கல் தோன்றி மண் தோன்றாக்காலத்தின் மூத்த குடியெது?

பெரும்பாலும் எல்லாச் சமூகங்களிலும் தாங்கள்தான் உலகின் மூத்த குடிகள் என்ற நம்பிக்கை இருந்து வருகிறது. உதாரணமாக ஜப்பானியர்கள் தங்களை சந்திர, சூரிய வம்சத்தினர் என்று நம்புகின்றனர். கல் தோன்றாக் காலத்திற்கு முன் தோன்றிய மூத்த குடி தமிழ்க்குடி என்பது நமக்குத்தெரியும்! சைனா என்ற பெயர் 'சாய்' என்ற தேனீர் கொண்ட நாடு என்ற பொருளிலிருந்து வருகிறது. பீகிங் என்பதும், பெய்ஜிங் என்பதும் பிறருக்காகக் கொண்ட பெயரே. சீனர்கள் பெய்ஜிங் நகரை 'சுங்வா' என்றழைக்கின்றனர். அதற்குப் பொருள் தேசத்தின் மையம் (பிரபஞ்ச மையமென்று சுற்றுலாத் துணைவன் சொன்னான்!) என்று பொருள். உலகம் நம்மைச் சுற்றி இயங்குவதாக எண்ணுவதே மானுட இயல்பு. அதனால்தான், பூமியைச் சுற்றி சூரியன் சுற்றி வருவதாக பல காலம் மனிதர்கள் நம்பி வந்தனர்.

இவ்வளவு கதையும் எதற்கென்றால்! உலகின் கலாச்சாரம் இந்தியாவிலிருந்து போனது என்ற ஆழமான நம்பிக்கை நமக்கெல்லாம் இருக்கிறது. அப்படித்தான் நமக்குப் பாடம். மேலோட்டமாகப் பார்க்கும் போது இந்தியக் கலாச்சார எச்சங்கள் ஆசியா முழுவதும் காணக்கிடைத்தாலும் தமிழ்க் குடியின் தோற்றம் இந்தியாவில்தான் இருந்திருக்க வேண்டும் என்றில்லை. உதாரணமாக, தமிழ் மக்கள் போலவே தோற்றமுடையவர்கள் எதியோப்பிய மக்கள். ஆனால் அவர்கள் இருப்பது ஆப்பிரிக்கா. ஆப்பிரிக்காவிலிருந்து கால் நடையாக கடற்கரை வழியாக பல நூற்றாண்டுகள் குடிபெயர்ந்து ஆப்பிரிக்க மக்கள் இந்தியப் பிரதேசத்திற்கு வந்திருக்கக் கூடும். ஆனால் ஆச்சர்யமாக, இந்தியப் பழங்குடிகள் போலவே தோற்றமுடையவர்கள் ஆஸ்திரேலியாக் கண்டத்தில் வாழ்கின்றனர். அவர்கள் இந்திய வம்சா வழியினர் என்று நம்பவும் இடமுள்ளது. ஜன ஓட்டம் ஆப்பிரிக்காவை விட்டுத்தான் போயிருக்க வேண்டுமென்றில்லை!

ஆசிய பசிபிக் நாடுகளின் பட்டறை கொரியாவில் அடிக்கடி நடக்கிறது. சென்ற முறை நடந்த பட்டறையில் பிஜ்ஜி, பப்புவா நியூகினி நாடுகளிலிருந்து மாணவர்கள் வந்திருந்தனர். அட்டக்கரி. ஒட்டிக்கொள்ளும் கரி உடம்பு. ஆனால் அவர்கள் வாழ்வது ஆசிய நிலப்பரப்பில். இவர்கள் ஆசியர்கள் இல்லையா? இவர்கள் ஆப்பிரிக்காவிலிருந்துதான் வந்திருக்க வேண்டுமா? மலேசியா, பிலிபைன்ஸ் போன்ற தேசங்களில் பல முகங்கள் 'உராங்குடான்' எனும் மனிதக்குரங்கை ஒத்திருப்பது வெறும் தற்செயலா? உராங்குடான் என்ற பெயரே சிவப்பு மனிதன் என்ற பொருளில்தான் வழங்கப்படுகிறது. ஆக, மனிதத்தோற்றம் ஏன் ஆசியாவில் போர்னியோக் காடுகளில் தோற்றம் கொண்டிருக்கக்கூடாது? அங்கு கரு நிற, மாநிற, வெள்ளை நிற மனிதக் குரங்குகள் மனித இனமாக வளர்ச்சியுற்றிருக்கலாமே? பல விஞ்ஞானிகள் இப்போது மனிதத்தோற்றம் என்பது ஆப்பிரிக்கா, ஆசியா இரண்டு இடங்களிலும் தோன்றியிருக்கலாமென நம்புகின்றனர்.

ஆசியாவில் உலாவ, உலாவ எவ்வளவு தூரம் நாம் தமிழ்ப் பண்பாடு, தமிழ் பழக்க வழங்கள் என்று நம்பிக்கொண்டிருப்பது ஆசியா முழுவதும் விரவிக்கிடக்கிறது என்று தெரிய வருகிறது. சில உதாரணங்களைப் பார்ப்போம். முதலில் உட்காரும் விதங்களைப் பார்ப்போம். நாற்காலியின் உதவி ஏதுமின்றி நம் கிராமப்புறங்களில் தம் கால்களில் அப்படியே குந்தி உட்கார்ந்து விடுவார்கள். நகரவாசிகளுக்கு இது முடியாத செயலாக இருந்தாலும் கிராமங்களில் இப்படி மணிக்கணக்காக உட்கார்ந்து கதையளப்பார்கள்! இப்படி உட்கார்வது இன்றளவும் கொரியா, வியட்நாம் போன்ற நாடுகளில் காணக்கிடைக்கிறது. உட்கார்வதற்கு என்று தனியாக இடம் தேடாமல் கிடைத்த இடத்தில் 'தன் காலே தனக்குதவி' என்று சொல்லும் வண்ணம் உட்கார்ந்துவிடுகிறார்கள். அடுத்து சப்பளாம் போட்டு தரையில் உட்கார்வது. தரையில் உட்கார்ந்தபடியே சாப்பிடுவது. இது ஜப்பான், கொரியா, பிலிப்பைன்ஸ், இந்தோனிசியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் இன்றளவும் காணக்கூடியதாய் உள்ளது. கொரியா வரும் வெள்ளையருக்கு சவாலாக இருக்கக்கூடியது இப்படித்தரையில் உட்கார்ந்து சாப்பிடுவது! அவர்களுக்கு கால் மடியாது!

அப்புறம் சாப்பிடும் போதுள்ள பழக்கங்கள். ஏப்பம் விடுவது மேலைக்கலாச்சாரப்படி கேலிக்குறியது. ஆனால் தமிழகக்கிராமங்களில் ஏப்பம் விட்டால் உணவை நன்கு ரசித்து சாப்பிட்டதாக எண்ணிக்கொள்வர். இதற்கு ஒப்பு நோக்கும் வண்ணம் ஜப்பானில் சத்தம் வரும் வண்ணம் சாப்பிடுவது இன்றளவும் பழக்கத்தில் உள்ளது. இவர்கள் காப்பி குடித்தாலும் சத்தமாக உறிஞ்சியே குடிக்கின்றனர். என்னம்மா காரணம்? என்று ஒரு ஜப்பானிய மூதாட்டியிடம் கேட்டேன். அவள் சொன்ன பதில் சுவாரசியமாக இருந்தது. ஆண்கள் உட்கார்ந்து சாப்பிடும் இடத்தில் பெண் நின்று கொண்டிருக்கமுடியாது (நாணம்). அவள் பரிமாறிவிட்டு அடுத்த அறைக்குப்போய் விடுவாள். அங்கிருக்கும் அவளுக்கு இவன் ரசித்து, சுவைத்துச் சாப்பிடுகிறான் என்பதை எப்படிச் சொல்வது? சத்தமாக சாப்பிட்டால் ஒழிய அவளுக்கு இவன் சாப்பிடுவது கேட்காது. எனவேதான் ஏப்பம் விடுதல், உறிஞ்சி, உறிஞ்சி கஞ்சி குடித்தல் (இந்தக் கஞ்சி என்ற வார்த்தை அப்படியே இங்கும் கையாளப்படுவது ஆச்சர்யம்!) இவை பழக்கத்திற்கு வந்திருக்கின்றன. சாப்பிட்ட உடனே பல் குத்தும் வழக்கம் மேலைக் கலாச்சாரத்தில் கிடையாது. அது டேபிள் மேனர்ஸ் இல்லை. ஆனால் கிராமத்தில் இந்த பழக்கம் கேலிக்குறியதாக பார்க்கப்படுவதில்லை. அதேதான் கொரியாவிலும், ஜப்பானிலும்! அதைவிட இன்னொரு முக்கியமான தொடர்பு இந்த அரிசிச் சாப்பாடு! என்னதான் புலால் உணவு கடந்த சில தசாம்சங்களில் ஆசியாவில் பரவலாகி வந்தாலும் ஒரு வேளையாவது அரிச்சோறு சாப்பிடாவிடில் இவர்களுக்கு சாப்பிட்டது போலவே இருக்காதாம். நூடில் எனும் கொடியரிசி உணவு உண்டாலும் கடைசியில் கொஞ்சமாவது அரிசிச்சோறு இவர்களுக்கு சாப்பிட வேண்டும்! வடநாடு செல்லும் ஒரு தமிழன் எப்படி அரிச்சோற்றிற்கு ஏங்குவான் என்பதை இங்கு ஒப்பு நோக்கிப் பார்க்க வேண்டும். அரிசியில் உருவாகும் அத்தனைத் தமிழக சாப்பட்டு வகையும் இங்குண்டு. பொங்கல், புலால்சோறு (பிரியாணி), இடியாப்பம் (நூடில்), கஞ்சி, பொறி போன்றவை. இனிப்புச் சேவு, காராச்சேவு இவையுமுண்டு. பாயசம் போன்ற அரிசிப்பாயசம் இங்குமுண்டு!

தமிழ்க்குடியின் மானம் என்ற பண்பு இங்கிருந்துதான் வந்திருக்க வேண்டும். மானம் போனால் உயிர்வாழக்கூடாது என்பதை இன்றளவும் ஜப்பானில் காணலாம். பெரிய, பெரிய கம்பெனி இயக்குநர்கள் எல்லாம் அவர்கள் மானம் போய்விட்டால் தற்கொலை செய்து கொள்கிறார்கள் (நம் அரசியல்வாதிகள் எல்லாம் உண்மையான தமிழர்களா என்ற கேள்வி இங்கு எழுகிறது!) வயிறைக்கிழித்துக்கொண்டு சாகும் ஹரக்கிரி ஒரு தமிழ் வழக்கம்தானே? (தலையை அறுத்துக்கொண்டு பலி கொடுத்தல் தமிழ் மண்ணில் உண்டு).

அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு இவை தமிழ்ப்பண்பாடு என்போம். இங்கு வந்து கொரியப்பெண்கள் நாணுவதைக் காண வேண்டும்! எதாவதொரு காரியமென்றால் ஒரு பெண் தனியாகப் போக மாட்டாள், கூடவே இன்னொரு பெண் துணை (நம்ம ஊரை ஞாபகப்படுத்தவில்லை?). இன்னும் வேடிக்கை என்னவெனில், இளம் காதலிகள் தங்கள் காதலனை 'சகோதரா!' என்று விளித்தல் (ஒப்பா!). தமிழ்ச் சமூகங்களில் கணவன் பெயரைச் சொல்லாமல் 'அண்ணா' என்றழைக்கும் பழக்கமுண்டு (வாங்கோண்ணா! போங்கோண்ணா!).

இந்தியா மனித குலத்தின் பல நீரோட்டங்களைச் சந்திருப்பது போல் தோன்றுகிறது. ஒன்று சமிஸ்கிருதம் பேசும் வட மேற்கு இனக்குழு. இன்னொன்று திராவிட மொழி பேசும் தென் கிழக்கு ஆசிய இனக்குழு. இரண்டும் இந்தியாவில் சங்கமித்து இருப்பதாகத் தோன்றுகிறது. இரண்டின் வளமும் சேர்ந்து இந்தியாவை உலகின் கலாச்சார மையமாக முன்பு மாற்றியிருக்கின்றன. அதனால்தானோ என்னவோ இந்தியத்தத்துவங்கள் அனைத்தும் 'உலகம், உலகம்' என்றே பொதுமையில் பேசுகின்றன.

சென்றவாரம் ஒரு ஆந்திர-அமெரிக்க விஞ்ஞானியைப் பார்த்தேன். தனது மனைவி மலேசியச்சீனப்பெண் என்றார். இவர்களிடம்தான் இன்று திராவிடப் பண்பைக்காணக்கூடியாத உள்ளது! என்று அவர் சொன்னதை என்னால் நம்ப முடிந்தது. யோஷி என்றொரு ஜப்பானிய நண்பர். அவரை இந்தியா போய் யோகம் கற்றுக்கொள்ள அனுப்பினேன். போய் வந்துவிட்டு அவர் சொன்னார் இந்தியா மேற்குலகம் போல் உள்ளது என்றார். உண்மைதான். ஆசியாவின் ஆதிப்பண்புகள். நாம் திராவிடப்பண்புகள் என்று சொல்வது இன்று இங்குதான் காணக்கிடைக்கின்றன.

முதற்பதிவு சமாச்சார் தமிழ் இ-தழ்.

சீன இந்திய நட்புறவு

இத்தனை நாள் நான் சீனாவைப்பற்றி அதிகமாக அலட்டிக்கொண்டதில்லை. காரணம் பசுமரத்து ஆணி போல் சில தீய நினைவுகள். இந்தியக் குடியரசு தோன்றி இரண்டு ஆண்டுகள் கழித்து சீன மக்கள் குடியரசு கம்யூனிசப்பாதையில் தோன்றுவிக்கப்படுகிறது. ஜப்பானிடம் காயடிபட்டு சீனரணம் மாறாத போழுதுகள். இந்தியா சீனாவுடன் நட்புறவு வேண்டியது. 'ஆசியஜோதி' ஜவகர்லால் நேரு சீனா சென்று பஞ்சசீலக் கொள்கையில் கையெழுத்திட்டு திரும்புகிறார். கும்பிடும் கையில் கொடுவாள் கொண்டது போல் சீனா இந்தியாவைத் தாக்குகிறது. லடாக் பகுதி சீனாவிற்குப் போய்விடுகிறது. சூயென்லாய் என்ற சீனப்பிரதமர் இதை முன்னெடுத்து நகர்த்துகிறார். சூயென்லாயே சீன நாயே! என்று ஊர் பூரா கரிக்கோடிட்ட சேதிகள் சுவரெங்கும். சீனாக்காரர்கள் யார் என்று தெரியாத பருவத்திலேயே ஒரு வெறுப்பு விதைக்கப்பட்டுவிட்டது. அது மாற இத்தனை நாள் பிடித்திருக்கிறது. அந்த வெறுப்பு காரணமில்லாத வெறுப்பன்று என்பதை காலம் காட்டுகிறது. சீனா ஒன்றுமறியா திபத்தை கைப்பற்றுகிறது. ரஷ்யாவுடன் சண்டைக்குப் போகிறது. தைவான் நாட்டின் சுதந்திரத்தை இன்றளவும் நெருக்குப்பிடியில் வைத்திருக்கிறது.

ஆனாலும் காலம் மாறுகிறது. மக்கள் முதிர்ச்சியடைகின்றனர். நான் ஜெர்மனியில் இருந்தபோது கிளவுஸ் கிரம்ளின் என்ற சக விஞ்ஞானி அடிக்கடி சொல்லுவார். ஒவ்வொரு ஐம்பது வருடங்களுக்குள்ளும் பிரான்சும், ஜெர்மனியும் போரில் இறங்குவது வழமை என்று. ஆனால் இரண்டாவது உலக யுத்தத்தின் பேரழிவிற்குப்பிறகு இன்று பிரான்சும், ஜெர்மனியும் முன்னின்று ஐரோப்பிய ஒருங்கிணைப்பை சாத்தியமாக்கியிருக்கின்றன. உலகெங்கும் வியாபார இணக்கம் பெருகி வருகிறது. சந்தைப் பொருளாதாரம், சண்டைப் பொருளாதாரத்தை விட ஒரு படி மேல் என்ற மன மாற்றம் உலகெங்கும் நிகழ்ந்து வருகிறது. இதற்கு கம்யூனிசச் சீனாவும் விதி விலக்கல்ல. ராணுவக் குவிப்பைவிட யுக்தியான வியாபாரமே ஒரு நாட்டின் வளத்திற்கு உத்திரவாதம் என்பதைக் கம்யூனிசத் தலைவர்கள் இன்று உணர்ந்துள்ளனர். இந்த மாற்றத்தை பற்றிய ஒரு சீன உயர் அரசியல்வாதியின் கூற்று பின்வருமாறு அமைகிறது: கருப்பு பூனை சிறந்ததா? வெள்ளைப்பூனை சிறந்ததா? எனக் கேட்டால்? எந்தப்பூனை எலியைப் பிடிக்கிறதோ அந்தப் பூனையே சிறந்தது! இதைச் சீனா சென்று வரும் எவரும் உணர முடியும். இந்த அணுகுமுறையின் பிரதிபலிப்பாக உலகின் மாபெரும் இராணுவத்தை கைவசம் வைத்திருக்கும் சைனா சரிபாதியாக ராணுவக் குறைப்பு செய்துள்ளது. இராணுவம் என்பது காப்புறுதி சேமிப்பு மாதிரி. என்றாவது நிகழப்போகும் சாவிற்கு இன்றிலிருந்து காசு கொடுப்பது போல். ஆக்கமற்ற சேமிப்பு அது. அது ஒரு நாட்டின் பெரும் பளு. இதைச் சீனா உணர்ந்துள்ளது. கடந்த 55 வருடங்களில் சீனா மட, மடவென வளர்ந்துள்ளது.

இன்று சீனாவின் தலைநகரான பெய்ஜிங் (பீகிங்) போவோர் பிரம்மித்துப் போவோர்! 70 களில் ஒரு சீனனின் கனவு ஒரு நல்ல சைக்கிள் வைத்திருப்பது. 80களில் அவன் கனவு ஒரு நல்ல குளிர் சாதனப்பெட்டி வைத்திருப்பது. 90களில் அவன் கனவு ஒரு நல்ல கார், நல்ல வீடு, பிற வசதிகள். பெய்ஜிங் நகரில் இருக்கும் நூற்றுக்கணக்கான மேம்பாலங்களில் ஒரு நான்கை டெல்லி பெறுவதற்கு இன்னும் தசாம்சங்கள் ஆகும். ஒரு ஒசாகா (ஜப்பான்), ஒரு சோல் (கொரியா), ஒரு சிங்கப்பூர், ஒரு கோலாலம்பூர் (மலேசியா) போல் இன்று பெய்ஜிங் விளங்குகிறது. பெய்ஜிங் போய் பார்த்தால் சீனா ஏழை நாடு என்று யாரும் சொல்ல மாட்டார்கள். ஆனாலும், உலகிற்கு ஒரு ஏழை முகத்தைக்காட்ட சீனா பெய்ஜிங்கின் ஒரு பகுதியை பழையபடியே வைத்துள்ளது. அங்கு அங்கஹீனமுற்ற பிச்சைக்காரர்கள் இருக்கிறார்கள். சைக்கிள் ரிக்ஷா இருக்கிறது. ஆனாலும் அது இந்தியாவில் காணும் ஏழ்மைக்கு முன் கொசுறு. பெய்ஜிங் அடுத்த ஒலிம்பிக் விளையாட்டை அங்கு நடத்த தன்னைத் தயார் படுத்திக் கொண்டிருக்கிறது. பெய்ஜிங் மிக சுத்தமாக இருக்கிறது. சாலை விதிகள் கடைபிடிக்கப்படுகின்றன. உண்மையில் கொரியாவைவிட அங்கு சாலைப் போக்குவரத்து மிக ஒழுங்காக இருக்கிறது. சைக்கிள் போவதற்கு என்று நம்மவூர் சாலை அளவில் பெரிய பகுதி ஓரத்தில் விடப்பட்டுள்ளது (அப்படியெனில் காரோடும் சாலை எவ்வளவு பெரிதாக இருக்கும் என்று கற்பனை செய்து கொள்ளுங்கள்!).

மக்கள் தேனீ போல் சுறு, சுறுப்பாக இயங்குகின்றனர். சோம்பிப்போய் யாரும் உட்கார்ந்திருக்கவில்லை. சீனாவின் நாடியைப் பிடித்துப்பார்க்க நல்ல இடம் 'சொர்க்கத்தின் கோயில்'எனும் இடமாகும். அங்கு பெய்ஜிங்கின் கிழடு கட்டையெல்லாம் கூடியிருக்கின்றன. இப்படி எழுதியவுடன் கூன் விழுந்து, கையில் கோல் ஊன்றிய மூத்த மக்களை நினைப்பீர்கள் என்று தெரியும். ஆனால் நான் பார்த்தது அதற்கு நேர்மாறு! நிச்சயமாக 70த் தாண்டிய பெரிசுகள். பூங்காவின் ஒரு புறம் ஆணும், பெண்ணும் கைகோர்த்தபடி நடனமாடிக்கொண்டிருக்கின்றனர். இன்னொருபுறம் பலர் பூப்பந்து போன்ற ஒன்றை ஒரு நடனம் போலவே விளையாடிக் கொண்டிருக்கின்றனர். இது தாய்ச்சி என்ற யோகமுறையில் அமைந்த விளையாட்டு. பந்தின் வேகத்தை எதிர்க்காமல் அதன் வீச்சுடன் இயைந்து போய் திரும்பத்தரும் விளையாட்டு. இதற்கு நளினமும், யோகப்பயிற்சியும் வேண்டும். இன்னொரு புறம் ஒரு கிழவி சுருதி பிசகாமல் பாடிக்கொண்டிருக்கிறாள், அதற்கு ஒரு கிழம் வயலின் வாசித்துக் கொண்டிருக்கிறது. இப்படி எங்கு பார்த்தாலும் முதியோர் சளைத்து உட்காராமல் ஏதாவதொரு தொழிலை ஈடுபட்டு செய்வது ஏதோ சொர்க்கத்தில் இருப்பது போன்ற ஒரு உணர்வை கொடுத்தது. நம்ம ஊர் கிழங்கள் என்ன செய்யும்? 60க்கு மேல் அவர்களெல்லாம் குடும்ப பாரம்! கட்டிலில் ஒரு புடலங்காய் போல் முடங்கிக் கிடக்கிறார்கள். கொஞ்சம் சிலர் வேகு, வேகு என்று பீச்சில் நடக்கிறார்கள். பேச்சுத்துணைக்கு என்று ஒரு கோஷ்டியே! இந்தப் பேச்சு பெரும்பாலும் அரசியல், பிறர் வீட்டு வம்பு தும்பு என்றுதான் இருக்கும். சீனா இன்று வயதானவர்களை அதிகம் கொண்ட நாடாக இருக்கிறது. ஆனாலும் அவர்கள் தன்னை ஒரு பாரமாக கருதுவதில்லை. மேலும் வாழ ஆசையுடன் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். அதிக காலம் உயிர்வாழும் ஒரு மக்கள் தொகையாக சீனா உள்ளது. அதற்கு அளவான சாப்பாடு, போதிய உடற்பயிற்சி, தெம்பான உள்ளம், நாட்டு வைத்தியம் போன்றவையே முக்கிய காரணமாக காட்டுப்படுகின்றன. இந்தியாவில் நாட்டு வைத்தியம் மறைந்து விட்டது. முதியோர் நாட்டின் பாரமாக சாவுக்குக்காத்திருக்கிறார்கள். இது எவ்வளவு பரிதாபமானது!

சீனா தன் பழமைக்கலைகளை மறந்துவிடாமல் அதற்கு நவீன உரு கொடுப்பது மகிழ்ச்சியாக உள்ளது. ஷாவொலின் புத்த துறவிகள் குங்பூ கலையில் பெயர் பெற்றவர்கள். இவர்களுக்கு மறத்துறவிகள் (warrior monks) என்றே பெயர். சக்தியின் பூரணத்துவத்தை அறிந்து, பின் சாத்வீகமாகுவது இக்கலையின் சூட்சுமம். பெய்ஜிங்கில் நான் போன போது 'குங்பூவின் கதை' என்ற நிகழ்வின் முதல் ஆட்டம் (world premiere). இதில் உண்மையான மறத்துறவிகளும், நடனக் கலைஞர்களும் பங்கு கொண்டனர். முன்பு சினிமாவில் இப்படங்களைப் பார்த்ததற்கும் நேரில் பார்பதற்கும் அதிக வித்தியாசமுள்ளது. சினிமாவில் ஏதாவது கிராஃபிக் எபெக்ட் கொடுத்து சமாளித்து விடலாம். ஆனால், மேடையில் முடியாது. ஷாவொலின் மறத்துறவி உண்மையிலேயே தன் தவ வலிமையால் ஒரு சூலாயுதம் தன் வயிறில் குத்திக்கிழிக்கா வண்ணம் தவழ்ந்து காட்டுகிறார். மூன்று இரும்புத் தகடுகளை தன் மண்டையில் போட்டு உடைக்கிறார். காட்சி முடிந்து வரும் போது உடைந்த பாளங்கள் ஒரு கூடையில் போட்டு வைத்து காண்பிக்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சி உண்மையிலேயே ஒரு ஆன்மீக நிகழ்ச்சி. எப்படி ஒரு சிறுவன் குங்பூ கலையில் ஆர்வம் கொண்டு தளைகளைக் கடந்து மறத்திறவியாகிறான் என்பதே கதை. அதில் புலனடக்கம், பயிற்சி, மனதின் மாயை, சதோரி எல்லாம் காட்டப்படுகின்றன. மேலை, இந்திய நாடக நிகழ்வில் கலைஞர்களை ரசிகன் கைதட்டி ஊக்குவிக்க வேண்டும். கலைஞனைப் பார்ப்பதென்றால் அதற்கு ஆள், சிபாரிசு, அந்தஸ்து வேண்டும். ஆனால், உலகப்புகழ் பெற்ற குங்பூ கலைஞர்கள் நிகழ்ச்சி முடிந்தபின் வாசல் வரை வந்து ரசிகனை வழியனுப்பி வைப்பது எங்கும் காணாத நிகழ்வு. அது உண்மையிலேயே அவர்களது பண்பாட்டைக் காட்டுவதுடன், கீழைத்தைய நாகரீகம் தன் விழிமியங்களை மறந்துவிடவில்லை என்பதையும் சொல்லாமல் சொல்கிறது.

சீனா இன்னும் சில ஆண்டுகளில் விண்வெளியில், நிலாவில் மனிதனை இறக்கப்போகிறது. சீனாவை இனிமேலும் நாம் எதிரியாய் பார்ப்பது நன்றல்ல. பெய்ஜிங்கில், ஏன் பொதுவாகவே சீனாவில் இந்திய சினிமாவிற்கு அதிக வரவேற்பு இருக்கிறது. நான் போன போதுகூட ஒரு ஹிந்திப்படம் ஓடிக்கொண்டிருந்தது. இசை, சினிமா போன்றவைதான் நிகழ்கால அம்பாசிடர்கள். அவைகள் கலாச்சாரப் பாலங்கள். அதன் மூலம் நட்பை வளர்க்கலாம். விமான நிலையத்திலேயே ஆச்சர்யம் காத்திருந்தது. பெட்டியை உள்ளே கொண்டுவரும் கண்வேயர் பெல்ட்டில் காணும் சித்திரங்களில் 'மீனாக்ஷி திருக்கல்யாணம்' இருந்தது. என்றோ ஒரு பாண்டியன் நல் முத்து கொடுத்து சீனப்பட்டு வாங்கியிருக்கிறான். அது பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு இன்றைய சீனத்தலைநகரில் காணக்கிடைப்பது மிக்க மகிழ்வைக் கொடுத்தது. பெரிய, பெரிய ஹோட்டல்களில் நிறைய இந்தியத் தகவல் தொழில் நுட்ப வல்லுநர்களைக் காணக்கூடியதாய் உள்ளது. 'தடை நகரில்' (forbidden city) தமிழ்க் குடும்பத்தைக் கண்டு கதைக்கக்கூடியதாய் இருந்தது!

தென் கிழக்கு, தூரக்கிழக்கு ஆசியா முழுவதும் இந்தியாவின் ஆன்மீக ஆளுமை இன்றளவும் காணக்கூடியதாய் உள்ளது. கலை, ஆன்மீகம், மொழி என்று இந்தியா அங்கெல்லாம் வாரி, வாரி வழங்கியிருக்கிறது. ஒரு பெருமிதத்துடன் தொலைந்து போன ஒரு நட்பை இந்தியா சீனாவுடன் மீட்டுரு செய்ய வேண்டும். அது இரண்டு நாடுகளுக்குமே நல்லது. ஒன்றின் சந்தை மற்றொன்றின் வளம். இந்திய மனம் மாறுமா?

முதற்பதிவு சமாச்சார் தமிழ்.

இரத்தபந்தம் - Are Koreans our blood relatives?

இந்தியாவும் கொரியாவும் ஒரு நீண்ட வணிகத் தொடர்பை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் இவ்வேளையில் இந்தியக் கொரியத் தொடர்பைப்பற்றிப் பேசுவது பொருந்தும்.

கொரியா வந்திறங்கும் தமிழனுக்கு இங்கு பல ஆச்சர்யங்கள் காத்திருக்கின்றன. தெருவில் போய் கொண்டிருக்கும் போது திடீரென ஒரு குழந்தை 'அப்பா' என்று அழைக்கும். தன்னிச்சையாக நாம் திரும்பிவிடுவோம், தமிழகத்தில் இருப்பதாக எண்ணிக்கொண்டு. கொஞ்ச தூரம் போனால் 'அம்மா' என்று துல்லியமாக ஒலிக்கும் இன்னொரு குழந்தையின் குரல். மீண்டும் சந்தேகம் வந்து திரும்பினால் நாமிருப்பது இந்தியாவல்ல என்பது புரியும். அப்பாவை சில நேரம் 'அபாஜி' என்றும் அழைக்கிறார்கள். நாம் சொல்லும் 'அண்ணி' இங்கு 'ஒண்ணி' என்று மாறியிருக்கிறது. அண்ணன் மனைவிக்காக அல்ல 'அக்கா' என்ற பொருளில். உறவுச் சொற்கள் என்பவை இருமொழிகளுக்குள் உள்ள ஆதித் தொடர்பைக் காட்டக் கூடியவை. அவ்வகையில் கொரியாவிற்கும் இந்தியாவிற்கும் ஒரு தொடர்பு என்றோ இருந்திருக்கிறது. பல வேளைகளில் கொரிய முகங்கள் இந்திய முகங்களை ஒத்திருக்கும். ஏதோ நமது மனப்பிரமை என்று ஒதுக்கிவிட்டாலும் சான்றுகள் வந்தவண்ணமுள்ளன.

குவான்ஜு என்பது ஒரு கலாச்சார நகரம். ஷில்லா எனும் பண்டைய அரசின் தலை நகரம். அங்கு உலகின் மிக அழகான புத்த ஆலயங்களுள் ஒன்று இருக்கிறது. அந்த நகரின் அருங்காட்சியகம் போனால் நமது தொடர்பு இன்னும் தெளிவாக புலப்படத் தொடங்கும். பௌத்தம் நம்மை அடிப்படையில் இணைக்கிறது. அமெரிக்கர்கள் இங்கு வந்து காலடி வைக்கும்வரை இதுவொரு பௌத்த நாடாகவே இருந்திருக்கிறது. இப்போது பாதிக்கு மேல் கிறிஸ்தவர்கள். ஆயினும் பௌத்தம் தேசியச் சின்னமாகவே கருதப்படுகிறது. இந்த அருங்காட்சியகத்தில் அஜந்தா, எல்லோரா, சித்தன்னவாசல் போன்ற இடங்களில் நாம் காணும் சிற்ப, ஓவியயங்களை நினைவுறுத்தும் காட்சிப்பொருட்கள் நிறைய உண்டு. சித்தன்ன வாசல் ஓவியங்களில் காணக்கூடிய நீண்ட, அரைமூடிய கண்கள் கொரியப் பெண்களின் கண்களை நினைவுறுத்துவது தற்செயலா? என்பதைத் தமிழக ஓவியர்கள் இங்கு வந்து சொல்ல வேண்டும். அனுமனின் சிலை, கருடனின் சிலை இப்படிப் பல அங்கு காட்சியிலுண்டு. நிச்சியமாக இந்தியக் கலை வல்லுநர்கள் இங்கு வந்து இவைகளை நிர்மாணித்திருக்க வேண்டும். இல்லையேல் கொரியர்கள் இந்தியா வந்து நம் கலையைக் கற்றிருக்க வேண்டும். இப்போது போல் இல்லை, ஒரு பத்து மணி அவகாசத்தில் இந்தியா, கொரியா மீண்டு விட. பல மாதங்கள் பயணப்பட வேண்டும். அப்படி பயணப்பட்டு வந்து உடனே திரும்ப முடியாது. பல மாதங்கள், ஏன் வருடங்கள் இருக்கவேண்டியிருக்கும். அப்போது மண உறவு இயற்கையாக நடந்திருக்கும். இப்படி எண்ணிக்கொண்டு அருங்காட்சியகத்தில் இருக்கும் போது ஒரு கொரியப் பெண்மணி எங்களுக்கொரு கதை சொன்னாள்.

அதாவது, பல நூற்றாண்டுகளுக்கு முன் ஒரு கொரிய அரசனுக்கும் ஒரு இந்திய அரசிக்குமிடையே கல்யாணம் நடந்ததாம். அவர்களது குழந்தைகள் தாய் தந்தையரை அம்மா, அப்பா என்று அழைத்ததாம். தாய் இறக்கும் தருவாயில் என் குழந்தைகள் எப்படி என்னை அழைக்கின்றனவோ அவ்வாறே கொரியக்குழந்தைகள் தங்கள் பெற்றோரை அழைக்க வேண்டுமென விருப்பம் தெரிவித்தாளாம், அதன்படியே இன்றளவும் கொரியக் குழந்தைகள் 'அம்மா, அப்பா' என்று அழைத்து வருவதாக அக்கதை சொன்ன பெண்மணி கூறினாள். ஆச்சர்யமாக இருந்தது. தொன்மங்கள் என்பவை உண்மையின் ஒரு கூறே. எனவே எங்கோ ஒரு உண்மை இருக்கிறது என்று தோன்றியது. கொஞ்சம் ஆராய்ந்த போது சில ஆதாரங்கள் கிடைத்தன. மூன்று அரசுகளின் சரிதம் (சம்-குக்குயுசா) எனும் கொரியப் புத்தகம் இப்படியான ஒரு இந்திய உறவைப்பற்றிப் பேசுகிறது. இது நடந்தது இன்று, நேற்றல்ல கிருஸ்து பிறந்து ஒரு நூற்றாண்டு முடிந்த போது நடந்திருக்கிறது. இப்புத்தகம், இந்திய இளவரசி அயோத்தியா நாட்டைச் சேர்ந்தவள் என்கிறது. அப்போது அங்கும் தமிழ் இருந்ததோ என்னவோ! கி.பி. நான்காம் நூற்றாண்டில் மாறானந்தா எனும் இந்திய பௌத்தத்துறவி கொரியா வந்ததாகவும் ஒரு சேதி உள்ளது. போதிதர்மா எனும் காஞ்சி மன்னன், துறவியாகி தூர கிழக்கில் இன்று பிரபலமாகியிருக்கும் ஜென் பௌத்தத்தை நிறுவினான் என்பதற்கு நிறைய ஆதாரங்கள் உள்ளன. எனவே இந்த மாரானந்தா என்பவரும் தமிழராக இருந்திருக்க வாய்ப்புண்டு. கி.பி.574-ல் ஆஹோங் எனும் கொரியத்துறவியின் துணையுடன் மூன்று இந்தியத்துறவிகள் பல பௌத்த மடங்களை இங்கு நிறுவியதாகச் சரித்திரம் சொல்கிறது. கிபி ஆறாம் நூற்றாண்டு தொடக்கம் பல கொரியத்துறவிகள் இந்தியா வருவதும், இந்தியத்துறவிகள் கொரியா போவதும் வழக்கமாகியிருக்கிறது. கியோமிக் எனும் துறவி இந்தியா வந்து சமிஸ்கிருதம் கற்று மத்திய இந்தியாவிலிருக்கும் சம்கானாக் கோயிலிலுள்ள மஹிசாசகவிநய எனும் நூலை மொழிபெயர்த்திருக்கிறார். தேவதத்தா எனும் துறவி கொரியா போய் பெய்தாதுயோ எனும் பெயர் பெற்று பெக்ஜே அரசின் ஆதரவில் 72 பௌத்த நூல்களை கொரிய மொழியில் எழுதியிருக்கிறார்.

ஆக இன்று ஒரு தமிழன் இந்தியச் சாலையில் ஹுயுந்தே (ஹுண்டாய் - Hyundai என்று தவறாக உச்சரிக்கிறோம்) வாகனத்தை பெருமையாக ஓட்டிச் செல்கிறான் என்றால் அது தற்செயலாக நடந்த ஒன்றல்ல. பல நூற்றாண்டுக் கலாச்சாரப்பாலத்தின் வழியாகவே இது நடைபெறுகிறது. இந்தியக் கொரிய இரத்த சம்மந்தத்தை சமீபத்திய டி.என்.ஏ சான்றுகள் மாற்றுக்கருத்திற்கு இடமின்றி நிருவுகின்றன. எனவே, எனது கொரிய இருப்பை உளவியல் பூர்வமாக நிருவிக்கொள்ள புதிய கதைகளை உருவாக்க வேண்டிய அவசியமின்றி என் முந்தைய இந்தியச் சகோதரர்கள் இங்கு வாழ்ந்து வளம் பெற்றிருக்கிறார்கள் என்ற உரிமையில் இருக்கலாம் என்று தோன்றுகிறது. ஒரு வகையில் கொரியர்கள் மாமா-மச்சான் என்று ஆகிவிடுகிறார்கள். விட்டுப்போன சொந்தத்தை மீண்டும் புத்துலக்க வேண்டியது நம் ஒவ்வொருவரது கடமை.

முதற்பதிவு சமாச்சார் தமிழ்

கூழாங்கல் [Pebble]

பெற்றதாயினுமாயின செய்யும்
என்றான் கலியன்.
அம்மாவென்றால்
பார்த்துப் பார்த்து செய்வாள்.
உன்னையே பார்க்கமுடியவில்லை
நீ எப்படி பார்த்துப் பார்த்து
செய்யமுடியும்?
எதிர்பார்ப்புகள்
குறையவேண்டும்.
குறைகளும் குறைந்துவிடும்.
நான் என்ன கொண்டுவந்தேன்?
என்ன கொடுத்தேன்?
எதிர்பார்க்க?
உன்னில் ஜெனித்தேன்
உன் உயிரில் வளர்ந்தேன்
உன்னை சுகித்தேன்
உன்னில் கலப்பேன்
இதில் குறைக்கு
ஏதேனும் இடமுண்டோ ?
மலையிலிருந்து ஆற்றில் விழுந்த
கற்கள் நாங்கள்.
சில நீரை எதிர்த்து
பாறாங்கல்லாய் இன்னும்
நிற்கின்றன.
எதிர்ப்பின்றி நீரின் ஓட்டத்தில்
ஓடியபோது கூர்முனை
மழுங்கி சுருக்கம் போய்
கல்லென்றே தெரியாவண்ணம்
வெண்ணேய் போல் உருண்டு திரண்டு
உன் கை ஒருநாள் தீண்டும் சுகத்தில்
வெட்டவெளியில்
ஆற்றுப்படுக்கையில்
அலைகடற்கரையில்
அன்னாந்து பார்த்தபடி
நான்.

From: Raju Rajendran
Date: Thu Oct 7, 2004 2:38 am
Subject: Re: [min-suvadi] Pebble on the beach

"மலையிலிருந்து ஆற்றில் விழுந்த
கற்கள் நாங்கள்.
சில நீரை எதிர்த்து
பாறாங்கல்லாய் இன்னும்
நிற்கின்றன.
எதிர்ப்பின்றி நீரின் ஓட்டத்தில்
ஓடியபோது கூர்முனை
மழுங்கி சுருக்கம் போய்
கல்லென்றே தெரியாவண்ணம்
வெண்ணேய் போல் உருண்டு திரண்டு
உன் கை ஒருநாள் தீண்டும் சுகத்தில்
வெட்டவெளியில்
ஆற்றுப்படுக்கையில்
அலைகடற்கரையில்
அன்னாந்து பார்த்தபடி
நான்."

அன்புள்ள முனைவர். கண்ணன்,

இந்த வரிகள் மிக அருமையாகவுள்ளன.

ஆனால் கவிதையின் முற்பகுதி புரிந்து கொள்வது கொஞ்சம் கடினமாக இருக்கிறது.

(கோனார் நோட்ஸ்??)

ராஜு ராஜேந்திரன்

From: "Dr.Narayanan Kannan"
Date: Thu Oct 7, 2004 3:55 am
Subject: Re: [min-suvadi] Pebble on the beach

அன்புள்ள ராஜேந்திரன்:

கவிதையின் சில கூறுகள் பிடித்திருப்பது கண்டு மகிழ்ச்சி. கோனார் நோட்ஸ் போடும் அளவிற்கு என் கவிதை வந்துவிட்டது :-)!

வாழ்வைக்குறித்த என் தேடல்கள் பல நேரங்களில் கவிதையாய் உருவெடுக்கின்றன.

கவிதையை ஆரம்பித்து வைக்கிறார் திருமங்கை ஆழ்வார் (கலியன்). பெற்ற தாயைவிட இறைவன் செய்வான் என்பது அவரது துணிபு. உண்மையா? என்று கேள்வி வருகிறது. பௌதீகமாக இல்லை என்ற விடை கிடைத்தவுடன், ஏன் குறை நமக்கு வருகிறது என்று கேள்வி போகிறது. அப்போது ஒரு புதிய புரிதல் வருகிறது. ஏதாவது நாம் முதல் போட்டிருந்தால் லாபம் வரவில்லை என்று அங்காலாய்க்கலாம். எந்த முதலும் இல்லாமல் வாழ்வு ஒரு மாபெரும் பரிசாக நமக்குக் கிடைத்திருக்கிறது. ஒவ்வொரு நிமிடமும் லாபம்தான். நட்டம் என்பதே இல்லாத ஒரு சமாச்சாரம் வாழ்வு. எல்லாமே- நமது துக்கம், சுகம், இனிமை எல்லாம் வரவுதான். அவைதான் வாழ்வை ஓட்டுகின்றன. இப்படிப்பார்க்கும் போது வாழ்வைக் குறித்து சலிப்புறும் மனது சமனப்படுகிறது. கணியன் பூங்குன்றன் சொன்ன உவமை உடனே நினைவிற்கு வருகிறது. புனல் வருகிறது. பூங்குன்றன் வாழ்வைப் புனலில் மிதக்கும் இலையென்றான். எனக்கென்னமோ 'நாம்' கல் போன்றவர்கள் என்று தோன்றுகிறது. எதையும் வருகின்ற வழியில் ஏற்றுக்கொள்ளாததால், எதிர்வினை கொடுப்பதால் 'கல்' பொருந்தும் என்று தோன்றுகிறது. வெறும் பாறாங்கல்லாய் சிலர். கூழாங்கல்லாய் சிலர். கூழாங்கல்லில் ஒரு சேதி இருக்கிறது.

இதுதான் என் கவிதை.

சங்கப்பலகையில் இட்டாகிவிட்டது! மிதக்குமா? மூழ்குமா என்று சங்கப்புலவர்கள் சொல்லட்டும்.

அன்புடன்
கண்ணன்


From: Raju Rajendran
Date: Thu Oct 7, 2004 2:03 pm
Subject: Re: [min-suvadi] Pebble on the beach

அன்புள்ள கண்ணன்,

கலியன் என்றால் திருமங்கை ஆழ்வார் என்று நானறிந்திருக்கவில்லை. இப்பொழ்து விளங்குகிறது. இனி, கவிதைகளில் இரண்டு பொலிவுகளை நான் எதிர்பார்க்கிறேன். கருத்துப் பொலிவு. சொல் பொலிவு. புதுக்கவிதைகளில் முன்னது மட்டுமே பெரும்பாலும் காண இயலுகிறது. சொல் அழகும் அதனால் உருவாகும் நடை அழகும் குறைவு. ஏன் இரண்டு சுவைகளையும் கலந்து தர இயலாதா?

கல்லாதவரும் நல்ல கருத்தைச் சொல்கிறார்கள் அவர்கள் பாங்கில். யாரும் புலவன் ஆவது அதனோடு சொல் அழகையும் சேர்க்கும் போது தான். வள்ளுவனின் தனிச்சிறப்பு குறளடியில் செறித்தது தானே!

ராஜு ராஜேந்திரன்
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
அன்புள்ள ராஜேந்திரன்:

நல்ல கருத்தைச் சொன்னீர்கள்.

தமிழ் கவிதை ஒரு நீண்ட வட்டத்தை முடித்து ஆரம்ப நிலைக்கு வந்திருக்கிறது. சங்க காலத்தில் எல்லோரும் கவிதை யாத்தனர். கணக்கு வாத்தியார், ஜோஸ்யர், வணிகன், அரசன், மீனவன் என்று பாரபட்சமில்லாமல். அப்போது கருத்திற்கு முக்கியத்துவம் இருந்தது (நாராய்..நாராய் :-) பின்னால் தமிழ் மிகவும் பொலிவு பெற்று நடையழகு பெறுகிறது. வள்ளுவன், கம்பன், ஆழ்வார்கள் என்று பலர் புதிய பா வகைகளைச் சேர்கின்றனர். ஒரு காலத்தில் வெறும் நடையழகு மட்டுமே கவிதைக்கு வேண்டும் என்ற நிலை வருகிறது. பாமரன் இந்த ஓட்டத்திலிருந்து விலக்கப்படுகிறான். பாரதி வந்து அதை மீண்டும் உடைக்கிறான். பின்னர் புதுக்கவிதை புனல் வேகத்தில் புறப்படுகிறது.

கவிதையில் நடையழகு வேண்டுமெனில் மரபுப்பரிட்சயம் அவசியம். புதுக்கவிதை அதை இத்தனை நாள் புறக்கணித்திருக்கிறது. மெதுவாக அது மீண்டு வரும். ஆயினும் பழைய இறுகிய நிலைக்குப் போய் விடாமல் நவீன கவிதை தன் இருப்பை தக்க வைத்துக்கொள்ள வேண்டும்.

கண்ணன்