Hymns for the drowning!

நற்சிந்தனை

வெய்யில் காலமென்றால் எல்லோருக்கும் வெளியே காத்தாட நடக்க ஆசையாக இருக்கிறது. ரொம்பச் சூடு என்றால் கடல் மேல் மிதந்து கொண்டு, நீந்திக்கொண்டு சூட்டைக் குறைக்க முடியும். எனது அறையிலிருந்து 600 அடியில் கடல். நீந்த வேண்டுமென்று ஆசை. நான் ஒண்ணும் மிகிர்சென் அல்ல. சாதாரண கமலைக்கிணத்தில் நீந்தக் கற்றுக் கொண்டவன். கடலுள் இறங்கியாகிவிட்டது. கூப்பிடு தூரத்தில் ஆய்வக மிதப்புத்தளமிருந்தது. போய்விடலாமென்று எண்ணி நீந்தத்தொடங்கினால் 75% போனபின் மூச்சு வாங்கிவிட்டது. நீந்தி ஒரு இரண்டு வருடமாவது ஆகியிருக்கும். உடல் பயிற்சியினால் செயல்படுவது. சும்மா, சும்மா உட்கார்ந்து வலைப்பதிவு செய்து கொண்டிருந்தால் உடல் சோம்பல் பட்டுப் போகிறது. மிதப்பு கண்ணில் படும் தூரத்தில் இருந்தும் மேலே போகமுடியவில்லை. ஆழம் நிச்சயம் 10 மீட்டராவது இருக்கும். மூழ்கமாட்டேன் என்று உள்ளுள் ஏதோ சொன்னது. இருந்தாலும் முடியவில்லை. அருகில் வந்து கொண்டிருந்த கொரிய நண்பனின் உதவி கேட்டேன். அவன் பதறிப்போய் கழுத்தைப் பின்புறம் வாங்கி தூக்க ஆரம்பித்தான். அடே! மடையா! சும்மா, தொட்டுக்கொள்ள வந்தால் போதும் போய்விடுவேன் என்று சொல்ல ஆசை. அவன்தான் கழுத்தைப் பிடித்துக் கொண்டுவிட்டானே! எப்படிப்பேச! கொஞ்ச நேரம் ஒரு பதட்டம். பின் ஒருவழியாக அவன் நீந்த அவன் தோளை மெதுவாகப் பிடித்துக்கொண்டு மிதப்பு தளத்திற்குப் போய் ஓய்வெடுத்தேன். அன்று அவன் அருகில் இல்லையெனில், இன்று யாராவது இரங்கற்செய்தி வாசித்துக் கொண்டிருப்பர். உறங்குவது போலும் சாக்காடு என்பது தூங்கும் போது உயிர் போனால் சரியாகப் பொருந்தும். நீரில் மூழ்கிச் சாவது கொடூரம்!

அன்று, துணி துவைக்க ஊறப்போட்டிருந்தேன். துணியை அலசும் போது, ஒரு சின்னப் பூரான் தொப்பென்று விழுந்தது. பூரான் எப்படி நீரில், சோப்புடன் ஊறும் சட்டைக்குள் புகுந்தது என்று தெரியவில்லை. உடனே 'கொல்! கொல்!' என்று மிருககுணம் சொன்னது. கொஞ்ச நேரம் யோசித்தேன். என்னைப்போல் அதற்கும் வாழவேண்டுமென்று ஆசையிருக்கும். எனக்குள்ள அதே வாழும் உரிமை அதற்குமுண்டு. எனக்கு அடுத்தவேளைக்கு உத்திரவாதமிருக்கிறது. அதற்கில்லை. ஒரு சின்ன கம்பில் ஏற்றி வெளியே விட்டு விட்டேன். பாம்பு கொத்தும். தேள் கொட்டும். பூரான் கடிக்கும். அது அதன் இயல்பு. பகைவனுக்கு அருளும் நெஞ்சு மனிதனுக்கு மட்டுமே உள்ளது.

வாழ்க மாக்கள்! வாழ்க மக்கள்!

5 பின்னூட்டங்கள்:

Thangamani 8/16/2004 03:53:00 PM

உங்களுடைய இந்த வலைப்பதிவுக்கு இப்போதுதான் வருகிறேன் போலிருக்கிறது. இதுவும் நன்றாக இருக்கிறது. எனக்கும் நீச்சல் பிடிக்கும். இரவு 1 மணிக்கெல்லாம் கன்னியாகுமரி கடலில் (அதுவும் ஆளே இல்லாத) தனியாக நீந்திக்கொண்டிருக்கும் அளவுக்கு பைத்தியமாயிருந்த எனக்கு இப்போது கடலில் நீந்த ஆவல் இருந்தும் இனம் புரியாத தயக்கம் வந்துவிட்டது. எதனால் என்று சரியாகப் புரியவில்லை. அசுத்தமா? பயமா? உங்கள் நீச்சல் அனுபவம் எனக்கு சுவராசியமாய் இருந்தது. எனக்கும் மாமல்லபுரம் கடலில் இப்படி ஒரு அனுபவம் (ஆனால் இன்னொரு நண்பரை காப்பாற்றப் போய் வந்தது. அதுகூட காரணமாய் இருக்கும் என்று இப்போது தோன்றுகிறது. நன்றி.) ஆனால் கவனமாய் இருங்கள். நீங்கள் மூழ்காமல் மிதக்கப் பயிற்சி (மூச்சு விட்டுக்கொண்டே:)) எடுத்திருந்தீர்களானால் அவ்வப்பொழுது சற்று நேரம் மிதந்திருந்துவிட்டு பின் மெதுவாக நீந்தலாம். ஆனாலும் கவனம், கவனம். இந்த தலைப்பும் அருமை.

நா.கண்ணன் 8/16/2004 09:56:00 PM

நன்றி தங்கமணி:

கன்னியாகுமரி, திருச்செந்தூர் கடலையெல்லாம் என்னால் நினைத்துக்கூட பார்க்கமுடியாது. அவ்வளவு அலை!

இங்கு கடலில் சிப்பி அதிகம். காலைக் கிழித்துவிடுமென்று நண்பன் ரப்பர் காலணி அணிவித்துவிட்டான். அதுகூட கொஞ்சம் அசௌகர்யமாக இருந்தது. இள்நீச்சலில் இருந்து, இருந்து போயிருக்கலாம்தான். திடீரென்று பயம் தொற்றிக் கொண்டது...நல்லவேளை முங்கு நீச்சில் வந்த நண்பன் தலைதூக்கினான், உதவி கேட்டேன். ஆனால் அவன் ரொம்பப் பதறிவிட்டான். நான் கேட்க வந்தது தொத்திக்கொள்ள ஒரு துணை அல்லது மிதவை. அது இருந்தால் இளநீச்சலில் நின்றுவிட முடியும். அவ்வளவுதான் சக்தி இருந்தது அப்போது. இதற்குப்பின் மிதவையுடன் இரண்டு மணி நேரம் கடலில் கிடந்தேன். சுகமாக இருந்தது. கவனம் எடுத்துக்கொள்ளவில்லை என்று தோன்றுகிறது!

ராஜா 8/17/2004 03:04:00 AM

/அவன் அருகில் இல்லையெனில், இன்று யாராவது இரங்கற்செய்தி வாசித்துக் கொண்டிருப்பர்/

இது போன்ற சமயங்களில் இனி கவனமாக இருங்கள் :((

நா.கண்ணன் 8/17/2004 08:18:00 AM

நன்றி ராஜா. கவனமாக இருக்க முயல்கிறேன்.

காசி (Kasi) 8/17/2004 11:52:00 PM

Please take care!