Antiquity of Tamil

தமிழ்க்குடியின் தொன்மை

கடந்த சில நூற்றாண்டுகள் தமிழுக்கு அதிரிஷ்டமான காலங்கள். 19ம் நூற்றாண்டில் உ.வே.சா, தாமோதரம் பிள்ளை, ஆறுமுகநாவலர் போன்ற பெரியவர்கள் தமிழ் இலக்கியத்தின் தொன்மையை சுவடிகளிலிருந்து பதிப்பித்து பாரதி போன்ற மாபெரும் கவிஞர்களுக்கு ஊட்டசத்து கொடுத்து இன்று நம்மைத் தலைநிமிர்ந்து வைக்க வைத்துள்ளார்கள். இந்த நூற்றாண்டில் உலகம் (இதில் இந்தியாவும் சேர்த்தி) யோசிக்கும் வண்ணம் சிந்து சமவெளி நாகரிகம் திராவிட நாகரிகமென்று அஸ்கோ பர்போலா, ஐராவதம் மகாதேவன் போன்றவர்கள் ஆய்வுகளை முன்வைத்துள்ளார்கள். அது மட்டுமில்லாமல் கல்வெட்டுகள், மட்பாண்ட எழுத்துக்கள் இவைகளிலிருந்து அரிய செய்திகளை எடுத்து அமெரிக்க ஹார்வேர்டு பல்கலைக்கழகத்துடன் சேர்ந்து சங்க காலம் கல்வி கேள்வியில் சிறந்த காலமென்று ஐராவதம் அவர்கள் நிறுவியுள்ளார்கள். இது மிக முக்கியமான ஆய்வு. ஏனெனில் தமிழ்க்குடி 2000 ஆண்டுகளுக்கு முன்பே இன்று முதல் உலகம் என்று கருதும் நாடுகள் போல் இருந்திருக்கிறது என்பது நாம் பெருமைப்பட வேண்டிய விஷயம். மேலும் ஆண்டான்/அடிமை, சாதிய அடுக்குகள் இவை சமூகத்தை இன்று போல் புற்றுநோயாகப் பீடிக்காத காலம் சங்ககாலமென்றும் தெரிகிறது.

அகழ்வாராச்சிகள் புதிய செய்திகளைத் தந்த வண்ணமுள்ளன. நொய்யலாறுச் சான்றுகள் பல அரிய செய்திகளைத் தருகின்றன. தமிழிணைய அறிஞர் இராம.கி நீண்ட காலமாகச் சொல்லி வரும் ஒரு சேதி, தமிழ் பிராமி எழுத்துக்கள் அசோகன் பிராமி எழுத்துக்களைவிட முந்தியது என்பது. அதற்கு சான்று பகர்வதுபோல் திருநெல்வேலிக்கருகில் சமீபத்தில் நடந்துள்ள அகழ்வாராச்சிக்கள் காட்டுகின்றன.

கால்டுவெல் போட்டு வெச்ச பிரிவினைக் கொள்கை இன்றுவரை தமிழகத்தை ஆரியம்-திராவிடம் என்று வெட்டிப்பேச்சு பேச வைத்து உலுப்பிக்கொண்டிருக்கிறது. சமிஸ்கிருதம் ஐரோப்பிய மொழி என்று சொல்லிவைக்க ஆங்கிலேயனுக்குத் தேவையிருந்தது. நாங்கள் முன்பு இங்கிருந்தோம், மீண்டும் நாங்கள் இந்த மண்ணில் ஆட்சி செலுத்த உரிமையுள்ளது என்று சொல்லும் குள்ளநரித் திட்டமிது. அது புரியாமல் நாமும் அவர்களுடன் சேஎந்து கடந்த ஒரு நூற்றாண்டாக பேயாட்டம் ஆடியாகிவிட்டது. அது உண்மையெனில் ஏன் ஆழ்வார்கள் அப்படிச் சொல்லவில்லை? ஏன் ஆச்சார்யர்கள் அப்படிச் சொல்லவில்லை (ஆழ்வார்கள் எல்லாம் ஐயர்கள் என்று 'அபத்தமாக' யாரும் பேசவேண்டாம்!). பாரதி ஏன் சொல்லவில்லை? இந்திய மண்ணில் கடந்த 20 நூற்றாண்டுகளில் தோன்றிய எந்த அறிஞனும் அப்படிச் சொல்லவில்லையே! ஆனால், கால்டுவெல், மாக்ஸ்முல்லர் என்று வெள்ளைக்காரர்கள் சொன்னது நமக்கு வேதவாக்காகப் போய்விட்டது! இதற்கு ஒரு முற்றுப் புள்ளி வைப்பது போலுள்ளது மலேசிய அறிஞர் பேராசிரியர் லோகநாதனின் சமீபத்திய ஆய்வுகள். அவரது ஆய்வுகள் இணையப்பக்கங்களில் மண்டிக்கிடக்கின்றன. அதை போற்றி மேம்படுத்த வேண்டியது தமிழர்கள் கடமை.

இதே போல் மனிதன் ஆப்பிரிக்கா காட்டிலிருந்து உதித்து மேற்கும், கிழக்கும் போனான் என்பது பரவலாக நம்பப்படும் ஒரு கொள்கை. இதை இதுவரை ஏன் என்று ஹீனஸ்தாயில் கூட யாரும் கேட்கவில்லை. உலகின் மூத்த மொழியான சீனமும், தமிழும் ஆப்பிரிக்காவில் இல்லை. அது ஆசியாவில் இருக்கிறது. உலகின் மூத்த நாகரீகங்களான சீனமும், இந்தியமும் ஆப்பிரிக்காவில் இல்லை. அவை ஆசியாவிலுள்ளன. உலகின் அத்தனை சமயங்களும் ஆசியாவில் தோன்றியுள்ளன. பின் ஏன் ஆசியா மனித இனத்தின் தொட்டிலாக இருந்திருக்கக்கூடாது? அபசாரம்! இப்படியெல்லாம் கேட்கலாமோ? கேட்கவேண்டும். அது சுதந்திரமான இந்த நூற்றாண்டு நமக்கு அளித்திருக்கும் உரிமை. மலேசிய தொழில்நுட்ப வல்லுநர் திரு.சத்யா இவ்வாய்விற்கு பலம் சேர்த்துக் கொண்டிருக்கிறார். அவரது கருத்துக்கள் தொடர்ந்து இ-சுவடியில் வந்த வண்ணமுள்ளன. இன்னும் யாருடைய உத்திரவிற்கு காத்துக் கொண்டு தமிழர்கள் காத்து இருக்கிறார்கள்? இந்நேரம் இகோட்பாடுகள் பற்றித் தமிழர்கள் ஒரு புயலைக்கிளப்பியிருக்க வேண்டாமோ? காலனித்துவ தாழ்வு மனப்பான்மையின் பிடி இன்னும் தளரவில்லை!

நம் எல்லோரையும்விட ஈழத்துத் தமிழர்களுக்கு தமிக்குடியின் தொன்மை மீது ஒரு தேவை இருக்கிறது. யூதர்கள் போல் இன்று நாடிழந்து விரட்டப்பட்ட நிலையில் உலகளவில் தமிழ்க்குடியின் தொன்மை பற்றிப் பேசி இலங்கை தமிழர்களின் இருப்பிடமென்று காட்டவேண்டியுள்ளது. புத்திசாலித்தனத்தில் தமிழர்கள் என்றும் சோடை போனதில்லை. 19ம் நூற்றாண்டிலிருந்து மேற்குலகு (குறிப்பாக இங்கிலாந்து) சென்ற இலங்கைத்தமிழர்கள் செல்வந்தர்களாக வாழ்கிறார்கள். கடந்த 20 வருடங்களுக்குள் அகதிகளாகச் சென்ற தமிழர்களின் பொருளாதாரமே பொறாமைப்படுமளவில் உள்ளது. இதில் ஒரு குறிப்பிட்ட அளவு போராட்டத்திற்குப் போகிறது என்றாலும், அதிகளவு வீண் செலவில் போய்க்கொண்டிருக்கிறது. வரதட்சணை ஐரோப்பாவில் இப்போது பேஷனாகிவிட்டது. மாப்பிள்ளைக்கு மெர்சிடஸ் யார் கேட்டது? சண்டை போட்டுக்கொண்டு ஒன்றுக்கு இரண்டு என்று கோயில் கட்டுகிறார்கள். ஆயிரம் கோயில் நாட்டலைவிட ஆய்விற்குச் செலவிடுவது சிறந்தது என்று பாரதி சொல்லிப்போயுள்ளான். ஏன் ஈழத்தமிழர்கள் ராக்கபெல்லர் அறவாரியம் போல் ஒன்றைப்பற்றி இதுவரை யோசிக்கவே இல்லை? இன்று அமெரிக்கா இத்தனை பெரிய நாடாக உள்ளதென்றால் அது செல்வந்தர்கள் கல்வி நிறுவனங்களில் இட்ட மூலதனத்தினால் என்பது பள்ளிப்பாடமாயிற்றே. அதுமட்டுமில்லை, தென்னாப்பிரிக்கத் தமிழர்களும் தமது தமிழ் அடையாளம் பற்றி யோசிக்க ஆரம்பித்துள்ளார்கள். காசுள்ளவர்கள் சேர்ந்து ஒரு உலகத்தமிழ் கல்வி அறக்கட்டளையென்றை நிறுவி இம்மாதிரி ஆய்வுகளுக்கு பொருளாதார ஆதரவு தந்தால்தான் தமிழனின் ஆதிப்பெருமை முறையாக அறியப்படும். அரசுகளை நம்பி நாம் காத்திருக்க முடியாது. அமெரிகாவில் யாரும் அரசாங்கம் செய்யவில்லை என்று அங்காலாய்த்துக் கொண்டிருப்பதில்லை. பின் ஏன் நாம் வாளாவிருக்கின்றோம்?

0 பின்னூட்டங்கள்: