மடலூரத்துணிந்த மங்கை பற்றியது...

தமிழ் இணையம் எனக்குச் செய்திருக்கும் பெருமைக்கு என்று எவ்வாறு கைமாறு செய்யப்போகிறேன் என்று தெரியவில்லை. தமிழ் இணையம் (தமிழ்.நெட்) என்பது தமிழின் முதல் மடலாடற்குழு. எங்கெங்கோ அலைந்து திரிந்து தமிழ் மொழியைப் பிரிந்து வாடிய எனக்கு இணையம் ஒரு தமிழ் ஊற்றைக்காட்டியது. அந்தப்பேரூற்றில் திளைத்த போது விளைந்ததுதான் பாசுரமடல்கள். பெரியவர் டாக்டர் ஜெயபாரதியின் தொடர்ந்த ஊக்கத்தினால் 108 கட்டுரைகள் எழுதினேன். எப்படி எழுதினேன் என்று எனக்கு இன்றும் ஆச்சர்யமாக இருக்கிறது! நானொன்றும் தமிழ் பண்டிதன் அல்லேன். முறையாக தமிழ் இலக்கண, இலக்கியம் படித்தவன் அல்லேன். ஆயினும் எனது வேர்களைக் காண வேண்டும் என்ற துடிப்பு. கையில் வெண்ணெய்யை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைவானேன் என்ற திடீர் துணிச்சல், அந்த தேடுதலுக்குக் காரணமாகியது. இருக்கின்ற தமிழ் அறிவை வைத்துக்கொண்டு சபையில் பேசத்துணிந்தேன். தொடர்ந்து நண்பர்கள் கொடுத்த ஆதரவு, ஊக்கம் அத்தனை மடல்களை எழுத வைத்தது. அதன் பின்னாலும் எழுதினேன். இன்னும் எழுதிக் கொண்டிருக்கிறேன்.

எனக்கே தெரியாது எனக்கு 'பாசுரமடல்' கண்ணன் என்ற பெயர் இருப்பது. தமிழ் உலகம் புகழ் சிங்கை பழனியப்பன் தமிழ் இணைய மாநாட்டில் சொன்னபோதுதான் எனக்குப் புலர்ந்தது! பன்னிரு ஆழ்வார்கள் எழுதிய ஈரப்பாசுரங்கள் தமிழர்தம் இதயத்தின் அடியூற்றில் கசிவை எப்போதும் தக்க வைக்கும் தன்மையது என்பதை எங்கோ கலிபோர்னிய பல்கலைக்கழகத்திற்கு சிறப்புப் பேராசிரியராய் வந்திருந்த முனைவர் மறைமலை அவர்கள் எனது கட்டுரைகளை இணையத்தில் படித்துப் பேருவகை கொண்டு நான் சென்னை சென்றபோது நம் வணக்கத்திற்குரிய தமிழ்த்தாத்தா பேரா.உ.வே.சா அவர்கள் பாடம் நடத்திய அதே அறையில் எதற்குமே லாயக்கில்லாத என்னைத் தமிழ்ப்பாசுரங்கள் பற்றிப்பேசுமாறு பணித்தது நிரூபித்தது! (ரொம்பப் பெரிய வாக்கியமாகிவிட்டது. மன்னிக்க) பூவுடன் சேர்ந்த நாறும் மணம் பெறும் என்று சொல்வார்கள். ஆழ்வார்கள் சம்பந்தத்தால் அப்பேறு எனக்குக் கிடைத்தது. எவ்வளவுதான் சினிமாவின் தாக்கம் தமிழனை உருக்குலைத்தாலும் நம் முன்னோர் செய்வித்திருக்கும் அருள் பாசுரங்கள் இருக்கும்வரை தமிழ் உணர்வு தமிழனைவிட்டு ஒழியாது என்பதை என் பேச்சு முடிந்தபிறகு மாணவ, மாணவியர் (எம்.ஏ பட்டம்) சூழ்ந்து கொண்டு நாலாயிர திவ்யப்பிரபந்தம் பற்றிக்கேள்வி மேல் கேள்வி கேட்டபோது உணர்ந்தேன். அந்த சிலிர்ப்பு இன்னும் தணியவில்லை. அதுபோது சிறப்பாக மாணவர்கள் அடுத்தமுறை வரும்போது திருமடல் பற்றிச் சொல்லுங்கள் என்றனர்!

தமிழ் இலக்கியத்திற்கு மட்டும் உரிய தனி சிறப்பாக மடலூருதல் எனும் ஒரு இலக்கியவகை. திருமங்கை ஆழ்வார் இந்த இலக்கிய உத்தியை பக்தி இலக்கியத்தில் கையாண்டு பெரும் புகழ் பெற்றவர். அவர் அருளிச் செய்தது 'சிறிய திருமடல், பெரிய திருமடல்' என்பவை.

மடலூருதல் என்றால் என்ன? கன்னிப் பெண்ணிற்கு காதல் ஊறும். அது இயற்கை. காதல் பற்றிப் பாடாத தமிழர் குறைவு. இப்படியொரு பெருமை இருப்பதாலேயே "பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே!' என்று காதலை வருணித்துப்பாடும் புலவர்களைக் கேலி செய்வதுண்டு. தோழி முகமாக இன்றளவும் தலைவி காதலை வெளிப்படுத்துவது கண்கூடு. தமிழ் மண்ணில் வளர்ந்த பெண்ணிற்கு அச்சம், மடம், நாணம் எனும் குணங்கள் வரப்பெற்றன. இதனால் அவள் தன் காதலை நேரடியாக வெளிப்படுத்த முடியாமல் மற்றவர் மூலமோ, அன்னம், மேகம் என்று பேசாப்பொருள் மூலமாகவும் தூதுவிட்டுச் சொல்லி வந்ததாக தமிழ் இலக்கியம் பேசுகிறது. இந்தப் பின்புலத்தில் ஏதோவொரு தமிழச்சிக்கு துணிச்சல் வந்து விட்டது. ஆண் மட்டும் தன் காதலை தம்பட்டம் அடிக்கிறான். தன் பரத்தையர் உறவு பற்றிக்கூட வெட்கமில்லாமல் சொல்கிறான். ஏன் நான் மட்டும் இப்படி நாணிக் கோணிக்கொண்டு இருக்க வேண்டும்? வெட்கம் கெட்டுப்போய் நாமும் ஊரறிய நம் காதல் பற்றிப் பேசினால் என்ன? என்பதே அந்தத் துணிச்சல். இதன் உச்ச வெளிப்பாடே மடலூர்தல் என்பது. தலைவி தன் காதலனின் படத்தை அழகான ஓவியமாகத் தீட்டிக்கொண்டு, அதைக் கழுத்தில் மாட்டிக்கொண்டு தெருத்தெருவாக போய் வருவதையே மடலூர்தல் என்பர். உண்மையிலேயே மகாத் துணிச்சல் வேண்டும் இப்படிச் செய்ய. ஏனெனில், நம் பண்பாட்டு விழுமியங்கள் நமது சுயத்தை என்றோ மறைத்து விட்டன. இருப்பதெல்லாம் அச்சமும் நாணமுமே! ஆண்கள் இரசிக்கக்குடிய வகையிலேயே பெண் இருக்கவேண்டுமென்ற ஆழமான மூளைச்சலவை இன்றளவும் நம் பெண்களின் மனத்தில் தங்கிவிட்டது. எனவே ஆண் பேசும் பேச்சை பெண் பேசினால் முதலில் கண்டித்துப் பேசுபவள் இன்னொரு பெண்ணாகவே இருப்பாள்! சுயமாக துளிர்க்கும் ஆசையைக்கூட வெளிப்படுத்த முடியாமல் ஒரு வெட்கம். நாணம் கெட்டவளன்றோ இப்படிப் பேசுவாள். இப்படி செய்யத் துணிவாள். இவளுக்கு விசர் (பயித்தியம்) பிடித்துவிட்டது என்று மற்றவர் சொல்லுவரே என்ற கவலை. இந்தப் பின்னணியில் மடலூர்தல் இருபத்தோராம் நூற்றாண்டு தமிழர்களைக் கவர்கிறது! அப்படியொரு துணிச்சல். பண்பாட்டை மீறும் தைர்யம். சுயத்தைக் காட்டும் நிர்ணயம் இவை மடலூர்தலின் முக்கிய குணங்கள்.

திருமங்கை மன்னன் செய்து பார்க்காத கவிவகை கிடையாது என்று சொல்வார்கள். ஆனால் இந்த மடலூர்தலில் மாறன் சடகோபன் எனும் திருநெல்வேலித் தமிழர் அவருக்கு முன்னுதாரணமாக இருக்கிறார். தன்னை நாயகியாக பாவித்துக் கொண்டு ஒரு பழைய தமிழ் மரபைப் பாடுகிறார்.

"ஏசறும் ஊரவர் கவ்வை தோழீ! என் செய்யுமே!" என்று முதல் பாசுரத்திலேயே ஆரம்பிக்கிறார். ஊர் வாய்க்கு பயப்பட்டு என்ன பயம்? அது என்ன செய்யும் என்கிறாள்.

முன்பு வெட்கட் சொன்னமாதிரி உயிரியல் காரணங்களுக்காக பெரும் தனமும், அகன்ற அல்குலுமுடைய தன் தோழியை அழைக்கிறாள், "கலைகொள் அகலல்குல் தோழீ! நம் கண்களாள் கண்டு" இரசிப்போம் என்கிறாள்.

நாணும் நிறையும் கவர்ந்தென்னை நன்னெஞ்சம் கூவிக்கொண்டு
சேணுயர் வானத்திருக்கும் தேவபிரான்றன்னை
ஆணையென் தோழீ! உலகு தோறலர் தூற்றி, ஆம்
கோணைகள் செய்து குதிரியாய் மடலூர்துமே!

நாணம் இருந்து என்ன பயன்? நிறைவான குணங்கள் கொண்டு அடங்கியிருந்து என்ன பயன்? என் நெஞ்சம் அவனைக் கூவுகிறது. உன் மேல் ஆணை தோழீ! உலகத்தார் தூற்றினாலும் எனக்குக் கவலை இல்லை. எந்தக் கோணங்கித்தனம் செய்தாலும் நான் மடலூர்வேன் (அவனை அடைவேன் என்பது). இந்தக் குதிரியாய் என்பதற்குள்ள ஈடு வியாக்கியனம் இப்போது 'பெண் மொழி' பற்றிப் பேசும் போது முக்கியமாகப்படுகிறது. குத்ஸிதா ஸ்தீரி; குஸ்திரி என்கிற பதத்தை குதிரி என்கிறதாய், ஆகிறது, அடங்காத பெண்ணாய், தடை இல்லாத பெண் என்கிறபடியாய் என்று சொல்லி, மேலும், குதிரி என்பதற்கு செப்பு என்ற பொருளும் உள்ளதால், பெண்களுக்குச் செல்வவாமன: நாணும், நிறையுமே யன்றோ! அவற்றை இட்டு வைக்கும் கலமே அன்றோ சரீரம், அவை போகையாலே இனி சரீரத்தைப் பற்றி கவலை கொள்வதேன்? என்று துணிவு கொள்கிறாள் என்கிறது ஈடு. ஆக இந்த உடம்பு என்பது நாணத்தைத் தாங்கும் கலம் என்றாகிப்போனது தமிழ் பெண்களுக்கு! குதிரை போன்று கர்வமாய் மடலேர்வேன் என்றும் பொருள் சொல்வர். ஆக! ஒன்பதாம் நூற்றாண்டுத்தமிழ் பெண் இன்றையப் பெண்ணை விட தைர்யம் கொண்டவளாகவே இருந்திருக்கிறாள்.

காதல் ஆறாய் பெருகும் உள்ளத்தில் நாணத்திற்கு அவசியமில்லை என்று தமிழ் வேதம் சொல்கிறது. இதோ இன்னொரு இனிய கவிதை

ஊரவர் கவ்வை யெருவிட்டன்னைசொல் நீர்படுத்து
ஈரநெல் வித்தி முளைத்த நெஞ்சப் பெருஞ்செய்யுள்
பேரமர் காதல் கடல் புரைய விளைவித்த
காரமர் மேனிநங் கண்ணன் தோழீ! கடியனே!

ஊர்ப் பேச்சு, அம்மாவின் திட்டு இவையெல்லாம் காதலின் முன் என்? என் நெஞ்சமெனும் நிலத்தில் காதற்பயிர் விளைந்து, கடல் புரண்டு நிற்கிறது! இனி வெட்கமாவது? நாணமாவது? இதில் தோழியையும் தன் காதல் விளையாட்டில் கூட்டாகச் சேர்த்துக்கொள்வது இன்னும் பொருள் உள்ளதாய் படுகிறது!

ஆம்மடம் இன்றி, தெருவு தோறயல் தையலார்
நாமடங் காப்பழி தூற்றி நாடும் இரைக்கவே.

அச்சம் போச்சு, நாணம் போச்சு. மடமும் போச்சு :-) தெருவில் வசிக்கும் பிற பெண்கள் ஒரு மாதிரித்தான் பேசுவர், தூற்றுவர், ஊரெல்லாம் பழி சொல்வர், இருப்பினும் நான் மடலூர்வேன்! என்கிறாள் இப்பெண். என்ன துணிச்சல்.

நம்மாழ்வார் ஆண் அதனால் இது 'ஆண் மொழி' என்று தப்பித்துக் கொள்ளமுடியாது. அவர் இங்கு பேசுவதெல்லாம் தமிழ் பெண்களின் துணிச்சலைத்தான்.

சரி, இவரை ஆண் என்று ஒதுக்கிவிட்டாலும் நாச்சியார் மொழியை ஒதுக்கமுடியாது. ஆண்டாள் விண்ணப்பம் செய்யும் அழகைப்பாருங்கள்:

செங்கண்மால் சேவடிக்கீழ்
அடிவீழ்ச்சி விண்ணப்பம்
கொங்கைமேல் குங்குமத்தின்
குழம்பழியப் புகுந்து ஒருநாள்
தங்குமேல் என்னாவி
தங்குமென்றுரையீரே!

அடடா!

குற்றமற்ற முலைதன்னைக்
குமரன் கோலப்பணைத்தோளோடு
அற்றகுற்றம் அவைதீர
அணைய அமுக்கிக்கட்டீரே!

இப்படி யாரிடம் சொல்கிறாள் என்று நினைக்கிறீர்கள்? தன் தாயிடம்தான்! கட்டக்கடேசியாய் ஒரு மேற்கோள். படாபட்!

பொங்கிய பாற்கடல் பள்ளிகொள்வானைப்
புணர்வதோர் ஆசையினால் என்
கொங்கை கிளர்ந்து குமைத்துக் குதுகலித்
தாவியை ஆகூலம் செய்யும்!

சபாஷ்! இது பெண் மொழியா? ஆண் மொழியா?

நம்ம தங்கமணி சொல்ற மாதிரி நம்ம உடம்பு அப்படியென்ன தப்பு செய்தது? அது பற்றி ஏனிந்த மூடுமந்திரம்? அது பேசக்கூடாத பொருளா? பாடுபொருள் இல்லையா?

நம் உடம்பை விட்டு நம் கவனம் இன்னும் வெளியே போகவே இல்லை. என்று இந்த உணர்வு மங்குகிறதோ அன்று உயர்பொருள் கண்ணில் படும். உலகில் எல்லாப் பெண்களும் இந்த மாயையிலிருந்து விலகி எழுச்சியுற்ற பின்னும் தமிழ் பெண் மட்டும், தலைப்பை, தலைப்பை இழுத்துக்கொண்டு தன் கவனத்தை அங்கு வைத்திருப்பதுடன், எதிரே இருப்பவர் கவனத்தையும் அங்கேயே கொண்டு சென்று கொண்டு இருக்கிறார்கள். சிங்கப்பூரில் சீனர்கள் இந்தியர்களைவிட முன்னேறிவிட்டதற்கு இந்த உடல் மீறிய விடுதலையே காரணம் என்று எங்கோ படித்த ஞாபகம்.

(சரி எல்லோரும் அடிக்க வாருங்கள் இந்தத் தடியனை :-) எனக்கு மட்டுமென்ன? இந்த ஆச்சார்யர்களே இந்தப்பாசுரங்களை வைத்துக்கொண்டு சபையில் சொல்லமுடியாமல் கதவை இழுத்து மூடிக்கொண்டு வியாக்ஞானம் செய்து கொண்டிருந்தார்களாம். வேற வழி?)

இதை மதுரபாவம் என்கிறான் கீத கோவிந்தம் எழுதிய ஜெயதேவன். இதை ரகஸ்ய கிரந்தங்கள் என்றும் சொல்வர். இதிலென்ன ரகசியம்? இதுதான் எல்லோருக்கும் தெரிஞ்சதுதானே என்று கேட்கலாம். தெரிஞ்சதுதான், ஆனால் இதன் சூட்சுமங்கள் எல்லோருக்கும் சரியாகப் புரிந்ததா என்பதே கேள்வி!

7 பின்னூட்டங்கள்:

Thangamani 3/04/2005 10:50:00 AM

:)

காதலினால் கலவி யுண்டாம். உங்கள் கதையில் காதலை நான் பார்க்கவில்லையே (நான் தான் தவறிவிட்டேனோ! நான் திருமணம் என்கிற ஒரே பூவைத் தாங்குவதற்காகவே வளர்ந்துவருகிற காம்பாகக் காட்டப்படும் தமிழ்க் காதலைச் சொல்லவில்லை என்பதையும் சொல்லிக்கொள்கிறேன்)

ஆண்டாள், காதல்-கலவிதானே பேசுகிறாள். நான் தவறுதலாய் சொல்லியிருந்தால் குறிப்பிடவும்.

ஜெயந்தி சங்கர் 3/04/2005 11:09:00 AM

I am asking the same question thangamani is asking,.. ?
: ))

நா.கண்ணன் 3/04/2005 11:19:00 AM

நண்பர்களே: இம்மடலுக்கும் என் கதைக்குமுள்ள ஒரே தொடர்பு பெண்ணின் துணிவு என்பது மட்டும்தான். என் அன்பிற்குரிய ஆழ்வார்களை எனக்காக வக்காலத்திற்கு இழுக்க முடியாது. கூடாது. அது தவறு.
என் கதையை மறந்துவிட்டு பெண் மொழி/ஆண் மொழி பற்றிப் பேசுவோமே :-)

நா.கண்ணன் 3/04/2005 11:20:00 AM

இங்கு திசைகளில் ஓடும் விவாதத்தையும் கணக்கில் கொள்க!

Mookku Sundar 3/04/2005 11:30:00 AM

சீவகசிந்தாமணியில் எத்த்னை இடத்தைல் முலை வருகிறது என்று விடலைப்பசங்களை வைத்துக் கொண்டு கிளர்ச்சியூட்டிய ஸ்ரீரங்கத்து தேவதைகள் பெரியவர் நியாபகம் வருகிறார் எனக்கு. :-)

தான் சொல்கிற "புரட்சிகளை" நியாயப்படுத்துபவர்கள் எல்லாருமே கிட்டத்தட்ட தமிழிலக்கியத்தில் உள்ள முலை வகயறாக்களுத்துக்குத்தான் போகிறார்கள். தவிரவும் பெரும்பாலான ஆண்களுக்கு, பெண்களின் சுதந்திரமான சிந்தனைகளை கண்டால்/ கேட்டால் , கொள்ளை ஆசை. "காரியத்துக்கு" உபயோகமாகுமே :-). இதன் விளைவாகவே பெண் மொழி கவிதைகள் எழுதும் கவிதாயினிகளுக்க்கெல்லாம் சக இலக்கியவாதிகளிடம் இருந்து தொலைபேசி வருகிறதாம். :-).

கண்ணன், நீங்கள் சுவாரசியமான ஆள்தான். மனசை இளமையாய் வைத்திருப்பதற்கும், வாரத்தை கலக்கல் ஆக்குவதற்கும், இந்த "சப்ஜெக்ட்" ஒரே வழி என்று முடிவு கட்டிவிட்டீர்கள் போல. அதனாலதான் "உடம்புக்கு நாம் ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கணும்" என்று கேட்டுக் கொண்டே, இலக்கியம் முழுக்க உடம்பை தேடு தேடென்று தேடுகிறீகள்.

இதில் காதல் எங்கு வந்ததென்று எனக்கும் தெரியவில்லை. ம்..ம்..நடக்கட்டும் ஸார். :-)
என்னதான் கடசியாய் சேர்ந்து கொண்டாலும் தர்ம அடி போடுவதில் ஒரு ஸுகம் இருக்கத்தான் செய்கிறது - ராஜவேர்வை மாதிரி :-)

Thangamani 3/04/2005 12:31:00 PM

மூக்கன் கல்யாண முருங்கை படித்திருக்கிறேன். இது பற்றி நாம் அப்புறம் பேசலாம். நேரம் கிடைக்கும் போது எழுதுகிறேன்.

நா.கண்ணன் 3/04/2005 01:15:00 PM

மூக்கன்: அப்படியெல்லாம் இல்லை. ஒரு கரு தோன்றியது. இதை வேறு எங்கும் பேசமுடியாது என்று எண்ணி இங்கிட்டேன். இங்கும் பேசமுடியாது என்றறிந்து கொண்டேன். பிறருடன் ஒப்பு நோக்கும் அளவில் நான் ஏதும் செய்துவிட்டதாய் தெரியவில்லை :-) பேசுவதற்கு வேறு விஷயங்களா இல்லை. இதுவும் ஒரு பரிமாணம் என்று கொள்க!