இரத்தபந்தம் - Are Koreans our blood relatives?

இந்தியாவும் கொரியாவும் ஒரு நீண்ட வணிகத் தொடர்பை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் இவ்வேளையில் இந்தியக் கொரியத் தொடர்பைப்பற்றிப் பேசுவது பொருந்தும்.

கொரியா வந்திறங்கும் தமிழனுக்கு இங்கு பல ஆச்சர்யங்கள் காத்திருக்கின்றன. தெருவில் போய் கொண்டிருக்கும் போது திடீரென ஒரு குழந்தை 'அப்பா' என்று அழைக்கும். தன்னிச்சையாக நாம் திரும்பிவிடுவோம், தமிழகத்தில் இருப்பதாக எண்ணிக்கொண்டு. கொஞ்ச தூரம் போனால் 'அம்மா' என்று துல்லியமாக ஒலிக்கும் இன்னொரு குழந்தையின் குரல். மீண்டும் சந்தேகம் வந்து திரும்பினால் நாமிருப்பது இந்தியாவல்ல என்பது புரியும். அப்பாவை சில நேரம் 'அபாஜி' என்றும் அழைக்கிறார்கள். நாம் சொல்லும் 'அண்ணி' இங்கு 'ஒண்ணி' என்று மாறியிருக்கிறது. அண்ணன் மனைவிக்காக அல்ல 'அக்கா' என்ற பொருளில். உறவுச் சொற்கள் என்பவை இருமொழிகளுக்குள் உள்ள ஆதித் தொடர்பைக் காட்டக் கூடியவை. அவ்வகையில் கொரியாவிற்கும் இந்தியாவிற்கும் ஒரு தொடர்பு என்றோ இருந்திருக்கிறது. பல வேளைகளில் கொரிய முகங்கள் இந்திய முகங்களை ஒத்திருக்கும். ஏதோ நமது மனப்பிரமை என்று ஒதுக்கிவிட்டாலும் சான்றுகள் வந்தவண்ணமுள்ளன.

குவான்ஜு என்பது ஒரு கலாச்சார நகரம். ஷில்லா எனும் பண்டைய அரசின் தலை நகரம். அங்கு உலகின் மிக அழகான புத்த ஆலயங்களுள் ஒன்று இருக்கிறது. அந்த நகரின் அருங்காட்சியகம் போனால் நமது தொடர்பு இன்னும் தெளிவாக புலப்படத் தொடங்கும். பௌத்தம் நம்மை அடிப்படையில் இணைக்கிறது. அமெரிக்கர்கள் இங்கு வந்து காலடி வைக்கும்வரை இதுவொரு பௌத்த நாடாகவே இருந்திருக்கிறது. இப்போது பாதிக்கு மேல் கிறிஸ்தவர்கள். ஆயினும் பௌத்தம் தேசியச் சின்னமாகவே கருதப்படுகிறது. இந்த அருங்காட்சியகத்தில் அஜந்தா, எல்லோரா, சித்தன்னவாசல் போன்ற இடங்களில் நாம் காணும் சிற்ப, ஓவியயங்களை நினைவுறுத்தும் காட்சிப்பொருட்கள் நிறைய உண்டு. சித்தன்ன வாசல் ஓவியங்களில் காணக்கூடிய நீண்ட, அரைமூடிய கண்கள் கொரியப் பெண்களின் கண்களை நினைவுறுத்துவது தற்செயலா? என்பதைத் தமிழக ஓவியர்கள் இங்கு வந்து சொல்ல வேண்டும். அனுமனின் சிலை, கருடனின் சிலை இப்படிப் பல அங்கு காட்சியிலுண்டு. நிச்சியமாக இந்தியக் கலை வல்லுநர்கள் இங்கு வந்து இவைகளை நிர்மாணித்திருக்க வேண்டும். இல்லையேல் கொரியர்கள் இந்தியா வந்து நம் கலையைக் கற்றிருக்க வேண்டும். இப்போது போல் இல்லை, ஒரு பத்து மணி அவகாசத்தில் இந்தியா, கொரியா மீண்டு விட. பல மாதங்கள் பயணப்பட வேண்டும். அப்படி பயணப்பட்டு வந்து உடனே திரும்ப முடியாது. பல மாதங்கள், ஏன் வருடங்கள் இருக்கவேண்டியிருக்கும். அப்போது மண உறவு இயற்கையாக நடந்திருக்கும். இப்படி எண்ணிக்கொண்டு அருங்காட்சியகத்தில் இருக்கும் போது ஒரு கொரியப் பெண்மணி எங்களுக்கொரு கதை சொன்னாள்.

அதாவது, பல நூற்றாண்டுகளுக்கு முன் ஒரு கொரிய அரசனுக்கும் ஒரு இந்திய அரசிக்குமிடையே கல்யாணம் நடந்ததாம். அவர்களது குழந்தைகள் தாய் தந்தையரை அம்மா, அப்பா என்று அழைத்ததாம். தாய் இறக்கும் தருவாயில் என் குழந்தைகள் எப்படி என்னை அழைக்கின்றனவோ அவ்வாறே கொரியக்குழந்தைகள் தங்கள் பெற்றோரை அழைக்க வேண்டுமென விருப்பம் தெரிவித்தாளாம், அதன்படியே இன்றளவும் கொரியக் குழந்தைகள் 'அம்மா, அப்பா' என்று அழைத்து வருவதாக அக்கதை சொன்ன பெண்மணி கூறினாள். ஆச்சர்யமாக இருந்தது. தொன்மங்கள் என்பவை உண்மையின் ஒரு கூறே. எனவே எங்கோ ஒரு உண்மை இருக்கிறது என்று தோன்றியது. கொஞ்சம் ஆராய்ந்த போது சில ஆதாரங்கள் கிடைத்தன. மூன்று அரசுகளின் சரிதம் (சம்-குக்குயுசா) எனும் கொரியப் புத்தகம் இப்படியான ஒரு இந்திய உறவைப்பற்றிப் பேசுகிறது. இது நடந்தது இன்று, நேற்றல்ல கிருஸ்து பிறந்து ஒரு நூற்றாண்டு முடிந்த போது நடந்திருக்கிறது. இப்புத்தகம், இந்திய இளவரசி அயோத்தியா நாட்டைச் சேர்ந்தவள் என்கிறது. அப்போது அங்கும் தமிழ் இருந்ததோ என்னவோ! கி.பி. நான்காம் நூற்றாண்டில் மாறானந்தா எனும் இந்திய பௌத்தத்துறவி கொரியா வந்ததாகவும் ஒரு சேதி உள்ளது. போதிதர்மா எனும் காஞ்சி மன்னன், துறவியாகி தூர கிழக்கில் இன்று பிரபலமாகியிருக்கும் ஜென் பௌத்தத்தை நிறுவினான் என்பதற்கு நிறைய ஆதாரங்கள் உள்ளன. எனவே இந்த மாரானந்தா என்பவரும் தமிழராக இருந்திருக்க வாய்ப்புண்டு. கி.பி.574-ல் ஆஹோங் எனும் கொரியத்துறவியின் துணையுடன் மூன்று இந்தியத்துறவிகள் பல பௌத்த மடங்களை இங்கு நிறுவியதாகச் சரித்திரம் சொல்கிறது. கிபி ஆறாம் நூற்றாண்டு தொடக்கம் பல கொரியத்துறவிகள் இந்தியா வருவதும், இந்தியத்துறவிகள் கொரியா போவதும் வழக்கமாகியிருக்கிறது. கியோமிக் எனும் துறவி இந்தியா வந்து சமிஸ்கிருதம் கற்று மத்திய இந்தியாவிலிருக்கும் சம்கானாக் கோயிலிலுள்ள மஹிசாசகவிநய எனும் நூலை மொழிபெயர்த்திருக்கிறார். தேவதத்தா எனும் துறவி கொரியா போய் பெய்தாதுயோ எனும் பெயர் பெற்று பெக்ஜே அரசின் ஆதரவில் 72 பௌத்த நூல்களை கொரிய மொழியில் எழுதியிருக்கிறார்.

ஆக இன்று ஒரு தமிழன் இந்தியச் சாலையில் ஹுயுந்தே (ஹுண்டாய் - Hyundai என்று தவறாக உச்சரிக்கிறோம்) வாகனத்தை பெருமையாக ஓட்டிச் செல்கிறான் என்றால் அது தற்செயலாக நடந்த ஒன்றல்ல. பல நூற்றாண்டுக் கலாச்சாரப்பாலத்தின் வழியாகவே இது நடைபெறுகிறது. இந்தியக் கொரிய இரத்த சம்மந்தத்தை சமீபத்திய டி.என்.ஏ சான்றுகள் மாற்றுக்கருத்திற்கு இடமின்றி நிருவுகின்றன. எனவே, எனது கொரிய இருப்பை உளவியல் பூர்வமாக நிருவிக்கொள்ள புதிய கதைகளை உருவாக்க வேண்டிய அவசியமின்றி என் முந்தைய இந்தியச் சகோதரர்கள் இங்கு வாழ்ந்து வளம் பெற்றிருக்கிறார்கள் என்ற உரிமையில் இருக்கலாம் என்று தோன்றுகிறது. ஒரு வகையில் கொரியர்கள் மாமா-மச்சான் என்று ஆகிவிடுகிறார்கள். விட்டுப்போன சொந்தத்தை மீண்டும் புத்துலக்க வேண்டியது நம் ஒவ்வொருவரது கடமை.

முதற்பதிவு சமாச்சார் தமிழ்

1 பின்னூட்டங்கள்:

ச.முத்துகுமார் 10/13/2004 08:32:00 PM

எனக்கும் தென் கொரியா வந்த புதிதில் 'அம்மா' , 'அப்பா' ஆச்சரியமாக இருந்தது. அது மட்டுமல்ல பல செயல்களை பார்த்து ஆச்சரிய பட்டேன். இன்னும் சம்மணம் போட்டு சாப்பிடுவது. வீட்டுக்குள் செருப்பு அணியாதது. இதை பற்றி ஏதாவது படிக்க வேண்டும் என்று நினைத்தேன். தங்கள் பதிவிற்கு நன்றி.