பூண் இரண்டு ஒத்துப்போகில் அலியாகும்!

நாம் இங்கு பால் ஈர்ப்பு பற்றிப் பேசுகிறோம். பால் இச்சை பற்றியல்ல. மிருகத்தனமென்று நாம் அடிக்கடி சொன்னாலும் மிருகங்களில் ஓரினப்புணர்ச்சி கிடையாது. அது மனிதனிடத்தில்தான் காணக்கிடைக்கிறது. ஆண்-பெண் என்ற வேறுபாடு உள்ள உயிரினங்களில் பால் ஈர்ப்பு என்பது பெண்ணை நோக்கிய ஆணின் ஈர்ப்பே. இதற்காக உயிரைக் கொடுத்து அவை போராடுகின்றன. கொரில்லா இனத்தில் ஆல்பா ஆண் தனது நாட்டாண்மையைக் காண்பிக்க அவனுக்குக் கீழுள்ள கூட்டத்தில் இருக்கும் எவரையும் pseudo-fucking பண்ணும். இது தனது மேலாண்மையக் காண்பித்துக் கொள்ள மட்டுமே. உண்மையில் உடலுறவு கிடையாது.

மனிதர்களில் மட்டும் தெளிவாக ஆண், பெண், இவையிரண்டும் கலந்த அல்லது ஒரு பாலில் மற்ற பாலின் குணங்கள் கூடிய 'அலி' என்னும் வகை இருக்கிறது. இது பிறப்பிலேயே வருவது என்று திருமூலர் சொல்கிறார்:

ஆண் மிகில் ஆண் ஆகும்; பெண் மிகில் பெண் ஆகும்
பூண் இரண்டு ஒத்துப் பொருந்தில் அலியாகும்
தாள் மிகும் ஆயின் தரணி முழுது ஆளும்
பாழ் நவம் மிக்கிடின் பாய்ந்ததும் இல்லையே

இதன் பொருள். ஆண்-பெண் கலவியின் போது சுக்கிலம் அதிகமானால் அது ஆண் குழந்தாகப் பிறக்கும். சுரோணியம் மிகுதியானால் பெண் குழவியாகும். இவையிரண்டும் சமமானால் அலியாகப் பிறக்கும் என்பது. திருமூலர் பேசும் சுக்கிலம், சுரோணியம் என்பது biochemically என்ன என்று எனக்குத் தெரியவில்லை. இவர் விந்துச்சாறில் இருக்கும் X-Y chromosome பற்றிப் பேசவில்லையென்று தோன்றுகிறது. ஆயின் அச்சாற்றிலுள்ள micro-environment பற்றிப் பேசுகிறார் என்பது போல் இருக்கிறது. விவரம் தெரிந்தவர் சொல்லவும்.

எது எப்படியிருப்பினும் 'அலி' என்பது நம் சமூகத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரிவு. அது கேவலமல்ல. அது பிறப்பிலேயே வருவது. இலட்சம் சுலோகங்கள் கொண்ட மகாபாரத்தில் வரும் கதாநாயகன் அர்சுனன் அலியாக சில வருடங்கள் கழித்திருக்கிறான். பாற்கடல் கடைந்த போது ஆணான திருமால் மோகினியாக உடல் மாற்றம் செய்து கொள்ள, சிவன் அவளைக் கண்டு மோகிக்க ஐயப்பன் பிறந்ததாக ஒரு கதையுண்டு. இது ஒருவகையில் ஓரினப்புணர்ச்சியே. இந்தியர்கள் வாழ்வை வாழ்வாகப் பார்த்தார்கள். அதிலுள்ள அதிசயங்களைப் பற்றி விகல்பமின்றி பேசியிருக்கின்றனர்.

இந்த ஆண்-பெண் என்ற வேறுபாடு உயிரினங்களுக்கு உயிர் தோன்றி பல மில்லியன் ஆண்டுகளுக்குப் பின்பே வருகிறது. நுண்ணுயிர்களில் இப்பாகுபாடு கிடையாது. பின் ஆண்-பெண் உறுப்புகளை ஒரே உடலில் தாங்கிய உயிரினங்கள் உருவாகின்றன. இவைகளை hermaphrodites என்பார்கள். பின் தனியான ஆண், தனியான பெண் உருவாகி இனக்கலப்பு செய்கின்ற நிலை வருகிறது. நமது ஆரம்பத் தோற்றதில் ஒரே நிலை இருந்ததால் அவ்வப்போது பால் வேறுபாடு கொண்ட உயர் உயிரினங்களில் கூட பால்வேறுபாடு குன்றிய (மங்கிய) உயிரினங்கள் தோன்றுகின்றன. உலகில் காணும் அதிசய பால் வேறுபாடுகள் பற்றிய இணையத்தளம் இருக்கிறது.

இந்த இயற்கை விதிகளை இப்போதுதான் மனித சமூகம் மீண்டும் மதிக்கக் கற்றுக் கொண்டுள்ளது. டென்மார்க்கில் ஹோமோசெக்சுவல் கல்யாணம் அரசு அங்கிகாரம் பெற்றுவிட்டது. பிரான்சிலும் உண்டு என்று நம்புகிறேன். பெரும்பாலும் ஐரோப்பாவில் ஒருவர் பாலீர்ப்பு என்பதே அது எத்திசை நோக்கியதாக இருப்பினும் ஏற்றுக் கொள்ளும் மனோபாவம் வந்தாகிவிட்டது. ஆனால் தமிழர்களுக்குள் இந்த ஞானம் இன்னும் பரவவில்லை.

எனவே பாலீர்ப்பு என நாம் பேசுவது வக்கிர பாலியல் பசி பற்றி அல்ல. எப்படி ஆணும் பெண்ணும் இணைந்து வாழ முடியுமோ அதுபோல் ஆணும், ஆணும், பெண்ணும் பெண்ணும் இணைந்து வாழலாம் எனும் கருத்து பற்றியதே!

2 பின்னூட்டங்கள்:

Thangamani 2/27/2005 05:38:00 PM

அதிலும் திருமூலர், கருவுறுதலில் (குழவியின் பாலைத் தீர்மானிப்பதில்) மூச்சின் பங்கினையும் பற்றியும் கூறியிறுப்பார். சில வகை ஆசனங்கள் இந்த மூச்சின் ஓட்டங்களை வேண்டியவாறு மாற்றவல்லவை என்பதை நான் யோகாசனம் பயிலும் போது செய்முறையில் அறிந்த போது ஆச்சர்யப்பட்டேன்.

நன்றி!

நா.கண்ணன் 2/27/2005 08:44:00 PM

உண்மைதான். திருமூலர் சுவாசத்தின் மூலம் உருவாகும் கருவின் பாலை நிர்மாணிக்கமுடியும் என்கிறார். எப்போதோ முன்பு Readers Digest-ல் பெண்ணுருப்பின் உள்ளே உள்ள நுண்சூழலின் வேதிம மாற்றம் மூலம் (அதாவது அமில-கார குணங்கள்) ஆண் குழவி கொடுக்கும் Y-Chromosome அல்லது பெண் குழவி கொடுக்கும் X-chromosome இவைகளை தேர்ந்து அனுப்பமுடியும் என்று படித்திருக்கிறேன். இப்போது டெஸ்ட்டூப் பேபிகளின் பால் நிர்ணயம் பண்ணமுடியுமாவென்று தெரியவில்லை (theoritically possible). திருமூலர் அலிகள் பற்றிப்பேசுவதுதான் அறிவியலுக்கு இன்றைய சூழலில் முக்கியமாகப்படுகிறது. நாம் இத்துறையை வளர்த்தெடுக்காமல் விட்டு விட்டோம்!