ஜேகேயை அறிந்து கொள் மனமே!

நாம் ஏன் ஜேகேயை அறிந்து கொள்ள வேண்டும்?

குழந்தை ஏசு பிறந்து விட்டார் என்றறிந்து மூன்று கிழக்கத்தியர் பெத்தலகேம் போனார்களாம். அது போல் கிழக்கிலுள்ள இந்தியாவை நோக்கி காலம் காலமாக மேற்கத்தியர் பயணப்பட்டு வருகின்றனர். பொன்னும், பொருளும், திரவியங்களும் உந்துதல் என்றாலும் வந்தவர் மீண்ட போது கையில் கொண்டு போவது இந்தியத் தத்துவ தரிசனங்களையே என்பது அலெக்ஸாண்டர் காலத்திலேயே நிரூபிக்கப்பட்டுவிட்டது. நான் 80 களின் மத்தியில்தான் ஜேகே வேட்டை ஆடிக்கொண்டிருந்தேன் ஆனால் அதற்கு ஒரு நூற்றாண்டிற்கு முன்பே இவரைக் கண்டு பிடிக்கும் வேட்டை மேடம் பிளவாட்ஸ்கி போன்றவர்களால் ஆரம்பிக்கப்பட்டுவிட்டது. சென்னை அடையாற்றங்கரையில் கண்டு கொள்ளப்பட்ட ஜேகேயை தமிழ்படுத்த நமக்கு ஏறக்குறைய ஒரு நூற்றாண்டு ஆகியிருக்கிறது. நம்முடன் பல ஆண்டுகள் பழகிய ஒரு உத்தமசீலரின் போதனைகள் தமிழில் வர இவ்வளவு காலம் எடுப்பானேன்? ஜேகே எனச் சுருக்கமாக அழைக்கப்படும் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியைக் கண்டுபிடித்தவர்கள் ஆங்கிலேயர்கள். மேடம் அன்னிபெசண்ட் அவர்களின் வளர்ப்புப்பிள்ளையாக இருந்த இவருக்கு முழுக்க முழுக்க ஆங்கிலக்கல்வியே அளிக்கப்பட்்டது. இவர் பேசியது, எழுதியது எல்லாம் ஆங்கிலத்தில்தான். குப்பை நாவல்களெல்லாம் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு உடனே மொழிபெயர்க்கப்படும் போது ஜேகேயை மொழிபெயர்க்க ஏன் 80 ஆண்டுகள் பிடித்தன? ஏனெனில் அவர் பேசியது குப்பை அல்ல என்பதுதான்.

ஜேகேயின் மொழி நேரடியான ஆழமான பொருளுள்ள மொழி. பேசும் போது எப்போதும் அவர் சொற்களின் வேர்களைக் காட்டும் போது மொழியின் அழகு நமக்குப் புலப்படும். நமக்குத் தெரிந்த ஆங்கிலமாக இருந்தாலும் அவர் மொழி சட்டெனப் புரியாது. காரணம், மொழி பல அடுக்களில் செயல்படுகிறது, உதாரணமாக மடலேருதல் குறித்த எனது கட்டுரையில் காணும் பாசுரங்கள் ஒரு நிலையில் மிகத்துணிவாக பாலியல் பேசும் பாடல்கள் போல் பட்டாலும் அவைப் பாலியல் பாடல்கள் அல்ல. அதை அறிந்து கொள்ள வெறும் தமிழ்ப் புலமை மட்டும் போதாது. தேடல் கொண்ட உள்ளமும், ஆன்மீகப் புரிதலும் வேண்டும். அது போல் கிருஷ்ணமூர்த்தியின் மொழி ஆங்கிலமாக இருந்தாலும் தேடலற்ற உள்ளத்தால் அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை எளிதாகப் புரிந்து கொள்ளமுடியாது. இதுவே, அவரது மொழிபெயர்ப்பு இத்தனை தாமதமாக தமிழில் வந்திருப்பதற்குக் காரணம். இரண்டாவது, அவரது தத்துவங்கள் ஓரளவில் பிற இந்திய தத்துவங்களுடன் ஒத்துப்போனாலும் அவை பயன்படுத்திய வார்த்தைகளை ஒட்டு மொத்தமாக நிராகரித்துவிட்டு அவர் தனக்கென ஒரு மொழி நடையை உருவாக்கினார். இந்த மொழி புதிது!

ஏன் புதிய மொழியை உருவாக்க வேண்டும்? வார்த்தைகள் பேசப்பேச நீர்த்துப் போகின்றன. அவற்றின் உண்மைப் பொருள் மங்கி, அடுக்கடுக்காய் பல நூற்றாண்டுச் சிந்தனைகளின் தூசு அதன் மேல் படிந்து விடுகிறது. அதன் பின் அச்சொல்லின் தீர்க்கம் ஒழிந்து விடுகிறது. எனவே எப்போதும் புதிது, புதிதாய் நவ சொல் பிறந்து கொண்டே இருக்க வேண்டும். இது நடைமுறையில் சாத்தியம் இல்லை. எனவேதான் நாம் செக்குமாடுகள் போல் போன தடத்திலேயே போய் கொண்டு இருக்கிறோம்.

இந்த நூற்றாண்டில் புதிய தடம் போட்ட அறிஞர்களில் ஜேகே-க்கு நிரந்தர இடமுண்டு. இவர் தமிழர்களிடம் அறிமுகமாகாதற்கு இன்னொரு காரணம், அல்லது இன்று இவர் பிரபலமாகி வருவதற்கு இன்னொரு காரணம், இவர் அடிப்படையில் ஒரு புரட்சிக்காரர். தளையற்ற மானுட விடுதலையே என் தலையாய குறிக்கோள் என்று கூக்குரலிட்டவர் ஜேகே. தளையற்ற விடுதலை எனில் நமது மொழியிலிருந்து விடுபட வேண்டும், நமது சமய நம்பிக்கைகளிலிருந்து விடுபட வேண்டும், நமது பாரம்பரிய விழுமியங்களிலிருந்து விடுபட வேண்டும், நமது தேசப்பற்றிலிருந்து விடுபட வேண்டும், நமது ஜாதிப்பற்றிலிருந்து விடுபட வேண்டும், நமது பாலியல் பற்றிலிருந்து விடுபட வேண்டும் (இங்கு பாலியல் இச்சையைச் சொல்லவில்லை, ஆண்/பெண் என்ற அடையாளங்களிலிருந்து விடுபடவேண்டும்), நமது பழக்கங்களிலிருந்து விடுபட வேண்டும், முக்கியமாக நமது அபிப்பிராயங்களிலிருந்து விடுபட வேண்டும். ஏனெனில், இவை எல்லாமே நமது விடுதலையின் தளைகள். ஜேகே பேசியது பூரண விடுதலை. பரசுகம் பற்றிப் பேசும் இந்தியர்களுள் இவர் இகநோவு பற்றிப் பேசினார். அறிவியலற்ற ஒரு சமுதாயத்தில் இவர் அறிவியல் பேசினார். ஹிம்சை கொண்ட ஒரு சமுதாயத்தில் இவர் பூரண அன்பு பற்றிப் பேசினார். குருமார்கள் நிறைந்து வழியும் ஒரு பூமியில் இவர் குருவற்ற சுய காணல் பற்றிப் பேசினார். நிறுவனங்களாக சமயம் செயல்படும் போது இவர் ஒண்டி ஆளாக நடக்கவே விரும்பினார், நம்மையும் அப்படியே நடக்கச் சொன்னார். மழித்தலும், நீட்டலும் வேண்டா மாடர்ன் மனிதராக இவர் உடை உடுத்தினார். இப்படி எந்த வகையிலும் இந்தியப் பிடிக்குள் சிக்காததினால் இவரைப் புரிந்து கொள்ள இந்தியர்களுக்கு நீண்ட நாள் பிடித்தது. இவரது சிந்தனைகள் தமிழில் வர இத்தனை நாள் பிடித்தது.

ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி நவீன யுக சிற்பி. நவ சிந்தனை கொண்டவர். அன்பின் அடித்தளம் கண்டவர். இவர் அறிவியல் பேசும் போதே சுத்த ஆன்மீகமும் பேசினார். வார்த்தைகளைக் கழுவிக்கழுவி சொன்னால் ஒழிய கிருஷ்ணமூர்த்தி பற்றிச் சொல்லமுடியவில்லை. வார்த்தைகளின் கறை படா வண்ணம் அவரை விளக்குவது கடினமாகவே உள்ளது. நான் இன்னும் அவரது தமிழ் மொழி பெயர்ப்புகளைப் படிக்கவில்லை.

ஜேகேயுடன் எனக்குள்ள 30 ஆண்டு தொடர்பு பற்றி நான் அதிகம் பேசியதில்லை. இப்போது ஜேகேயை அறிந்து கொள்ள வேண்டுமென்ற உந்துதல் தமிழர் மத்தியில் உள்ளது. அது நல்லது.

ஜேகேயிடம் உங்களின் நூற்றாண்டு போதனைகளை ஒற்றை வரியில் சுருக்கிச் சொல்ல முடியுமா என்று யாரோ கேட்டாராம். அதற்கு அவர் சிரித்துக் கொண்டே, 'நீ உள்ளமட்டும் அது இல்லை' (If you are, the other is not) என்றாராம். அட! இது நமக்குத்தெரிந்துதானே என்கிறீர்களா? அப்படியெனில் நீங்கள் மொழியின் விளிப்பிலிருந்து உலகைக் காண்கிறீர்கள் என்று பொருள். அந்த 'அது' என்ன? என்பதே இன்றையச் சிந்தனைக்குக் கூழ்!

7 பின்னூட்டங்கள்:

இராதாகிருஷ்ணன் 3/05/2005 06:56:00 PM

//கிருஷ்ணமூர்த்தியின் மொழி ஆங்கிலமாக இருந்தாலும் தேடலற்ற உள்ளத்தால் அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை எளிதாகப் புரிந்து கொள்ளமுடியாது.//
//இப்போது ஜேகேயை அறிந்து கொள்ள வேண்டுமென்ற உந்துதல் தமிழர் மத்தியில் உள்ளது. அது நல்லது.//

Aruna Srinivasan 3/05/2005 08:21:00 PM

"......வார்த்தைகளைக் கழுவிக்கழுவி சொன்னால் ஒழிய கிருஷ்ணமூர்த்தி பற்றிச் சொல்லமுடியவில்லை. வார்த்தைகளின் கறை படா வண்ணம் அவரை விளக்குவது கடினமாகவே உள்ளது......."

ரொம்பச் சரியாக சொன்னீர்கள் கண்ணன். இந்தப் பதிவைப் படிச்சப்போ மனசுக்கு ரொம்ப இதமாக இருந்தது. ஆஹா ஓஹோவென்று புகழாரம் சூட்டாமல், தலையில் வைத்து தாங்காமல், ரொம்ப யதார்த்தமாக ஜே கேயை உணர - உணர வைக்க முயன்றுள்ளீர்கள். எனக்கு என்ன ஒரு சந்தோஷம் தெரியுமோ? ஜேகே யை உணர்ந்தவர்கள் ( அவருடய சீடர்கள் என்று சொல்ல மனம் வரவில்லை. Because he was a seer who walked alone and wanted you to walk alone.) இதுவரை அவரை "தெய்வமாக்கும்" முயற்சியில் ஈடுபடவில்லை. தனி மனித வழிபாடு அதிகம் உள்ள நம் நாட்டில் இது ஒரு ஆச்சரியமே - என்னைப் பொறுத்தவரை சந்தோஷமான ஆச்சரியம்.

இதுபோல் இன்னும் சில "சாவி" வாக்கியங்கள் உண்டு. ஞாபகம் இருக்கிறதா?

" Observer is the Observed";

" Where there is "I", love is not there. If "love" is there, "I" is not there". :-)

சிந்தனைக் கூழுக்கு இன்னும் கொஞ்சம் பொரி......:-) அல்லது ஜேகேயை விமரிசிப்பவர்களுக்கு குழம்ப இன்னும் கொஞ்சம் கூழ்....... :-)

Aruna Srinivasan 3/05/2005 08:21:00 PM
This comment has been removed by a blog administrator.
Aruna Srinivasan 3/05/2005 08:32:00 PM
This comment has been removed by a blog administrator.
நா.கண்ணன் 3/05/2005 09:26:00 PM

நன்றி அருணா. நன்றி ராதாகிருஷ்ணன்

இந்தியாவில் மனிதரைக் கடவுளாக்கும் கூடத்திற்கு ஜேகே சொல் புரியாதே :-)) நல்லவேளை தப்பித்தார்.
ஆனால்...மேலை உலகில் நடக்கிறது. தொடர்ந்து பல வருடம் நானும், என் பெண்ணும் கிருஷ்ணமூர்த்தி வருடாந்திர கோடை சந்திப்பிற்கு சுவிட்சர்லாந்து போவோம். அங்கு பல அதிசயங்களைக் கண்டேன். மனிதர்கள், மனிதர்கள்தானே! எங்கிருந்தால் என்ன. ஒரு நாவல் எழுதும் அளவிற்கு விஷ்யங்கள் உள்ளன. ஜேகே பற்றி அதிகம் பேரிடம் பேச முடியாதது ஒரு குறை. உங்களை அறிந்து கொண்டதில் மகிழ்வே!

Senthil's Blog 3/06/2005 01:36:00 AM

Dear Kannan,

Long time back there was a yahoo group maintained by a guy named Rajesh who that time wokring in Satyam Hyd. The gtoup name is jk_with_rajesh . started in 2001 and somehow stopped postings in 2003.He posted snippets of JK's speach and portions from his books.

With Regards
Senthil Nathan.S - Singai

நா.கண்ணன் 3/07/2005 11:15:00 AM

ஜேகே ஒரு ஞானகுரு என்பது உண்மைதான். அதற்காக சிலர் வலிந்து அறிவுஜீவித்தனம் பண்ணும் போது மண்டை காய்ந்துவிடும். பெரிலினில் இருந்து இயங்கும் ஒரு தளம் இப்படி இருக்கிறது. ஜேகே சந்திப்புக்களுக்குப் போனால் அவரை எப்படியெல்லாம் மக்கள் புரிந்து கொள்கிறார்கள் என்று காண்பது ஒரு படிப்பு!