வைகைக்கரை காற்றே!......044

ரெங்காமாமி நந்துவின் இல்லத்திற்குள் மிக அடக்கத்துடன் நுழைந்து கொண்டிருந்தாள். மெலிசலான தேகம். அது இயற்கையாகவே அப்படியா இல்லை அவளுடன் ஒட்டிக்கொண்டுவிட்ட ஏழ்மையின் காரணமாகவா என்று யாருக்கும் தெரியவில்லை. அவள் அதிகம் பேசமாட்டாள். கணவன் இல்லை, தானொரு விதவை என்ற சமூகம் அவள் மீது சுமத்திய தாழ்வு மனப்பான்மை காரணமாக இருக்கலாம். அவளுக்கு இரண்டு பசங்கள். பெரியவன் சடகோபன், சின்னவன் துரைசாமி. பெரியவன் செல்லம்மா கிளாஸ். துரைசாமி படித்திருந்தால் நந்து வகுப்பு. ஆனால் ரெங்காமாமியால் ஒரு பையனைத்தான் படிக்க வைக்க முடிந்தது. அவள் விதவை என்பதால் மிகவும் கவனமாக ஊரில் இருக்க வேண்டியிருந்தது. தனியாக தனது இரண்டு குழந்தைகளுடன் வாழும் போது ஊரின் ஒரு சொல்கூட தன்மீது விழுந்துவிடக்கூடாது என்று கவனமாக இருப்பதால் எப்போதும் தணலாக இருப்பாள் ரெங்காமாமி. சின்னத் தவறு என்றாலும் துரைசாமி முதுகு வீங்கிவிடும். இரண்டு பையன்களையும் மிக்க பணிவுடன் வளர்த்தாள். எந்தவொரு அகம்பாவமும் ஒட்டிக்கொள்ளாதவாறு அவர்கள் வளர்க்கப்பட்டனர். அது அவளுக்கு அவசியமாகப்பட்டது. அவள் வாழ்விற்கு ஊரை நம்பியிருந்தாள். மற்றவர் வீட்டு வேலை கொடுப்பதால் அவள் பிழைப்பு ஓடிக்கொண்டிருந்தது. தவறியும் பிள்ளைகள் மற்றவர்களுடன் வம்புச் சண்டையில் மாட்டிக்கொள்ளக்கூடாது என்பதில் கவனமாக இருந்தாள். அது அவள் பிழைப்பைக் கெடுத்துவிடும். என்ன பெரிய பிழைப்பு? கல்யாணம்-கார்த்திகை என்றால் நாலு வீட்டிற்கு முருக்கு பிழிஞ்சு கொடுப்பது, தட்டை, சீடை பண்ணிக்கொடுப்பது, பிற சமையல் வேலைகளைச் செய்வது இதுதான். இதுதான் அவளுக்கும், அந்தக்காலத்துக் கிராமத்துப்பெண்களுக்கும் தெரிந்த தொழில்!

ரெங்காமாமி ஒருவகையில் நந்துவிற்கு தூரத்து உறவு. இவர்கள் வீட்டிற்கென்று வரும் போது ரங்கா இளகிவிடுவாள். அது இவர்கள் வீட்டு ராசி! வரும் போதே நந்துவின் கன்னத்தைத் தடவிக்கொண்டு உள்ளே போனாள். அம்மாவிற்குத்துணையாக இருப்பதே துரையின் கடமையாகப் போய்விட்டதால் அவனும் கூட வந்திருந்தான்.

'உங்காத்துக்கு வரும் போதுதான் அம்மா சுயமா இருக்கா. அப்பதான் முகத்திலே சிரிப்பே வருது. எனக்கு அடிவிழாமலும் இருக்கு" என்று சிரித்துக்கொண்டே சொன்னான் துரை. நந்துவைப் பார்க்க துரை வயதிற்கு மீதிய முதிர்ச்சியுடனிருந்தான். அது வாழ்வு அவனுக்குத்தந்த பாடம். ரெங்காமாமிக்கு நந்து போன்ற குழந்தைத்தனம் மாறாத குழந்தைகள் தேவையில்லை. தனியாக உழலும் அவள் வாழ்வை நிமிர்த்தக்கூடிய 'ஆண்' பிள்ளைகள் தேவைப்பட்டனர். துரையைப்பொறுத்தமட்டில் நந்துவின் விளையாட்டுத்தனமெல்லாம் படோ டாபங்கள். வாழ்வு அவன் பால பருவத்தை அநியாயமாகப் பிடுங்கிவிட்டது.

கோகிலம் ஒரு நல்ல தோழி. கொல்லைப்புற ராக்கு, கோடையில் மாம்பழம் விற்கவரும் தனம், அப்பாத்துரை அய்யர், சித்தியாவின் சகலை ரெங்கனாதமாமா என்று எல்லோரும் வந்தால் அம்மாவிடம் அரைமணி நேரமாவது இருந்து பேசாமல் போகமாட்டார்கள்.

அண்ணா வெடிக்கையாகச் சொல்வார், 'இந்த ஊர் சௌந்தர்யநாயகி போல் கோகிலமும் ஒரு சுதந்திராதேவி. அவளுக்கென்று ஒரு தனி ராஜ்ஜியம்!' என்று. அது உண்மைதான். இந்த ராஜ்ஜியத்தில் குல வேறுபாடு கிடையாது. பணக்காரன் ஏழை என்ற வேறுபாடு கிடையாது. அம்மாவின் முக்கியமான வணிகர்களுல் ஒரு முஸ்லிம் வியாபாரியுமுண்டு. அவர்தான் செண்ட் விற்கும் பாய். அவர் வந்தால் வீடே மணக்கும். 'அம்மா இருக்காங்களா?' என்று பாய் வந்துவிட்டால் எல்லோரும் ஓடிவருவர். அவர் மலேசியா, சிங்கப்பூர் போன்ற இடங்களிலிருந்து செண்ட் கொண்டுவருவார். வகை, வகையான வாசனாதி திரவியங்கள், வகை, வகையான குப்பிகளில்!லவைகளை அவர் அடுக்கிக்கொண்டு வரும் வளையல் பெட்டி போன்ற ஒன்று பார்க்கவே நேர்த்தியாக இருக்கும். வேடிக்கை பார்க்கவரும் நந்துவின் கன்னத்தில் ஏதாவது பாட்டிலின் குப்பியை லேசாகத்தடவி விடுவார். அன்றைக்கு முழுவதும் நந்துவிற்கு அக்கிரஹாரத்தில் முத்த மழை பொழியும். காரணம் அவனது 'ஆப்பிள்' கன்னம் கம, கமவென்று வாசனையடித்து மாமிகளை இழுப்பதால்!

அம்மாவிற்கு கொலு பொம்மை பிடிக்கும் என்பது பொம்மை விற்பவர்களுக்கு மட்டும் தெரியும் ரகசியம். எங்கிருந்தோ வகை, வகையான பொம்மைகளைக் கொண்டுவருவர். அம்மாவிடம் ஒரு பெரிய பொம்மைக் களஞ்சியமே இருந்தது. அதுவெல்லாம் ரேழிக்கு மேலேயிருக்கும் சேந்தியில் இருக்கும்.

"அம்மா! நான் போய் பரிட்சை முடிவைப்பாத்துட்டு வரேன்!" என்று கூவினான் நந்து.

ரெங்கா மாமியை நோக்கி துரை தானும் போய்வரலாமா என்று கேட்டான். அப்போதுதான் மாமி தேன்குழலுக்கு மாவு பிசைந்து கொண்டிருந்தாள். எல்லாம் முடிய பல மணி நேரமாகும். துரை அதுவரை என்ன செய்வான்? பாவம்!

"நீ பெரிசா படிச்சு கிழிக்கறே! இப்ப போய் முடிவு பாத்துட்டு வர!" என்றாள் ரெங்கா.

"டீ! சும்மா இரு ரெங்கா! பாவம்! அவனுக்கு ஏனோ படிக்க கொடுத்து வைக்கலை, ஆனாலும் பள்ளிக்கூடம் போகக்கூடாதுன்னு எங்கயாவது எழுதி வச்சிருக்கா என்ன? அது சரி, சடகோபன் நன்னா படிக்கிறனா?" என்றாள் கோகிலம்.

"அவனுக்கென்ன? என்னோட சரியான போட்டியே இந்த சடகோபன்தான்!" என்று உள்ளிருந்து செல்லம்மா பதிலளித்தாள்.

இதற்குள் துரையும், நந்துவும் பள்ளிக்குள் சென்று விட்டனர். பெரிய கதவு விடுமுறைகளில் திறந்திருக்காது. பெரிய பையன்கள் சுவரேறிக் குதித்து உள்ளே போய்விடுவர். குட்டைப்பசங்கள் நுழையத்தோதாக பள்ளிச் சுவரில் ஒரு பெரிய ஓட்டையை இவனது முன்னோடிகள் ஏற்படுத்திவிட்டுப் போயிருந்தனர். நிருவாகத்திற்கும் அதுவே சௌகர்யமாக இருந்தது.

தேர்வு முடிவுகள் பேப்பரில் டைப் அடிக்கப்பட்டு கரும்பலகையில் ஒட்டப்பட்டு அது மாணவர்கள் கண்னுக்கெட்டும் தூரத்தில், ஆனால் கைக்கெட்டாத தூரத்தில் கம்பி போட்ட ஹெட்மாஸ்டர் ரூம் கதவிடுக்கிலிருந்து பார்க்குமாறு ஒட்டப்பட்டிருந்தது. ஒரே கூட்டம். நந்துவிற்கு அங்கிருந்து பார்க்கமுடியவில்லை. துரைச்சாமி நந்துவை தன் முதுகில் சுமந்து 'இப்போது தெரிகிறதா பார்?' என்றான். இவன் வகுப்பைக் கண்டுபிடித்து, ஒவ்வொரு பெயராக வந்து, நந்துவின் பெயர் இருக்கிறதா என்று பார்ப்பதற்குள், பெரிய பையன்கள் எல்லோரையும் தள்ளிக்கொண்டு ஜன்னலருகே போய்விட்டனர். நந்துவும், துரையும் 'தொபால்' என்று கீழே விழுந்து கிடந்தனர்!

"டேய்! அய்யர் வீட்டுப்பசங்களெல்லாம் ஏண்டா இங்க வந்து வயித்தெரிச்சலைக் கொட்டிக்கிறீங்க! நீங்கதான் 'பாஸ்' ன்னு பரிட்சை எழுதும் போதே தெரியுமே. எங்களுக்குத்தானடா இந்தக் கரும்பலகையே! உங்களுக்கெதுக்குடா? வீட்டுக்கு ஓடுங்கடா! என்று விரட்டி விட்டனர்.

நந்து துரையைப்பாத்து போய்விடலாம் என்று கண் ஜாடை காட்டினான். 'ஏண்டா! பெரிய பசங்கன்னா இதுவோ?' என்று சட்டையை மடக்க ஆரம்பித்தான் துரை. அவனை அப்படி தள்ளிக்கொண்டு வந்து நந்து அவனுக்கு விளக்கினான்.

"டேய் துரை! நோக்குத்தெரியாது. இவன் அண்ணனை நாலாவது தடவையா பெயிலாக்கிட்டா. அவன் என்ன செஞ்சான் தெரியுமோ? போன ஹெட்மாஸ்டர் வயித்திலே கத்தியைப் பாய்ச்சுட்டான். இவளாள்லாம் பெரிய ரௌடி. நமக்கேன் வம்பு? நாளைக்கு வந்து பாத்துட்டா போச்சு!'

துரை இவனுக்கு ஆறுதலாக இருக்கட்டுமேயென்று பாண்டி கடையில் கடலை மிட்டாய் வாங்கித்தந்தான். அப்போதுதான் துரைக்கு கேட்கவேண்டும் என்று தோன்றியது,

"இதச் சொல்லலையே! அவன ஏன் நாலு முறை பெயிலாக்கினா?"

"அவன் நன்னா 'போல் வால்ட்' தாவுவான். அவன விட்டா இந்தப்பள்ளிக்கு வேற ஆள் கிடையாது!"

0 பின்னூட்டங்கள்: