Moments of Creation

சீர்மையில் இல்லை ஆக்க சக்தி!

படைப்பின் தருணங்களை நெருங்கிப்பார்த்து உரத்துச் சொல்ல முடியுமாவென்று தெரியவில்லை.

நெருங்கிப்பார்க்கும் போதே அதே வேறொன்றாக மாறி இருக்கிறது. ஒரே ஆற்றில் இருமுறை கால் வைக்க முடியாது என்பது போல்! இந்தப் பிரபஞ்சம் ஒரு ஒழுங்கில் இருப்பது போல் மேலோட்டமாகப் பார்த்தாலும் அதன் ஒழுங்கீனமே ஆக்கத்திற்கு வித்து என்பது தெரியவரும். தினமும்தான் கிழக்கே உதிக்கிறது. தினமும்தான் தூங்கி விழிக்கிறோம். ஆனால் ஒவ்வொரு விடியலும் வித்தியாசமாகவே இருக்கிறது. காலம் தோன்றிய கணத்திலிருந்து இன்று வரை ஒரு பொழுது போல் ஒரு பொழுது இருந்ததில்லை. அதனால்தான் இத்தனை வசீகரம். அண்டத்தில் பூமி ஒரு மணிக்கு 1000 கிலோமீட்டர் வேகத்தில் சீராக சுற்றிவருவது போல் தோன்றுகிறது. ஆனால், உண்மையில் சீராக சுற்றுவது இல்லை. கொஞ்சம் நொண்டி அடிக்கிறது. அதுவே பருவ காலங்கள் தோன்றக்காரணமாக அமைந்து விடுகிறது. மாறும் குணாதிசயம் கொண்ட மனிதர்களை ஏப்ரல் மாதத்து பருவ நிலைக்கு ஒப்புமையாக ஜெர்மனியில் சொல்வார்கள். காரணம்? காலையில் பொழுது பொல, பொலவென்று புலரும், ஏதோ கோடை வந்து விட்டது போல. குளித்து பசியாறிவிட்டு வேலைக்குப் போகக் கிளம்பும் போது முகத்திலடிக்கும் பனி, குளிர்காலம் மீண்டும் வந்து விட்டது போல். மதியச் சாப்பாட்டிற்கு வரும் போது மழை பெய்து கொண்டிருக்கும். ஒரே நாளில், நான்கு பருவமும் மாறி, மாறி வரும் விநோதம் ஏப்ரலில் நடக்கும்.

தமிழ்ப் படைப்பாளிகளில் பலர் இந்த மாதிரிதான் என்று தோன்றுகிறது. மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் எழுத்தாளர் ஜெயகாந்தனை பேச அழைத்திருந்தோம். தமிழ்த்துறை சார்ந்த மாணவர்கள் பெரிதாக 'சிறுகதை மன்னன் ஜெயகாந்தன்! வாழ்க!' என்று முகப்பில் எழுதி தொங்கவிட்டிருந்தனர். முரட்டு மீசை ஜெயகாந்தன் வந்தார். பேசுவதற்கு முன் மேடைக்குப்பின்புறமாக கொஞ்ச நேரம் போய் வந்தார். கோடையிடி போல் பேச ஆரம்பித்தார். 'எவன் என்னை சிறுகதை மன்னன் என்று இங்கு சொல்வது?' என்பதுவே அவரது முதல் கேள்வி. எல்லோரும் ஆடிப்போய் விட்டோ ம்! 'நான் என்னை சிறுகதைச் சக்கிரவர்த்தி என்று எண்ணிக்கொண்டிருக்கும் போது இப்படிக் குறுநில மன்னனாக்கி கேவலப்படுத்திவிட்டீர்களே' என்று நெத்தியடியாக அடித்துவிட்டார். இது சகஜமென ஜெயகாந்தனுடன் நெருங்கியவர்கள் சொல்லலாம். அவரிடம் எப்போதும் ஒரு கொதிநிலை இருக்கும். அதுவே அவரது ஆக்கத்திற்குக் காரணம். சீராக இருக்கும் மனோநிலையை மாற்ற மருந்து போடுவோர் உண்டு. ஹிப்பி கலாச்சாரம் உச்சத்தில் இருந்த போது அவர்களை 'மலர் மழலைகள்' (flower children) என்று சொல்வர். மரிஜுவானா ஒரு பூ என்று உணர்க. ஜெயகாந்தனுக்கும் இந்தப்பழக்கமுண்டு. அதுதான் பேசுமுன் மேடைக்குப்பின்னே நடந்தது. பாரதி பக்தரான அவரைக் கேட்டால் 'பாரதி செய்தான் அதனால் நான் செய்கிறேன்' என்று சொல்லிவிடுவார்.

பாரதி ஒரு கொதி நிலை படைப்பாளி என்பது உலகமறிந்தது. அது ஏழ்மையினால் வந்ததா? ஜெயகாந்தன் மதுரையில் வாழ்ந்த காலத்தில் உருவாக்கிய படைப்பிலக்கியம் பின்னால் சென்னை வந்து வசதியாக வாழ்ந்த காலத்தில் சமனப்பட்டு போய்விட்டதாக ஒரு தொன்மம் இங்கு உண்டு. வறுமைக்கும் புலமைக்கும் உள்ள தொடர்பு ஆக்கம் சம்மந்தப்பட்டதோ? புலவர்களுக்கு நன்றாக சாப்பாடு போட்டு அரசவையில் உட்கார்த்தி வைத்தால் 'நாராய், நாராய் செங்கால் நாராய்' என்று பாடாமல் கொக்கோக சாஸ்திரம் பாடிக்கொண்டிருப்பார்கள் போலும். எட்டயபுர அரசவையில் புலவர்கள் இப்படி இருப்பது கண்டுதானே பாரதி வெறுத்துப்போய் வெளியேறினான்! புத்திலக்கியம் தோன்ற 'சீர்மை' அவசியமில்லை 'சீர்கேடுதான்' முக்கியம் என்பது அபத்தமாகப் பட்டாலும் உண்மை. பிரபஞ்சத்தில் பூமிப்பந்து எப்போதும் ஒரு அதிர்வில் இருப்பதாக விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். இந்த அதிர்வு சூரியனிடமிருந்து வரலாம், சந்திரனிடமிருந்து வரலாம், பிற கோள்களிடமிருந்து வரலாம். ஏன் பூமியில் நாம் செய்யும் பாரிய மாற்றங்களினால் கூட வரலாம் என்கின்றனர் விஞ்ஞானிகள். இது எவ்வளவு அழகாக படைப்பிலக்கியத்திற்கு பொருந்தி வருகிறது!

நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம் சமயவாழ்வு என்பது இந்த கச்சாத்திலிருந்து விடுபட்டு ஒரு நிலையான மனப்போக்கில் வாழும் வாழ்வென்று. ஆனால் அது உண்மையல்ல. நாயக-நாயகி பாவம் என்னும் இலக்கியப்பாதை ஒரு கொதிநிலையில் உருவாவதே! "நாணியினியோர் கருமமில்லை, நாலயலாரும் அறிந்தொழிந்தார்" என்று சொல்லி "தந்தையும் தாயும் உற்றாரும் நிற்கத் தனிவழி போயினாள்" என்ற பழி வருமுன் "நீரென்னைக் காக்கவேண்டில் ஆய்பாடிக்கேயென்னை உய்த்திடுமின்" என்று பாடுகிறாள் ஆண்டாள். அவளது கோபம், தாபம் எல்லாம் இலக்கியமாக வந்து விழுந்திருக்கின்றன. "கொங்கைத் தலமிவை நோக்கிக்காணீர்? செங்கச்சுக் கொண்டு கண்ணாடையார்த்துச் சிறுமானிடரைக் காணின் நாணும்!" என்று வீரபாண்டியக்கட்டபொம்மன் சிவாஜி போல் "வெட்கம்! வெட்கம்" என்று கர்ஜிக்கிறாள். இப்பாடல்களை நாம் சாற்றுமுறையாக கோயில்களில் சேவித்துக் கொண்டிருக்கிறோம். நம்மாழ்வார் இதைவிடக் கொதிநிலையில் இருந்திருக்கிறார். ஒரு பிரவச்சனத்தில் கேட்டேன். 'பரம வைஷ்ணவரான நம்மாழ்வார் ஏன் அவ்வப்போது சிவனை ஸ்மரணை செய்கிறார் என்று கேட்டால் அதற்குக்காரணமுண்டு. சிவன் சம்ஸ்காரம் செய்பவன். அவனை வழிபட்டால் சீக்கிரம் உயிர் போய்விடும். திருமாலின் வரவிற்காகக் காத்திருக்கும் ஒவ்வொரு பொழுதும் நரகம் போலுள்ளது. அதற்கு மரணம் என்பது எவ்வளவோ தேவலை! என்று நம்மாழ்வாருக்கு தோன்றியிருக்க வேண்டும். அதனாலேயே அவர் சிவனை வழிபட்டிருக்கிறார்" என்று போனது வியாக்கியானம். உண்மைதான்! இந்த தியாகராஜருக்கு என்ன வந்தது? அந்தக்காலத்தில் கட்டுக்கடங்கிய மனைவி, செட்டான குடும்பம், பிராமணராகப் பிறந்துவிட்டதால் சமூக அந்தஸ்து. இப்படி சீராக வாழ்வதற்கான எல்லாம் அமையப்பெற்ற பின்னும் அவர் தவிக்கும் தவிப்பைப் பார்த்தால் நமக்குக் கண்ணீர் வருகிறது? எது அவரை அந்தப்பாடு படுத்தியது? அந்தப்பாடு இல்லாவிடில் இத்தனை பாட்டுக்களும் வந்திருக்காதோ? இத்தனை பாவம்! இத்தனை உருக்கம்! காலத்தை வெல்லும் மெட்டு! மொழித்தடைகளைக் களையும் பக்தி. இத்தனைக்கும் காரணம் உள்ளத்தின் குறைதானோ?

தியாகராஜரைவிட உசத்தியான வாழ்வு குலசேகர மன்னனுக்கு. ஆனால் அவருக்கே தெரிந்திருக்கிறது தனது கிறுக்குத்தனம். அதனால் சொல்கிறார், "பேயரேயெனக்கியாவரும், யானுமோர் பேயனேயெவர்க்கும் இது பேசியென்?" என்று. பேய் பிடித்தது போலிருக்கும் ஒரு கொதிநிலை. அதுவே தமிழ் ஆன்மீகம் சுட்டும் ஆக்கநிலை.

கல்யாணமான அடுத்தநாள் பிச்சமூர்த்தி ரமணமகரிஷி ஆஸ்மரத்திற்குப் போய் 'சந்நியாசம்' கேட்டாராம். வாசித்து இருக்கிறேன். தஞ்சைப்பிரகாஷை நேரே பார்த்த போது இதுதான் கேட்டேன், 'ஏன் இத்தனை வன்முறை உங்கள் எழுத்தில்?'. வன்முறையான சமூகத்தைக் கண்டு கொதிக்கும் போது இலக்கியம் பிறக்கிறது. அதுவே படைப்பாளனின் நெஞ்சுக்கு நீதி போலும்!

தூரத்துப்பச்சைகள் கண்ணுக்குக் குளிர்ச்சிதான். ஆனால் கிட்ட வந்து பார்க்கும் போதுதான் வண்டு குடையும் குடைச்சல் கேட்கும். அந்தக்குடைச்சலை வைத்து மெட்டுப்போடுவதுதான் புத்திலக்கியம் என்று தோன்றுகிறது.

1 பின்னூட்டங்கள்:

suratha 6/30/2004 10:15:00 PM

இந்தக் கலைஞர்களுக்கே இந்தக் கொதிநிலை கவசகுண்டலங்கள் போல் அழிவும் ஆக்கமும் அதனால்தான்.