சீன இந்திய நட்புறவு

இத்தனை நாள் நான் சீனாவைப்பற்றி அதிகமாக அலட்டிக்கொண்டதில்லை. காரணம் பசுமரத்து ஆணி போல் சில தீய நினைவுகள். இந்தியக் குடியரசு தோன்றி இரண்டு ஆண்டுகள் கழித்து சீன மக்கள் குடியரசு கம்யூனிசப்பாதையில் தோன்றுவிக்கப்படுகிறது. ஜப்பானிடம் காயடிபட்டு சீனரணம் மாறாத போழுதுகள். இந்தியா சீனாவுடன் நட்புறவு வேண்டியது. 'ஆசியஜோதி' ஜவகர்லால் நேரு சீனா சென்று பஞ்சசீலக் கொள்கையில் கையெழுத்திட்டு திரும்புகிறார். கும்பிடும் கையில் கொடுவாள் கொண்டது போல் சீனா இந்தியாவைத் தாக்குகிறது. லடாக் பகுதி சீனாவிற்குப் போய்விடுகிறது. சூயென்லாய் என்ற சீனப்பிரதமர் இதை முன்னெடுத்து நகர்த்துகிறார். சூயென்லாயே சீன நாயே! என்று ஊர் பூரா கரிக்கோடிட்ட சேதிகள் சுவரெங்கும். சீனாக்காரர்கள் யார் என்று தெரியாத பருவத்திலேயே ஒரு வெறுப்பு விதைக்கப்பட்டுவிட்டது. அது மாற இத்தனை நாள் பிடித்திருக்கிறது. அந்த வெறுப்பு காரணமில்லாத வெறுப்பன்று என்பதை காலம் காட்டுகிறது. சீனா ஒன்றுமறியா திபத்தை கைப்பற்றுகிறது. ரஷ்யாவுடன் சண்டைக்குப் போகிறது. தைவான் நாட்டின் சுதந்திரத்தை இன்றளவும் நெருக்குப்பிடியில் வைத்திருக்கிறது.

ஆனாலும் காலம் மாறுகிறது. மக்கள் முதிர்ச்சியடைகின்றனர். நான் ஜெர்மனியில் இருந்தபோது கிளவுஸ் கிரம்ளின் என்ற சக விஞ்ஞானி அடிக்கடி சொல்லுவார். ஒவ்வொரு ஐம்பது வருடங்களுக்குள்ளும் பிரான்சும், ஜெர்மனியும் போரில் இறங்குவது வழமை என்று. ஆனால் இரண்டாவது உலக யுத்தத்தின் பேரழிவிற்குப்பிறகு இன்று பிரான்சும், ஜெர்மனியும் முன்னின்று ஐரோப்பிய ஒருங்கிணைப்பை சாத்தியமாக்கியிருக்கின்றன. உலகெங்கும் வியாபார இணக்கம் பெருகி வருகிறது. சந்தைப் பொருளாதாரம், சண்டைப் பொருளாதாரத்தை விட ஒரு படி மேல் என்ற மன மாற்றம் உலகெங்கும் நிகழ்ந்து வருகிறது. இதற்கு கம்யூனிசச் சீனாவும் விதி விலக்கல்ல. ராணுவக் குவிப்பைவிட யுக்தியான வியாபாரமே ஒரு நாட்டின் வளத்திற்கு உத்திரவாதம் என்பதைக் கம்யூனிசத் தலைவர்கள் இன்று உணர்ந்துள்ளனர். இந்த மாற்றத்தை பற்றிய ஒரு சீன உயர் அரசியல்வாதியின் கூற்று பின்வருமாறு அமைகிறது: கருப்பு பூனை சிறந்ததா? வெள்ளைப்பூனை சிறந்ததா? எனக் கேட்டால்? எந்தப்பூனை எலியைப் பிடிக்கிறதோ அந்தப் பூனையே சிறந்தது! இதைச் சீனா சென்று வரும் எவரும் உணர முடியும். இந்த அணுகுமுறையின் பிரதிபலிப்பாக உலகின் மாபெரும் இராணுவத்தை கைவசம் வைத்திருக்கும் சைனா சரிபாதியாக ராணுவக் குறைப்பு செய்துள்ளது. இராணுவம் என்பது காப்புறுதி சேமிப்பு மாதிரி. என்றாவது நிகழப்போகும் சாவிற்கு இன்றிலிருந்து காசு கொடுப்பது போல். ஆக்கமற்ற சேமிப்பு அது. அது ஒரு நாட்டின் பெரும் பளு. இதைச் சீனா உணர்ந்துள்ளது. கடந்த 55 வருடங்களில் சீனா மட, மடவென வளர்ந்துள்ளது.

இன்று சீனாவின் தலைநகரான பெய்ஜிங் (பீகிங்) போவோர் பிரம்மித்துப் போவோர்! 70 களில் ஒரு சீனனின் கனவு ஒரு நல்ல சைக்கிள் வைத்திருப்பது. 80களில் அவன் கனவு ஒரு நல்ல குளிர் சாதனப்பெட்டி வைத்திருப்பது. 90களில் அவன் கனவு ஒரு நல்ல கார், நல்ல வீடு, பிற வசதிகள். பெய்ஜிங் நகரில் இருக்கும் நூற்றுக்கணக்கான மேம்பாலங்களில் ஒரு நான்கை டெல்லி பெறுவதற்கு இன்னும் தசாம்சங்கள் ஆகும். ஒரு ஒசாகா (ஜப்பான்), ஒரு சோல் (கொரியா), ஒரு சிங்கப்பூர், ஒரு கோலாலம்பூர் (மலேசியா) போல் இன்று பெய்ஜிங் விளங்குகிறது. பெய்ஜிங் போய் பார்த்தால் சீனா ஏழை நாடு என்று யாரும் சொல்ல மாட்டார்கள். ஆனாலும், உலகிற்கு ஒரு ஏழை முகத்தைக்காட்ட சீனா பெய்ஜிங்கின் ஒரு பகுதியை பழையபடியே வைத்துள்ளது. அங்கு அங்கஹீனமுற்ற பிச்சைக்காரர்கள் இருக்கிறார்கள். சைக்கிள் ரிக்ஷா இருக்கிறது. ஆனாலும் அது இந்தியாவில் காணும் ஏழ்மைக்கு முன் கொசுறு. பெய்ஜிங் அடுத்த ஒலிம்பிக் விளையாட்டை அங்கு நடத்த தன்னைத் தயார் படுத்திக் கொண்டிருக்கிறது. பெய்ஜிங் மிக சுத்தமாக இருக்கிறது. சாலை விதிகள் கடைபிடிக்கப்படுகின்றன. உண்மையில் கொரியாவைவிட அங்கு சாலைப் போக்குவரத்து மிக ஒழுங்காக இருக்கிறது. சைக்கிள் போவதற்கு என்று நம்மவூர் சாலை அளவில் பெரிய பகுதி ஓரத்தில் விடப்பட்டுள்ளது (அப்படியெனில் காரோடும் சாலை எவ்வளவு பெரிதாக இருக்கும் என்று கற்பனை செய்து கொள்ளுங்கள்!).

மக்கள் தேனீ போல் சுறு, சுறுப்பாக இயங்குகின்றனர். சோம்பிப்போய் யாரும் உட்கார்ந்திருக்கவில்லை. சீனாவின் நாடியைப் பிடித்துப்பார்க்க நல்ல இடம் 'சொர்க்கத்தின் கோயில்'எனும் இடமாகும். அங்கு பெய்ஜிங்கின் கிழடு கட்டையெல்லாம் கூடியிருக்கின்றன. இப்படி எழுதியவுடன் கூன் விழுந்து, கையில் கோல் ஊன்றிய மூத்த மக்களை நினைப்பீர்கள் என்று தெரியும். ஆனால் நான் பார்த்தது அதற்கு நேர்மாறு! நிச்சயமாக 70த் தாண்டிய பெரிசுகள். பூங்காவின் ஒரு புறம் ஆணும், பெண்ணும் கைகோர்த்தபடி நடனமாடிக்கொண்டிருக்கின்றனர். இன்னொருபுறம் பலர் பூப்பந்து போன்ற ஒன்றை ஒரு நடனம் போலவே விளையாடிக் கொண்டிருக்கின்றனர். இது தாய்ச்சி என்ற யோகமுறையில் அமைந்த விளையாட்டு. பந்தின் வேகத்தை எதிர்க்காமல் அதன் வீச்சுடன் இயைந்து போய் திரும்பத்தரும் விளையாட்டு. இதற்கு நளினமும், யோகப்பயிற்சியும் வேண்டும். இன்னொரு புறம் ஒரு கிழவி சுருதி பிசகாமல் பாடிக்கொண்டிருக்கிறாள், அதற்கு ஒரு கிழம் வயலின் வாசித்துக் கொண்டிருக்கிறது. இப்படி எங்கு பார்த்தாலும் முதியோர் சளைத்து உட்காராமல் ஏதாவதொரு தொழிலை ஈடுபட்டு செய்வது ஏதோ சொர்க்கத்தில் இருப்பது போன்ற ஒரு உணர்வை கொடுத்தது. நம்ம ஊர் கிழங்கள் என்ன செய்யும்? 60க்கு மேல் அவர்களெல்லாம் குடும்ப பாரம்! கட்டிலில் ஒரு புடலங்காய் போல் முடங்கிக் கிடக்கிறார்கள். கொஞ்சம் சிலர் வேகு, வேகு என்று பீச்சில் நடக்கிறார்கள். பேச்சுத்துணைக்கு என்று ஒரு கோஷ்டியே! இந்தப் பேச்சு பெரும்பாலும் அரசியல், பிறர் வீட்டு வம்பு தும்பு என்றுதான் இருக்கும். சீனா இன்று வயதானவர்களை அதிகம் கொண்ட நாடாக இருக்கிறது. ஆனாலும் அவர்கள் தன்னை ஒரு பாரமாக கருதுவதில்லை. மேலும் வாழ ஆசையுடன் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். அதிக காலம் உயிர்வாழும் ஒரு மக்கள் தொகையாக சீனா உள்ளது. அதற்கு அளவான சாப்பாடு, போதிய உடற்பயிற்சி, தெம்பான உள்ளம், நாட்டு வைத்தியம் போன்றவையே முக்கிய காரணமாக காட்டுப்படுகின்றன. இந்தியாவில் நாட்டு வைத்தியம் மறைந்து விட்டது. முதியோர் நாட்டின் பாரமாக சாவுக்குக்காத்திருக்கிறார்கள். இது எவ்வளவு பரிதாபமானது!

சீனா தன் பழமைக்கலைகளை மறந்துவிடாமல் அதற்கு நவீன உரு கொடுப்பது மகிழ்ச்சியாக உள்ளது. ஷாவொலின் புத்த துறவிகள் குங்பூ கலையில் பெயர் பெற்றவர்கள். இவர்களுக்கு மறத்துறவிகள் (warrior monks) என்றே பெயர். சக்தியின் பூரணத்துவத்தை அறிந்து, பின் சாத்வீகமாகுவது இக்கலையின் சூட்சுமம். பெய்ஜிங்கில் நான் போன போது 'குங்பூவின் கதை' என்ற நிகழ்வின் முதல் ஆட்டம் (world premiere). இதில் உண்மையான மறத்துறவிகளும், நடனக் கலைஞர்களும் பங்கு கொண்டனர். முன்பு சினிமாவில் இப்படங்களைப் பார்த்ததற்கும் நேரில் பார்பதற்கும் அதிக வித்தியாசமுள்ளது. சினிமாவில் ஏதாவது கிராஃபிக் எபெக்ட் கொடுத்து சமாளித்து விடலாம். ஆனால், மேடையில் முடியாது. ஷாவொலின் மறத்துறவி உண்மையிலேயே தன் தவ வலிமையால் ஒரு சூலாயுதம் தன் வயிறில் குத்திக்கிழிக்கா வண்ணம் தவழ்ந்து காட்டுகிறார். மூன்று இரும்புத் தகடுகளை தன் மண்டையில் போட்டு உடைக்கிறார். காட்சி முடிந்து வரும் போது உடைந்த பாளங்கள் ஒரு கூடையில் போட்டு வைத்து காண்பிக்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சி உண்மையிலேயே ஒரு ஆன்மீக நிகழ்ச்சி. எப்படி ஒரு சிறுவன் குங்பூ கலையில் ஆர்வம் கொண்டு தளைகளைக் கடந்து மறத்திறவியாகிறான் என்பதே கதை. அதில் புலனடக்கம், பயிற்சி, மனதின் மாயை, சதோரி எல்லாம் காட்டப்படுகின்றன. மேலை, இந்திய நாடக நிகழ்வில் கலைஞர்களை ரசிகன் கைதட்டி ஊக்குவிக்க வேண்டும். கலைஞனைப் பார்ப்பதென்றால் அதற்கு ஆள், சிபாரிசு, அந்தஸ்து வேண்டும். ஆனால், உலகப்புகழ் பெற்ற குங்பூ கலைஞர்கள் நிகழ்ச்சி முடிந்தபின் வாசல் வரை வந்து ரசிகனை வழியனுப்பி வைப்பது எங்கும் காணாத நிகழ்வு. அது உண்மையிலேயே அவர்களது பண்பாட்டைக் காட்டுவதுடன், கீழைத்தைய நாகரீகம் தன் விழிமியங்களை மறந்துவிடவில்லை என்பதையும் சொல்லாமல் சொல்கிறது.

சீனா இன்னும் சில ஆண்டுகளில் விண்வெளியில், நிலாவில் மனிதனை இறக்கப்போகிறது. சீனாவை இனிமேலும் நாம் எதிரியாய் பார்ப்பது நன்றல்ல. பெய்ஜிங்கில், ஏன் பொதுவாகவே சீனாவில் இந்திய சினிமாவிற்கு அதிக வரவேற்பு இருக்கிறது. நான் போன போதுகூட ஒரு ஹிந்திப்படம் ஓடிக்கொண்டிருந்தது. இசை, சினிமா போன்றவைதான் நிகழ்கால அம்பாசிடர்கள். அவைகள் கலாச்சாரப் பாலங்கள். அதன் மூலம் நட்பை வளர்க்கலாம். விமான நிலையத்திலேயே ஆச்சர்யம் காத்திருந்தது. பெட்டியை உள்ளே கொண்டுவரும் கண்வேயர் பெல்ட்டில் காணும் சித்திரங்களில் 'மீனாக்ஷி திருக்கல்யாணம்' இருந்தது. என்றோ ஒரு பாண்டியன் நல் முத்து கொடுத்து சீனப்பட்டு வாங்கியிருக்கிறான். அது பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு இன்றைய சீனத்தலைநகரில் காணக்கிடைப்பது மிக்க மகிழ்வைக் கொடுத்தது. பெரிய, பெரிய ஹோட்டல்களில் நிறைய இந்தியத் தகவல் தொழில் நுட்ப வல்லுநர்களைக் காணக்கூடியதாய் உள்ளது. 'தடை நகரில்' (forbidden city) தமிழ்க் குடும்பத்தைக் கண்டு கதைக்கக்கூடியதாய் இருந்தது!

தென் கிழக்கு, தூரக்கிழக்கு ஆசியா முழுவதும் இந்தியாவின் ஆன்மீக ஆளுமை இன்றளவும் காணக்கூடியதாய் உள்ளது. கலை, ஆன்மீகம், மொழி என்று இந்தியா அங்கெல்லாம் வாரி, வாரி வழங்கியிருக்கிறது. ஒரு பெருமிதத்துடன் தொலைந்து போன ஒரு நட்பை இந்தியா சீனாவுடன் மீட்டுரு செய்ய வேண்டும். அது இரண்டு நாடுகளுக்குமே நல்லது. ஒன்றின் சந்தை மற்றொன்றின் வளம். இந்திய மனம் மாறுமா?

முதற்பதிவு சமாச்சார் தமிழ்.

0 பின்னூட்டங்கள்: