வைகைக்கரை காற்றே!......041

"இன்று போய் நாளை வாராய்" என்ற சம்பூர்ண ராமாயணப் பாடல் இரவில் ஒலிக்கிறது என்றால் எவரெஸ்ட் டூரிங்க் டாக்கீஸீல் முதலாட்டம் முடிந்து விட்டது என்று பொருள். அதாவது இன்னிக்கு கொசுக்கடியில் பாதிப்படம்தான் பார்த்திருக்க முடியும் எனவே இன்னொருமுறை வரவேண்டியிருக்குமென்று சினிமாப்பார்க்க வருபவருக்கு முதலாளி ராசுக்கோனார் சொல்லும் இரவுச் செய்தி இது. டூரிங் டாக்கீஸ் என்பதால் அதற்கு வரி கிடையாது அல்லது மிகக்குறைவு. டூரிங் டாக்கீஸுக்கு நிரந்தரமான கட்டடம் இருக்கக் கூடாது. அது எந்த நேரமும் டூர் அடிக்க தயாரான நிலையிலிருக்க வேண்டும் என்பது பழைய விதி. அதை ராசுக்கோனாருக்கு யாரோ சொல்லியிருக்க வேண்டும். உடனே அவர் தனது ஆற்றுக்கருகிலிருந்த தென்னந்தோப்பை அப்புறப்படுத்தி ஒரு பெரிய கொட்டகை போட்டுவிட்டார். தோப்பிலிருந்த தென்னம்பாளையே சினிமாக்கொட்டகை கூரையாகியது. தென்னை மரங்கள் ஊன்று கோல் ஆயின. மதிய ஆட்டம் நடத்த வேண்டுமென்றால்..... [அது சட்டப்படி குற்றம்...ஆனால் கோனார் அதை அவ்வப்போது சரிக்கட்டி விடுவார். யாருக்கு சினிமா ஆசை விட்டது? ஆபீசர் குடும்பத்துக்கு எப்போ போனாலும் இலவசக் காட்சியுண்டு. அவருக்கும் அவ்வப்போது தோப்பிலிருந்து ஏதாவது போய்கொண்டே இருக்கும்] தென்னம்பாளையில் அமைக்கப்பட்ட பெரிய தட்டிகளைக் கட்டி கொட்டகையை இருட்டாக்கி விடுவார்கள். வெளியில் கொட்டும் ஒளி தென்னங்கீற்றின் இடையில் புகுந்து, தரை டிக்கெட் கிளப்பும் தூசில் படம் ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே ஒளிக்கற்றை வீசி படம் காமித்துக் கொண்டிருக்கும்.

நாராயண அய்யங்காருக்கு அந்த உத்தியோகமில்லை. எனவே நந்து நாலணா...அதாவது பின்னால் 25 நயாபைசா கொடுத்து தரை டிக்கெட் எடுத்துதான் படம் பார்க்க வேண்டும். பெரும்பாலும் பஸ்ஸில் அரை டிக்கெட் வாங்கும் பசங்களெல்லாம் தரை டிக்கெட் கேசுகளாகவே இருக்கும்! நந்து இன்னும் அரை டிராயர் போட்டுக் கொண்டிருந்ததாலும், அவ்வப்போது சித்தியா விட்டெறியும் நாலணா, இல்லை குட்டி பட்டர் மடியிலிருந்து கொட்டும் தட்சணை நாலணா (துரை வழியாக என்பதை நன்றியுடன் நினைவு கொள்ள வேண்டும்) கிடைப்பதாலும் அடிக்கடி எளிதாக சினிமாப் பார்க்க முடிந்தது. படம் ஆரம்பிப்பதற்கு அரை மணி முன்னதாகவே போய்விடுவான். அப்போதுதான் தரையில் போட்டிருக்கும் ஆற்றுமணலை சின்ன மேடுபோல் கட்டி அதன் மேல் உட்கார்ந்து பார்க்கமுடியும். எவ்வளவு பெரிய மண்கோட்டை கட்டினாலும் இடைவேளையில் அது தரை மட்டமாகிவிடும் காரணம் நந்துவிற்கு ரொம்ப காலம் புரியவே இல்லை. பின்னால் உட்காரும் ஆசாமிகள் மறைக்குது என்று சின்னப்பசங்களுடன் சண்டை போடவிரும்பாமல் மண் கோட்டையை மெல்ல நோண்டி தரை மட்டமாக்கிவிடுவார்கள். இடைவேளைக்குள் மண்கோட்டை மனக்கோட்டை ஆகியிருக்கும்.

நட்ட நடுவில் இப்படி மண்கோட்டை கட்டி இடிந்து விழுவது கண்டு பொறுக்காமல் நந்து வேறொரு வழி கண்டு பிடித்தான். அதுதான் சினிமாக்கொட்டகையை இரண்டாகப் பிரிக்கும் மண்சுவரில் சாய்து கொண்டு படம் பார்ப்பது. 70க்கு 30 என்ற விகிதத்தில் கொட்டகை பிரிக்கப்பட்டிருக்கும். 70% ஆண்களுக்கு, 30% பெண்களுக்கு என்று இட ஒதுக்கீடு. எம்.ஜி.யார் படமென்றால் 30% இட ஒதுக்கீடு தாங்காமல் பெண்கள் கூட்டம் நிரம்பி வழியும். அப்போது சண்டியர்களுக்கு ஜாலிதான். மண் தரையை ரொம்பப்பெரிதாக கட்டமுடியாது, இல்லையெனில் படம் பார்க்க முடியாது. சின்னதாக முதுகு உயரத்திற்குத்தான் அது இருக்கும். சண்டியர்கள் நந்து போன்ற பொடியன்களை புறம் தள்ளிவிட்டு அந்த இடங்களை ஆக்கிரமித்துக் கொள்வர். படம் ஆரம்பித்தபிறகே அதன் காரணம் புரியும். செட்டப்பண்ணிக் கொண்டு வந்திருக்கும் பார்ட்டி அந்தப்பக்கம் உட்கார்ந்திருக்கும். இருட்டில் ஒரே ஜால்ஜாதான். இந்த சூட்சுமங்களெல்லாம் நந்துவிற்கு தாலுகா ஆபீஸ் ஜீப் டிரைவர் பிள்ளை மாகேந்திரன் சொல்லித்தான் தெரியும். எட்டாம் வகுப்பில் வேட்டி கட்டிய பசங்களும் உண்டு. அதில் மகேந்திரன் ஒருவன். 'ஜால்ஜா' என்ற அரும்பதத்தை இந்துநேசன் கொண்டு மகேந்திரன் விளக்கும் போது கிளாஸ் பசங்களெல்லாம் வாய் ஒழுகக் கேட்டுக்கொண்டிருக்கும்.

டிரைவருக்கு ரெண்டு பெண்ணாட்டி. மகேந்திரன் இரண்டாவது பெண்ணாட்டி பிள்ளை. அவன் தங்கையும் அங்கேதான் படித்தாள். அவள் கட்டான உடம்பு பள்ளியையே கிறங்கடித்துக் கொண்டிருந்தது. இவளே இவ்வளவு அழகு என்றால் இவள் தாய் எப்படி இருப்பாள்? என்று ஊரே கண்ணுவைக்கும். இது தெரிந்தே டிரைவர் என்றாலும் அவருக்கு இருக்கும் ராங்கித்தனம் யாருக்கும் இருக்காது. மனைவி கட்டழகி என்ற கர்வம்!

சினிமாவில் காதல் காட்சிகளை பார்த்துவிட்டு ஒரு மத, மதப்பில் பசங்கள் மகேந்திரனிடம் எதாவது கேட்கப்போய் அப்போது அவன் சொல்லுகின்ற கதைகள், காதல் ஓவியங்கள்! முழுப்பரிட்சை, அரைப்பரிட்சை விடுமுறை என்றால் பசங்களுக்கு பொழுதே போகாது. அப்போது இம்மாதிரி மன்மதக்கதைகள் கோடை காலத்து ஆற்று மணற்கேணி போல் குளு, குளு என்று இருக்கும். மகேந்திரன் ஒருமுறை அவனது மாமா பொண்ணை விடுமுறைக்கு போயிருந்தபோது கெட்ட வார்த்தை பண்ணியதை விளக்கமாகச் சொன்னான். நந்து கொஷ்டிக்கு பல நாட்கள் ராத்தூக்கம் இல்லாமல் செய்துவிட்டது இக்கதைகள்.

நந்து மகேந்திரானாக பாவித்துக் கொண்டு மாமா பெண்ணிற்காக அலைந்து கொண்டிருந்தான். தாத்தா ரெண்டு பெண்களைப் பெத்து வச்சாரே தவிர ஒரு பையனைப் பெறவில்லை. எனவே நந்துவிற்கு மாமாவே இல்லை. கொல்லைப்புறத்து வள்ளி மூலமாக மஞ்சள் தாத்தாவிற்கு ஒரு பையன் உண்டு என்ற சேதி அரசல் புரசலாக அவன் காதில் பின்னால் விழுந்தது. பிரயோஜனமில்லை. வள்ளி தாசி குலத்தைச் சேர்ந்தவள். பூவந்திக்கு குடி போய்விட்டாள். அவள் பிள்ளையும் சிறுவன். எப்போதாவது நந்து பூவந்தி பக்கம் போனால் வள்ளி கண்ணில் படுவாள். அவள் பெரிய மார்பு நந்துவின் முகத்தை அழுத்தி மூச்சு முட்டுமளவிற்கு அணைத்துக் கொள்வாள். அவள் மஞ்சள் தாத்தாவை நினைத்துக் கொண்டு இவனை அணைக்கிறாள் என்பதெல்லாம் நந்துவிற்கு அப்போது தெரியாது!

0 பின்னூட்டங்கள்: