் பெரியவரின் புகழ் ஓங்கியிருந்த காலமது. ஆனால் அந்த ஊரின் புகழ் பல நூற்றாண்டு சரித்திர மாற்றத்தில் குறைந்திருந்ததும் உண்மை. காஞ்சிப்பெரியவர் அந்த ஊரின் புகழறிந்தே வந்திருக்கிறார் என்பது போகப்போகத் தெரிந்தது. அந்த ஊர் ஜனங்களுக்கு தங்கள் ஊரின் பெருமை தெரியாது இருப்பதும் அப்போதுதான் புரிந்தது.

தமிழ் மண்ணில் பல்வேறு ஆக்கிரமிப்புகள் காலம் காலமாக தொடர்ந்து நடந்து வந்திருக்கின்றன. போர்க்காலங்கள், அன்னியர் ஆட்சிக்காலங்கள் போன்ற காலக்கட்டங்களில் நமது பெருமை பற்றி அதிகம் பீற்றிக் கொள்ள முடியாது. அன்னியர்கள் எப்போதும் ஆக்கிரமித்த மக்களை தாழ்வு மனப்பான்மையிலேயே வைத்திருக்க முயல்வர். பின் அதுவே பழகிப்போய் சுய கௌரவம் என்பது ஒரு காலக்கட்டத்தில் முற்றும் அழிந்து போய் விடுகிறது. நந்து வளர்ந்த காலத்தில் 200 வருட ஆங்கில ஆட்சி தமிழ் மக்களின் சுயத்தை ஏறக்குறைய அழித்திருந்தது. பல்வேறு பெரியவர்கள் இழந்த பெருமையை மீண்டும் மக்களுக்குச் சொல்லிக்கொண்டிருந்தனர். பாரதியார், வள்ளலார், காஞ்சிப்பெரியவர் போன்றோர் சமயப் பின்புலத்தில் பண்டைய பெருமையைக் கொண்டு வந்தனர். தந்தை பெரியார் சமயத்தை மறுதலிப்பதின் மூலம், இந்து ஆளுமையின் பிடியிலிருந்து சாதாரணனை விடுவிப்பதின் மூலம் அவனுக்கொரு புதிய அடையாளத்தைத் தர முயன்று வந்தார். சுயமரியாதை இயக்கம் உச்சத்தில் இருந்தது. அண்ணாவும் சகாக்களும் அரசியல் நோக்குடன் அவ்வியக்கத்திலிருந்து பிரிந்திருந்தனர். அவர்கள் தமிழனுக்கு வேறொரு அடையாளத்தைக் கொடுப்பதில் தீவிரமாக முனைந்திருந்தனர். அது சமயச்சார்பு இல்லாமல் இருந்தது. பெரியார் தர முயன்று கொண்டிருந்த ஆங்கில மொழி ஆதரவு இன்றி இருந்தது. தமிழ் மொழி, தமிழினம் என்ற பொது அடையாளத்தை அது வலியுறுத்தியது. அது காட்டுத்தீ போல் பரவிக்கொண்டிருந்தது.

ஆனால் பெரியார் பாசறையிலிருந்து இவர்கள் வந்ததால் பிராமண எதிர்ப்பை இவர்களால் ஆரம்ப காலக்கட்டத்தில் ஒதுக்க முடியவில்லை. பிராமணர்கள் தமிழர் அல்லாதோர் என்ற பிரம்மையை பிராமணர்களிடையேயும் உருவாக்கி வைத்திருந்தனர். அது அவர்களுக்கொரு மயக்கத்தை தந்திருந்தது. வீட்டில் தமிழ்தான் எல்லோரும் பேசுகிறார்கள். பண்டைய குருகுல வாழ்வு முற்றும் அழிந்திருந்தது. குலக்கல்வி என்பதும் அழிந்து போயிருந்தது. அதை மீண்டும் கொண்டு வர முயன்ற ராஜாஜியின் முயற்சி தி.மு.கவினரால் முறியடிக்கப்பட்டு அரசியல் பிழையாகிப் போனது. புதிய ஜனநாயக கல்விமுறை அமுலுக்கு வந்திருந்தது. எனவே பசு மடத்தில் வேதம் சொல்லித்தர முன்வந்த கனபாடிகளுக்கு ஆதரவு இல்லாமல் போயிருந்தது. ஆயினும், திராவிடக்கழகம் தொடர்ந்து பிராமண எதிர்ப்பை ஆயுதமாகப் பயன்படுத்தி வந்தது. அவர்களின் முக்கிய இலக்காக சனாதன தர்மம் பேசும் காஞ்சி மடம் இருந்தது. இந்த இயக்கத்தின் பெருத்த மக்கள் ஆதரவிற்கு முன் எதிர்நீச்சல் போடும் ஒற்றைப்போராளியாகக் காஞ்சிப்பெரியவர் இருந்தார்.

அவரை நந்து பார்த்த போது அவர் போராளி போல் தெரியவில்லை. நோயாளி போல் இளைத்து துரும்பாய் இருந்தார். அவர் கோயில் நந்தவனத்தில் தங்குவதாக ஏற்பாடாகியிருந்தது. அவருக்கென்றொரு சின்னக்குடில் அங்கு அமைக்கப்பட்டிருந்தது. அவரது குடிலுக்கு 50 அடி தள்ளி அந்த ஊர் ஜனங்கள் கூடியிருந்தனர். வெறும் வேடிக்கை பார்க்க மட்டுமில்லாமல் ஏதாவது உதவி தேவைப்பட்டால் செய்யலாமே என்ற எண்ணமும் காரணமாக இருந்தது. முனிகளில் அவர் மாமுனியாகத் திகழ்ந்தார். அவருக்கு கைங்கர்யம் செய்தால் தம் பழம்வினை அறுந்து போகும் என்று மக்கள் நம்பினர். அவரிடம் யாராவதொருவர் அவ்வப்போது போய் பேசி விட்டு வந்தனர். ஒரு கை இடுப்பிலும், இன்னொரு கை வாய் பொத்தியும் இருந்தது நந்துவிற்கு வேடிக்கையாக இருந்தது. முதலில் போனவருக்கு பல்வலி என்று நினைத்தான். பின்னால்தான் தெரிந்தது எல்லோருமே அப்படிச் செய்தது. அது சபை மரியாதை என்பது போகப் போகத்தெரிந்தது. நந்து கோமா மாமிகிட்ட போய் நின்று கொண்டான். மாமி மடிசாரில் கூடுதல் அழகாக இருந்தாள்.

"மாமி! இவர் ஏன் இவ்வளவு ஒல்லியா இருக்கார்?"

"அவர் எங்கடா சாப்பிடறார். ஏதோ ஜீவனை வைச்சிருக்க ஒரு வாய். அதிலே பாவாக்காய் அது இதுன்னு உப்பு சப்பில்லாத சாப்பாடு வேறு."

"நம்ம மாதிரி அவர் சாப்பிட மாட்டாரா?"

"ஊகூம். நமக்கு பால், தயிர், நெய் இல்லாட்ட சாப்பாடு இறங்க மாட்டேங்கிறது. அவர் சாமியாரச்சே! அப்படிச் சாப்பிட முடியுமா?"

"ஏன் சாப்பிடக்கூடாது? மதுரை ஆதீனம் நன்னா சாப்பிட்டு கொழு, கொழுன்னு இருக்காரே?" என்றான். இந்த மதுரை ஆதீனத்தைப் பார்த்தது ஒரு கதை!

"நேக்கு அதெல்லாம் தெரியாது. இவர் சாப்பிடறதில்லை. இவர் மகான்."

ஊமையனிடம் சொல்லி பெரிய ஓடுகால் பிரத்தியேகமாக பெரியவருக்காக வெட்டி வைத்திருந்தனர். பெரியவர் ஆற்றில் நீராட வரமாட்டேன் என்று சொல்லி விட்டார். அந்த ஊர் ஜனங்களுக்கு தாங்கள் ஏதோ அபச்சாரம் செய்து விட்டோ மென்று தோன்றியது. இதை எப்படிப் பெரியவரிடம் முறையிடுவது? யார் பூனைக்கு மணி கட்டுவது?

அக்கிரகாரத்தில் செல்வாக்கு உள்ளவர் கிருஷ்ணய்யர் ஒருவர்தான். அவர் சாதாரணமாகப் பேசுவதே யாருக்கும் புரியாது. இப்போது முறைப்பாடோ டு காஞ்சிப்பெரியவரிடம் பேசச்சொன்னால் உள்ளதும் புரியாமல் போய்விடும். இருந்தாலும் அவரையே பேசச்சொன்னார்கள். ஆனால் அவர் சமயோஜிதமாக, அவரது மச்சினன் கோபாலனை அனுப்பிவிட்டார். கோபால மாமாதான் கிருஷ்ணய்யரின் அத்தனை நிலபுலன்களையும் பராமரித்து வந்தார். கிராமத்து சனங்களுடன் ஊடாடி, ஊடாடி அவருக்கு பேச்சுத்திறமையும், தைர்யமும் வந்திருந்தன.

"பெரியவாள் ஏன் ஆத்திலே குளிக்காமல் கோயில் கிணத்திலே குளிக்கிறார்ன்னு ஊர் ஜனங்கள் கேக்கிறா? ஏதாவது அபச்சாரம் நடந்திருத்தா"?

தன் குடிலிருந்து தலையை வெளியே நீட்டினார் பெரியவர்.

"யாரது?"

"கோபலய்யர்" என்றார் மடத்து ஆசாமி.

"சாயந்தரமா காரணம் சொல்லறேன். எல்லாரையும் போய் அவா, அவா வேலையை கவனிக்கச் சொல்லு!" என்று உத்திரவிட்டார் பெரியவர்.

0 பின்னூட்டங்கள்: