வைகைக்கரை காற்றே!......043


இந்தி எதிர்ப்புப் போராட்டம் தமிழகத்தின் சரித்திரத்தையே மாற்றும் என்று அப்போது யாருக்கும் தெரியாது. உதயசூரியன் எழுவதற்கான கருக்கல் அறிகுறிகளவை என்று யாருக்குத்தெரியும்? அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மதுரையில் அமைவதாக இருந்து கிழக்கு மூலைக்குப் போய்விட்டது. ஆனால் மதுரையில் இருந்தால் எப்படி அறியப்பட்டிருக்குமோ அதுபோலவே சிதம்பரம் போனபின்பு இந்தி எதிர்ப்பு போராட்டத்தால் அறியப்பட்டுவிட்டது. சேது கல்லூரிப்படிப்பு அங்கு போவதற்கு இந்தி எதிர்ப்பும் ஒரு காரணம். லாரியில் அள்ளிப்போட்டுக் கொண்டு போனபின் பசங்களை நன்றாக சாத்திவிட்டு, இனிமேல் இவ்வாறு செய்யமாட்டேன் என்று மன்னிப்புக் கடிதம் வாங்கிக்கொண்டு காவல் நிலையத்திலிருந்து விட்டு விட்டனர். ஆனாலும் சேது முதற்கொண்டு எல்லோருக்கும் சுதந்திரப்போராட்டத்தில் ஜெயிலுக்குப் போய் வந்தால் கிடைக்கும் மரியாதை கிடைத்தது. இளையர்களின் தலையெழுத்தையே அது மாற்றியமைத்துவிட்டது.

ஆனால் நந்துவின் வளர்ச்சி வேறு போக்கில் கோக்குமாக்காகப் போய்க்கொண்டிருந்தது. ஹிந்தி வாத்தியாருக்கு வேலை போயிற்று. கெஞ்சிக்கூத்தாடிய போது அவரை ஓவிய ஆசிரியராகப் போட்டுவிட்டனர். பாவம்! மகாலிங்கம் சாருக்கு ஹிந்தி தவிர ஒன்றும் தெரியாது. மகா சாது அவர். எனவே அவர் வகுப்பு வருகிறதென்றால் பாடம் ஒன்றுமில்லையென்று பொருள். அவர்களைச் சத்தமில்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டியதுதான் அவர் வேலை! பசங்கள் சத்தமில்லாமல் பல வேலைகள் செய்வார்கள் அந்த வகுப்பில். மோட்டைப் பார்த்துக் கொண்டிருந்த நந்துவின் மடியில் பாலு ஒரு பத்திரிக்கையைத் தள்ளினான்.

"டேய் இது மஞ்சப்பத்திரிக்கை. யாருக்கும் தெரியாம படிச்சுட்டுத்தா! என்றான். நந்து அதை எடுத்துப் பார்த்தான். அது மகா மட்டமான காகிதத்தில், மசி கொட்டி மட்டமான அச்சில் வந்த ஒரு பளுப்புப் பத்திரிக்கையாக இருந்தது. பாலுவிற்கும் இவனுக்கும் பல இரகசிய உடன்படிக்கைகளுண்டு. அவன் கொடுத்தால் அதில் ஏதாவது இருக்கும் என்று நந்து வாசிக்க ஆரம்பித்தான். வாசிக்க, வாசிக்க உடம்பு சூடேற ஆரம்பித்தது. லாலா நெய் மிட்டாய்க்கடைக்காரனெல்லாம் வேசிகளிடம் போய் இப்படித்தான் வேலை விடுவார்களா? நந்துவிற்கு குலோப்ஜான் பிடிக்கும். இந்தக்கதையில் குலாப்ஜாமுனுக்கு வேரொரு பயன்பாடு உண்டென்று தெரிந்து கொண்டான் நந்து. ஆனால் அது பல்லி முட்டை கதை போல் இவனால் செய்ய முடியாத எட்டாக்கனியாகப் பட்டது. பலாவான பல படங்கள் இருந்தன. தெளிவற்ற நிலையில் இப்படி இருக்கக்கூடுமோ? அப்படியிருக்கக்கூடுமோ? என்று கற்பனை வெறி தூண்டும் படங்களாக அவையிருந்தன! நந்து தொடையிடுக்கில் வைத்து வாசித்துக் கொண்டிருக்கும் போது பக்கத்தில் மகாலிங்க சாரும் வாசித்துக் கொண்டிருப்பது தெரியாமல் போய் விட்டது. 'என்ன நந்து முடிச்சிட்டியா? இத இப்படிக் கொடு!' என்றார் வாத்தியார். அவ்வளவுதான் நந்து ஒண்ணுக்குப் போகாத குறைதான். பாலுவைப்பார்த்தான். கொடுத்தால் கொன்னுவிடுவேன் என்று சைகை காட்டினான். வாத்தியார் கேட்கும் போது எப்படிக் கொடுக்காமல் இருக்க முடியும்? கொடுத்துவிட்டான்! கொஞ்ச நேரம் கழித்து சார், நந்துவைப் பார்த்து, 'இதெல்லாம் உனக்கெதற்கு? நீதான் சமத்துப் பையனாயிற்றே! யாரோட கைங்கர்யம் இது?' என்று கேட்டார். மீண்டும் நந்து பாலுவைப்பார்த்தான். காட்டிக்கொடுத்தால் கொன்னுடுவேன் என்றான். என்ன இழவுடா இது! என்று அலுத்துக் கொண்டு, 'வழியில் கிடந்தது சார். கிழிச்சுப்போட்டுடட்டுமா?' என்றான். வாத்தியார் அதற்கு, 'பள்ளியில் போடக்கூடாது. எனவே நானே வழியில் குப்பையில் போட்டுவிடுகிறேன். வீட்டுக்கணக்கு போட்டியோ? அதைச்செய் இப்போது!' என்றார். கதையில் வரும் சுந்தரவல்லி அடுத்து என்ன செய்திருப்பாள் என்ற கற்பனையில் நந்து மூழ்கிவிட்டான்.

நந்துவிற்கு இப்போதெல்லாம் இனம் புரியாத இன்ப உணர்ச்சிகள் அவ்வப்போது வந்து வாட்டத்தொடங்கின. அது காலா காலம் தெரியாமல் வந்து வதைத்தது. பரிட்சை எழுதிக்கொண்டிருக்கும் போது, இரண்டு கேள்விகளுக்கிடையில் உடலெல்லாம் ஒரு உணர்ச்சி பரவும். தொடையை இறுக்கிக்கொண்டு அப்படியே 'ஙே' என்று விழிப்பான் இல்லை கண்ணை மூடுவான்! அரையாண்டுப் பரிட்சைக்கு கண்காணிப்பாளராக வந்த முத்துராமன் சார் இவன் படும் அவஸ்தையைப் பார்த்துவிட்டு பயந்துவிட்டார். 'என்னடா கண்ணா? ஏதாவது பிரச்சனையா? உதவி வேணுமா?' என்று கேட்டார். நந்துவிற்கு எப்படிப் பதில் சொல்வதென்று தெரியவில்லை. 'இல்லை சார், உள்ள எறும்பு கடிச்சிருச்சி போலருக்கு' என்று சிரித்தான். 'வெளியே போய் என்னன்னு பாத்துட்டு வா!' என்றார். வேறு வழியில்லாமல் நந்து ஒருமுறை ஒண்ணுக்குப் போயிட்டு வந்து தேர்வைத் தொடர்ந்தான்.

நாகராஜன் சார், அறிவியல் பாடம் நடத்தும் போது நாளமில்லாச் சுரப்பிகள் பற்றிச் சொல்லியிருந்தார். அவை இவனுள் சுரக்க ஆரம்பித்துவிட்டன என உணர்ந்தான். உண்மையில் குஞ்சைப் பிடித்துக் கொண்டு குழந்தைகள் சிரிக்கும் போதே அது நாளாமில்லாச் சுரப்பிகளின் சிரிப்பு என்று அவனுக்கு எப்படித் தோன்றாமல் போயிற்று. அந்தக் கிராமத்தையே இச்சுரப்பிகள் பாடாபடுத்துவதை நந்து கண்டான். எலக்ட்ரிக் ஸ்ரீநிவாசன் பெண் பெரியவளான பின் சும்மா வீட்டில் உட்கார்ந்து கொண்டு மத்தியானம் கூடும் நாய்க்கலவையை ரகசியமாய் ரசித்திக்கொண்டிருக்கிறாள். புதிதாக வந்த போலீஸ்காரர் மகள் மாலை வேளைகளில் மார்பை இழுத்து, இழுத்துக் கொண்டு ஆத்தாங்கரைக்கு எதற்குப் போகிறாளென்று இராமலிங்கம் சொன்னபோதுதான் அதுவும் சுரப்பிகளின் வேலை என்று புரிந்தது. விடுதி அய்யங்காரத்துப் பொண்ணு சிரிச்சு, சிரிச்சுப் பேசிண்டு லியாகத் அலிகானுடன் ஊரைப் பகைத்துக் கொண்டு தோப்பினூடே போவதும் இதன் வேலைதானோ? ராக்கு வீட்டுச் சேவல் நொடியில் கோழியைப் புணர்ந்து விட்டுப் போகிறது. ஆனால் புரட்டாசி நாய்களுக்கு இந்த விவரம் தெரியாததால் மாட்டிக் கொண்டு பசங்களிடம் கல்லெறி படுகின்றன. இந்தக்கழுதை வெறும் சுவரைப்பார்த்துக் கொண்டு என்ன நினைக்குமோ? அதற்கு அப்படியொரு உணர்ச்சி வருகிறது! இந்தப்பன்றிகள் படுத்தும் பாடு, என்ன கத்தல், என்ன உணர்ச்சி? அது என்ன சின்ன சிவப்பு திருகாணி? இந்தக் கோயில் காளையாய் பிறந்தால் ஜாலிதான். எந்தத்தடையும் கிடையாது. கோனாரு கோவாலு செவலைக்கு சிணையேற்ற காளையைக் கொண்டுவருவான். பாவம் இவங்க வீட்டுப்பசு பயத்தில் நீர் கழியும். இத்தனையும் நாகராஜன் சார் சொல்லும் நாளமில்லாச் சுரப்பிகளின் வேலை! பாலு முன்பு போல் அரைப்பிளேடு வேலை செய்வதில்லை. வேறு கிளாசுக்குப் போய்விட்டான். மாரல்/ஓவியப் பீரியடிலே இவன் வகுப்பிற்கு வருவான். வரும் போது கட்டாயம் இன்பக்கதைகள் சொல்லுவான்.

சித்தியா தன் முழு உழைப்பையும் போட்டு ரங்கநாதர் கோயில் கட்டுவதில் ஈடுபட்டிருந்தார். கோவில் கொஞ்சம் கொஞ்சமாக உருவாகி வந்தது. அதற்காக நிறைய தட்டி கட்டிய மறைவிடங்கள் உருவாகின. அதை ரங்கநாதர் பயன்படுத்தினாரோ இல்லையோ, நந்து பயன்படுத்தினான். சங்கரோட தங்கை கிரிஜா இவனிடம் ஈஷிக்கொள்வாள். கொய்யாமரத்தாத்து கோமளமும் கூட விளையாட வருவாள். இவர்களின் விளையாட்டுக்கூடம் பின்னால் ரங்கநாதர் சந்நிதியாக மாறவிருக்கிறது. ஆனால் இந்த விளையாட்டை யாரோ பார்த்துவிட்டு வீட்டில் கோள் சொல்லுவரென்று அவனுக்குத் தெரியுமோ?

"அம்மா! நந்து கோயில்ல என்ன செஞ்சுண்டு இருந்தான் தெரியுமா?" என்று இவன் வீட்டில் நுழையும் சமயம் பார்த்து கமலா பிரஸ்தாபித்துக் கொண்டிருந்தாள்.

"ஏன் என்ன பண்ணினான். அந்த வைக்கப்படப்பை இழுத்து சாய்ச்சுட்டானா?

"இல்லம்மா இவன் கிரிஜாவோட 'அம்மா-அப்பா' விளையாட்டு விளையாண்டுண்டு இருக்கான். ரெண்டு கண்ணால பாத்தேன்".

"சரிடி அசடே! நன்னாத்தான் பாத்தே போ!" என்று சிரித்துக் கொண்டே அம்மா கொல்லைப்புறம் போய்விட்டாள்.

கமலாவிற்கு பெருத்த ஏமாற்றமாகப் போய்விட்டது. ஆடிக்காத்துலே பாவடை தூக்கிடுத்துன்னு யாராவது சொன்னா தொடையைக் கிள்ளுற அம்மா! இவன் கெட்ட வார்த்தை விளையாட்டெல்லாம் விளையாடறான்னு சொன்னப்பிறகும் ஒண்ணும் சொல்லாப்போறாளே!

0 பின்னூட்டங்கள்: