We are the world!

நாம்தான் உலகம்

இம்முறை சென்னை வந்து திரும்பும் சமயத்தில் அமுதசுரபி ஆசிரியர் அண்ணா கண்ணன் சந்தித்தார். கிளம்புவதற்கு ஒரு மணி அளவில்தான் அவகாசமிருந்தது ஆயினும் அவர் இந்தியாவின் நதிகள் இணைப்பு பற்றிய எனது கருத்தை அறிய ஆவலாயிருந்தார். சுற்றி சுற்றத்தார், விடை கொடுக்க வந்திருந்த நண்பர்கள் என வீடு அமர்களப்பட்டுக் கொண்டிருந்தது, அதனிடையில் நாங்கள் இந்திய நதிகள் இணைப்பு பற்றி பேசிக்கொண்டிருந்தோம். அவரிடம் ஒரு தீவிரம் இருந்தது. சூழலியல் என் துறை என்பதால் நான் என்ன சொல்வேன் என்பதைக் கேட்பதில் ஆவலாயிருந்தார். அப்போது அவருக்கு விரிவாய் பதில் சொல்ல நேரமில்லை. மேலும் இந்திய நதிகள் இணைப்பு பற்றி இந்திய சூழலியல் விஞ்ஞானிகளும், ஆர்வலர்களும் என்ன சொல்லி வருகிறார்கள் என்பதை நான் தொடர்ந்து அறிந்திருக்கவில்லை. எனவே பொத்தாம் பொதுவாக ஒரு அபிபிராயம் சொல்ல மனது இடம் கொடுக்கவில்லை. இத்தலைப்பில் ஆழமாக வாசித்துவிட்டு அமுதசுரபிக்கு கட்டுரை எழுதித்தருகிறேன் என்று சொன்னேன்.

கொரியா மீண்ட பிறகு எனது ஆய்வகத்தில் பணிபுரியும் லீ எனும் சீன விஞ்ஞானியிடம் இது பற்றிப்பேசிக்கொண்டிருந்தேன். அவர் பெய்ஜிங் தலை நகரின் நீர் பற்றாக்குறை பற்றி அழாத குறையாகச் சொன்னார். பெய்ஜிங் நகருக்கு இது நாள் வரை நீர் வழங்கிக்கொண்டிருந்த மஞ்சளாறு வற்றிப்போய்விட்டதாம். அதனால் வேறு எங்கோ ஓடும் யாங்கிசிடியாங் நதியின் ஒரு கிளையை மஞ்சளாற்றுடன் இணைத்து தலைநகருக்கு நீர் கொண்டு வருவதாகச் சொன்னார். இந்த இணைப்பு இன்றல்ல, பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இருந்ததாகவும் அதை மராமத்து பண்ணி இப்போது நீர் கொண்டு வருவதாகவும் சொன்னார். நதிகள் வற்றிப்போய்விடுவது ஆச்சர்யமில்லை. பிரம்மாண்டமான நதிகளெல்லாம் வற்றிப்போயுள்ளன. சரஸ்வதி நதி நல்ல உதாரணம். இன்று பாலைவனமாக இருக்கும் சகாராவிற்கு கீழே பெரிய நீர்ப்படுக்கை இருப்பதை செய்கோள் படங்கள் காட்டுகின்றன. ஆறுகள் மலைகளிலிருந்து உருவாகின்றன. மலைகளில் சரியான மழை இல்லையெனில் ஆறு வற்றிப் போய் விடுகிறது. இம்மாதிரி சமயங்களில் முன்பு போலென்றால் மக்கள் பாரிய அளவில் குடிப்பெயர்வு செய்வார்கள். ஆனால் மக்கட்தொகை பெருகிவிட்ட நாடுகளான இந்தியா, சீனா போன்ற நாடுகளில் இனிமேலும் இடப்பெயர்விற்கு சாத்தியவில்லை. எனவே நதி வற்றி விட்டால் வற்றாத நதிகளை இணைப்பதே மக்கள் வாழ்வதற்கான வழி.

இதற்கு முன்னோடிகள் ஏதேனும் உண்டா? எனில் 'உண்டு' என்பதே பதில். ஒரு பாலைவனத்தில் அமைந்திருக்கும் இஸ்ரேல் தனது புத்தி சாதுர்யத்தால், தொழில் திறனால் இன்று வாழ்ந்து கொண்டிருக்கிறது (இதை முஸ்லிம் நாடுகள் இப்படிப் பார்ப்பதில்லை என்பது இக்கட்டுரைக்கு அப்பாற்பட்ட விஷயம்). விவசாயத்திற்கு நீர் இல்லையா? எங்கிருந்து கொண்டு வருவது? என யோசித்து இஸ்ரேலின் வட பகுதியிலிருந்து பெரிய கால்வாய் போட்டு தலைநகருக்கு நீர் கொண்டு வந்து விட்டனர். அந்நீரும் மிகச்சிக்கனமான முறையில் பயன்படும் வகையில் சொட்டுப்பாசானம் எனும் முறையைக் கையாண்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அளவிற்கு விவசாய உற்பத்தியைப் பெருக்கி விட்டனர். தேவைதான் கண்டுபிடிப்பின் மூலாதாரம் என்பதைப் பலமுறை நிரூபித்தவர்கள் இஸ்ரேலியர். இந்தியாவை நோக்குங்கால் இஸ்ரேல் இத்துணூண்டு நாடு. எனவே அதை ஒப்பு நோக்கக்கூடாது என்று சிலர் சொல்லலாம் (அந்த அளவில் கூட நம்மால் செயல்படமுடியவில்லை என்பதை எளிதாக இவர்கள் மறைத்துவிடுவர். வீராணம் திட்டம் என்னவாயிற்று. கிருஷ்ணா நதித்திட்டம் என்னவாயிற்று?). கலிபோர்னியா மாநிலம் ஏறக்குறைய ஜப்பான் அளவு பெரியது. உலகின் மிக வளமுள்ள பகுதிகளும் அதுவுமொன்று. ஆனாலும் தென் கலிபோர்னியா மிக வரண்ட பகுதி. பாதிப்பாலை என்றே சொல்லலாம். ஆனால், அங்கு ஒவ்வொரு வீட்டில் நீச்சல் குளம் இருக்கும். எப்படி? வட கலிபோர்னியாவில் நிறைய நீர் உண்டு. மழையுண்டு. எனவே அங்கிருந்து மிக நீளமான கால்வாய் வெட்டி தென்கலிபோர்னியாவிற்கு, குறிப்பாக அதன் தலைநகர் லாஸ் ஏஞ்சலுக்கு நீர் கொண்டு வந்து விட்டனர். இந்த மாபெரும் திட்டம் முடிவுற்ற போது நடந்த விழாவிற்கு தலைமை ஏற்றுகுமாறு அதன் தலைப்பொறியாளரக் கேட்டுக்கொண்டார்களாம் (இங்கே இந்த மாதிரி வாய்ப்பை நமது மந்திரிகள் விட்டுவிடுவார்களா என்ன?). அவர் செயல்வீரர். வீண் வார்த்தை பேசுபவரல்ல. எனவே மேடையில் ஏறிச் சொன்ன சின்னச் சொற்பொழிவு. 'நல்லது! இதோ நமது நீரோடை!' என்று வாய்க்காலைக்காட்டிவிட்டு உட்கார்ந்து விட்டாராம் (நம்ம ஆட்கள் விடுவார்களா? இம்மாதிரி சந்தர்ப்பங்களை? மற்றவர் செய்ததையும் தான் சாதித்ததாகவல்லவோ பேசுவது இவர்கள் வழக்கம்!). அவர் சொல்ல வந்தது, அச்செயலின் கனம், அவர்கள் அதற்கு ஏற்றுக்கொண்ட உழைப்பு இவையெல்லாவற்றிற்கும் பரிசாக, வாழ்த்தாக அங்கு அந்த நீர் ஓடிக்கொண்டிருந்தது. அதுதான் அவர்களின் வெற்றிப் பெருமிதம். எனவே அதைச்சுட்டுவதே ஆயிரம் கதைகள் பேசுவதற்குச் சமானம் என்பது பொறியாளரின் எண்ணம்.

இந்தியாவில் இது சாத்தியப்படாதா? அதற்கான நீர் வளம் இல்லையா? அல்லது உழைக்கும் மனித வளம் இல்லையா? அல்லது திட்டமிடும் தொழில்திறன் இல்லையா? எல்லாம் அங்குண்டு. இத்திட்டம் பற்றி எல்லோருக்கும் முன்னால் ஒரு ஏழைக்கவிஞன் பாடியிருக்கிறான். சர் விஸ்வேஸ்வர அய்யா திட்டமிட்டிருக்கிறார். ஆனால் செயல்படுத்துவதில் சொணக்கம் இருக்கிறது. ஒரு காரியம் செய்வதற்கு முன் பத்து நாள் அது பற்றிப் பேசித்தீர்ப்பது நமது வழக்கமாகிவிட்டது.

பாரிய அளவில் நீர் வளங்களை மாற்றி அமைப்பது சூழல் பாதுகாப்பிற்கு கெடுதல் விளைவிக்குமா? இது முக்கியமான கேள்விதான். வாய்க்கால் போடும் போது பல இடங்களில் குடிப்பெயர்வு நிர்பந்திக்கப்படும். இது தவிற்கவியலாதது. அணை கட்டும் போது கிராமங்கள் மூழ்குவது போல்தான் இதுவும். இது தவிர உலகளவில் இது சூழலியல் மாற்றங்களை தருவிக்குமாவென்று சூழல் மாடலியரிடம்தான் கேட்க வேண்டும்.

இந்த உலகமே அங்கு வாழும் உயிரினங்களால் உருவானதே என்பது ஆச்சர்யமான உண்மை. வேறு எந்தக் கிரகங்களிலும் இல்லாத மாதிரி பூமியின் வாயு மண்டலம் அமைந்திருப்பது உயிர்கள் தாமாக ஏற்படுத்திக்கொண்ட சூழலே! உலகம் தோன்றியபோது இங்கு உயிர்வளி (ஆக்சிஜன்) கிடையாது. அது உயிர்கள் உருவாக்கியது. இவ்வளவு பெரிய உணவுக்கிட்டங்கி கிடையாது அவை உயிர்கள் உருவாக்கியது. ஒன்றை உண்டு ஒன்று வாழ்ந்து இருப்பதற்குள் இயங்கும் ஒரு மாபெரும் உணவுச் சுழற்சியை உயிர்கள் இப்பூமியில் உருவாக்கியுள்ளன. செவ்வாயில் பெரிய நதிகள் இருந்திருக்கின்றன. ஏரிகள் இருந்திருக்கின்றன. ஆயின் உயிர் தோற்றம் அங்கு நிகழாததால், வாயு மண்டலம் மாற்றப்படாததால் வளிகள் அண்டத்தில் சிதறிப்போய் கோளமே வரண்டு போய் விட்டது. பூமிக்குப் பாதுகாப்பு இந்த வளி மண்டலம்தான். அது உயிர்கள் தாமாக உருவாக்கியவை. எனவே தமக்கு சாதகமான வகையில் பூமியை மாற்றிக் கொள்வது யுக, யுகமாக நடந்துவரும் ஒரு செயல்பாடு.

ஆயினும், மிகக்கவனமாகத்திட்டமிடுதல் அவசியம். மனிதச் செயல்கள் மிகச்சிறியனவாகினும் அவை பூகோள அளவில் மாற்றங்களைக் கொண்டு வரும் சாத்தியம் இருப்பதாக இப்போது விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். நல்ல உதாரணம், தொழில் புரட்சியின் பயனாக இந்தியா, சீனா போன்ற ஆசிய நாடுகளின் அபரித போக்குவரத்து வளர்ச்சி. ஏரோசால் என்று சொல்லக்கூடிய வாகனப்புகை மேகக்கூட்டம் போல் இந்தியா, சீனாவின் மேல் படர்ந்திருப்பதை செய்கோள் படங்கள் காட்டுகின்றன. இந்த மாசுப்போர்வை சூரிய ஒளியை பிரதிபலித்து வளிமண்டலத்திற்கு அனுப்பிவிடுவதால் பூகோள அளவில் சூடு அதிகரிப்பதாக விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். உலகைச் சூடேற்றும் அதே வேளையில், சூரிய ஒளியைத்தவிர்பதின் மூலம் இந்நாடுகளை இவை குளிர்விக்கும் செயலையும் செய்கிறது. வெளியே உஷ்ணம், கீழே குளிர்ச்சி! பலன், வழக்கமாக இந்நாடுகளுக்கு மழை கொண்டு வரும் பருவக்காற்று குழம்பிபோய் எங்கோ மழை பெய்துவிட்டுப் போய் விடுகிறது. சைனா சமீப காலங்களில் மாபெரும் வரட்சியைக் கண்டுள்ளது. அங்கு பாலை பெருகிவருகிறது. சீனாவிலிருந்து கிளம்பும் தூசுக்காற்று (மணல்காற்று) பசிபிக் சமுத்திரத்ததாண்டி காலிபோர்னியாவரை போவதைக் கண்டுள்ளனர். சகாராவிலிருந்து வீசும் மணற்காற்று அட்லாண்டிக் கடலில் சங்கமிப்பதை ஜெர்மனியில் எங்கள் ஆய்வகம் கண்டு சொல்லியுள்ளது.

எனவே மனிதச் செயல்பாடுகள் அனைத்திற்கும் இரண்டு தன்மைகளுண்டு. ஒன்று நல்லது. இரண்டு கெட்டது. நுகர் கலாச்சாரத்தால் வரும் சூழல்மாசு எப்படியாயினும் கட்டுப்படுத்த வேண்டியதே. அதில் இரண்டு கருத்திற்கு இடமே இல்லை. பருவ காலங்களை முற்றும் முழுவதுமாக மாற்றிவிட்டால் பின் நதி இணைப்பு பற்றிப் பேசிப் பயணில்லை. நதிகள் இருந்தால் அல்லவோ அதன் இணைப்பு பற்றிப்பேச முடியும்! நீர் என்பது புனிதப்பொருள். நீரின்றி அமையாது உலகு என்பது வள்ளுவ வாக்கு. பூமி ஒரு நீர்க்கோளம். பூமியின் செயற்பாடு நீர் சார்ந்தது. வாழ்வு நீர் சார்ந்தது. எனவே நீரை வீணடிக்காமல். பொன்னை எப்படிக் கையாளுவோமோ அப்படிக் கையாண்டு பயன்பெற வேண்டும். சென்னை போன்ற நகரங்களில் நீரின் அருமை இப்போதுதான் தெரிந்திருக்கிறது. கூவம் என்ற நல்ல நீர் ஆற்றைச் சென்னை கழிவுக் கிட்டங்கியாக்கிவிட்டது. கிருதுமால் என்ற நதியை இன்னொரு கூவமாக மதுரை ஆக்கிவிட்டது. திருப்பூர் அடிமண்டி நீர் கூட வண்ண வண்ணமாக வருகிறது. இளநீர் கலராக இருக்கிறது. இது நீர் துஷ்பிரயோகம்.

நீரின்றி அமையாது உலகு.

முதற்பதிவு: சமாச்சார் தமிழ்

1 பின்னூட்டங்கள்:

Badri 9/29/2004 01:46:00 PM

கண்ணன்: நல்ல கட்டுரை. இந்தியாவில் பிராந்திய உணர்வு + கல்வியறிவு குறைவு + அரசியல் தூக்கல் அதிகம் என்பதால் மாநிலங்களுக்கு இடையே ஒத்துழைப்பு இனியும் வரும் என்று எனக்குத் தோன்றவில்லை.

கடல் நீர் சுத்திகரிப்பு நல்ல திட்டம் என்றுதான் தோன்றுகிறது. அது குடிநீர் பிரச்னையையாவது தீர்க்கும். பிற பாசன பிரச்னை தீர்க்க நதிகளுக்கிடையே ஏற்படுத்தும் கால்வாய்களால் முடியாது என்றுதான் தோன்றுகிறது. ஒவ்வொரு மாநிலத்துக்குள்ளும் பல வறண்ட பகுதிகள் உள்ளன. நதிநீர்ப் பங்கீடு என்று வரும்போது தம் மாநிலத்தின் பிரச்னைதான் பெரிது, பிறர் திண்டாடினால் எனக்கென்ன கவலை என்பதுதான் இப்பொழுதிருக்கும் எண்ணம்.

அதனால் மாற்று யோசனைகளைத்தான் நாம் முன்வைக்க வேண்டும்.