உலக நீர் தினம் (மார்ச் 22, 2005)

உலக நீர் தினம் (மார்ச் 22, 2005)


பேரிங் ஜலசந்தியில் எடுத்தபடம் நா.கண்ணன்

வள்ளுவன் உலக அமைப்பை நோக்கி ஒரு சூத்திரம் சொல்கிறான். "நீரின்றி அமையாது உலகு" என்பதுதான் அந்தச் சூத்திரம்.

ரொம்பச் சாதரணமான உண்மை என்பது போல் தோன்றினாலும் இது ஆழமான பொருள்ள சூத்திரம். ஏன்?

1. அறிவியல் இதுவரை அறிந்தவரையில் பிரபஞ்சத்திலேயே பூமி ஒன்றுதான் நீருள்ள கிரகம். Water planet என அழைக்கப்படும் பூமியின் அழகும், ஆதாரமும் இந்த நீர்தான்.
2. நீர் இல்லையெனில் பிரபஞ்சத்தில் உயிர் தோற்றம் என்பது இல்லை.
3. கடலிலிருந்துதான், மனிதன் உட்பட இன்று பூமியில் காணும் அனைத்து ஜீவராசிகளும் உருவாயின. உயிர்களின் தோற்றம் நீர் என்பதால்தான் கருப்பை சிசு இன்றளவும் நீர்க்குடத்தில் மிதந்து கொண்டிருக்கிறது.
4. நம் உடல் நீரின்றி இயங்காது. நீர் இன்றி இரத்த ஓட்டம் இல்லை. நீர் இன்றி உணவு செரித்தல் இல்லை. நீர் இன்றி நம் உடலிலிருந்து கழிவு வெளியேற்றமில்லை. நீர் அளவு உடலில் குறைந்துவிட்டால் இறந்துவிடுவோம்.

எனவேதான் வள்ளுவன் நீரின்றி அமையாது உலகு என்றான்.

உலகில் மூன்றில் இரண்டு பங்கு இடத்தை நீர்தான் அடைத்துக் கொண்டுள்ளது. கடலைவிட்டு தாவரங்களும், பல உயிரினங்களும் கோடான கோடி வருஷங்களுக்கு முன் வந்துவிட்டாலும், கடல் நீரை தரைக்குக் கொண்டு வந்து சேர்த்து உயிர்வாழ வழி செய்கின்றன மேகங்கள். இந்த அறிவியல் உண்மையை, நீர்ச்சுழற்சியை ஆண்டாள் அழகாக திருப்பாவையில் செப்புகிறாள்:

ஆழி மழைக் கண்ணா ஒன்று நீ கை கரவேல்
ஆழி உள் புக்கு முகந்து கொடார்த்து ஏறி...
சர மழை போல்
வாழ உலகினில் பெய்திடாய்!

என்கிறாள். எனவே உலகின் பருவ காலங்களை நிர்ணயம் செய்வது இந்த நீர்ச்சுழற்சி. நீர் பனியாக ஆர்டிக், அண்டார்டிக் பிரதேசங்களில் உறைந்து கிடைக்கிறது. மேலே பனி மூடியிருந்தாலும் கீழே நீர் உறையாமல் இருந்து துருவ வாழ்வை சீர் செய்கிறது நீர். உலகிலேயே மிகவும் வளமான பிரதேசங்கள் இந்தப் பனிமூடிய கடல்கள். உஷ்ணப் பிரதேசமாகிய இந்தியா, சிங்பப்பூர், மலேசியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் கார்காலம் மிகவும் முக்கியமான காலம். விவசாயத்தை முடக்கிவிடுவது கார்காலம்தான். வடக்குப் பிரதேசங்களில் தொடர்ந்து சிறு தூறல் இருந்து கொண்டே இருக்கும். குளிர் காலத்தில் பனியாக நீர் வந்து சேரும். அதனால்தான் அங்கும் உயிர்ச் சங்கிலி அறுந்துவிடாமல் இருக்கிறது. உதாரணமாக, நமது செய்கையினால் பூமி மண்டலங்கள் சூடேறினால் பனிப்பிரதேசம் உருகி கடல் மட்டம் உயர வாய்ப்புள்ளது. அப்படி நடந்தால், இன்றுள்ள நெதர்லாந்து, பங்களாதேசம், நியூயார்க் இவையெல்லாம் கடலுக்குள் மூழ்கிவிடும் அபாயமுள்ளது. கடலுக்குள் நடக்கும் பூகம்பங்களால் ஆழிப்பேரலைகள் தோன்றி தேசங்களை அழிக்கும் என்ற உண்மையை உலகு சமீபத்தில் கண்டது. 'எல் நினோ' கடல் நீரோட்ட மாற்றம் பெரும் பஞ்சங்களை உலகில் தோற்றுவிக்க வல்லன. கடல் அமைதியாய் இருப்பது போல் தோற்றம் தந்தாலும் அதுவொரு பர,பரப்பான உலகம். அதனுள் நடக்கும் மாற்றங்கள் உலகின் பருவ நிலையை வெகுவாக பாதிக்க வல்லன.

உலகெங்கும் நீர் கிடந்தாலும் குடிக்கத்தக்க நீர் இல்லையெனில் மண்ணில் உயிர் மாய்ந்துவிடும். எனவே மழை நீரை உதாசீனம் செய்தல் கூடாது. நீர் வளம் என்பது மிகவும் கவனமாக பாதுகாக்க வேண்டிய ஒன்று. தமிழ்நாட்டில் இதை மனதில் கொண்டே அந்தக் காலத்தில் கண்மாய்களும், ஏரிகளும் தேக்கி வைத்தனர். இன்று அவையெல்லாம் பிளாட் போட்டு விற்கப்படும் போது கிணற்று நீர் அடி பாதாளத்திற்குப் போய்விடுகிறது. பம்பு செட் போடுவதைவிட பெய்யும் மழையை ஒழுங்காக சேமிப்பதே தூர நோக்குள்ள செயல்.

மார்ச் 23, 2005, மீடியா கார்ப் ரேடியோ (ஒலி 96.8 FM), சிங்கப்பூரில் வந்த ஒரு நிமிட வானொலிப் பேச்சின் மூலம்

6 பின்னூட்டங்கள்:

Thangamani 3/24/2005 09:52:00 AM

ரொம்ப நல்ல பதிவு கண்ணன். நன்றி!

//பம்பு செட் போடுவதைவிட பெய்யும் மழையை ஒழுங்காக சேமிப்பதே தூர நோக்குள்ள செயல்//

மழைநீரை எல்லா வழிகளிலும் சேமிப்பது ஒன்றே ஒரே வழி..

இன்னொன்று இந்த உடலும் 70% தண்ணீராலேயே ஆக்கப்பட்டது.

நா.கண்ணன் 3/24/2005 10:37:00 AM

நன்றி தங்கமணி. இது நீருலகம். நீரின்றி எதுவுமே அமையாது இங்கு!

Narain 3/24/2005 01:27:00 PM

சும்மா தமாஷுக்கு, அதுனாலதான், நம்மாளு எப்பவும் "தண்ணியிலேயே" இருக்கறான் போல இருக்கு, வள்ளுவத்தை விவகாரமா புரிஞ்சு வைச்சுக்கிட்டு இருக்காங்கப்பா.

சீரியஸாக சொல்ல வேண்டுமானால், மழைநீர் தான் ஒரே வழி. இதே கருத்தில் தான், நதி நீர் இணைப்பு போன்றவையெல்லாம், சுற்றுச்சூழலினை குளறுபடியாக்கும் முயற்சியாக பார்க்கிறேன். இதில் எனக்கு திரு. உதயமூர்த்தியின் கருத்துக்களின் மீது கருத்து வேறுபாடுகளுண்டு. மழை மண்ணின் கொடை, அதை திறம்பட நிர்வகிப்பது (வெறுமனே உபயோகிப்பது அல்ல) இன்றைய சுழலில் மிக அவசியம். உங்களுக்கு எப்படியோ, ஆனால் சென்னையில் இதுதான் முதன்மையான நிலவரம்.

நா.கண்ணன் 3/24/2005 02:37:00 PM

வாங்க நாணா:

கொரியாவிலும் 'தண்ணி' யின்றி அமையாது உலகு :-))

இந்தியாவில் நதிகளை இணைக்க வேண்டும் நாணா. சூழல் பாதிப்பு அதிகமாக இருக்காது. எவ்வளவு நீர் வீணாக கடலில் கொட்டுகிறது!

மழை நீர் ஒரு வரம். கடவுள் வாழ்த்திற்குப் பிறகு அவசரம், அவசரமாக 'வான் சிறப்பு' பேசுகிறான் வள்ளுவன். மழை இல்லையென்றால் கடவுள் வாழ்த்தே இல்லை :-) எவ்வளவு ஏரிகள், கண்மாய்கள் இன்று தூர்ந்து போய் காண்கிரீட் வனமாக மாறிக்கொண்டு வருகின்றன.

சென்னைக்குச் சேதி: எல்லோரும் சாகபட்சியாகிவிடுங்கள். மழை நீருக்கு ஏங்குங்கள். வரும் நீரைத் தேக்குங்கள். கோயில் குளங்களை தூர்த்து நிரப்புங்கள். பழைய 'கண்'களைக் கண்டு அடைப்பை நீக்குங்கள். புதுசாய் ஒன்றும் செய்ய வேண்டாம். கரிகால் சோழன் செய்தத்தை கண்டினியூ செய்தால் போதும்!

Thangamani 3/24/2005 04:53:00 PM

கண்ணன் நதிகளை இணைப்பது சரியல்ல என்றுதான் நான் சொல்லுவேன். எவ்வளவு நீர் வீணாகிறது என்ற வார்த்தையே எனக்கு புரியாதது. எந்த நீரும் வீணவதில்லை. அந்த நீரில் குறைவு ஏற்பட்டால் அது நதிக்கரை சூழலில், கடற்சூழலில் பல மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். அதே போல பெரிய அணைகளைக் கட்டுவதும் கூட. எனக்குத் தெரிந்தது, சிறிய சிறிய நீர்த்தேக்கங்களை அதிக அளவில் ஏற்படுத்துவதும், பழைய நீத்தேக்கங்களை சரியாக புணரமைப்பதும் இதன் மூலம் மழை நீரை மிகச்சரியாக பயன்படுத்துவதுமே. இதைத்தான் அன்னா ஹசாரே செய்தார். பெரிய திட்டங்கள் சூழல் பாதிப்பையும் ஊழலையுமே ஏற்படுத்தும்.

நா.கண்ணன் 3/24/2005 08:16:00 PM

தங்கமணி: நதி நீர் வீணாவதில்லை என்பதை ecological sense-ல் ஒத்துக்கொள்கிறேன். எல்லாமே ஒரு சுழற்சிதானே (I mean particle deposition etc.,) பெரும் திட்டங்களில் ஊழல் வரும். என்ன செய்வது? அதற்காக நல்ல திட்டத்தை கிடப்பில் போட முடியாது. சோழர்கள் காலத்தில் காவேரியின் ஒரு சொட்டு நீர் கடலுக்குப் போகாமல் பார்த்துக் கொண்டனர். ரொம்ப சாமர்த்தியம்தான். அது போல் இன்று நதிகளை நூற்றுக் கணக்கான கால்வாய் வழியே இந்தியாவெங்கும் பிரித்துவிட்டு வேளாண்மை செய்யலாம். பிரம்மபுத்ரா நதியில் சீனாக்காரன் அணை கட்டப் போறான்.

இந்தியாவில் உடல் பலம் இருக்கிறது, தொழில் நுட்பம் இருக்கிறது, நூற்றாண்டு விவசாயப் பின்புலம் இருக்கிறது. நினைத்தால் சாதிக்கலாம்.

முதல் சாய்ஸ், மழை நீரைப் பயன்படுத்துவது என்று கொள்ளலாம்.