Beauty saloon

சவரம் பழகு

ஆணாக இருப்பதில் எத்தனையோ அசௌகர்யங்கள் இருந்தாலும் இந்த சவரம் செய்து கொள்ளும் அநுபவம் ஆண்களுக்கென்று பிரத்தியேகமானது என்று தோன்றுகிறது. இதையும் நிச்சயமாகச் சொல்லமுடியா வண்ணம் நாகரீகம் மாறி வந்தாலும், ஒரு பேச்சுக்கு இப்படி வைத்துக் கொள்வதில் தவறில்லையென்று தோன்றுகிறது.

பிறந்தவுடன் முடி காணிக்கை தர கோயிலுக்குக் கொண்டு போய் அங்கு குழந்தைகளின் அலறல் கண்டு மிரண்டு போய் மொட்டையடிக்க உட்காரும் குழந்தை அழ, சவரக்கத்தியின் கூர் மழுங்கிப்போய் மண்டையையைக் கீற ஒரே ரத்தவிளாரகப்போய்...இது என்ன காணிக்கைச் சடங்கு என்று கேட்க வைக்கும் தமிழகம்! எனது சக விஞ்ஞானியின் குழந்தைக்கு இன்னும் ஒரு வயது ஆகவில்லை. மொட்டை போட்டிருந்தார்கள். என்ன வேண்டுதலோ என்று கேட்டு வைத்தேன் :-) இல்லை, கோடை வந்து விட்டது, தலையில் அக்கி வந்து விடாமல் காக்க மொட்டையடித்திருக்கிறோம் என்றார்கள். நம்ம ஊர் வழக்கமும் இப்படித்தான் ஆரம்பித்திருக்கும். ஆனால் போகப்போக அது ஒரு லாபகரமான தொழிலாக வளர்தெடுக்கப்பட்டு, அதில் செண்டிமென்ட் சேர்த்து, 'மொட்டையடிக்காவிடில் சாமி கண்ணைக்குத்தும்' என்று எண்ணுமளவிற்குப் போய் விட்டது. பெரும்பாலும், சிறுவர்களுக்கு முடி திருத்த அழைத்துப்போவது அப்பாவின் கடமையாக இருக்கும். சவரக்கடையில் பீடி நாற்றமும், முரட்டு மீசைப் பெரியர்வர்களும், சாணை பிடிக்கும் கத்தியை சரக், சரக்கென்று தீட்டும் பயங்கரமும் குழந்தைகளை மிரள வைப்பதில் ஆச்சர்யமில்லை. ஆனால் அப்பாமார்களுக்கு ஈதெல்லாம் புரியாது. மற்றவர்களுக்கு முன்னால், வீட்டிலிருப்பதையும் விடக் கடுமையாக நடந்து கொள்வர். சீட்டில் உட்கார முடியாததால், அதன் மீது ஒரு கட்டப்பலகை போட்டு, கால்கள் எதிலும் பாவாமல் அந்தரத்தில் தொங்க, ஒரு அழுக்குப்பிடித்த துணியை உடலெல்லாம் சுற்றும் போது வரும் நாற்றத்தில் குழந்தை அழவில்லையெனில் ஆச்சர்யம்தான். ஆனால், இந்த மிரட்டல்கள், பயமுறுத்தல்கள் இல்லாத மிக சௌகர்யமான கொரியன் சலூனிலும் அன்று ஒரு குழந்தை குய்யோ, முறையோ என்று அழுது கொண்டிருந்தது. அம்மா அருகிலிருந்து ஆறுதல் செய்து கொண்டிருந்தாள். முடிதிருத்தி முடிவதற்குள், முகமெல்லாம் சிவந்து ஏதோ இரும்பு உலையிலிருந்து எடுத்த பாளம் போல் ஆகிவிட்டது குழந்தை. பாவமாக இருந்தது. சவரம் செய்து கொள்வது நிச்சயம் குழந்தைகளுக்கான செயற்பாடல்ல என்று இதனால் முடிவு செய்யலாம்.

அது பெரிய ஆண் வர்கத்திற்குரிய ஒரு செயல். தமிழகத்தில் அன்று திராவிடக்கழக ஆட்சி அமைய இந்த முடிதிருத்தும் நிலையங்கள் காரணமென்று சொன்னால் நம்பமாட்டீர்கள். சலூன் என்பது ஒரு சின்ன அரசியல் பட்டறை. காரசாரமாக அரசியல் பேசி, விவாதிக்கப்படும். நிறையப்படங்கள் மாட்டப்பட்டிருக்கும். லெனின், இங்கர்சால், கார்ல்மார்க்ஸ் போன்றவர்களின் தரிசனம் என்னைப்போன்றவர்களுக்க்கு முதன்முதலில் சவரக்கடையில்தான் கிட்டின! பிறகு ஈ.வேரா, அண்ணா...என்று போகும். சவரக்கடையின் ஈர்ப்புகளிலொன்று தினத்தந்தி. நமது தருணத்திற்குக் காத்திருக்கும் போதுகளில் தினத்தந்தி வாசிக்க ஆரம்பித்து சிந்துபாத், லைலா, மூசாக்கிழவன் அறிமுகமாயினர்.

ஆனால், வெளிநாடுகளில் முடிதிருத்திக்கொள்வது முற்றிலும் வேறான அனுபவம். அதை முழுக்க ரசிக்க வேண்டுமெனில் கொரியா வந்துவிட வேண்டுமென்று சொல்வேன். பள, பளவென்று சுத்தமாக, மிக நூதனமாக, மிக நவீனமாக இருக்கின்றன கொரிய சலூன்கள். தொழில்நுட்பம் வளர்ந்து விட்டதால் முடிவெட்டும் திருத்துவான் சத்தம் போடுவதே இல்லை. நம்ம ஊர் திருத்துவான் சத்தத்தில் காதைப் பழுதாக்கிவிடும் (சில நேரம் கவனக்குறைவால் காதில் விழுப்புண் விழும் அபாயமுண்டு என்பது வேறு விஷயம்). இங்கும் காத்திருக்க வேண்டியுள்ளது. ஆனால் காத்திருக்கும் போதுகளில் டிவி பாக்கலாம், இரண்டு கணணிகள் இணைய வசதிகளுடன் நம் கவனத்திற்கு காத்திருக்கின்றன. இதெற்கெல்லாம் மேலாக, காத்திருக்கும் நேரத்தில் என்ன சாப்பிடுகிறீர்கள் என்று விமான சேவை போல் ஒரு பட்டியல் கார்டு தருகிறார்கள். ஐஸ்கிரீம், ஐஸ்காபி, டீ, ரெகுலர் காபி, டோ ஸ்ட் என்று நீள்கிறது பட்டியல். சவரக்கடையில் உட்கார்ந்து டோ ஸ்ட் சாப்பிட்ட அனுபவம் கொரியாவில்தான். உலகில் வேறெங்கும் இப்படிக் கவனித்துக் கொள்கிறார்களாவென்று தெரியவில்லை. வரும் குழந்தைகளுக்கு 'போரடித்து' விடக்கூடாது என்று ஒரு பெண் பலூன் ஊதிக்கொண்டிருந்தாள். பெரும்பாலும் இங்கு சலூன்கள் பெண்களாலேயே நடத்தப்படுகின்றன. ஆண்களைக் கவர்வதற்கு இது என்று ஆண் புத்தி சொன்னாலும் அங்கு வரும் 90% வாடிக்கையாளர்கள் பெண்கள்தான். நகம் வெட்டிக்கொள்ள, நகப்பாலிஷ் போட்டுக் கொள்ள, முகவடிவாக்க இப்படிக் கொசுறு வேலைகளுக்கென்று நிறையப்பேர் வருகிறார்கள். ஆனால் பெரும்பாலோர் தங்களது முடியை வண்ண, வண்ணமாக்கிக்கொள்வதற்கே வருகின்றனர். கிளிப்பச்சை, மஞ்சள் என்று முடிநிறத்தைப்பார்க்கும் போது 'பறைவைகள் பலவிதம்' என்று கண்ணதாசனை எது பாட வைத்திருக்கும் என்று யூகிக்க முடிகிறது!

முடிவெட்டுமுன் சுகமாக ஒரு சின்ன ஷாம்பு பாத். தலைக்கு மட்டும்தான் :-) பிறகு முடிவெட்டல். வெட்டியபின் மீண்டும் ஒரு ஷாம்பு. அப்போது கொஞ்சம் மஜாஜ் வேலையுண்டு. இது மிக சுகமானது. இப்படியெல்லாம் வேறெங்கும் செய்வதில்லை. ஜெர்மனியிலும் பெண்கள்தான் முடிவெட்டுகின்றனர். ஆனால் வந்தோமா, போனமாவென்று ஐந்து நிமிடத்தில் முடித்து அனுப்பிவிடுகின்றனர். சேவையென்று அனுபவிக்க வேண்டுமெனில் கொரியா, ஜப்பான் என்று வந்துவிட வேண்டும். நாம் வெறும் வாடிக்கையாளர் மட்டுமல்ல. ஏதோ கலைப்பொருள் போல். ஒரு சிலை போல் நம்மை வைத்து அவர்கள் கவனித்துக் கொள்ளும் அழகு, நம்மை பற்றிய மதிப்பை ஒரு புதிய கோணத்தில் உயர்த்துகிறது.

இத்தனை சௌகர்யமும் பெரியவர்களுக்குத்தான். ஆனால் குழந்தைகள் இதையெல்லாம் கண்டு மிரண்டு விடுகின்றன.

சவரம் என்பது இப்படியான ஒரு நூதனமான தொழிலாக வளந்துவிட்ட காலத்திலும் இந்தியாவில் அது கீழான தொழிலாக மதிக்கப்படுவது ஏன்? தொழிலை வைத்து மக்களைப்பிரிக்கும் வழக்கம் அங்கு ஏன் வந்தது? தொழில் சாதீயத்திற்கு வித்தாக ஏன் மாறிப்போனது? என் தாத்தா காலத்தில் சவரத்தொழிலாளி வீட்டிற்கு வந்து சவரம் செய்வார். எல்லா இடங்களிலும் கூச்சமில்லாமல் சவரம் செய்யச்சொல்வார்கள். அப்பா காலத்தில் முடிதிருத்தும் நிலையங்கள் மெல்ல வர ஆரம்பித்தன். என் காலத்தில் சலூன் ஒரு அரசியல் பட்டறையாகிப்போனது. இப்போது, சென்னை போன்ற நகரங்களில் அது நூதனத்தொழிலாக மாறிவருகிறது. பாரதிக்கு தொழில் பேதம் தெரியாது. எனவே ரௌத்திரம் பழகு என்று சொன்னவன் இன்றிருந்தால் 'சவரம் பழகு' என்று சொல்லியிருப்பான். அதுவொரு அதிநவீனத்தொழில் இன்று!

முதல் வெளியீடு: சமாச்சார்-தமிழ்

0 பின்னூட்டங்கள்: