நானே நானா?இந்தப்படம் அக்காவும் அவள் பேத்தியும். என்ன செய்கிறார்கள்? கீழேயுள்ள பழைய காலண்டரைப் பாருங்கள். அதில் முருகன் அருள் செய்து கொண்டு இருக்கிறான். இதைப் பார்த்தவுடன் ஸ்ரீமதிக்கு தானும் இப்படி அருள் செய்ய வேண்டுமென்று தோன்றி விட்டது! இவள் முருகனாகிவிட்டாள். அருள் செய்ய ஒரு தொண்டன் வேண்டுமே! பாட்டி கிடைத்தாள். அக்காவின் பாவமும், குழந்தையின் பாவமும் சத்தியம்! ஆச்சர்யம்!!

இது என்னைப் பல நூற்றாண்டுகள் தள்ளி திருக்குறுங்கூரில் தள்ளிவிட்டது.

திறம்பாமல் மண்காக்கின்றேன் யானே என்னும்
திறம்பாமல் மலையெடுத் தேனே என்னும்,
திறம்பாமல் அசுரரைக்கொன் றேனே என்னும்
திறங்காட்டி யன்றைவரைக் காத்தேனே என்னும்,
திறம்பாமல் கடல்கடைந் தேனே என்னும்
திறம்பாத கடல்வண்ண னேறக் கொலோ?
திறம்பாத வுலகத் தீர்க்கென் சொல்லுகேன்
திறம்பா தென்திரு மகளெய் தினவே? - திருவாய்மொழி 5.6.5

இங்கு பாராங்குசநாயகி தான் கண்ணன் என்கிறாள். அம்மாவிற்கு ஒன்றும் புரியவில்லை. ஈதென்ன ஆவேசமோ? என்று நினைக்கிறாள். ஆனால் நம்மாழ்வாரின் இந்நிலையை விளக்க ஆச்சார்யர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இது அத்வைதமில்லை, ஏனெனில் ஒட்டிக்கொண்டு தான் நாயகி என்ற பாவமிருக்கிறது. அதே நேரத்தில் தாயாக தானே நின்று கேட்கும் போது 'அது' 'அதுதான்' என்று தோன்றுகிறது! இது விசிட்டாத்துவமும் அல்ல. பதஞ்சலி சொல்லும் சமாதியுமல்ல. பின் என்னதான் இது? பிரேம சமாதி என்கிறார் கிருஷ்ணப்பிரேமி. ஆயினும் இந்நிலை விளக்க அவர்கள் ஆயர்பாடிக்குப் போக வேண்டியுள்ளது. அங்கு ஒரு கோபி தன்னைக் காளிங்கனாக உவமிக்க இன்னொருத்தி கண்ணனாக நாடகமிடுகின்றாள். இப்படி ஒவ்வொருத்தியும் பல்வேறு கண்ணன் கோகுல விளையாட்டை கண்ணனேயாகி செய்கின்றனர். அதுதான் போலும் இதுவும்.

பாட்டிக்கு வயது முத்திவிட்டது. கனி பழுத்துவிட்டது. அதனால் பக்குவம் வந்துவிட்டது. குழந்தைக்கு இன்னும் பக்குவம் வரவில்லை :-) கள்ளமற்ற உள்ளம். அது கடவுள் வாழும் உள்ளமாகவே உள்ளது. ஆக, பாராங்குச நாயகி இருந்த நிலையை இப்படம் தெளிவாகக் காட்டுகிறது.

5 பின்னூட்டங்கள்:

Jsri 3/07/2005 06:57:00 PM

சூப்பர் படம். :)

மதி கந்தசாமி (Mathy) 3/07/2005 11:18:00 PM

arumaiyaana padam kaNNan

-Mathy

meena 3/07/2005 11:57:00 PM

காலண்டரில் உள்ள முருகனின் அதே பாவத்துடன் குழந்தை!
என்னமாய்!அருள் பாலிக்கிறாள்!! பவ்யமாய் வணங்கும் பாட்டிக்கு!

மீனா.

KARTHIKRAMAS 3/08/2005 05:00:00 AM

கண்ணன் மறுமொழி இடவில்லையே என்றாலும் உங்கள் வாரம் நன்றாக இருந்தது. நன்றி.

ஜெயந்தி சங்கர் 3/08/2005 10:46:00 AM

Rare photograhp !!!
Very nice !