12B

நான் ஐரோப்பாவில் இருந்தவரை என் தமிழைத்தக்க வைத்து வளர்த்தது ஈழத்து சமூகம்தான். அப்படியொரு தமிழ் சமூகம் இல்லையெனில் தமிழ் சினிமா என்பது என்னைவிட்டு எங்கோ போயிருக்கும். தமிழ்நாட்டில் வாழ்ந்தபோதே பார்த்து, பார்த்துதான் சினிமாவிற்குப் போவேன் (பள்ளிப்பருவம் அப்படியல்ல. விட்டலாசார்யா படம் ஒன்று விடமாட்டேன் :-)

ஆறுமுகசாமி என்ற பெரியவர் 12B என்ற படம் பார்த்ததாகவும், ஒன்றும் புரியவில்லை என்றும், நான் விஞ்ஞானி என்பதால் எனக்குப் புரியுமென்று படத்தை பதிவு செய்து வைத்திருப்பதாகச் சொன்னார். ஆனால், கடைசிச் சில நிமிடங்கள் பதிவு செய்யுமுன் நாடா காலியாகிவிட்டது என்றும் சொன்னார். படம் பார்த்தவுடன் பிடித்து விட்டது. ஷியாம் மதுரைக்காரர் என்பதற்காக மட்டுமல்ல..இளமை துள்ளும் முகம். அதிர்ஷ்டக்காரர், முதல் படத்திலேயே சிம்ரன், ஜோதிகா ஜோடி.

சிம்ரன் செக்ஸி அழகு. ஆனாலும் அவராலும் நடிக்க முடியும் என்று காட்டிய படங்கள் சில. கன்னத்தில் முத்தமிட்டால் (ஐயோ! நந்திதா தாஸ்-என் அழகே!). அடுத்து, 12B. சோகம் தழுவும் முகம், அதில் மலரும் காதல். அதுவும் வளரும் போதே வாடிவிடுவது. ஜோதிகாவிற்கும் நடிப்பிற்கும் ரொம்ப தூரம். எதுவுமே அவருக்கு உதவுவதில்லை. முகம் ஒரு கோணத்தில் மாங்கோலாய்ட் பேபி போல். உடம்பிற்கு ஏற்ற முகமல்ல. சின்னது. உடம்போ அதைவிடக் கோளாறு (இவருக்கு அரை டிராயர் போட்டு பார்த்து ரசிக்க தமிழனால்தான் முடியும் :-). சுட்டியான முகம் -குளோசப்பில் மட்டும். அதுதான் ப்ளஸ் பாயிண்ட்.

பின்னால் இப்படத்தின் ஆங்கில மூலத்தையும் பார்த்தேன். ஷியாம் அடிபட்டுச் சாகும் காட்சி மட்டும் அப்படியே காப்பியடிக்கப்பட்டிருக்கிறது. மற்றபடி, இது தமிழ்ப்படம்தான். பாடல்கள் சூபர். படமாக்ககிய விதமும் சூபர். ஜோர்டானில் படமாக்கப்பட்டிருக்கும் பாட்டு டாப் கிளாஸ்.

ஆனாலும், இப்படித்தில் குற்றம் கண்டார் திரு.அரவிந்தன். கலைஞரின் மருமான். சிங்கப்பூர் ரோடு ஓர டீக்கடையில் புரோட்டா சாப்பிட்டுக்கொண்டு அலசினோம் கதையை. காப்பி அடித்தவருக்கு கதை முழுசாய் புரியவில்லை என்றார். இருக்கலாம். இது கற்றை இயற்பியல் (குவாண்டம் பிசிக்ஸ்) தத்துவம் சார்ந்த கதை. பட்டுப்பூச்சியின் சிறகை ஒடித்தால் பருவ காலங்கள் மாறும் என்பது போன்ற சித்தாந்தம். உலக சிருஷ்டியே collapse of the wave function என்பது போன்ற தத்துவம். எனக்கு எப்போதுமே இந்த probability theory பிடிக்கும் (ஐன்ஸ்டைனுக்கு பிடிக்காது என்பது வேறு விஷயம் :-) வேறொரு possibility-ல் என் வாழ்வு எப்படியிருந்திருக்கும் என்று கற்பனை செய்வது சுகம். X-வுடன் வாழ்க்கைப் பட்டிருந்தால்? Y-யின் உறவை வளர்த்திருந்தால்? Z-க்கும் எனக்கும் பொருந்தாது என்றுதான் நினைத்தேன். பொறுத்து வாழ்ந்திருந்தால்? குழந்தைப் பருவத்தில் சும்மா இருந்த ஓணானை சம்பூரண ராமாயணம் பார்த்த இபெக்டில் அம்பு விட்டுக் கொல்லாமலிருந்தால் என் வாழ்வு மாறியிருக்குமோ? இப்படியெல்லாம் சிந்திக்க வைத்த படம் 12B. அரவிந்தன் சொன்னது போல் வங்கி ஷியாம்..ஆட்டோ மெக்கானிக் ஷியாம் தன் காதலைச் சொல்லும் இடத்தில் (I love you- என்று உதட்டசைவில் ஜோதிகா சொல்வதைக் காணுவது போல் ஒரு காட்சி வந்திருக்க நியாயம் இல்லைதான்.

என்னைக்கேட்டால 12B நமது சேகரிப்பில் இருக்க வேண்டிய படம் (எதிரொலி ஒளி வருஷத்தில் கேக்குதுன்னு கோவிச்சுக்காதீங்க :-)

6 பின்னூட்டங்கள்:

ஜெயந்தி சங்கர் 2/20/2005 03:24:00 PM

அன்புள்ள கண்ணன்,
உங்களின் பதிவுகள் மட்டுமில்லாது நிழற்படங்களும் எனக்கு மிகவும் பிடித்திருக்கின்றன. உங்களுக்கு மட்டும் கடிகாரத்தில் 48 மணி நேரமோ ? ! வாழ்த்துக்கள். பொறாமையுடன், ஜெயந்தி (வல்லமை தாராயோ)

Thangamani 2/20/2005 03:59:00 PM

//(ஐயோ! நந்திதா தாஸ்-என் அழகே!)//

:)
நல்ல பதிவு!

வசந்தன்(Vasanthan) 2/20/2005 07:04:00 PM

//X-வுடன் வாழ்க்கைப் பட்டிருந்தால்? Y-யின் உறவை வளர்த்திருந்தால்? Z-க்கும் எனக்கும் பொருந்தாது என்றுதான் நினைத்தேன். பொறுத்து வாழ்ந்திருந்தால்? குழந்தைப் பருவத்தில் சும்மா இருந்த ஓணானை சம்பூரண ராமாயணம் பார்த்த இபெக்டில் அம்பு விட்டுக் கொல்லாமலிருந்தால் என் வாழ்வு மாறியிருக்குமோ? //நிம்மதியா வாழ முடியுதா? கொடுத்து வைத்தவரையா நீங்கள்?

நா.கண்ணன் 2/20/2005 11:42:00 PM

ஐயோ! ரொம்பக் கற்பனை பண்ணவேண்டாம் :-) சும்மா, இந்த ஆட்டோ கிராஃப் படத்தை மனசிலே வைச்சு எழுதினேன். அடுத்து அந்தப்படம்தான் (அண்ணே! என்ன ஒரே ரீலா இருக்கு :-))

நா.கண்ணன் 2/20/2005 11:45:00 PM

அட என்ன ஜெயந்தி நீங்க ஒண்ணு! உங்களையெல்லாம் சிங்கப்பூரிலே பாத்த பிறகு ஒரு காம்லெக்ஸே வந்துடுச்சு. உங்களுக்கு இல்லாத வல்லமையா? எனது புகைப்படங்களை ஒத்தரும் பாக்கலையோன்னு ஒரு கவலை இருந்தது. இப்போ இல்லை. நன்றி :-)

நா.கண்ணன் 2/20/2005 11:47:00 PM

தங்கமணி நீங்களும் நந்திதாதாஸ் விசிறியா? என்ன அழகு! என்ன நடிப்பு! இந்த உலகத்தைக்கெடுக்கவே வங்காளத்தைப் படைச்சான் போலருக்கு (ஐசுவைப் பிடிக்குமா?)