நேற்று நான் கோயிலிருந்தேன்!
வேறு எங்கு? திருப்புவனம்தான்! அந்தப்பூவணநாதனும், சௌந்தர்ய நாயகியும் நான் விட்டாலும், அவர்கள் என்னை விடுவதாயில்லை. தாயார் சந்நிதியிலிருந்து (ஓ! அம்பாள் சந்நிதி என்று சொல்ல வேண்டுமோ!) ஒரு காட்சி. காலை வெளிச்சம் அப்படியே கோவில் கோபுரத்தைச் சித்திரம் வரைந்திருக்கிறது. அம்பாள் சந்நிதி உள் என்றும் வெளிச்சமாக இருந்ததாக எனக்கு நினைவில்லை. எனவே இருட்டிலிருந்து வெளியே பார்க்கும் போது கோபுரம் மின்னிக்கொண்டிருந்தது. ஓம், முருகா! என்று பெரிதாக எழுதியிருந்தது. கோயில் வாசற்கதவு வழியாகப் பார்க்கும் போது பிரேம் ரொம்பச் சரியாக வந்திருந்தது! அடடா! இப்படியொரு ஆங்கிள் கிடைக்காதே இதைப் படம் பிடிக்க வேண்டுமே! இரண்டொருவர் ஆங்கிளை மறைத்துக்கொண்டு நின்றிருந்தனர். அவர்களோ போவதாய் இல்லை. எரிச்சலாய் இருந்தது. போகச்சொல்லலாமென யோசித்த போதுதான் தெரிந்தது, கையில் கேமிரா இல்லை என்பது.

வெளியே வந்து கோயிலின் மேல்வெளிக்குத்தாவி ஏறினேன். கோயிலின் மேற்புறம் பரந்து விரிந்திருந்தது. ஒரு சின்னப் பயம். மேலேயெல்லாம் ஏறக்கூடாது என்பார்கள். கீழிருந்து பார்த்தால் பிரகாரத்தில் நிறைய பக்தர்கள். ஒரு சிறுவன் என்னைப் பார்த்துவிட்டான். அது சரி, எனக்கு என்ன வயதென்று கேட்கிறீர்களா? வயது தெரியவில்லை அல்லது தோன்றவில்லை. வயதும் போய்விடவில்லை. பையன் என்னைப் பார்த்துவிட்டுத் தானும் மேலே வரவேண்டுமென்றான். சரி, இனி பிரச்சனைதான் என்று எண்ணிக்கொண்டு, நழுவுவதற்குள் கோயில் காவலாளி வந்துவிட்டான்.

நல்ல வேளையாக அவன் எங்களைத்திட்டாமல், சிறுவனை மேலே ஏற்றிவிட்டு எங்களுடன் வந்தான். எப்போதும் வெளிப்பிரகாரம், சந்நிதி என்றுதான் போய் பழக்கம். இன்று வெளியே, உயரத்தில் நின்று கோயிலைப் பார்ப்பது புதிய அனுபவமாக இருந்தது. மேற்பரப்பு, விரிந்து பரந்து இருந்தது. திடீரென்று கையில் மெல்லிய கோல் கொண்டு (பகவர்கள் வைத்திருப்பரே, அது போன்ற கோல்) ஒரு குழு மேலே ஓடிக்கொண்டு இருந்தது. காவியுடை இருந்தது. முதலில் போவோர் இந்தியர்களாக இருக்க அடுத்துப் போவோர் கறுப்பர்களாக இருந்தனர். கோயிலின் மேலே இப்படிக் கூட்டமாக ஓடுவதென்றால் யாருக்குத்தான் ஆர்வம் வராது? கோயில் அமைப்பு என்பது என்றுமே எளிதாக இருந்ததில்லை. இங்கொரு கோபுரம், அங்கொரு கோபுரமென்று முளைத்தவண்ணமிருக்கும். நாங்கள் போவதற்குள் அந்தத் திருக்கூட்டம் எங்கோ மாயமாய் மறைந்து விட்டது. இங்குதான், அங்குதான் எனப் பார்த்த போது கோயில் வெளி பரந்திருந்தது.

திரும்பி தாயார் சந்நிதிக்கு (சாரி, அம்பாள் சந்நிதிக்கு) வந்த போது நான் முன்பு பார்த்த காட்சி இருந்தது, ஆனால் கோயில் கதவு மூடியிருந்தது. யாரோ ஒருவர் நிழலாக என் பின்னால் பார்ப்பது புரிந்தது (இருட்டு வேறு). இப்போது கேமிரா இருந்தது. கிடைத்த ஆங்கிளை வைத்துப் படமெடுத்தேன். கோபுரம் வாசற் கதவின் இடுக்கு வழியாகத் தெரிந்து கொண்டு இருந்தது. அதுவும் அழகாகவே இருந்தது. ஆனால், நான் உறங்கிக்கொண்டு இருப்பதாக ஒரு நினைவு.

காமிராவில் படம் விழுந்திருக்குமா?

காலையில் என் கேமிராவையே பார்த்தேன். சோதித்துப்பார்க்க மனம் வரவில்லை.

படமெடுத்தாச்சு!

0 பின்னூட்டங்கள்: