வலை விரித்தேன்! வருவாரில்லை!!

விரைவாக விரிந்து வரும் வலைப்பதிவாளர் உலகை எப்படிக் காண வேண்டும்?

என்ன அலைகளின் திரட்சியில் உருவாகும் திட்டுக்கள் எனலாமா? இல்லை, ஆடிக்காற்றில் அடித்து விழும் அத்திப்பழங்கள் எனலாமா? இல்லை, உலகைச் சுற்றிப் பிரிந்து செல்லும் பல்வேறு நதிகள் எனலாமா? வழித்தடம் எனலாமா? இல்லை, சூறாவளியில் வந்து சேரும், சேறும்-குப்பையும் எனலாமா? இல்லை, இதுவொரு நூலகம், அங்கு பல்வேறு வகையான புத்தகங்கள் வாசிப்புக்கு உள்ளன, அவைகளில் நமக்குப் பிடிதவைகளை வாசிக்கலாம் எனக் கருதலாமா? கொஞ்சம் ஹேரிபோட்டரில் வருவது போல் இவை பேசும் புத்தகங்கள், வளரும் புத்தகங்கள், வேண்டாமெனில் காணாமல் போகும் புத்தகங்கள். வழித்தடங்கள் அழிவதில்லையா? அது போல்தான் இதுவும் எனலாமா?

தமிழ்மணம் என்ற தளம் இப்படியெல்லாம் சிந்திக்க வைக்கிறது!

வலைப்பதிவு பற்றி எனக்கு திசைகள் வாசிப்பின் மூலதான் அறிமுகமானது. அதற்கு முன் பத்ரி அங்கு கொட்டகை போட்டுவிட்டார். மாலனும் ஒரு டேரா போட்டுவிட்டு, பின் கிளப்பிப் போய்விட்டார் (தான் அதிகம் எழுதமுடியாத காரணத்தை திசைகளில் சொல்லியிருந்தார்). வலைப்பதிவாளர்களில் பாதிக்குமேல் நரிக்குரவர்கள் :-) கொஞ்ச நாள் டேரா போட்டுவிட்டு, 'கடை விரித்தேன் கொள்வாரில்லை' எனப்போய்விடுபவர் (பலருக்கு பொழைப்பு இதுவல்லவே!). சிலர் சிங்கப்பூர் முஸ்தபா கடைபோல் டேரா போட்ட இடத்திலேயே வளர்ந்து மாளிகை கட்டிவிட்டனர். கொஞ்சப் பேர் சேர்ந்து co-operative society கூட கட்டிவிட்டனர். இன்னும் சில பேர் அவ்வப்போது வந்து குதித்து கலக்கல் செய்துவிட்டுப் போய்விடுகின்றனர்.

வலைப்பதிவை நாம் எவ்வெவ்வகையில் கையாள்கிறோம் என்பதைப் பொறுத்தே நமது வலையிருப்பு அமைகிறது.

1. வலைப்பதிவென்பது நாட்டில் நடக்கும் சூடான விஷயங்களைப் பற்றிப் பேசி, வம்பளப்பது எனில் இது மாளிகையாக வளர்ந்துவிடும் சாத்தியமுண்டு. ஏனெனில், வம்பு தும்புக்கா பஞ்சம்? இல்லை, நாட்டு நடப்பிற்கா பஞ்சம்? இல்லை ஒன்று பற்றி கருத்துச் சொல்வதற்கா பஞ்சம். Are we not highly opinionated beings on planet earth?
2. கவிதை எழுத இது வசதியான மீடியம். தினமொரு கவிதை எழுதி தனி வலைப்பக்கத்தில் ஏற்றுவதை விட இதில் ஏற்றுவது எளிது. ஆனால் கவிதை என்பது சுலோகம் சொல்வது போன்ற வழிபாட்டுக்குக் காரியமல்ல. சிலரால் தினம் கவிதை எழுதமுடிகிறது. ஆனால் அது கவிதைதானா எனக்காலம்தான் சொல்லவேண்டும்.
3. சினிமா விமர்சனம் எழுதினால் வண்டி ஓடும். ஏனெனில் சினிமா நிறைய வருகின்றன.
4. ரொம்ப சீரியசான விஷயம் பற்றித்தான் பேச வேண்டுமென நினைத்தால் இதிலொரு சிக்கலுண்டு. டிராபிக் இருக்காது. பின்னூட்டமில்லாத வலைப்பதிவு 'கொள்வாரில்லாத வலைப்பதிவு' என்ற எண்ணத்தை உருவாக்கும் (இது முழு உண்மை இல்லையெனினும்)
5. இந்தச் சிக்கலைத் தவிர்க்க பல நண்பர்கள் சேர்ந்து கொண்டு தனித்தனி வலைப்பதிவு நடத்தும் போது, சாதாரணமாக சாயந்திரம் நண்பர் வீட்டிற்குப் போவது போல் வலைப்பதிவிற்கு வந்துவிட்டுப் போகலாம் பாருங்கள்! எனக்கு ஞாபகமிருக்கிறது, இன்று 'கவன ஈர்ப்பின்' உச்சத்திலிருக்கும் எனதருமை காசி, முதலில் எழுதும் போது நண்பர்களை வந்து பார்க்குமாறு வம்பிழுத்துக் கொண்டே இருப்பார்.
6. காசியின் வளர்ச்சி காட்டுவது ஒன்றுதான். தொழில் நுட்பத்தைக் கற்க வேண்டும், அதைப்பொதுப் பயனிற்கு வைக்கவேண்டும், எப்போதும் சளைக்காத ஆக்கத்தில் (creative) இருக்க வேண்டும். அப்படியெனில் இங்கு குப்பை கொட்டலாம்!

ஆயினும், ஏதாவதொரு நிலையில் ஒரு அயர்ச்சி, ஒரு தளர்வு வருவது வலைப்பதிவில் காணக்கூடியதாகவே உள்ளது. இதற்கு முக்கிய காரணம் பின்னூட்டம்தான். அது இல்லாத போழ்து நாம் யாருக்கு எழுதுகிறோம்? ஏன் எழுதுகிறோம் என்ற கேள்வி நம்மைத் துளைக்கும். அது படுத்தும் அவஸ்தையில் ஒன்று கடையை மூடிவிட்டு கிளம்பத் தோன்றும் இல்லையெனில் கொஞ்சம் கீழிறங்கி வம்பு, தும்பில் மாட்டிக்கொண்டு 'கவனம்' பெறத் தோன்றும். வலைப்பதிவின் பலமும், பலவீனமும் இந்த கவன ஈர்ப்பே (attention trading).

எனவே நண்பர்களே காதல் செய்வீர்! ஆ! வலைப்பதிவை காதல் செய்வீர் :-) செய்வதன் அடையாளமாக ஒரு சின்னப்பூவை காட்டிவிட்டுப்போங்கள்!

பின் 'குப்பை' அன்பு சொல்வது போல் வலைப்பதிவென்பது தினம் மலரும் 'அன்பர் தினமே'!!

பிகு: வலைப்பதிவின் பிற பயன்கள் என்ன? எங்கே ஒரு பட்டியல் இடுங்கள் பார்ப்போம்!

16 பின்னூட்டங்கள்:

ஜெயந்தி சங்கர் 2/28/2005 02:21:00 PM

Welcome Kannan,
believe me I am regular reader of your bolg. In fact I read many of them regularly.

You have started well,..
vAzththukkaL !

Looking forward to reading your interesting thought provoking writings,..

rgds, J

மதி கந்தசாமி (Mathy) 2/28/2005 02:56:00 PM

கண்ணன்,

இந்த வாரம் சுவாரசியமாக இருக்குமென்று நினைக்கிறேன்.


பின்னூட்டங்கள்/மறுமொழிகளைப் பற்றி நல்ல கருத்துகளைச் சொல்லியிருக்கிறீர்கள். வலைப்பதிவாளர்கள் பின்னூட்டமிடவில்லையென்றாலும் நட்சத்திரப் பகுதியில் 'அருமை' என்றோ 'எருமை'[நன்றி: ரமணி] என்றோ இட்டாலே போதும். பலர் அதைக்கூடச் செய்வதில்லை.

அப்புறம், உங்களையும் இப்போது தற்சேர்க்கையாளர்கள் சம்பந்தமான விவாதங்களில்தான் பார்க்கிறேன். அதற்குமுதல் ஓரிரு தடவை பத்ரி வலைப்பதிவில் பார்த்தேன் என்று நினைக்கிறேன். ஒரு பத்து நிமிடமாவது ஒதுக்கலாமே? :)

-மதி

Narain 2/28/2005 02:59:00 PM

கண்ணன்,

விரிவாக எழுதியிருக்கிறீர்கள். ஆரம்பமே களை கட்டுகிறது. இந்த வாரம் சென்ற வாரத்தை விட கூடுதல் சுவாரசியமாக இருக்கக்கூடும்.

நா.கண்ணன் 2/28/2005 05:30:00 PM

மதி! மடக்கிவிட்டீர்கள் :-) இது பற்றியும் எழுத வேண்டும். வலைப்பதிவு ஒரு அபின்! பலமுறை மாட்டிக்கொண்டு இழுபறி பட்டிருக்கிறேன். சத்தியமாகச் சொல்ல வேண்டுமெனில், இணையத்தமிழ் வளர்ச்சிக்காக எனது ஆய்வை, எனது சுய வளர்ச்சியை சில நேரம் காவு கொடுத்ததுண்டு. இருப்பினும் 'தமிழ் எங்கள் உயிருக்கு நேர்' எனத்தினவு கொண்ட காலத்தைச் சேர்ந்தவன் என்பதால் இதை விடவே முடியவில்லை. எல்லாவற்றையும் வாசிக்கும் பேய்ப்பசி இருந்தாலும், இப்படி மாட்டிக்கொள்வேன் என்ற பயத்தால் வரமுடியாமலே போய் விடுகிறது! இந்த வாரம் நிச்சயம் என் கடமையை முழுமையாய் செய்வேன்.

நா.கண்ணன் 2/28/2005 05:34:00 PM

ஜெயந்தி, நாராயண் நன்றி. என் மடலாடற்குழு வாழ்வில் பின்னூட்டங்களே என் எழுத்தை முன்னெடுத்துச் சென்றுள்ளன. எனவே provocative-ஆன கேள்விகள் மூளைக்கு சோர்வைவிட ஊக்கத்தையே தருமென்று கருதுகிறேன் (the ball is in your court :-))

Thangamani 2/28/2005 05:37:00 PM

//வழித்தடங்கள் அழிவதில்லையா?//
இந்த வரி என்னுள் எதையோ அசைத்தது. அந்த அதிர்வு இன்னும் இருக்கிறது..

தி.ஜா ஒரு கதையில் ஒரு ஓவியத்தைப் பற்றி எழுதியிருப்பார்; அப்போது அடைந்தது போன்ற மனவெழுச்சி. அப்போது மிக அதிகமாகி சில நாட்களுக்கு என்னால் எதையும் பேசமுடியவில்லை.

நன்றி!

பாலு மணிமாறன் 2/28/2005 05:55:00 PM

பின்னூட்டங்கள் மிக முக்கியம் கண்ணன் சார்... பின்னூட்டங்கள் - சோர்ந்து வீடு திரும்பும் கணவனுக்குக் கிடைக்கும் அன்பு மனைவியின் முத்தங்கள் மாதிரி. ஆர்.வெங்கடேஷ் சிங்கப்பூர் "நேசமுடன்" நூல் வெளியீட்டின் போது, பின்ன்னூட்டங்களைப் பற்றி கவலைப்படுவதில்லை என்று கூறினார். ஆனால், என்னைப்போல் இப்போதுதான் வலை விரித்திருக்கும் ஆசாமிகள் சாமி சத்தியமா பின்னூட்ட்ங்கள் வேணும்னு நினைக்கிறோம்...

காசிலிங்கம், jsri, பாலாஜி-பாரி, முத்து என முகம் தெரியாத நண்பர்களிடமிருந்து கிடைத்திருக்கிற பின்னூட்டங்களே " வலைப்பதிவை"ப் பற்றி என்னுள் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது...சிந்தனைக்குரிய உங்கள் பதிவு சிறப்பானது !!!

நா.கண்ணன் 2/28/2005 05:56:00 PM

தங்கமணி நீங்கள் மெல்லுணர்வு கொண்டவர். உங்கள் எழுத்து முதல்முறை படித்தவுடனே பிடித்துவிட்டது. வழித்தடங்கள் அழிவது அத்தடத்தில் பயணப்பட்டவர்களுக்கு எவ்வளவு பெரிய இழப்பு தெரியுமா! காலமென்ற வழித்தடத்தில் நான் நடந்த பயணங்கள் அனைத்தும் அழிந்தொழிந்துவிட்டன என என்னும் போது கலங்கி நிற்கிறேன். மீட்கமுடியா வழித்தடங்கள் அவை. அவற்றின் எச்ச சொச்சங்கள், தூசி இன்னும் நினைவாக ஒட்டிக்கொண்டுள்ளன. இப்பொழுதை முழுவதுமாய் உள்வாங்கி நடக்கும் முழுத்திறன் இல்லை நண்ப!

நா.கண்ணன் 2/28/2005 06:01:00 PM

மணிமாறன்! நன்றி. வெங்கடேஷின் 'நேசமுடன்' ஒரு ஒற்றையடிப்பாதை. அதில் அவர் மட்டுமே நடப்பார். தமிழில் கையெழுத்துப் பத்திரிக்கை நடத்திய கி.ரா அதற்கு "ஊஞ்சல்" என்று பெயரிட்டார். ஆனால், ஊஞ்சல் ஒரு பக்கம் மட்டும் ஆடாதே! போக்குவரத்து உள்ள பதிவே சிறப்பானது இல்லையா? இதை அவருக்கு எழுதியது உண்டு. வலைப்பதிவு எழுத்தின் உரமே பின்னூட்டம்தான். காசியும் நண்பர்களும் செய்து தந்திருக்கும் வசதி இதை எவ்வளவு முன்னெடுத்துச் செல்கிறது! வாழ்க!

Thangamani 2/28/2005 08:20:00 PM

நன்றி கண்ணன்!

அல்வாசிட்டி.விஜய் 3/01/2005 01:01:00 AM

கண்ணன் அய்யா! எப்போது சிங்கப்பூர் வலைப்பதிவர் சந்திப்பு நிகழ்ந்ததோ அன்றிலிருந்து உங்கள் வலைப்பதிவு என் வாடிக்கை பதிவில் ஒன்று. பெரியவர் உங்களின் எழுத்துக்களில் ஒளிந்திருக்கும் தகவல்கள் மற்றும் உங்கள் எழுத்து நடை பிடித்திருக்கிறது. பேசிக் கொண்டேடேடேடேடேடே.... இருக்கும் உங்களிடம் அன்றைய சந்திப்பில் கற்றது ஏராளம்.

கலக்கல் வாரம்..... கண்ணன் வாரம் (சன் டிவி ஸ்டைலில்)

meena 3/01/2005 05:20:00 AM

பின்னூட்டம்தான் உற்சாகத்தைக் கொடுக்கிறது
என்பதென்னவோ உண்மைதான்(உஷா,காசி எல்லாம்
செய்வது போல் சோதனைசெய்கிறேன் பேர்வழி
என்று அப்படியாவது உற்சாகப் படுத்தலாம்தான்!!).

ஆனால் பின்னூட்டத்தை எதிர்பார்க்காமல் எழுதுங்கள்
படிக்கிறவர்கள் படித்துக் கொண்டுதான் இருப்பார்கள்
பின்னூட்டம் இடாமல் போவதற்கு பல காரணங்கள்.
என்று சில பேர் சொல்வது?

ஆரம்பமே எல்லோரையும் கவர்கிறது

இராதாகிருஷ்ணன் 3/01/2005 06:44:00 AM

தொடர்ந்து எழுதுங்கள். பின்னூட்டங்கள் பற்றிப் பலர் நிறையச் சொல்லிவிட்டார்கள். இருந்தும் அதன் நிலையில் பெரிய மாற்றம் இல்லை. மதி சொல்வதுபோல "வலைப்பதிவாளர்கள் பின்னூட்டமிடவில்லையென்றாலும் நட்சத்திரப் பகுதியில் 'அருமை' என்றோ 'எருமை'[நன்றி: ரமணி] என்றோ இட்டாலே போதும். பலர் அதைக்கூடச் செய்வதில்லை." கண்டுக்காம எழுதிக்கிட்டே இருங்க, படிக்கறவங்க படிச்சுக்கிட்டே இருக்கறோம். அப்புறம் ஏன் பின்னூட்டம் வரலைன்னு கேக்கறீங்களா?? :((

ஈழநாதன்(Eelanathan) 3/01/2005 02:34:00 PM

கண்ணன்,உங்கள் பக்கங்களைப் படித்தும் கேட்டும் வருபவர்களில் நானும் ஒருவன் பல்வேறு தகவல்களைத் தருகிறீர்கள் நன்றி.நீங்கள் கூறியபடி அடுத்த சந்திப்பில் தீவிரமாக இலக்கியம் பற்றி உரையாடலாம்.

நா.கண்ணன் 3/01/2005 05:03:00 PM

பின்னூட்டங்கள் முக்கியம் என்பது குறித்து முன்பே நாம் வலைப்பூவில் பேசியிருக்கிறோம். புதிதாக வருபவர்க்கு உபயோகமாக இருக்குமே என்று சொன்னேன். பின்னூட்டம் இல்லையெனினும் பார்க்கிறார்கள் என்பதை பல வழிகளில் அறிந்து கொள்ளலாம். என்னைப் பொறுத்தவரை எழுத்து ஒருவகை தியானம். என்னை நான் அப்போது தரிசிக்கிறேன். என் வண்டவாளங்கள் அப்போது தெரியும் :-) நம்மை நாம் அறிதலே இப்பிறப்பின் பலன். அதற்கு வலைப்பு ஒரு நல்ல காரணி. இத்தனை பேர் எழுதியதற்கு நன்றி. பேசாப்பொருள் என்று ஒரு கதை உங்களுக்காக, இந்த சிறப்பிதழ் கருதி எழுதியுள்ளேன். அது சர்ச்சை கிளப்பலாம். அமுங்கியும் போகலாம். பார்ப்போம்.

Desikan 3/01/2005 11:01:00 PM

கண்ணன்,

என்ன எழுதுவது என்று தெரியவில்லை. நீங்கள் கூறியது போல் பூக்களை ....
http://jmason.org/albums/2003-09-Cork/flower-closeup.jpg
விட்டுவிட்டு செல்கிறேன்.