நியூ

சமீபத்தில் சிங்கப்பூர் போயிருந்த போது நான் பார்க்க வேண்டுமென்று நினைத்து பார்க்காமல் விட்ட சில தமிழ்ப் படங்களை வாங்கி வந்தேன். அவற்றில் நியூ என்ற படமும் ஒன்று.

படம் பாமரத்தனமாக படமாக்கப்பட்டிருக்கிறது. முதலில் கதை கேட்ட போது புதுமையாக இருக்கும் என்றுதான் நினைத்தேன். சொதப்பி விட்டார்கள். பெரிய வயிற்றெரிச்சல் இந்த விஞ்ஞானிகளை சித்தரிப்பது. பெயரே 'சயின்ஸ்'! அடடா! கோக்குமாக்குத்தனமாக விஞ்ஞானிகள் சித்தரிக்கப்படுவது இதுவொன்றும் முதல் முறை இல்லைதான். பலே பாண்டியாவில் சிவாஜி சயிண்டிஸ்ட்டாக வருவார். விஞ்ஞானிகளென்றாலே 'நட்டுக்கழண்ட கேசுகள்' என்பது போல் இருக்கும் அது. அதில் வேடிக்கை குசினி அறைபோல் வீட்டிலேயே அவர் லாபரெட்டரி இருக்கும். அதுவும் தீ பத்தவச்சவுடன் ரெடியாக பத்திக்கொண்டு எரியும். இந்த நியூ படத்தில் ஏதோ கிராபிக்ஸ் காட்டறேன் என்று குப்பையான அனிமேசனைக் காட்டி ஏதோ கதை பண்ணியிருக்கிறார்கள். இதற்கு விட்டலாசார்யா படங்களே சுவாரசியமாக இருக்கும்!

இப்படத்திற்கு பாட்டு. ஏ.ஆர்.ரகுமான். எங்கு முட்டிக்கொள்வது என்று தெரியவில்லை. ரகுமான் போனால் மலைக்குப் போவார் இல்லையெனில் சொதப்போ, சொதப்பு என்று சொதப்பிவிடுவார். இங்கு இரண்டாவது ரகம். அவை படமாக்கப்பட்டிருப்பது கண்களுக்கு வேதனை.

கதாநாயகன் காணச்சகிக்கவில்லை. ஒரே ஆறுதல் தேவயாணி. நன்றாக நடித்துள்ளார். தமிழ் சினிமாவை விட்டுப்போகும் சிம்ரன் ஒரு அராத்துப் பெண் போல வந்து கலக்குகிறார். செக்ஸ் ஜோக்ஸ்ஸையெல்லாம் பவித்ரமான சிங்கை சென்சார் வெட்டிவிட்டது. அந்த ஐயராத்து மாமியை இன்னும் கொஞ்சம் காட்டியிருக்கலாம் (ரெட்டை அர்த்தமில்லை!).

மொத்தத்தில் தமிழகம் இன்னும் விஞ்ஞான யுகத்திற்கு வர ஒரு நூற்றாண்டு ஆகும் என்று தெரிகிறது. ரசிகர்களின் அறிவியல் பிரக்ஞையை இது அளவு காட்டுகிறதோ? ஒரு காலத்தில் மேலை உலகில் கூட விஞ்ஞானிகள் கிறுக்குகளாகக் காட்டப்பட்டாலும் இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதிப் படங்களெல்லாம் வலுவான அறிவியல் பின்னணியிலேயே எடுக்கப்பட்டுள்ளன. மேறிக்ஸ் படம், டெர்மினேட்டர் சீரீஸ், ஜுராசிக்பார்க் சீரீஸ் இவையெல்லாம் பிரமிக்க வைத்த அறிவியல் புனைவுகள். மேலை உலக ரசிகர்களுக்கு அறிவியல் பின்புலம் இருப்பதைக் காட்டுகிறது. இது.

கிராபிக்ஸ் கூட இப்படி சொதப்பலா? பெண்டாபோர், மீடியா டிரீம்ஸ் தொழிலகத்திற்குப் போயிருக்கிறேன். ஹாலிவிட்டிற்கு கிராபிக்ஸ் செய்து கொடுத்த தமிழக கிராபிக்ஸ் எங்கே போச்சு?

நியூ என்றுதான் பேரு. அறுபதுகளில் வந்த மாயாஜாலப்படங்களே எவ்வளவோ ஜோர்!

2 பின்னூட்டங்கள்:

எழில் 2/20/2005 12:20:00 AM

"காலையில் தினமும்" பாடலும் "தொட்டால் பூ மலரும் "பாடலும் இனிமையாகத்தானே இருந்தன?

Boston Bala 2/20/2005 01:35:00 AM

விட்டலாசார்யா படங்கள் எவ்வளவோ தேவலாம்தான் ;-))

>>கதாநாயகன் காணச்சகிக்கவில்லை

நடிப்பில் நல்லாத்தானே செய்திருந்தார்? குழந்தைத்தனமான மனசு, அளவுக்கு மீறிய வளர்ச்சி என்பதை விநோதமாக சித்தரித்திருந்தார்.

>>இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதிப் படங்களெல்லாம் வலுவான அறிவியல் பின்னணியிலேயே

இந்தக்கால ஹாலிவுட்டின் ஸ்பைடர்மேன், இன்விஸிபிள் மேன் போன்றவற்றைத் தாங்கள் நினைக்கவில்லையே :P