வைகைக்கரை காற்றே!......040


அந்த மண்ணில் வன்முறையும் அன்பும் கலந்தே இருந்தன. முக்குலோத்தோர் பூமியான அங்கு தேசிய சின்னம் திருப்பாச்சேத்தி அருவாள் என்றாலும் முக்குலத்தோர் தலைவர் பொன்.முத்துராமலிங்கத்தேவர் ஏறக்குறைய ஒரு கடவுள் ஸ்தானத்தில் வைத்து வழிபடப்பட்டார். எப்படி அக்கிரஹாரத்து ஜனங்களுக்கு காஞ்சிப்பெரியவர் ஒரு ஆன்மீகச் சின்னமாகத் தென்பட்டாரோ அது போலவே முக்குலத்தோருக்கு முத்துராமலிங்கத்தேவர் இருந்தார். அவரைப்பற்றி பல்வேறு தொன்மங்கள் உண்டு. அவர் சுத்த பிரம்மச்சாரியாக வாழ்ந்தவர். எந்த விந்துப்பாய்ச்சலும் இல்லாததால் அவ்விந்து கட்டிப்பட்டு நாகபூஷணக்கல்லாக மாறிவிடுமாம். அக்கல் பிரகாசமான ஒளியுடன் தேவர் அவர்கள் அறையில் இருக்குமாம். தேவர் மாபெரும் முருக பக்தர். முருகன் தமிழ்க்கடவுள். குறிஞ்சித்தெய்வம். தேவர் வீட்டில் எப்போதும் மயில்கள் நடமாட்டம் உண்டு. மற்ற மானுடர் போல் தேவர் அருகில் போனால் மனுஷ நாற்றம் வருவதில்லை, அதற்குப்பதில் தெய்வீகமான சந்தன மணம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். இப்படிப்பல தொன்மங்கள்.

நந்துவிற்கு தொன்மங்கள் பிடிக்கும். அதில் மறைந்துள்ள மாயாஜாலம் பிடிக்கும். பெரியவர் வருகிறார் என்றவுடன் அவரைப்பற்றி பல கதைகள் பேசப்பட்டன. காஞ்சிப்பெரியவர் மாயாஜாலத்தில் நம்பிக்கையற்றவர். பிராமண சமூகத்தில் சாயிபாபாவின் உள்ளோட்டத்தை தடுக்கும் ஒரு எதிர் சக்தியாக காஞ்சிப்பெரியவர் இருந்தார். அவர் சுத்த பக்தி செய்யச்சொன்னார். பெரியவர்கள் வழியில் நடக்கச் சொன்னார். இறைவன் ஒன்றே என்றார். அதற்கு அவர் தந்த விளக்கங்கள் பாதிப்பேருக்கு புரியாமலே இருந்தது. சிறுவர்களுக்கும், பெரியவர்களுக்கும் மாயாஜாலம் வேண்டியிருந்தது. எனவே இவரை விட்டுவிட்டு ஆதி சங்கரர் பற்றிக்கதைகள் உலாவ ஆரம்பித்தன. பாலனுக்குக் கேரளத்தொடர்பு இருந்ததால் ஆதிசங்கரர் பற்றிய ஒரு கேரளக்கதை விட்டான். ஆதி சங்கரர் தாகவிடாயாக பயணப்பட்டிருந்தார். அவர் கால் நடையாகவே இந்தியா முழுவதும் சுற்றியவர். அப்படி பயணப்பட்டிருந்தபோது கொல்லன் உலை ஒன்று வழியில் இருந்தது. கொல்லன் இரும்பைக் காச்சிக் கொண்டிருந்தான். கைவேலையாக இருந்த அவனிடம் சங்கரர் குடிக்க ஜலம் கேட்டிருக்கிறார். அவனுக்குக்கிருந்த ஆத்திரத்தில், "ஏனைய்யா நான் கைவேலையாக இருப்பது தெரியவில்லை. உனக்கு குடிக்க தண்ணி ஊத்தற நிலையிலேயா இருக்கேன். அவசரமுண்ணா இந்தக் காச்சின இரும்பை ஊத்தறேன் குடிச்சுக்கோ என்றானாம். சர்வமும் ஒன்று என்று காணும் அத்வைதியான சங்கரருக்கு நீரணுவிற்கும், இரும்பு அணுவிற்கும் அவ்வளவு பெரிய வித்தியாசம் தெரியவில்லை. "பரவாயில்லை ஊத்தேன்! குடிக்கிறேன்!" என்றாராம். இவனுக்கு வந்த ஆத்திரத்தில் இவன் ஊற்ற அவர் குடித்தே விட்டாராம். நந்துவிற்கு இந்தக்கதை பிடித்தது.

வாழ்வு என்பது அமானுஷ்யமானது என்றவன் நம்பினான். பெருமாள் கோயிலுக்கருகில் இருந்த சுப்ரமணிய ஸ்வாமி கோயில் எப்போதாவதுதான் திறக்கும். தைப்பூசம் அன்று திறக்கும். ஆண்களும், பெண்களும் பால்காவடி எடுப்பர். அப்போது தென்படும் சூழல் அவனுக்குச் சாதாரணமாகப்படாது. நாக்கில் வேல் குத்தியிருப்பார்கள். அருள் வந்து ஓடுவார்கள்.

எல்லா குலத்திலும் இந்த அமானுஷ்யம் பரந்து கிடந்தது. பனையூரம்மன் என்று ஒரு தெய்வம். பக்கத்து ஊரிலிருந்து ஒரு பெரியவர் எப்போதாவது வருவார். மிகப்பெரிய மரக்காலணி அணிந்து வருவார். மிக நேர்த்தியான கணையாழி அவர் காலை அலங்கரிக்கும். கையில் ஒரு சாட்டை வைத்துக் கொண்டு படீர், படீர் என்று தன் முதுகில் அடித்துக் கொள்வார். சவுக்கு நுனி பட்ட இடத்தில் ஆறாப்புண் ஒன்று இரத்தச்சிவப்பாக இருக்கும். அவருக்கு உடல் ஒரு பொருட்டாக இல்லாதது ஆச்சர்யத்தைக் கொடுக்கும் நந்துவிற்கு. அவர் கையில் சாட்டை வைத்திருந்தாலும் கண்களில் ஒரு சாந்தமும், அருளும் எப்போதுமிருக்கும். அவர் கையால் திருநீறு வாங்க அக்கிரஹாரத்து ஜனங்கள் வரும் போது அவர் மிகப்பணிவுடன் விபூதி தருவார். பலர் அவர் பாதங்களைத் தொட்டு நமஸ்கரிப்பர். அவர் தெரு முக்கில் தென்பட்டாலே 'பனையூரம்மா! பனையூரம்மா!' என்று சிறுவர்கள் கத்த ஆரம்பிப்பர்.

புதூர்காரர்கள் என்றாலே குத்து, வெட்டு என்றுதான் ஊரில் பேச்சு. ஆனால் ஊரைப் பயப்பட வைக்கும் மனிதர்களெல்லாம் பங்குனி மாதத்தில் தெய்வீகமாக மாறிவிடுவது அந்த ஊரின் ஆச்சர்யம். மச்சக்காளை வருகிறார் என்றால் அழுத குழந்தை கூட வாய் நிறுத்திவிடும். அவ்வளவு பயம். அவர் அக்கிரஹரத்துப் பக்கம் வருவதே இல்லை. ஆனால் மாரியம்மனுக்கு நேந்து கொள்ளும் போது தீச்சட்டியுடன் அக்கிரஹாரத்தில் நுழைவார். அவர் வீரம் அவர் கண்களில் தெறிக்க கையில் தீச்சட்டி தவிர ஒன்றும் ஒருக்காது. பெரும்பாலான ஜனங்கள் வைக்கோலை சட்டியின் கீழே வைத்திருப்பர். கையைச் சூடு பதம் பார்த்து விடாமல் தடுக்க. ஆனால் மச்சக்காளைக்கு நெருப்பு ஒரு பொருட்டாகப்படாது. அவர் வீடு தோறும் வரும் போது சட்டியில் நெய் அல்லது எண்ணெய் விட வேண்டும். மாமிகளுக்கு ஒரே பயம். அவரைப்பார்க்கவே பயம். கோகிலத்திற்கு எந்த பயமும் கிடையாது. அவருக்கென்று நெய் வைத்திருப்பாள். அம்மா நெய்விடும் போது சட்டியில் தீச்சுவாலை பறக்கும். இருவர் கண்களிலும் அச்சுவாலை ஒளிவிட்டு பிரகாசிப்பதைப் பார்க்க நந்துவிற்கு பிரம்மிப்பாக இருக்கும். கோகிலத்தின் தைர்யம் ஊர் அறிந்தது. அவளைப் பாப்பாத்தி என்று யாரும் சொல்வதில்லை. "அவ தேவர் வீட்டிலே பொறந்திருக்க வேண்டியவ! அக்கிரஹாரத்திலே தப்பிப் பொறந்திட்டா!" என்றுதான் சொல்வார்கள்.

இராமேஸ்வரம் போகும் வழியில் திருப்புவனம் இருப்பதால் சில நேரம் வடநாட்டு சாதுக்கள் வருவதுண்டு. அக்கிரஹாரத்து ஜனங்கள் தப்பும் தவறுமாக சமிஸ்கிருதம் பேச அவர்களும் புரிந்து கொண்டு தலையாட்டுவர். ஒருமுறை இப்படித்தான் ஒரு சாது வந்தார். வெளியே வந்த அம்மாவிடம் ஏதோ கேட்டிருக்கிறார். அவர்களுக்கு சாதம் போடக்கூடாது. அரிசிதான் போட வேண்டும். அவர்கள் ஆசாரம் என்னவென்று இவர்களுக்குத் தெரியாததால் ஒரு கைப்பிடி அரிசி அம்மா போட்டாள். அதிலிருந்து கொஞ்சம் எடுத்து சாது திருப்பிக்கொடுத்தார். அது ஸ்வாமி பிரசாதமென்று அம்மா வாங்கி ஸ்வாமி அறையில் வைத்து விட்டாள்.

சில மாதங்கள் கழித்து ஏதேட்சையாகப் பார்த்தபோது அரிசி செக்கச்செவேலென்று சின்னச் சின்ன புஷ்பங்களாக மாறி இருந்தது. நந்துவிற்கு இதைப்பற்றி ஊரெல்லாம் சொல்வதில் பெருமையாக இருந்தது!

வாழ்வே பிரம்மிப்பாக நந்துவின் கண்களுக்குப் பட்டது. பெரியக்கா இரண்டாவது பிரவத்திற்கு வந்திருந்தாள். முரளி பிறந்து இரண்டு நாள் ஆகியிருக்கும். ஆஸ்பத்திரியில் போய் நந்து பார்த்தபோது முரளியும் அச்சிவப்பு புஷ்பம் போல் சிறிதாக அக்கா மடியில் கிடந்தான். இரண்டு பேரையும் கண் கொட்டாமல் நந்து பார்த்துக் கொண்டிருந்தான்!

0 பின்னூட்டங்கள்: