Environmental Hygiene in India

சார்/மேடம் ஒரு நிமிஷம்....

நான் பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும் காலத்தில் வீட்டிற்கு நாளும் கிழமையுமாக மஞ்சள் தடவிய ஒரு காலணாக் கடுதாசி வரும். அதில் ஏழுமலையானின் பெருமைகளையெல்லாம் சொல்லி, கலியக வரதனான அவர் நடத்திய அற்புதங்களை சொல்லி இதை வாசித்தபின் அவரின் அருள் கிட்ட வேண்டுமெனில் 12 பேருக்கு இது போல் கடுதாசி போட வேண்டுமென்றும், தவறினால் குடும்பத்தில் ஏதாவது துக்கம் சம்பவிக்குமென்றும் எழுதியிருக்கும். சாதாரணமாகவே நடுக்கம் வரும், ஏழுமலையானைக் குடும்ப தெய்வமாகக் கொண்டிருக்கும் எங்கள் வீட்டிற்குச் சொல்லவா வேண்டும்? அடியேன்தான் போய் தபாலாபீஸில் காத்திருந்து கார்டு வாங்கிவர வேண்டும். 12 கடிதம் எழுத வேண்டுமே! அக்கா முதலில் குண்டு, குண்டாக நாலு கடுதாசி எழுதித்தருவாள். அதை நாங்களெல்லோரும் நகலெடுக்க வேண்டும். தரையில் குனிந்து கொண்டுதான் எழுதுவோம். பெண்டு கழண்டு விடும். ஈதெல்லாம் சிறுபிள்ளை விளையாட்டு என்று புரிந்து கொண்டு விட்ட இந்தக்காலத்திலும் மின்னஞ்சல் மூலமாக இம்மாதிரிக்கடிதங்கள் வருகின்றன. நண்பர்கள் தினத்தைக் கொண்டாடும் விதத்தில் ஒரு கடிதம் வந்தது, நட்பின் சிறப்பை சிலாகித்து. கடைசியில் ஒரு கொக்கி! நீ நட்பை மதிப்பவனாக இருந்தால் இக்கடிதத்தை ஒரு பத்துப்பேருக்காவது அனுப்பு என்று. எப்படியெல்லாமோ நம்ம செண்டிமெண்டைக் கிளறிவிடறாங்க சார்!

இந்த வெங்கடாஜலபதிக் கடிதம்தான் நானறிந்த முதல் 'எரிஞ்சல்' அதாவது spam. (எரிச்சல் தருகிற அஞ்சல்). இப்போ தினம் ஐம்பது வருது. அதிலே பாதி நான் குலுக்கலில் கலந்து கொள்ளாமலே கோடீஸ்வரனென அறிவிக்கும் கடிதங்கள்! பாதி இது வைரஸ் அல்ல என்று அறிவிக்கும் இணைப்பான்கள். அவ்வப்போது ஆண்குறியை பெரிதாக்குவது எப்படி என்று அட்வைஸ் அஞ்சல்களுமுண்டு. இதற்கிடையில் ஒரு நாள், நான் மிகவும் மதித்துப்போற்றும் பேராசிரியர், விஞ்ஞானி டாக்டர் அப்துல் கலாமிடமிருந்து 'என்று சொல்லி' வந்திருந்தது ஒரு மின்னஞ்சல். அதுவொரு பவர் பாயிண்ட் கோப்பு. முதல் அட்டையில் சிரித்தமுகத்துடன் கலாம். தான் ஐதராபாத்தில் பேசிய கூட்டத்தில் ஒரு சிறுமி ஆட்டோ கிராஃப் வாங்க வந்தாளென்றும், அவளிடம் உன் வாழ்வின் கனவென்ன என்று கேட்டதற்கு நான் 'வளர்ச்சியடைந்த' இந்தியாவில் வாழவேண்டுமென்று சொன்னதாக எழுதுகிறார். இந்தியா வளர்ந்த நாடாக வேண்டுமென்றால் ஒவ்வொரு இந்தியனும் என்ன செய்ய வேண்டுமென்று பேச ஆரம்பிக்கிறார். வெங்கிடாஜலபதி கடுதாசி போலவே போகப்போக குண்டுகளை வீசியவாறே போகிறது கோப்பு.

நாம் சொல்லுகிற வசனங்களோடு ஆரம்பிக்கிறது. இந்த அரசாங்கம் ஒரு குப்பை. ஊழல் பிடிச்ச அரசு. நம் நாட்டுச் சட்டமோ ஒரு பெரிய ஜோக்கு. குப்பைத்தொட்டியத்தவிர தேசம் பூரா குப்பை கொட்டிக்கிடக்கிறது. நமது இரயில்வேஸ் பற்றிப் பேசவே வேண்டாம்..இப்படி. அது சரி! இதற்கு "நீ" என்ன செய்யப் போகிறாய்? என்று ஆரம்பிக்கிறது சாட்டையடி!

சிங்கப்பூர் விமானநிலையத்தில் வந்து இறங்குகிறாய். பிடித்த சிகரெட் துண்டை அப்படியே தெருவில் கடாசக் கூசுகிறாய். மாலை 5 மணியான பிறகு ஆர்சார்டு சாலை வழியே போவதற்கு 5 டாலர் கட்ட ஆயிரம் கேள்வி கேட்பதில்லை. துபாயில் இருந்தால் ராமதான் போது பொது இடத்தில் எச்சில் படுத்தி உணவு உண்பதில்லை. ஜெட்டாவில் தலையை மூடாமல் நடக்கக்கூசுகிறாய். வாஷிங்டன் சாலையில் 55 மைல் வேகத்திற்கு மேல் போகக் கூச்சப்படுகிறாய். காவலாளி பிடித்தால், "நான் யாரோட பிள்ளைன்னு உனக்குத்தெரியுமா?" என்று வம்பு, வீண் ஜம்பம் பேசுவதில்லை.

ஆனால் நீ பிறந்த மண் என்று வரும்போது குப்பையை எங்கு வேண்டானும் வீசுகிறாய், போலீஸ்காரனுக்கு லஞ்சம் கொடுத்து கெடுக்கிறாய், எங்கு வேண்டுமானாலும் எச்சில் துப்புகிறாய். அடுத்த நாட்டில் கடைப்பிடிக்கும் நாகரீகத்தில் ஒரு கடுகளவேணும் இந்தியாவில் கடைபிடித்தால் இந்தியா ஏன் சுத்தமாக, வளர்ந்த நாடுபோல் இருக்காது என்று கேட்கிறார்.

வெங்கிடாஜலபதி பேர் சொன்னவுடன் என்ன பயம் வருமோ அதே பயம்தான் ராஷ்டிரபதி பேர் சொன்னவுடன் வருகிறது. "சாமி கண்ணைக்குத்தும்" பயம்தான்! ஆனால், இதை டாக்டர் கலாம் அனுப்பியிருப்பார் என்று நம்புவதற்கில்லை. அவர் இப்படி பட்டவர்த்தனமாகப் பேசக்கூடியவர் என்று தெரிந்து கொண்ட ஒரு "ஜோரோ" (Zoro) ஒரு "ராபின்ஹூடு" (Robinhood) இதைச் செய்திருக்கிறது!

ராமஜெயம் எழுதுவது போல் "ஜெய, ஜெய, பாரத!" என வாழ்த்தினால் ஒன்றும் குறைந்துவிடாது என்ற நல்லெண்ணம்தான். இதில் சொல்லியிருப்பதென்னவோ நூற்றுக்கு நூறு உண்மை. சூழல் விழிப்புணர்விற்கு என்று நானும், அன்னை தெரசா பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர்.ஆனந்தவல்லி மகாதேவனும் இம்மாதிரி நிறைய 'அறிவுரை' தாங்கிய நிகழ்ச்சிகளை திருச்சி வானொலியில் அளித்துள்ளோம். 90களில் சுபமங்களாவில் இது குறித்தும் கட்டுரை எழுதியுள்ளேன்.

கலாம் சொல்லும் மற்ற நாடுகளுக்கும் இந்தியாவிற்கும் நிறைய வித்தியாசமுண்டு. வளைகுடா நாட்டில் சேட்டை செய்தால் மாறு கால், மாறு கை வாங்கிவிடுவார்கள். சிங்கப்பூரில் பிருஷ்டத்தில் சவுக்கடி கிடைக்கும். கிளிண்டனே சொன்னாலும் கேட்கமாட்டார்கள். ஆனால், இந்தியா ஒரு சுதந்திர நாடு. என்ன வேண்டுமானாலும் பேசலாம் செய்யலாம்!

அது சரிதான், ஆனால் அடிப்படை ஸ்திரமில்லாமலே இந்தியா ஒரு மிக உயர்ந்த ஜனநாயகக் குடியரசுக் கொள்கையை ஏற்றுக்கொண்டுவிட்டது. மிகவும் வளர்ச்சியடைந்த ஐரோப்பிய நாடுகள் கூட மெல்ல, மெல்லதான் ஒருங்கிணைப்பிற்கு வருகிறார்கள். பொது விழுமியம் பற்றிப் பேசுகிறார்கள். பல் இன, பல் தேசிய இந்தியாவை ஒரு இரவுப் பிரகடணத்தில் ஒரு நாடாக்கிவிட்டார்கள். அப்படி, இப்படி இழுத்துக்கொண்டு போய் இப்போதுதான் 'இந்தியன்' என்ற உணர்வே வரத்தலைப்பட்டுள்ளது. அதற்குள், பிற சூழல் விழுமியங்கள் பற்றிய பிரக்ஞை எப்படி வரும்?

அதை முறையாக வளர்த்தெடுக்க வேண்டும். ஜெர்மனியில் கிண்டர்கார்டன் குழந்தைகளுக்கு சாலை விதிகள் கற்பிக்கப்படுகின்றன. இரவு 12 மணிக்கு சிவப்பு விளக்கில் சாலையைக் கடக்க உத்தேசிக்கும் போது யாரோ காலரைப் பிடித்து நிறுத்துகிறார்கள். அம்மாதிரி "ஒழுங்குதான் எல்லாமும்" (Es ist alles in Ordnung) என்ற தேசிய விழுமியம் சட்டென வந்துவிடாது! மக்கள் மனதில் அது ஆழப்பதிய வேண்டும். இது நமது தேசம். இங்கு நாம் வாழ்கிறோம். இதை துப்புரவாக வைத்துக்கொள்ள வேண்டும். இது போன்ற உணர்வு! இந்தியாவில் எல்லாமே மற்றவர் செய்ய வேண்டுமென்ற மனோபாவம்.

மேலை நாட்டிற்கும், இந்தியாவிற்கும் ஒரு பெரிய வேற்றுமை உள்ளது. இந்தியன் தனி மனித அளவில் ஒழுக்கம் நிறைந்தவன். பல்லாயிரமாண்டு இராமாயண. மகாபாரதக் கதை கேட்டு, கேட்டு நீதி, நியாயம் என்பது உள்ளே பதிந்துள்ளது. வீட்டிற்குள் ஆசாரமாக, மடியாக இருப்பார்கள். ஆனால் சாப்பிட்டபின் இலை தெருவிற்கு வந்துவிடும்!

ஆனால் ஒரு அமெரிக்கனையோ, ஒரு ஜெர்மானியனையோ எடுத்துக்கொண்டால், தனி மனித விழுமியம், குடும்ப விழுமியம் என்று சொல்லிக் கொள்ளுமளவு இருக்காது. வீட்டில் எப்படியிருந்தாலும் பொது இடம் என்று வரும் போது ஒரு கண்ணியம் இருக்கும். ஒரு நாகரீகம் இருக்கும். நாம் பத்து தேய்த்து, பாத்திரங்களை துலக்கி வைத்திருப்போம். ஆனால் தெரு குப்பையாக இருக்கும். அங்கு பாத்திரம் கழுவாமல், சாப்பிட்ட பிட்ஸா ஒரு வாரத்திற்கு அப்படியே கிடக்கும். ஆனால் தெருவில் படுத்துக் கொள்ளலாம். அப்படி சுத்தமாக இருக்கும்.

இந்தியா வளர்ந்த நாடாக மாறுவது ஒன்றும் பெரிய காரியமில்லை. பாதிக்கிணறு தாண்டியாகிவிட்டது. "உண்ணும் சோறு, பருகும் நீர், தின்னும் வெற்றிலை! எல்லாம் இறைவன்" என்றுதானே நம் முன்னோர் கண்டுள்ளனர். கொஞ்சம் இதை அண்டை வீட்டுத்திண்ணைக்கும், தெருவிற்கும், தேசத்திற்கும் பொது என்று கொள்வோமானால் இந்திய உபகண்டமே இறைவன் வாழும் பகுதியாகும்.

அப்போது இந்தியா உலகிலேயே மிக வளர்ச்சியுற்ற நாடாக பொலிவு பெறும்.

முதற்பதிவு, சமாச்சார் தமிழ்
டாக்டர் கலாமிடமிருந்து வந்ததாகச் சொல்லப்படும் பவர் பாயிண்ட் ஸ்லைடு ஷோ இங்கு

0 பின்னூட்டங்கள்: