வைகைக்கரை காற்றே!......042ஆங்கிலம் கற்றுக்கொள்ள உச்சிக்குடுமி அய்யர் கடையிலிருந்து லட்டும், காராப்பூந்தியும் வந்த மாதிரி ஹிந்தி கற்றுக் கொள்ள வரவில்லை. பள்ளி நிருவாகம் அது தேசியமொழி அதைக் கற்றுக்கொள்வது மாணவர் கடமை என்று சொல்லிவிட்டது. அப்போது ஆட்சியிலிருந்த பக்தவத்சலம் அரசு காங்கிரஸ் அரசு. எனவே மத்திய அரசு சொற்படி ஹிந்தி தேசிய மொழி, தமிழ் மாநிலமொழி என்று அறிவித்துவிட்டது. இது தமிழ் மக்களிடையே மிகுந்த எரிச்சலைக் கொடுத்தது. தமிழ்நாட்டில் தமிழ் இரண்டாம் மொழியாகிப்போன அவலத்தை ஈ.வே.ரா பெரியார், அறிஞர் அண்ணா, கி.ஆ.விஸ்வநாதம் போன்ற பெரியவர்கள் சுட்டிக்காட்டினர். நீருபூத்த நெருப்பாக இருந்த தணல் 1965ம் ஆண்டு ஹிந்தி தேசியமொழி என அறிவித்தவுடன் தமிழகம் முழுவதும் பற்றிக்கொண்டது.

அந்தப்பள்ளிக்கே ஒரே ஒரு ஹிந்தி பண்டிட்தான் இருந்தார். ஆனால் அவர் வகுப்பிற்கு யாரும் ஒழுங்காக வருவதில்லை. ஹிந்தி வகுப்பை யாரும் பெரிதாகக் கண்டு கொள்வதில்லை. அக்கிரஹாரத்துப் பிள்ளைகள்தான் ஹிந்தி கற்றுக் கொண்டன. ஆயினும் பள்ளியில் மற்ற மாணவர்களின் தமிழார்வம், அன்றைய தமிழக ஹிந்தி எதிர்ப்பலை போன்றவை அந்த மாணவர்களையும் பாதித்தது. எனவே ஹிந்தி பண்டிட் மகாலிங்கம் மாலை நேரங்களில் சுயமாகவே அக்கிரஹாரத்திற்கு வந்து பசங்களுக்கு ஹிந்தி கற்றுக் கொடுத்தார். ராமு அக்கா பிருந்தா மிகவும் ஆர்வமாகக் கற்றுக் கொண்டு ஹிந்தி பிரசார சபை நடத்தும் உயர் தேர்வு வரை சென்றுவிட்டாள். நந்துவின் சகோதரிகளும் விடவில்லை. தமிழ் மன்றம் நடத்தும் தேர்வுகளில் முதல் மாணவியாக வருபவர்களுக்கு இந்தி ஒரு பொருட்டாகப் படவில்லை. மத்திமா தேர்வுவரை வந்துவிட்டனர். நந்துவும் வேறு வழியில்லாமல் பிராத்மிக் எனும் முதல் தேர்விற்கு மதுரை போனான். படித்தால் அல்லவோ எழுத முடியும்? தமிழில் பல வார்த்தைகள் கொடுத்து அதை ஹிந்தியில் எழுதச் சொல்லியிருந்தார்கள். நந்துவிற்கு ஹிந்தி அட்சரம் தெரிந்திருந்தது. ஆனால் ஹிந்தி வார்த்தைகள் தெரியவில்லை. உருளைக்கிழங்கு என்பதற்கு ஹிந்தியில் 'ஆலு' என்று சொல்ல வேண்டுமெனத் தெரியவில்லை. இருந்தாலும் தேர்விற்கென வந்தபிறகு ஏதாவது எழுத வேண்டாமா? நந்து ஹிந்தி அட்சரம் கொண்டு அப்படியே 'உருளைக்கிழங்கு' என்று அட்சரப்பெயர்த்தல் செய்து விட்டான். அத்தோடு ஹிந்தியை மறந்துவிடலாமென நினைத்தால் ஹிந்தி பிரச்சார சபை விடவில்லை. இவனை தேர்ந்தெடுத்து ஒரு சான்றிதழும் அனுப்பிவிட்டனர். ஹிந்தி பண்டிட் இதுதான் சாக்கு என்று அடுத்த பரிட்சைக்கு தயாராகும் படி சொல்லிவிட்டார். இவனைத்தவிர யாரும் இவன் வகுப்பில் ஹிந்தி கற்றுக்கொள்ள ஆர்வம் காட்டவில்லை. அதுவே இவனுக்கு சோர்வாக இருந்தது. ஆனால் தமிழ் வாத்தியார்கள் பாடம் மட்டும் சொல்லித்தராமல் தமிழ் மேல் ஒரு வெறியே உருவாகும் வண்ணம் பாடம் நடத்தினர். தமிழ் உயர்ந்த மொழி என்பது எல்லோருக்கும் ஆழமாகப் பதிந்து விட்டது. இவ்வளவிற்கும் இவனது தமிழ் ஆசிரியர் ஸ்ரீநிவாசன் ஒரு தெலுங்கர். ராஜு சமூகத்தைச் சேர்ந்த அவர் செக்கச் செவேல் என்று உசரமாக இருப்பார். அவர் பாடம் எடுக்கிறார் என்றால் நந்து மெய்மறந்து கேட்டுக்கொண்டிருப்பான். அவருக்கு நல்ல நகைச்சுவை உணர்வுமுண்டு! 'அணங்கு என்றால்'...என்று சொல்லிவிட்டு பொருள் சொல்லாமல் பசங்களையும், பெண்களையும் பார்த்து நமட்டுச் சிரிப்பு சிரிப்பார். சரி யாருக்கோ வேட்டு என்று புரிந்துவிடும். கொஞ்ச நேரம் கழித்து 'அணங்கு என்றால் பெண் என்றும் பொருள், பேய் என்றும் பொருள்' என்று முடிப்பார். பசங்கள் மத்தியில் வெற்றிச்சிரிப்பு வெடிக்கும். பெண்கள் பகுதி நாணத்தால் முகம் கவிழும்!

தமிழ் என்பது மொழி என்னும் யதார்த்தம் மறைந்து தமிழ் ஒரு இன அடையாளமாக உருவெடுத்தது. ஹிந்தி என்பது வெறும் மொழி என்னும் நிலை மாறி அது வடநாட்டவர் தமிழ் மக்கள் மீது செலுத்தும் ஆளுமையின் குறியீடாகப் போனது. செண்பகபட்டர் அப்போதுதான் வீட்டுச்சுவருக்கு வெள்ளையடித்திருந்தார். அடுத்த நாள் அச்சுவரில் ஹிந்தி அரக்கி தலைவிரி கோலமாக தமிழர்களை துரத்தும் கேலிச்சித்திரம் எழுந்துவிட்டது (வாயில் சில மாணவர்கள் இரத்தக்கறையுடன்)! எங்கு பார்த்தாலும் ஹிந்தி அரக்கியைக் கொல்ல வேண்டுமென கோஷம் எழுந்தது. அடிக்கடி விட்டலாசார்யா படம் பார்க்கும் நந்து கோஷ்டி வடநாட்டிலிருந்து ஒரு அரக்கி வந்து தமிழ் பிள்ளைகளை கடித்து சுவைக்கப்போகிறாள் என்று பயந்து கொண்டிருந்தனர்.

இந்தியாவிலேயே முதல் முறையாக மாணவர்கள் அரசியல் காரணத்திற்காக போராட்டம் செய்தனர். மாணவர்களின் ஆர்வம் தமிழகமெங்கும் பற்றிக்கொள்ள மாணவர்கள் அறிவித்த பந்த் பரந்த வெற்றி கண்டது. எல்லாக்கடைகளும் மூடப்பட்டுவிட்டன. முடிவெட்டிக்கொள்ளலாமென நந்து பார்பர் ஷாப்பிற்குப் போனால் மூடியிருந்தது. அங்கொரு அமானுஷ்யமான சூழல் நிறைந்திருந்தது. வழக்கமாகவே சவரக்கடையில் அரசியல் தூள் பறக்கும், அன்று பலர் சோகமாக இருந்தனர். அவர்கள் கையிலிருந்த தினத்தந்தி ஹிந்தியைக் கட்டாய தேசிய மொழியாக்கும் மத்திய அரசின் மசோதாவை எதிர்த்து தமிழகமெங்கும் பலர் தீக்குளித்த செய்தியைத் தாங்கி நின்றது.

நந்து போன்ற சிறுவர்களுக்குக் கூட அது வெறியூட்டுவதாக இருந்தது. இந்திய சுதந்திரப்போராட்டத்திற்காகக் கூட தீக்குளிக்காத தமிழர்கள் தமிழ் மொழிக்காக உயிர்த்தியாகம் செய்தது ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழக மாணவர் பேரவை உருவானது. இந்தி எதிர்ப்பில் மாணவர்கள் முழுமையாக குதித்துவிட்டனர். மதுரையில் பெரிய அளவில் மாணவர்கள் பங்கேற்ற அமைதியான போராட்டம் காங்கிரஸ் யூனியன் குண்டர்களின் அடாவடித்தனத்தால் ரத்தக்கிளறியானது. ரவுடிகள் புகுந்து மாணவர்களை அரிவாளால் வெட்டத்தொடங்கிய சேதி மாணவர் மத்தியில் பெருத்த கோபத்தை உருவாக்கியிருந்தது. பள்ளி, கல்லூரிகளை அடைக்குமாறு அரசு ஆணையிட்டது. மத்திய அரசின் ராணுவம், மற்றும் ரிவர்வ் போலிஸ் தமிழ் மண்ணில் வந்து இறக்கப்பட்டன.

இதுவெல்லாம் தெரியாமல் நந்துவும், பல பெரிய மாணவர்களும் அவர்கள் பள்ளியில் ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் செய்து கொண்டிருந்தனர். பள்ளி கேட் மூடியிருந்தது. உள்ளிருந்து ஹிந்தி ஒழிக! தமிழ் வாழ்க! என்று கோஷம் போட்டுக் கொண்டிருந்தனர். யாரும் எதிர்பார்க்காத போது அங்கு சட்டி போலிஸ் (ரிசர்வ் போலீஸ்) ஒரு லாரி நிறைய வந்து சேர்ந்தனர். முதலில் இறங்கிய போலிஸ் அதிகாரி 'எவண்டா, எங்கமேல கல்லை எறிந்தவன்?' என்று கேட்டார். பாவம்! சும்மா கத்திக்கொண்டிருந்த பள்ளிச் சிறுவர் மீது அபாண்டமாக ஒரு காவல் அதிகாரி பொய் வழக்கு தொடுக்கும் அதிசயம் அங்கு நடந்தது. மேலும் அவர்கள் வந்த லாரி சல்லடை போல் கம்பிக்கிராதி போட்டு கல்லெறிந்தாலும் உள்ளே புகாவண்ணம் கவசம் கொண்டிருந்தது. இவர்கள் கல் எறிந்தாலும், எறியாவிட்டாலும் இவர்களை உதைக்குமாறு அரசு ஆணை என்பது நந்து கோஷ்டிக்குத் தெரியாது. போலீஸைப் பார்த்தவுடன் பெரிய மாணவர்கள் இந்தி ஒழிக! என சத்தமாகக் கூவினர். அவ்வளவுதான்! லாரிக்குள்ளிலிருந்து மட, மடவென சட்டி போலிஸ் (தலையில் சட்டி போன்ற இரும்புத்தொப்பி வைத்திருப்பதால் 'சட்டி போலீஸ்') கையில் லத்தியுடன் இறங்கினர். போலீஸ் அதிகாரி 'லத்தி சார்ஜ்' என்று உரக்க கத்தினார். அவ்வளவுதான், பள்ளிக்குள் ஒரே தாவலாக வந்து மாணவர்கள் அடிக்க ஆரம்பித்தனர் (பள்ளி முதல்வரின் அனுமதியில்லாமல் காவல்துறை பள்ளிக்குள் நுழையக்கூடாது என்ற சட்டநுணுக்கம் தெரிந்த மாணவர்கள் சொன்னதால் மாணவர்கள் தைர்யமாக உள்ளிருந்து கத்த, அன்று நடந்தது வேறாகப்போனது). நந்து முதல் முறையாக வாழ்வில் இப்படியானதொரு வன்முறையைப் பார்த்தான். மாணவர்கள் கையில் 'இந்தி ஒழிக' என்ற அட்டை தவிர ஒன்றுமில்லை. ஆனால் போலிஸ் கையில் லத்தி இருந்தது, துப்பாக்கி இருந்தது. சரம் மாறியாக இறங்கி அடிக்கத்தொடங்கியவுடன் மாணவர்கள் பயந்து போய் இங்கும் அங்கும் ஓடத்தொடங்கினர். இதுவரை எந்தப் போராட்டத்திலும் கலந்து கொள்ளாத நந்துவிற்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. பலர் தலை தெறிக்க ஓடுவது கண்டு நந்துவும் பள்ளியின் பின்புறம் நோக்கி ஓடத்தொடங்கினான். ஓடினால் நாய்தான் விரட்டக் கண்டிருக்கிறான். அன்று சட்டி போலீஸ் அவனை ஓட, ஓட விரட்ட ஆரம்பித்தது. பள்ளியின் சந்து பொந்து தெரிந்த நந்து அவர்களுக்கு தாக்காட்டி இங்கும் அங்கும் ஓடினான். ஆனால் அவர்களும் விடுவதாயில்லை. சரி, மாட்டினால் தோலை உறித்துவிடுவார்கள் என்பது அவர்கள் கண்களில் தெரிந்த வெறியில் புரிந்தது. நந்துவிற்கு ஹை ஜம்ப் பிடிக்கும். அதைப் பயன்படுத்தும் நேரம் வந்துவிட்டது. போலீஸ்க்கும் இவனுக்கும் இடையில் 10 அடி தூரம்தான் இருக்கும். பள்ளியின் பின்சுவர் இவனுக்குப் பின்னால். இவன் அதைத்தாண்டி ஓடவில்லையெனில் போலிஸ் லத்தி மண்டையை நிச்சயம் பிளந்துவிடும். நந்து தனது முழு பலத்தையும் பயன்படுத்தி ஒரே ஏவலாக சுவர் மீது பாய, இதை உணர்ந்து கொண்ட போலீஸ் இவன் மீது லத்தியை வேகமாக வீச....மயிரிழையில் நந்து உயிர் தப்பினான். இவன் கால்கள் தாவி சுவர் தாண்ட படார் என்ற சத்தத்துடன் லத்தி சுவரில் மோதி எம்பி மீண்டும் போலிஸ் பக்கமே விழுந்தது.


சேது-நந்து


நந்து சுவருக்கு இங்கிருந்து பார்த்தான். பலர் மாணவர்கள் அடித்து நொறுக்கப்பட்டு லாரிக்குள் தள்ளப்பட்டனர். அவர்களுள் சித்தி பையன் சேதுராமனும் இருந்தான். நந்து அழுதுவிட்டான். சேதுவை என்ன செய்யப்போகிறார்கள்?

0 பின்னூட்டங்கள்: