கொசுவின் கதை

நேற்றிரவு ஒரு ஒற்றைக் கொசுவுடன் போராடியதால் தூக்கம் போச்சு. நாம்தான் புத்திசாலிகள் என்று நினைக்கிறோம். ஆனால் இந்த அற்பக்கொசு நமக்கு டேகா கொடுத்துவிட்டு, விளக்குப் போட்டால் ஒளிந்து கொண்டு, விளக்கு அணைந்தவுடன் மெதுவாய் வந்து கடிப்பதுமாய் இருக்கிறது. இந்தியக்கொசுகளுக்கு வீரியம் அதிகம். அது வரும்போதே ஏரோப்பிளேன் வர மாதிரி ரீங்காரிக்கும். ஆனால் கொரியக் கொசு, இந்த ஊர் ஜனங்கள் மாதிரியே சத்தம் போடாமல் மெதுவாக வந்து தன் காரியத்தைப் பார்க்கிறது. நம்ம ஊர் கொசு நல்ல சதையுள்ள இடத்தில் குத்தி இரத்தம் குடிக்கும். அவ்வளவாக வலிக்காது. ஆனால் இந்த ஊர் மடக்கொசு தலையில் முடியில்லாத பாகங்கள், முட்டி, விரல் நடுவு என்று கடிக்கக்கூடாத இடத்தில் கடித்து வைக்கிறது. அது எரிச்சல் தருவது மட்டுமல்ல, வீங்கவும் வைக்கிறது.

உயிரினங்களிலே மிகவும் வெற்றி கொண்ட உயிரினங்கள் பூச்சிகள். அவை இல்லாத இடமே கிடையாது. துருவப்பிரதேசத்தில் கொசு இருக்காது என்று நினைக்கிறோம். அதுதான் இல்லை. ஆளை கடிச்சுக்கொல்லும் அளவிற்கு கொசுப்பட்டாளமே அங்கு உண்டு.

ஆனாலும் ஊருக்கு ஊர் கொசு சரித்திரம் வேறுபடுகிறது. ஜெர்மனியில் நான் கொசு பார்த்தது இல்லை. அங்கு எறும்பு கூடக் கிடையாது. தேனீ மட்டும் அவ்வப்போது வந்து இனிப்பான பண்டங்களில் மொய்க்கும். இந்தியாவில் மதுரை பல்கலைக்கழக குடியிருப்புப் பகுதியில் வாழ்ந்த போது தினம் ஒன்றிரண்டு சாரைப்பாம்பு வீட்டிற்குள் வந்து விடும். வெறும் பேட்டா செறுப்பை வைத்து அடித்துக் கொல்வதுண்டு. நாகமலைப்பக்கம் போனால் சர்ரென்று ஆறடிப் பாம்பு பாய்ந்து செல்லும் காட்சியெல்லாம் சகஜம். ஆனால் வளர்ந்து விட்ட நாடுகளின் அறிகுறி உயிரினங்களை அரிதாகப்பார்ப்பதே. ஐரோப்பாவில் ஓநாய்கள் மீண்டும் வந்து விட்டன என்பது ஒரு சமயம் தலைப்புச் செய்தியாக வந்தது. மனிதன் வாழும் இடங்களில் வனவிலங்களுக்கு இடமேது? அவைகளைச் சரணாலயம் வைத்துப் பாதுக்காக்கும் நிலமைக்கு வந்தாகிவிட்டது. அங்கும் மனித ஆக்கிரமிப்பு உண்டு. விளைவு, சதா வனவிலங்குகளுக்கும் மனிதனுக்கும் போராட்டம்தான். உயிர்களின் பரிணாமத்திலேயே முதன்முறையாக ஒரு ஜீவன் 'இயற்கைத்தேர்வு முகவர்' (natural selection agent) என்ற பட்டத்தைப் பெற்றிருக்கிறது என்றால் அது மனிதனுக்கு மட்டுமே. எலிகள் பெருகினால் பாம்பு பெருகும், பாம்பு பெருகினால் மயில்கள் பெருகும் என்பது சாதாரண விதி. ஆனால், இயற்கையின் மாபெரும் சக்தி தவிர ஆயிரக்கணக்கான இனங்களை பூண்டோ டு அழிக்கின்ற ஆற்றலை மனிதன் பெற்றுள்ளான். துப்பாக்கி என்ற கொல்லி கண்டுபிடிக்கப்பட்டவுடன் சும்மா விளையாட்டிற்கு அமெரிக்க எருமைகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக அறிய வருகிறோம். மனிதக்கூட்டம் பெருகப்பெருக பூமண்டலத்தில் பிற ஜீவராசிகளுக்கு இடமில்லையென்று ஆகிவிட்டது.

இது ரொம்ப பாவமான சமாச்சாரம். நம்மைப் போலவே அவைகளுக்கும் வாழும் உரிமையுண்டு. நம்மைப் போலவே அவைகளும் பிள்ளை பெற்றுக் கொள்கின்றன, அவைகளைக் காப்பதற்கு அரும் பாடு படுகின்றன. இல்லாளுக்காக வீடு கட்டுவது என்பது மனித இனத்திற்கு மட்டும் பொது அல்ல. பல விலங்குகள் அரும்பாடுபட்டு மனைவியை சந்தோஷப்படுத்த வீடு கட்டுகின்றன! [பிடிக்கவில்லையெனில் சில பறைவைகள் கடுப்படிக்கும் விதத்தில் கட்டிய கூட்டைப் பிரித்துப்போட்டுவிடுவதுண்டு. நல்லவேளை மனித மனைவிகள் அப்படியெல்லாம் செய்வதில்லை]. தாம்பத்ய பிரச்சனைகள் என்பதும் விலங்குகளில் உண்டு. பச்சை வெட்டுக்கிளி போல் Praying mantis என்றொரு பூச்சியுண்டு. அது எப்போதும் தொழுவது போல் கைகளை வைத்திருப்பதால் அப்படியொரு பெயர். இதில் ஆசிய மக்கள் போல் ஆண் பூச்சி ரொம்ப வெட்கப்படுகின்ற ஜந்து. கலவி என்று வரும் போது கூச்சப்பட்டுக்கொண்டே இருக்குமாம். பெண் பூச்சி பார்த்துக்கொண்டே இருக்கும். இதற்கு வெட்கம் தெளியவே தெளியாது. அதைச் சரி செய்ய அது எடுக்கும் முயற்சி கமலஹாசன் படங்களில் வரும் வன்முறையைவிட கொடுமையானது. சட்டெனத்திரும்பி ஆண் பூச்சியின் தலையைக் கொய்துவிடும். நாம் நினைப்போம், உடனே பூச்சி செத்துப் போகுமென்று. ஆனால் அதுதான் இல்லை. செத்துப்போகும்தான்! ஆனால், செய்ய வந்த காரியத்தைச் செவ்வனே செய்து முடித்து விட்டே மரிக்கும்! இது என்ன அதிசயமென்றால்? ஆண் பூச்சியின் தலையில் கூச்ச சுபாபமுள்ள நரம்புவலையை நறுக்குவதன் மூலம், அப்பூச்சி கூச்சமில்லாமல் கலவியில் ஈடுபட்டு பெண் பூச்சியை கருத்தரிக்க வைக்க முடியும் என்பதுதான். நல்லவேளை இப்படியெல்லாம் நம் வாழ்வில் நடப்பதில்லை! சில தேள் இனங்களில் கலவி முடிந்த கையோடு பெண் தேள் ஆண் தேள் மீது பாய்ந்து அதைக்கடித்து தின்றுவிடுமாம். இதுதான் அன்பின் உச்சம் போலும்! இப்படிப்பல அதிசயங்கள் கொண்ட விலங்கினங்களுக்கும் நம்மைப் போல் வாழ உரிமை உண்டுதானே? ஆனால் மனிதன் பொறுப்போடு இதையெல்லாம் உணர்வதில்லை.

இதையெல்லாம் அவனுக்கு உணர்த்துவதற்குத்தான் இப்போது பசுமை விழிப்புணர்வு வந்திருக்கிறது. கனடாவிலுள்ள ராக்கி மலைத்தொடரில் பயணித்துக் கொண்டிருக்கும் போது ஒருமுறை பாதை தவறி புல்வெளிக்குள் போய் விட்டேன். எங்கிருந்தோ ஒலி பெருக்கியிலிருந்து எச்சரிக்கை. பாதை விலக வேண்டாம். தாறுமாறாக நடந்தால் கால் மிதி பட்டு பல காட்டுச் செடியினங்கள் அழிந்துவிடும்! என்பதே அந்த எச்சரிக்கை! அவ்வளவு கவனமாக இயற்கை அங்கு பாதுகாக்கப் படுகிறது. இந்தியாவின் நுகர்பொருள் கலாச்சாரம், பெருகும் மக்கள் தொகையுடன் சேர்ந்து கொண்டு இயற்கையை படாத பாடு படுத்துகிறது. சென்னையில் முகமூடிக்கொள்ளைக்காரர்கள் போல் பயணிக்கும் இந்த டூவீலர், ஆட்டோ செய்யும் சூழல்மாசு வானிற்குச் சென்று இந்தியாவிற்கு மிகவும் அத்தியாவசமான பருவக்காற்றின் போக்கையே திரும்பப்பெறமுடியாத அளவில் மாற்றிவிட்டது என்பது சமீபத்திய சேதி. இதனால்தான் மழைநீரைச் சேமியுங்கள் என்று தண்ணிலாரியில் எழுதி வைக்க வேண்டியுள்ளது. இயற்கையின் செயற்பாடு என்பது ஒரு சிறந்த நீதிவாணன் செயற்பாடு போல் உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் பயனளிக்கும் வண்ணம் இதுநாள் வரை வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது. ஆனால் மனிதன் உருவாகியபின் இவையெல்லாம் தலைகீழாக மாறி வருகின்றன. வந்தனா சிவா போன்ற சமூகப் பொறுப்புள்ள தலைவர்கள் இந்தியாவிலுள்ள செடி, கொடிகளின் ஜீன்களை பாதுக்காக்க வேண்டும் என்று சொல்வது அவசரகால நடவடிக்கை என்றே கொள்ள வேண்டியுள்ளது. நேற்று சிட்டி அவர்கள் பதிப்பித்துள்ள 'வசனசம்பிரதாயக் கதை' வாசித்துக்கொண்டிருந்தேன். இது 1775-ல் முதலில் வெளியானது. அதில் பரம்பரையாக 56 தேசங்கள் என்று சொல்லப்படும் நாடுகளிலுள்ள தாவரங்கள், விலங்குகள் இவைகளின் பெயர்கள் இடம் பெறுகின்றன. இவற்றில் எத்தனை ஜீவராசிகளை நாம் இன்றும் காணமுடியும் என்று யாராவது கணக்கிட்டுச் சொன்னால் நாம் சுழல்பாதுகாப்பில் எவ்வளவு கவனமாக இருக்கிறோம் என்பது புலப்பட்டுவிடும்!

மக்கள் பெருக்கம், மனித வெறித்தன நுகர்வு கலாச்சாரம், இவர்களாக உருவாக்கிக்கொண்ட நாகரீகம் இவை இயற்கையின் மீது உலகம் கண்டிராத ஆளுமை செலுத்துகின்றன. இதன் பிடியிலிருந்து உலகை மீட்க தமிழ் இலக்கியம் கை கொடுக்க வேண்டும். பசுமை எழுத்துகள் பரவலாக்கப்பட வேண்டும். தமிழகத்திற்குச் சொந்தமெனப்படும் தாவர, விலங்குகளை பாதுக்காக்க இவ்வெழுத்துக்கள் துணை போக வேண்டும். இல்லையெனில் ஒற்றைக்கொசு கூட இல்லாத காண்கிரீட் வனத்தில் மனிதன் மட்டும் வாழவேண்டியிருக்கும். அப்போது வரும் தனிமையில் மூட்டைப்பூச்சியின் கடிப்பும், கொசுவின் குத்தலும் கூட அரிதான பொருளாகப் பார்க்கப்படும்!

போனஸ்! கொசு கடிக்கும் வலி தெரியும். ஆனால் கொசு கடிக்கும் போது ரசித்து யாரும் பார்ப்பதில்லை. இதோ இங்கு கொசு துளை போடும் காட்சி!

4 பின்னூட்டங்கள்:

-/பெயரிலி. 9/10/2004 09:27:00 AM

AIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIYoooooooooooooooooo!
KADI ;-)

அன்பு 9/10/2004 01:46:00 PM

அய்யா... உங்களைப் போன்ற பல்துறை வித்தகர்களால்தான் முடியும் கொசுவைப்பற்றி ஏழு பக்கம் எழுதவும், பாசுரம் பாடவும்... பலமுறை உங்கள் பன்முகம் கண்டு வியந்திருக்கிறேன். உங்களைப்போன்றவர்கள் தமிழுலகுக்கு கிடைத்த அற்புத விளக்கு - ஆனால் அதை வழிபடுவதோடு நிறுத்துவிடாமல், வழிகாட்டும் விளக்காக நாங்கள் எடுத்துக்கொண்டால்தான் உருப்படுவோம், பார்க்கலாம்.

நீங்கள் குறிப்பிட்ட நாகமலையிலுள்ள SVN கல்லூரியில்தான் இளங்கலை கணிணியியல் படித்தேன். விடுதியில் பாம்படித்த அனுபவம் உண்டு, நினைவுகளைத்தூண்டியதற்கு நன்றி.

நா.கண்ணன் 9/10/2004 02:31:00 PM

அன்பு:
நாகமலை நினைவுகள் என்றும் எனக்கு பசுமையானவை. அம்மலையைப் பசுமையாக்கியதில் காணியளவு பங்குமுண்டு. இப்போது என்ன செய்கிறீர்கள்? இந்தியாவின் வளங்கள் கணக்கிலடங்கா. அவற்றைக் காக்க வேண்டியது நமது கடன். முயன்றால் ஏதாவதாகினும் செய்யவியலும். நன்றி. கண்ணன்

Christopher 9/11/2004 04:45:00 PM

நான் மதுரை காமராஜர் பல்கலையில் தான் முதுகலை படித்தேன் (பயோடெக்னாலஜி:1985-87). அங்குள்ள மாணவர் விடுதிகள் கொசுக்களுக்கு பிரசித்தியனவை. நீங்களும் அங்கே இருந்திருப்பீங்கண்ணு நினைக்கிறேன். அதனால, கொசுக்களை பத்தி உங்களுக்கு நல்ல அனுபவம்..இல்லையா?

உங்கள் பதிவுகள் மிகவும் நன்றாக உள்ளன.