எது நிஜம்? எது கதை?

வைகைக்கரை காற்றே! ஒரு வகையில் ஒரு புதிய முயற்சி. அது நிஜக்கதையா? இல்லை கற்பனையா? இல்லை கலப்பா? அப்படியெனில் என்ன சதவிகிதக் கலப்பு? :-)

இன்றைக்கு 40 வருடங்களுக்கு முந்திய காலக்கட்டம். 1958 லிருந்து 1968வரை உள்ள காலத்தில் கதை நகர்கிறது. அது நடந்த போது நிஜம். இப்ப சொல்கின்றபோது கதை! நேற்று நடந்தது போலத்தான் இருக்கிறது. ஆனால், ஒரு நினைவை அக்காலக்கட்டத்திலிருந்து மேலெழுப்பும் போது பல்வேறு காலக்கட்டங்களில் படிந்துள்ள நினைவலைகளின் ஊடாகவே அந்நினைவு பயணம் செய்து வரவேண்டியுள்ளது. அப்பயணத்தில் பல்வேறு காலக்கட்டங்களின் வாசனை ஒட்டிக்கொள்ளத்தான் செய்யும். அப்போதே புனைவு ஒட்டிக்கொள்கிறது என்று பொருள்!

நேற்று நடந்ததை இன்று சொல்லும் போதே அது நிஜத்தைக்கடந்த பொருளாகிவிடுகிறது. நிஜம் என்பது பல்வேறு பரிமாணங்கள் கொண்டது. பார்ப்பவர் மனோநிலை, சமூகப்படிநிலை போன்றவை நிஜத்தை பார்த்து உள்வாங்கிக்கொண்டு வெளிப்படுத்தும் போது மாற்றழுத்தம் கொடுக்கின்றன. எனவேதான் சரித்திரம் என்பது எப்போதும் வெற்றவன் சொல்லும் கதையாகவே உள்ளது.

மேலும் நந்து வாழ்ந்தான் என்பது ஒரு நினைவு. அந்த நினைவுதான் அதை நிஜம், நிஜம் என்று சொல்லிக்கொண்டிருக்கிறது. உண்மையில் நந்து வாழ்ந்தது, அவன் காலம் என்றோ மீண்டும் மீட்கமுடியாமல் கரைந்து போய்விட்டது. ஒரே ஒருமுறை மீண்டும் அக்காலம் வரதா என்று இன்று ஏங்கித்தவிக்கத்தான் முடிகிறது. அத்தவிப்புதான் இலக்கியத்தின் அடிநாதம். அது இருக்கும் வரை இலக்கியம் ருசிக்கும்!

ஒருவர் நிஜம் இன்னொருவருக்கு கதை. இன்னொருவர் கதை சிலருக்கு நிஜம். உண்மைதான்! இராமாயணம் கதை கேட்டுக்கொண்டிருக்கும் போது "கிளப்புடா படையை இலங்கை நோக்கி!" என்று கூவுவாராம் குலசேகர (ஆழ்வார்) மன்னன். அவரைப் பொறுத்தவரை இராமாயணக்கதை நிஜம்!

வைகைக்கரை காற்றே! இது என் வழக்கம் போல், நியதிகளை மீறுகிறது. உண்மையில் கவிதை, உரைநடை, சிறுகதை, நாவல் என்பதெல்லாம் ஒரு வசதிக்குதான். பல்வேறு உத்திகள். இலக்கியம் குறிவைப்பது வாசகனின் இதயத்தை. அதைத்தொட்டால் அப்போதே இலக்கியத்தின் நோக்கம் நிறைவேறிவிடுகிறது! அது வடிவத்தைப்பற்றி கவலைப்படுவதில்லை. நான் இப்படி பல்வேறு முயற்சிகள் செய்துள்ளேன். என் கவிதையில் உரைநடை பாயும். உரைநடையில் கவிதை அமரும். சிறுகதையில் கட்டுரை வாசமடிக்கும். கட்டுரை கதை போல் இருக்கும். வைகைக்கரை காற்றே! இதில் எல்லா வாசமும் வரும்.

நந்துவின் கதையில் இன்னும் முக்கிய கட்டம் வரவே இல்லை. விளையாட்டுப்போக்காவே ஓடிக்கொண்டிருக்கிறது. அது வெறும் பின்புலம்தான். கதை இனிமேல்தான் இருக்கிறது!!

0 பின்னூட்டங்கள்: