களவும் கற்று மற!

இது குழந்தைப் பருவத்தில் நடந்தது. நான் வளர்ந்த பூமி முக்குலத்தோர் நிறைந்த பூமி. பயம் என்றால் என்னவென்று தெரியாத மனிதர்கள் நிரம்பிய பிரதேசம். என் அன்னைக்கும் அசாத்திய தைர்யமுண்டு. அக்காலத்தில் கிராப்புரங்களில் மின்சார வசதி கிடையாது. இருந்தாலும் கரெண்டு சார்ஜை குறைக்க 'ஜீரோ வால்டு' பல்புதான் போடுவார்கள். அதைப் போடுவதற்குப் பதில் பேசாமல் மெழுகுதிரி ஏற்றிவிடலாம். இருந்தாலும் அதுதான் அப்போதைய நிலமை! ஒருநாள் இரவு அம்மா கொல்லைக்குப் போனாள். கிணறில் நீரெடுக்கப் போனால் வாளியிருக்கிறது கயிறைக் காணவில்லை. ஆள் அரவம் வேறு கேட்கிறது. எல்லோரும் பயந்துவிடுவார்கள், ஆனால் அம்மா, 'எவண்டா கயிறைக் கழட்டினவன்?' என்று சத்தமாகக் கேட்டாள். இருட்டிலிருந்து ஒரு குரல் 'ஆத்தா! சத்தம் போடாதே. இரண்டு மூட்டை நெல் எடுக்க வேண்டியிருக்கு. காலைலே கயித்தைப் பையனிடம் கொடுத்து அனுப்புகிறேன்". இதுக்கு அம்மாவின் பதில், 'யாரு முஸ்தபாவா? உன் வேலையைத் திரும்ப ஆரம்பிச்சுட்டியா? இன்னிக்கு யாருக்கு வேட்டு?'. இது நிச்சயம் வம்புதான். ஒரு திருடனிடம் கேட்கக்கூடாத கேள்வி. ஆனாலும் அவன் பதில் சொன்னான். 'ஐயரு நிலத்திலே நல்ல மகசூலாமே! அதான் ரெண்டு மூட்டை எடுத்திட்டுப் போலாம்னு வந்தேன்!'. முஸ்தபா சொன்னபடி மூலை வீட்டு ஐயரிடம் இரண்டு மூட்டை நெல்லைக் கிளப்பிவிட்டான், இரவோடு இரவாக. அடுத்த நாள் நீரிரைக்க முடியாமல் எல்லோரும் தவித்துக் கொண்டிருக்கும் போது ஒரு சிறுவன் வந்து புதிதான கயிறைக் கொடுத்து விட்டுப் போனான்.

இந்தத் திருட்டு கொஞ்சம் ராபின்ஹூடு வகைத் திருட்டு. இப்படியான திருட்டு எங்களூரில் சகஜமாக நடக்கும். யாரும் அதிகம் கண்டு கொள்ள மாட்டார்கள். ஏனெனில் ஏழை பாழைகள் உள்ள ஊரில் அதிகம் இருக்கும் இடத்திலிருந்து எடுத்துக் கொள்வது நியாயமாகப் பட்டது. உண்மையில் இதுதான் திருட்டின் அடிப்படைக் குணம்சமே. நமக்கு வேண்டுவது அதிகமாக ஓரிடத்தில் இருந்தால் கை துருதுருக்கிறது! இது மனிதனுக்கு மட்டுமான உணர்வல்ல. விலங்குகளும் இப்படியே எண்ணுகின்றன. சில மாடுகளை எவ்வளவு கட்டுப்படுத்தினாலும் அடுத்தவர் வேலியில் வாய் வைத்துவிடும். இம்மாடுகளுக்குச் சூடு போட்டுப் பார்ப்பார்கள். காலில் கட்டை கட்டிப்பார்ப்பார்கள். அப்படியிருந்தும் அதற்கு அடுத்த வீட்டு முருங்கை கொப்பே சுவையாக இருக்கும்!

நிறைய உள்ள இடத்திலிருந்து எடுக்கத் தூண்டுவதுதான் சூப்பர் மார்க்கெட் திருட்டும். நிறைய இருக்கும் போது சின்னதா ரெண்டு பைக்குள்ள போட்டுக்கிட்டா என்ன என்று தோணும். சூப்பர் மார்க்கெட் இல்லாத கிராமத்து மளிகைச் சரக்குக் கடையிலேயே இம்மாதிரித் திருட்டு சகஜமாக நடக்கும். நவதானியங்கள் விற்கும் கடையில் யாரும் பார்க்காமல் அப்படியே ஒரு கை அரிசியை பைக்குள் போட்டுக் கொள்ளும் சிறுவர்களைப் பார்த்திருக்கிறேன். சில பெரிசுகள் பேசிக்கொண்டே பல தானியங்களால் வாயை நிரப்பிக் கொள்ளும். இம்மாதிரித் திருட்டைச் சமாளிக்க வந்தவுடன் கைக்கெட்டும் தூரத்தில் மாட்டுப் புண்ணாக்கை வைத்துவிடுவர்! இதில் கடலைப்புண்ணாக்கு பல்லைப் பெயர்த்துவிடும். ஆயின் எள்ளுப் புண்ணாக்கை திருடிச் சுவைக்கும் நபர்களைப் பார்த்திருக்கிறேன்.

சூப்பர் மார்க்கெட் திருட்டை சமாளிக்க ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு வகையான வழிமுறைகள். இப்போது எல்லோரும் வீடியோ கேமிரா வைத்துக் கண்காணிப்பதை வழக்கத்தில் கொண்டு வந்து விட்டனர். சிறிய சாமான்கள் வாங்கும் போது கூடையில் போட்டுவிட்டு சில நேரம் எடுத்ததே மறந்து போய் பணம் கட்டாமல் வந்துவிடுவோம். ஆனால் வெளியே வரும்போது சில சென்சார் காட்டுக்கூச்சல் போட்டுக் காட்டிக்கொடுத்துவிடும். இல்நலையெனில் செகுரிட்டி ஆள் வந்து பிடித்துவிடுவான். பிடிபட்ட பின் நடக்கும் கதை நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது. அமெரிக்கா போன்ற வாடிக்கையாளர்களை மதிக்கும் நாட்டில் விஜாரித்துவிட்டு இனிமேல் இப்படி நடக்காது என்று உத்திரவாதம் வாங்கிக்கொண்டு விட்டுவிடுவர். ஜெர்மனியில் இந்தக் கடைப்பக்கம் ஒருவருடம் வரமாட்டேன் என்று கையெழுத்து வாங்கிக்கொண்டு, போலிசுக்கும் தெரிவித்துவிடுவர். ஆனால், இந்த சிங்கப்பூர் சட்டம்தான் இதிலே ரொம்ப கட்டுபட்டித்தனமாக இருக்கிறது. மறுபேச்சிற்கு இடமில்லாமல் ஆளை ஜெயிலில் ஒரு மாதம் வைத்துவிடுகின்றனர். இது ரொம்பக் கொடுமை. நிஜமாகத் திருடினால் தேவலை, ஆனால் மறந்துபோய் பணம் கட்டாத வெகுளிகள் கூட சிறைவாசம் அனுபவிக்க வேண்டுமென்பது ரொம்பக் கொடுமை. சமீபத்தில் சிங்கை எழுத்தாளர் ஜெயந்தி சங்கர் எழுதி மிகவும் அலசப்பட்ட ஒரு கதை இந்த நிலையைத் தத்ரூபமாக விளக்குகிறது. ஒரு இணைய சந்திப்பில் அது தனது நண்பரொருவருக்கு நடந்தாகச் சொன்னார்.

இந்தப் பயமுறுத்தலை சிங்கை முஸ்தபா செண்டருக்குப் போனால் அனுபவிக்கலாம். அங்கு வாடிக்கையாளருக்கு மதிப்பே கிடையாது. வருபவனெல்லாம் கடைந்தெடுத்த திருடன் என்பது போல் பாவிக்கிறார்கள். நாகரிகமுள்ள எவருக்கும் இது அதிக எரிச்சலைத்தரும். சரியாக ஒழுங்கமைக்கப்படாமல் வளர்ந்துவிட்ட அந்த செண்டரில் குண்டூசியிலிருந்து ஹுந்தே கார்வரை வாங்கலாம் என்றாலும் வாங்கி முடிப்பதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடும். ஒரு உருட்டு வண்டி எடுத்தோமா, சாமான்களை அள்ளிப்போட்டோ மா, கேஷ் கவுண்டரில் பணம் கட்டினோமா என்றில்லை. வண்டி சில இடங்களில் ஓடும். சில டிபார்மெண்டில் கொண்டு போகமுடியாது. அப்படி இப்படி வாங்கி காசு கட்டினால் இறுக்கமாக ஒரு பொட்டலம் போட்டு கட்டித்தந்து விடுவர். பின் அதைப் பிரிக்கவே முடியாது (அதாவது வழியில் நாம் ஏதாவது லவட்டுவோமென்று அவர்களுக்குப் பயம்). வீட்டிற்கு வந்து கத்தரிக்கோல் வைத்து வெட்டித் திறந்தால் உண்டு. முஸ்தபா கடைக்கு போய்விட்டு ஆளுக்கு ஆள் பொட்டலத்தைத் தூக்கிக் கொண்டு அடுத்திருக்கும் ஆனந்தபவன், கோமளவிலாஸ் என்று சாப்பிட வருவார்கள். ஒரு ஆசைக்குக்கூட வாங்கிய பொருளைப் பார்க்கமுடியாது.

முஸ்தபாவில் வாங்கிதற்கு நமக்குக்கிடைக்கும் முத்திரை "நீ திருடன். உன் புத்தியை நம்பமுடியாது" என்பதுதான். சிங்கப்பூரில் மற்ற செண்டர்களில் இப்படியல்ல. முஸ்தபாவில் மட்டும். ஏனெனில் அது இந்திய வம்சாவளியினர் நடத்தும் கடை. பாம்பின் கால் பாம்பறியும் என்று கூலிப்பட்டளானமான இந்தியர்களை மற்ற இந்தியர் நம்புவதில்லை. கேவலமாக இல்லை? இந்தியன் என்றாலே திருடன், மொள்ளமாரி என்று உலகமெல்லாம் பறை சாற்ற ஒரு கடை சிங்கப்பூரில் உள்ளதென்றால் அது முஸ்தபா செண்டர்தான். உலகம் எவ்வளவோ மாறிவிட்டது. இந்தியர்கள் உலகின் எல்லா மூலைகளிலும் வாழ்கிறார்கள். எவ்வளவோ நாகரிகமடைந்துவிட்டனர். ஆயினும் அவர்கள் சிங்கப்பூர் முஸ்தபா செண்டருக்கு வந்து சாமான் வாங்கும் போது உமது மூதாதையர் கூலிகள், திருடர்கள் என்பதை முகத்தில் அறைந்து சொல்லுகிறது முஸ்தபா. ஆனாலும் அங்கு கூட்டம் அலை மோதுகிறது. விலை மலிவு. எல்லாம் கிடைக்கும் என்பதுதான் காரணம். இந்தியர்களுக்குச் சூடு சொரணை கிடையாது என்பதைப் பறை சாற்றுவதுபோல் அங்கு இந்தியர்களை மட்டுமே காணமுடியும். சொரணையுள்ள வேறு எந்த நாட்டுக்காரனையும் காட்டமுடியாது.

சிங்கப்பூர் நாடு ஒழுங்கால் வளர்ந்த நாடு. எனவே இந்தக் கடுமை அங்கு வேண்டும் என்று இந்திய வம்சாவளி சிங்கப்பூர்காரர்கள் சொல்கின்றனர். பள்ளிப்பருவத்தில் திருடும் குழந்தைகளுக்கு கால் பூட்டு போட்டு, கட்டை கட்டி விட்டு விடுவார்கள். அது நொண்டி, நொண்டி நடந்து படும் அவஸ்தையை நாகரீகமுள்ள எவனாலும் சகித்துக் கொள்ளமுடியாது. இப்போது குழந்தைகள் மனோநிலை அறிந்த சமுதாயம் உருவாகிவிட்டது. யாரும் பள்ளியில் குழந்தைகளை மாட்டு அடி, அடிப்பதில்லை. சிங்கப்பூரில் எப்படியோ?

10 பின்னூட்டங்கள்:

Thangamani 3/01/2005 06:30:00 PM

:) நல்ல பதிவு. வலைப்பதிவின் பயன்களிலிதுவும் ஒன்றா? இப்படி எனக்கு சென்னை சரவணா ஸ்டோர்ஸுக்கு போகும் போது தோஒன்றியதால், பிறகு அங்கு போவதை நிறுத்திவிட்டேன்.

-L-L-D-a-s-u 3/01/2005 07:25:00 PM

முஸ்தஃபா பற்றி என்னை மாதிரியே மற்றவர்களும் நினைக்கிறார்களா அல்லது நான் மட்டுமே எதிர்மறை எண்ணத்துடன் அலைகிறேனா , என்றெண்ணியிருந்த எனக்கு உங்கள் பதிவு ஆறுதலாய் உள்ளது . நான் சில காலம் அந்த கடை வாசலை மிதிக்காமல் தான் இருந்தேன், என்ன பண்ணுவது , திருமணம் ஆனவுடன் அந்த வைராக்கியமும் பறந்து விட்டது . ஒரு நாள், வெள்ளைக்காரர் ஒருவர், தன்னுடைய பேக்கை கட்ட கொடுக்காமல் உடனே திரும்பி போனார் . நமக்கு எப்போது அந்த சூடு வருமோ?

இங்குள்ள போஸ்ட் ஆஃபிஸ் இரவுவரை திறந்திருக்கும் . வசதிதான் ., இங்கு வந்த புதிதில் , ஆஃபிஸ் முடிந்து இரவு 8 மணிக்கு வந்து போஸ்ட் ஆஃபிஸ் வழி கேட்டதற்கு அங்கே இருந்த செக்யூரிட்டி ‘ பகல்ல தூங்கிட்டு இப்பொ வந்து கேக்குராய்ங்க’ என்று காமெண்ட் அடித்ததை பற்றி என்ன சொல்ல ?.

வசந்தன்(Vasanthan) 3/01/2005 10:48:00 PM

பதிவு நன்று. திருட்டுப் பற்றி இவ்வளவு அலசிய உமக்கு ஏதாவது பட்டம் தர வேணும். என்ன பட்டம் தரலாம்?... யாருக்காவது ஏதாவது தோணுதா? தோணினா சொல்லுங்கப்பா. நட்சத்திர வாரம் முடியும் போது கொடுத்து அனுப்புவோம்.

Suba 3/01/2005 11:08:00 PM

"உருட்டு வண்டி" நன்றாகத் தான் இருக்கின்றது. எங்கேயிருந்து இந்த பெயரையெல்லாம் கண்டு பிடிக்கிறீர்?

Moorthi 3/02/2005 02:33:00 PM

//விலை மலிவு. எல்லாம் கிடைக்கும் என்பதுதான் காரணம்.//

அன்புள்ள அண்ணா,

விலை மலிவு என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது! எல்லாமும் கிடைக்கிறது என்பதை ஏற்றுக் கொள்கிறேன்.

துளசி கோபால் 3/02/2005 05:01:00 PM

24 மணி நேரமும் திறந்து இருக்கறதாலே வசதிப்பட்ட நேரத்துக்கு வந்து வாங்கலாம்ன்னு நினைக்கறாங்க
நம்ம ஜனங்க.

ஆனாலும் சிங்கப்பூர் 'ஷாப்பிங் எக்ஸ்பீரியன்ஸ்' எனக்கு வெறுப்புதான்! கோமளவிலாஸ் ( பழைய கடை)
பரவாயில்லை! அங்கேயும் சிலசமயம் ஏனோ தானோன்னு இருக்கறமாதிரி இருக்கு!

உண்மையான 'ஷாப்பிங்' அனுபவிக்கணுமுன்னா எங்க ஊருக்கு வாங்க!!!!

நானும் பல இடங்களிலே பார்த்துட்டுதான் சொல்றேன்!

என்றும் அன்புடன்,
துளசி.

பாலு மணிமாறன் 3/02/2005 07:30:00 PM

சிங்கப்பூர் முகம்மது முஸ்தபா ஷாப்பிங்கில் உங்களுக்கு என்ன அனுபவம் வாய்த்தது என்பதை அறியும்போது ஆச்சரியமாக இருக்கிறது. கடந்த 10 வருடங்களாக நானும் அங்கு போய் வருகிறேன். பலமுறை போனதுண்டு. ஆனால் " அதிர்ஷ்டவசமாக" மோசமான சம்பவங்கள் எதையும் நான் இது வரை சந்தித்ததில்லை. எல்லாப் பொருட்களையும் ஒரே இடத்தில் " நியாயமான" விலைக்கு வாங்கக்கூடிய ஒரு கடை சிங்கப்பூரில் வேறு ஏதுமில்லை என்று தோன்றுகிறது. அது ஒரு இந்திய நிறுவனம் என்பது நமக்குப் பெருமை.

ஒருகாலத்தில் இந்தியர்கள் மட்டுமே பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்த முஸ்தபாவில் இன்று சீனர், மலாய்காரர்கள் உட்பட பல இனத்தவரும், பல நாட்டவரும் பொருட்கள் வாங்கத் துவங்கியிருக்கிறார்கள். நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் முஸ்தபா விரிவடைந்து கொண்டேதான் இருக்கிறது.....

ஆனால் - அவர்களது சேவை தரமிக்கதாக இருக்கிறதா என்பது நீங்கள் சொன்ன மாதிரியே விவாதத்திற்குரிய விஷயமே.... 1000 வெள்ளிக்கு சாமான் வாங்கிவிட்டு, அத்தனையையும் " பொட்டலங்களாக " சுமந்து சென்ற அவலத்தை நானும் அனுபவித்திருக்கிறேன். உலகத்தரமென்ற பெயர் பெற வேண்டுமானால் இந்த பொட்டல சமாச்சாரத்தை முஸ்தபா நிறுத்தியே ஆக வேண்டும்...

அங்கு சேவைப்பிரிவில் வேலை செய்பவர்கள் பலரும், இந்தியாவிலிருந்து சென்றவர்கள்தான். அவர்களுக்கு 'நம்மவர்கள்' என்றால் ஒரு அலட்சிய மனோபாவம் இருக்கிறதோ என்று நினைக்கிறேன். இப்படிப்பட்ட நினைப்பும், மேசமான அனுபவங்களும் வாடிக்கையாளர்களுக்கு ஏற்படாமல்

இராதாகிருஷ்ணன் 3/03/2005 07:20:00 AM

சுவையான பதிவு. அங்க கிணத்துப்பக்கம் திருட வந்த முஸ்தபா; இங்க கடைக்குள்ள திருட்டுப் போயிடுமேன்னு படுத்தற முஸ்தபாவா! வெளியில் இருந்து பார்ப்பதற்கு அக்கடை (உங்களோட முந்தைய பதிவொன்றில் பார்த்தது) நன்றாகத்தான் உள்ளது, ஆனால் உள்ளே கிடைக்கும் கவனிப்பு பற்றிய செய்தி முகம் சுளிக்க வைக்கிறது. அப்படியிருந்தும் மக்கள் அங்கேயே ஏன்போய் மொய்க்கிறார்கள் (விலையும் மலிவில்லை என்கிறார் மூர்த்தி)? ஒன்னும் புரியல போங்க!

Moorthi 3/03/2005 11:09:00 AM

அன்பு ராதா அண்ணா,

1)பொருட்களின் தரம் நன்று.

2)எல்லாப் பொருளும் கிடைக்கின்றன.

3)24மணி நேரமும் திறந்திருக்கிறது.

4)தங்கும் வசதி, விமானப்பயணச் சீட்டு, பணமாற்றங்கள், சாப்பாடு என எல்லா வசதிகளும் உள்ள ஒரே இடம்.

எனவே முஸ்தபாவின் சேவை மகத்தானது. விலை என்று பார்த்தால் மற்ற கடைகளின் விலைக்குச் சமமாகவோ அல்லது சிறிதளவு அதிகமாகவோ இருக்கலாம். ஆனால் விலை குறைவாக கிடைக்கிறது என்பது சரியல்ல. பண்டிகைக் காலங்களில் "தள்ளுபடி" விலையில் போடுவார்கள். பின்னர் எப்போதாவது காலங்கடந்த பொருட்கள் விலை குறைவாகக் கிடைக்கும். இது பெரும்பாலும் எல்லாக் கடைகளின் நடைமுறையே இங்கு.

இங்கு பணிபுரிபவர்களில் பெரும்பாலானோர் இந்தியாவில் இருந்து வந்தவர்கள். செக்யூரிட்டி பிரச்னை இவ்வளவு கடுமையாக இருக்க கடை முதலாளிக்கு ஏற்பட்ட பல கசப்பான அனுபவங்கள் காரணமாக இருக்கலாம். அவர் ஆரம்பத்தில் இந்தியாவில் இருந்து இங்கு வந்தவர். பின் தன் சொந்த உழைப்பால் படிப்படியாக முன்னேறி இந்த அளவுக்கு கடைநடத்துபவர். அவர் சந்தித்த பிரச்னைகள் காரணமாக இருக்கலாம். பழக இனிமையானவர். எளிமையானவர். அவரைப் பார்த்தால் இவ்வளவு பெரிய நிறுவனத்தின் முதலாளி என்று சொல்லவே முடியாது! சமீபத்தில்தான் மறைந்தார் அந்த பெரியவர். தற்போது நிறுவனத்தைப் பார்த்துக் கொள்வது அவரின் மகன். அவரும் தந்தை போன்றே மிகவும் எளிமையானவர்! எனக்குப் பிடித்தது அவர்களின் எளிமை மற்றும் நேர்மை!

இராதாகிருஷ்ணன் 3/04/2005 06:18:00 AM

அன்பிற்குரிய மூர்த்தி, விரிவான விளக்கத்திற்கு நன்றி. அப்புறம், இந்த அண்ணாவெல்லாம் வேண்டாம், சும்மா பெயரைச் சொல்லியே அழையுங்கள் போதும்.