கல் தோன்றி மண் தோன்றாக்காலத்தின் மூத்த குடியெது?

பெரும்பாலும் எல்லாச் சமூகங்களிலும் தாங்கள்தான் உலகின் மூத்த குடிகள் என்ற நம்பிக்கை இருந்து வருகிறது. உதாரணமாக ஜப்பானியர்கள் தங்களை சந்திர, சூரிய வம்சத்தினர் என்று நம்புகின்றனர். கல் தோன்றாக் காலத்திற்கு முன் தோன்றிய மூத்த குடி தமிழ்க்குடி என்பது நமக்குத்தெரியும்! சைனா என்ற பெயர் 'சாய்' என்ற தேனீர் கொண்ட நாடு என்ற பொருளிலிருந்து வருகிறது. பீகிங் என்பதும், பெய்ஜிங் என்பதும் பிறருக்காகக் கொண்ட பெயரே. சீனர்கள் பெய்ஜிங் நகரை 'சுங்வா' என்றழைக்கின்றனர். அதற்குப் பொருள் தேசத்தின் மையம் (பிரபஞ்ச மையமென்று சுற்றுலாத் துணைவன் சொன்னான்!) என்று பொருள். உலகம் நம்மைச் சுற்றி இயங்குவதாக எண்ணுவதே மானுட இயல்பு. அதனால்தான், பூமியைச் சுற்றி சூரியன் சுற்றி வருவதாக பல காலம் மனிதர்கள் நம்பி வந்தனர்.

இவ்வளவு கதையும் எதற்கென்றால்! உலகின் கலாச்சாரம் இந்தியாவிலிருந்து போனது என்ற ஆழமான நம்பிக்கை நமக்கெல்லாம் இருக்கிறது. அப்படித்தான் நமக்குப் பாடம். மேலோட்டமாகப் பார்க்கும் போது இந்தியக் கலாச்சார எச்சங்கள் ஆசியா முழுவதும் காணக்கிடைத்தாலும் தமிழ்க் குடியின் தோற்றம் இந்தியாவில்தான் இருந்திருக்க வேண்டும் என்றில்லை. உதாரணமாக, தமிழ் மக்கள் போலவே தோற்றமுடையவர்கள் எதியோப்பிய மக்கள். ஆனால் அவர்கள் இருப்பது ஆப்பிரிக்கா. ஆப்பிரிக்காவிலிருந்து கால் நடையாக கடற்கரை வழியாக பல நூற்றாண்டுகள் குடிபெயர்ந்து ஆப்பிரிக்க மக்கள் இந்தியப் பிரதேசத்திற்கு வந்திருக்கக் கூடும். ஆனால் ஆச்சர்யமாக, இந்தியப் பழங்குடிகள் போலவே தோற்றமுடையவர்கள் ஆஸ்திரேலியாக் கண்டத்தில் வாழ்கின்றனர். அவர்கள் இந்திய வம்சா வழியினர் என்று நம்பவும் இடமுள்ளது. ஜன ஓட்டம் ஆப்பிரிக்காவை விட்டுத்தான் போயிருக்க வேண்டுமென்றில்லை!

ஆசிய பசிபிக் நாடுகளின் பட்டறை கொரியாவில் அடிக்கடி நடக்கிறது. சென்ற முறை நடந்த பட்டறையில் பிஜ்ஜி, பப்புவா நியூகினி நாடுகளிலிருந்து மாணவர்கள் வந்திருந்தனர். அட்டக்கரி. ஒட்டிக்கொள்ளும் கரி உடம்பு. ஆனால் அவர்கள் வாழ்வது ஆசிய நிலப்பரப்பில். இவர்கள் ஆசியர்கள் இல்லையா? இவர்கள் ஆப்பிரிக்காவிலிருந்துதான் வந்திருக்க வேண்டுமா? மலேசியா, பிலிபைன்ஸ் போன்ற தேசங்களில் பல முகங்கள் 'உராங்குடான்' எனும் மனிதக்குரங்கை ஒத்திருப்பது வெறும் தற்செயலா? உராங்குடான் என்ற பெயரே சிவப்பு மனிதன் என்ற பொருளில்தான் வழங்கப்படுகிறது. ஆக, மனிதத்தோற்றம் ஏன் ஆசியாவில் போர்னியோக் காடுகளில் தோற்றம் கொண்டிருக்கக்கூடாது? அங்கு கரு நிற, மாநிற, வெள்ளை நிற மனிதக் குரங்குகள் மனித இனமாக வளர்ச்சியுற்றிருக்கலாமே? பல விஞ்ஞானிகள் இப்போது மனிதத்தோற்றம் என்பது ஆப்பிரிக்கா, ஆசியா இரண்டு இடங்களிலும் தோன்றியிருக்கலாமென நம்புகின்றனர்.

ஆசியாவில் உலாவ, உலாவ எவ்வளவு தூரம் நாம் தமிழ்ப் பண்பாடு, தமிழ் பழக்க வழங்கள் என்று நம்பிக்கொண்டிருப்பது ஆசியா முழுவதும் விரவிக்கிடக்கிறது என்று தெரிய வருகிறது. சில உதாரணங்களைப் பார்ப்போம். முதலில் உட்காரும் விதங்களைப் பார்ப்போம். நாற்காலியின் உதவி ஏதுமின்றி நம் கிராமப்புறங்களில் தம் கால்களில் அப்படியே குந்தி உட்கார்ந்து விடுவார்கள். நகரவாசிகளுக்கு இது முடியாத செயலாக இருந்தாலும் கிராமங்களில் இப்படி மணிக்கணக்காக உட்கார்ந்து கதையளப்பார்கள்! இப்படி உட்கார்வது இன்றளவும் கொரியா, வியட்நாம் போன்ற நாடுகளில் காணக்கிடைக்கிறது. உட்கார்வதற்கு என்று தனியாக இடம் தேடாமல் கிடைத்த இடத்தில் 'தன் காலே தனக்குதவி' என்று சொல்லும் வண்ணம் உட்கார்ந்துவிடுகிறார்கள். அடுத்து சப்பளாம் போட்டு தரையில் உட்கார்வது. தரையில் உட்கார்ந்தபடியே சாப்பிடுவது. இது ஜப்பான், கொரியா, பிலிப்பைன்ஸ், இந்தோனிசியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் இன்றளவும் காணக்கூடியதாய் உள்ளது. கொரியா வரும் வெள்ளையருக்கு சவாலாக இருக்கக்கூடியது இப்படித்தரையில் உட்கார்ந்து சாப்பிடுவது! அவர்களுக்கு கால் மடியாது!

அப்புறம் சாப்பிடும் போதுள்ள பழக்கங்கள். ஏப்பம் விடுவது மேலைக்கலாச்சாரப்படி கேலிக்குறியது. ஆனால் தமிழகக்கிராமங்களில் ஏப்பம் விட்டால் உணவை நன்கு ரசித்து சாப்பிட்டதாக எண்ணிக்கொள்வர். இதற்கு ஒப்பு நோக்கும் வண்ணம் ஜப்பானில் சத்தம் வரும் வண்ணம் சாப்பிடுவது இன்றளவும் பழக்கத்தில் உள்ளது. இவர்கள் காப்பி குடித்தாலும் சத்தமாக உறிஞ்சியே குடிக்கின்றனர். என்னம்மா காரணம்? என்று ஒரு ஜப்பானிய மூதாட்டியிடம் கேட்டேன். அவள் சொன்ன பதில் சுவாரசியமாக இருந்தது. ஆண்கள் உட்கார்ந்து சாப்பிடும் இடத்தில் பெண் நின்று கொண்டிருக்கமுடியாது (நாணம்). அவள் பரிமாறிவிட்டு அடுத்த அறைக்குப்போய் விடுவாள். அங்கிருக்கும் அவளுக்கு இவன் ரசித்து, சுவைத்துச் சாப்பிடுகிறான் என்பதை எப்படிச் சொல்வது? சத்தமாக சாப்பிட்டால் ஒழிய அவளுக்கு இவன் சாப்பிடுவது கேட்காது. எனவேதான் ஏப்பம் விடுதல், உறிஞ்சி, உறிஞ்சி கஞ்சி குடித்தல் (இந்தக் கஞ்சி என்ற வார்த்தை அப்படியே இங்கும் கையாளப்படுவது ஆச்சர்யம்!) இவை பழக்கத்திற்கு வந்திருக்கின்றன. சாப்பிட்ட உடனே பல் குத்தும் வழக்கம் மேலைக் கலாச்சாரத்தில் கிடையாது. அது டேபிள் மேனர்ஸ் இல்லை. ஆனால் கிராமத்தில் இந்த பழக்கம் கேலிக்குறியதாக பார்க்கப்படுவதில்லை. அதேதான் கொரியாவிலும், ஜப்பானிலும்! அதைவிட இன்னொரு முக்கியமான தொடர்பு இந்த அரிசிச் சாப்பாடு! என்னதான் புலால் உணவு கடந்த சில தசாம்சங்களில் ஆசியாவில் பரவலாகி வந்தாலும் ஒரு வேளையாவது அரிச்சோறு சாப்பிடாவிடில் இவர்களுக்கு சாப்பிட்டது போலவே இருக்காதாம். நூடில் எனும் கொடியரிசி உணவு உண்டாலும் கடைசியில் கொஞ்சமாவது அரிசிச்சோறு இவர்களுக்கு சாப்பிட வேண்டும்! வடநாடு செல்லும் ஒரு தமிழன் எப்படி அரிச்சோற்றிற்கு ஏங்குவான் என்பதை இங்கு ஒப்பு நோக்கிப் பார்க்க வேண்டும். அரிசியில் உருவாகும் அத்தனைத் தமிழக சாப்பட்டு வகையும் இங்குண்டு. பொங்கல், புலால்சோறு (பிரியாணி), இடியாப்பம் (நூடில்), கஞ்சி, பொறி போன்றவை. இனிப்புச் சேவு, காராச்சேவு இவையுமுண்டு. பாயசம் போன்ற அரிசிப்பாயசம் இங்குமுண்டு!

தமிழ்க்குடியின் மானம் என்ற பண்பு இங்கிருந்துதான் வந்திருக்க வேண்டும். மானம் போனால் உயிர்வாழக்கூடாது என்பதை இன்றளவும் ஜப்பானில் காணலாம். பெரிய, பெரிய கம்பெனி இயக்குநர்கள் எல்லாம் அவர்கள் மானம் போய்விட்டால் தற்கொலை செய்து கொள்கிறார்கள் (நம் அரசியல்வாதிகள் எல்லாம் உண்மையான தமிழர்களா என்ற கேள்வி இங்கு எழுகிறது!) வயிறைக்கிழித்துக்கொண்டு சாகும் ஹரக்கிரி ஒரு தமிழ் வழக்கம்தானே? (தலையை அறுத்துக்கொண்டு பலி கொடுத்தல் தமிழ் மண்ணில் உண்டு).

அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு இவை தமிழ்ப்பண்பாடு என்போம். இங்கு வந்து கொரியப்பெண்கள் நாணுவதைக் காண வேண்டும்! எதாவதொரு காரியமென்றால் ஒரு பெண் தனியாகப் போக மாட்டாள், கூடவே இன்னொரு பெண் துணை (நம்ம ஊரை ஞாபகப்படுத்தவில்லை?). இன்னும் வேடிக்கை என்னவெனில், இளம் காதலிகள் தங்கள் காதலனை 'சகோதரா!' என்று விளித்தல் (ஒப்பா!). தமிழ்ச் சமூகங்களில் கணவன் பெயரைச் சொல்லாமல் 'அண்ணா' என்றழைக்கும் பழக்கமுண்டு (வாங்கோண்ணா! போங்கோண்ணா!).

இந்தியா மனித குலத்தின் பல நீரோட்டங்களைச் சந்திருப்பது போல் தோன்றுகிறது. ஒன்று சமிஸ்கிருதம் பேசும் வட மேற்கு இனக்குழு. இன்னொன்று திராவிட மொழி பேசும் தென் கிழக்கு ஆசிய இனக்குழு. இரண்டும் இந்தியாவில் சங்கமித்து இருப்பதாகத் தோன்றுகிறது. இரண்டின் வளமும் சேர்ந்து இந்தியாவை உலகின் கலாச்சார மையமாக முன்பு மாற்றியிருக்கின்றன. அதனால்தானோ என்னவோ இந்தியத்தத்துவங்கள் அனைத்தும் 'உலகம், உலகம்' என்றே பொதுமையில் பேசுகின்றன.

சென்றவாரம் ஒரு ஆந்திர-அமெரிக்க விஞ்ஞானியைப் பார்த்தேன். தனது மனைவி மலேசியச்சீனப்பெண் என்றார். இவர்களிடம்தான் இன்று திராவிடப் பண்பைக்காணக்கூடியாத உள்ளது! என்று அவர் சொன்னதை என்னால் நம்ப முடிந்தது. யோஷி என்றொரு ஜப்பானிய நண்பர். அவரை இந்தியா போய் யோகம் கற்றுக்கொள்ள அனுப்பினேன். போய் வந்துவிட்டு அவர் சொன்னார் இந்தியா மேற்குலகம் போல் உள்ளது என்றார். உண்மைதான். ஆசியாவின் ஆதிப்பண்புகள். நாம் திராவிடப்பண்புகள் என்று சொல்வது இன்று இங்குதான் காணக்கிடைக்கின்றன.

முதற்பதிவு சமாச்சார் தமிழ் இ-தழ்.

0 பின்னூட்டங்கள்: