வலைப்பதிவுகளுக்கான வலைப்பதிவிற்கான வலைப்பதிவு!

மார்ச் மாத வலைப்பூ ஆசிரியர் முனைவர் ஆர்.செல்வராஜ் அவர்களின் குறிப்பு

ஒரு சிலர் தமது ஒரே பதிவை இரு பிரதிகளாய் வைத்திருக்கிறார்கள். அதை ஒன்று என்று தான் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். டிஸ்கி, யூனிகோடு என்று இரு முறைகளிலும் வேண்டும் என்று ஆரம்ப காலத்தில் கண்ணன் போன்றவர்கள் எண்ணியிருக்கலாம். ஆனால், அந்தப் பரிசோதனை முயற்சி இன்னும் எதற்கு? யூனிகோட்டிற்கு மாறி விடலாமே. இன்னும் சிலர் (சந்திரவதனா, மதி, மீனாக்ஸ், முத்து) ஒருவரே பல பதிவுகள் வைத்திருக்கிறார்கள். வெவ்வேறு வகையான எழுத்துக்களுக்கு வெவ்வேறு பதிவுகள் இருப்பது வசதி தான். ஆனால் அது ப்ளாக்கர் போன்ற பதிவு நிரலிகளின் "பகுதிகள்" வசதி இல்லாத குறைபாடே. அதை விரும்புவோர் நியூக்ளியஸ், மூவபிள்-டைப் (சுரதாவின் யாழ்.நெட்) போன்ற நிரலிகளுக்கும் பதிவு வசதிகளுக்கும் சென்று விடுவது நல்லது. ஒருவரே பல பதிவுகள் வைத்துக் கொள்ளக் கூடாது என்றும் நான் சொல்லவில்லை. எழுதுகிற நாட்கள் அதிகமில்லை என்கிற போது அவற்றைத் தனித்தனியே வைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லையே என்று தான் எண்ணுகிறேன்.

இரண்டு பதிவுகள் திரு.செல்வராஜிற்கு அலுப்புத்தந்தாலும் அது வாசகர்களைக் கணக்கில் கொண்டே அப்படி அமைகிறது. என் எழுத்தை ஆர்வமுடன் வாசிக்கும் பலருக்கு யுனிகோடு இன்னும் கண்ணாமூச்சி காட்டிக் கொண்டிருக்கிறது. தமிழ் இணைய டெக்கிகளெல்லாம் ஒன்று மைக்ரோ சாஃப்ட், இல்லையெனில் லினெக்ஸ். மருத்துக்கூட ஒருவரும் மெக்கிண்டாஷ் பயனாளரில்லை. நான் ஒருவந்தான் மெக்கிண்டாஷ் வலைப்பதிவாளர். மெக்கிண்டாஷில் தமிழ் யுனிகோடு தெரியாது ஆனால் தஸ்கி அழகாகத் தெரியும் என்று எத்தனை பேருக்குத் தெரியும்? மெக்கிண்டாஷின் தாரக மந்திரமே 'மற்றவர்களிடம் கரிசனத்துடன் இரு' என்பதுதான். எனது தஸ்கிப்பதிவு இந்த கரிசனத்தின் விளைவுதான். இங்கு வரும் ஒவ்வொருவரும் எனக்கு வேண்டப்பட்டவர்கள்தான். அவர்கள் காற்றுப்போல் திரைச்சீலை அசைவு கூட இல்லாமல் போனாலும், இரண்டு வரி எழுதிவிட்டுப் போனாலும் அவர்கள் என் மீது அக்கறை காட்டுகின்றனர் என்று பொருள். அவர்கள் மீது நான் கரிசனப்படுவது தவறா?

அடுத்து, ஒருவரே பல வலைப்பதிவுகள் வைத்திருப்பதால் தவறில்லை. அவைகளின் வாசகர் வட்டம் தனி என்று தோன்றுகிறது. ஐஸ்வர்யராய் படத்துடன் (ஜில்...) பக்கத்திலே பாசுரமடல் வருவதை சிலர் விரும்பாமல் இருக்கலாம். எனவே வெஜிடேரியன் செக்ஷன், நான்-வெஜிடேரியன் செக்ஷன் என்று பிரித்துவிடுவது மேல்.

தமிழில் எத்தனை வலைப்பூக்கள் என்னும் போது இதுமாதிரி வலைப்பூக்களை ஒட்டுப்பூக்கள் (ஹைபிரிடு) வகையில் சேர்த்துவிடலாம். வேர் ஒன்றாக இருந்தாலும் மலர்கள் வெவ்வேறு!

கொசுறு: மறந்து கூட இதுவரை ஒருவரும் எனது யுனிகோட் வலைப்பூவில் பின்னூட்டம் செய்ததில்லை. ஆச்சர்யமாக இருக்கிறது!!

0 பின்னூட்டங்கள்: