சொய்ஸ் (Choice)

நாம் வாழும் காலம் விசித்திரமானது. முன்னெப்போதும் இல்லாத அளவு வாய்ப்புகள் அதிகமுள்ள காலம். எனது பால்ய காலத்தில் இவ்வளவு வாய்ப்புகள் கிடையாது. உள்ளூரில் ஒரே உயர்நிலைப் பள்ளி (இப்போது நிறைய வந்து விட்டது). ஒரே நூலகம். பள்ளிக்காலங்களில்தான் முதல்முறையாக கோதுமை எங்களுக்கெல்லாம் அறிமுகமானது. அதற்கு முன் பூரிக்கிழங்கு, சப்பாத்தி, ரவா தோசை என்பதெல்லாம் கேள்விப்படாத ஒன்று. சீனிக்கு ரேஷன் உண்டு. சில நேரம் மண்ணெண்ணெய்க்குகூட ரேஷன் இருந்தது. பால் விநியோகம் அவ்வளவு கிடையாது. எனவே வீட்டில் இரண்டு பசு மாடுகளுண்டு.

என் அன்னைக்கு ஒரே கணவர் :-) அப்பாவிற்கு ஒரே மனைவி :-) அவர்கள் தமிழகத்தை விட்டு வெளியே போனதில்லை. அம்மாவின் குறைந்த பட்சப்பயணம் 50 கி.மீ சுற்றளவிற்குள் இருக்கலாம். இன்றுதான் காலம் எவ்வளவு மாறிவிட்டது! அப்பாவின் பிள்ளையான நான் Airport hopper-ஆக வாழ்கிறேன். என் வாழ்வின் கணிசமான பொழுதுகள் வின்னில் கழிந்திருக்கின்றன. அவரது பேத்தி (என் பெண்) பள்ளி முடிப்பதற்குள் பல நாடுகள் பார்த்துவிட்டாள். நம்ம ஊரில் இன்னும் சிலர் ஏர்போர்ட்டே பார்த்திராத போது அவள் தனியாக பல நாடுகள் பயணப்பட்டிருக்கிறாள். வாய்ப்புகள் அதிகமாகிவிட்டன.

Choice என்பது வரப்பிரசாதம் என்பது போய் ஒரு பளுவாக மாறிவிட்டது இப்போது. எதற்கெடுத்தாலும் choice. அக்காலத்தில் ரேடியோ வாங்குவது expensive என்பதால் ஊருக்கு ஒரு பஞ்சாயத்து ரேடியோவுண்டு. லவுட்ஸ்பீக்கர் வைத்து ஆத்தாங்கரையில் போடுவார்கள். இன்று தனியாக யாரும் ரேடியோ வாங்குவதில்லை. எல்லாம் அவியல், கூட்டு வகைகள்தான். எனது mp3 player-ல் ரேடியோவுண்டு, ரெகார்டிங் செய்யமுடியும், கணினிப் போக்குவரத்து செய்யமுடியும், டிஜிட்டல் இசையை இங்குமங்கும் மாற்றமுடியும். இது போதாது என்று 1 கிகாபை சேமிப்புக் கிட்டங்கியுமுண்டு. இந்தமாதிரி mp3 player வாங்கப்போனால் குறைந்தது 50 மாடல்களாவது இருக்கின்றன. இப்போதெல்லாம் informative-வாக இல்லையெனில் ஒரு குண்டூசி கூட வாங்கமுடியவில்லை. தேர்வு..தேர்வு..அலுக்கவைக்கும் தேர்வுகள். எதையெடுத்தாலும்.

என் தந்தையின் வாழ்வைக்கண்டு பொறாமையாக இருக்கிறது. அம்மாவை நினைத்தால் பெருமையாக இருக்கிறது. இப்போது மணவாழ்வு என்பதில்கூட நிறைய சாய்ஸ் இருக்கு. சட்டென மாப்பிள்ளை/பெண் அமைவதில்லை, அமைந்தாலும் மணவாழ்வதென்பது முன்பு போல் நிரந்தரமில்லை. ஒன்று இல்லையெனில் மற்றொன்று! கல்யாணம் செய்து கொண்டும் வாழலாம், கல்யாணம் செய்து கொள்ளாமலும் வாழலாம். அவரவர் விருப்பம். ஒருவருடன் வாழலாம், கூடியும் வாழலாம். ஆனாக வாழலாம், ஆண்/பெண் இரண்டுமாயும் வாழலாம். ஆண் ஆணுடன் வாழலாம், பெண் பெண்ணுடன் வாழலாம்.

அம்மாவை நினைத்தால் ஆச்சர்யமாக இருக்கிறது. 16 வயதில் கல்யாணம் செய்து கொண்டாள். கஷ்டமோ நஷ்டமோ கட்டிய கணவனை விட்டுப் பிரியவில்லை. யாரும் தர்மசீலர்கள் இல்லை, nobody is perfect வாழ்வை, வாழ்வதின் மூலம் புரிந்து கொண்டாள். கஷ்ட்டம் வந்தபோது அழுதாள். மகிழ்வான காலங்களில் குடும்பத்துடன் குதூகலித்தாள். இன்று ஆணுக்கும், பெண்ணிற்கும் சாய்ஸ் அதிகமாய் விட்டது. அதனால் பொறுமை போய்விட்டது. கடைசிவரை இருந்து பார்த்துவிடுவோம் என்ற மனோதிடமில்லை. நமது சௌகர்யங்களை விட, நமது அசௌகர்யங்கள் நம் கவனத்தை அதிகம் ஈர்க்கின்றன. எனவே அசௌகர்யமற்ற வாழ்வை ஒதுக்க இந்த சாய்ஸ் ஒரு சாக்காகப் போகிவிட்டது! ஒன்றில்லையெனில் மற்றொன்று.

ஒருவகையில் இந்த சாய்ஸ் நமக்கு அதிக சௌகர்யத்தைத் தருகிறதா? இல்லை பிரச்சனைகளைத் தருகிறதா எனக் கேள்வி கேட்க வேண்டிய தருணத்தில் இருக்கிறோம்.

அம்மா போன தடத்திலேயே சித்தி இன்னும் போய்க்கொண்டிருக்கிறாள் தனது 85 வயதில். அவருக்கு வாழ்வு அலுப்பாக இருப்பது போல் தெரிவதில்லை. நமக்கு ஏன் ஒருவருக்கொருவர் இவ்வளவு விரைவில் அலுத்துப்போகிறது?

இதுதான் இன்றைய நட்சத்திரக் கேள்வி!!

0 பின்னூட்டங்கள்: