ஆஸ்திக்கு ஒரு ஆலயம் ஆசைக்கு ஒரு அம்பலம்!

ஒரு புதிய திட்டத்திற்கான முன்வரைவு.

இது பற்றி முன்பு 'பொன்னியின் செல்வன்' மடலாடற்குழுவில் பேசியிருக்கிறேன். சிங்கை வலைஞர் சந்திப்பிலும் பேசியிருக்கிறேன்.

தமிழகம் தவிர்த்த பிற இடங்களில் வாழும் தமிழர்களுக்கு தமிழ்நாட்டிலுள்ள கோயில்களின் பாதுகாப்பு, புணரமைப்பு, ஒழுங்கு, நிருவாகம் இவற்றில் அக்கறையுண்டு. செல்வம் கொழிக்கும் கோயில்கள் தவிர விளக்கொளி கூட இல்லாமல் அழுது வழியும் கோயில்கள் அங்கு ஆயிரமுண்டு. கோடி, கோடியாய் கொட்டினாலும் அம்மாதிரிக் கோயில்களை நம்மால் மீண்டும் எழுப்ப முடியாது. சமீபத்தில் அங்கோர்வாட் போய் வந்த பிறகு ஒன்று மிகத்தெளிவாகப் புரிந்தது. கோயில்களில் வழிபாடும், கவனிப்பும் இல்லையெனில் காலப்போக்கில் அவை அழிந்து படுகின்றன என்று. ராட்சச மரவிழுதுகள் அங்கோர் கோயிலை அப்படியே விழுங்கிச் சாப்பிட்டுவிட்டன! உண்மை. உழவாரப்படை கொண்டு அப்பர் கோயில் துப்புரவில் ஈடுபட்டது வெறும் சமய ஒழுங்கு மட்டுமல்ல. ஒரு கோயில் இடிந்துவிடாமல் காக்க வேண்டுமென்ற அக்கரையும் சேர்ந்ததே. தமிழ் நாட்டில் பக்தி இல்லை என்று பொருள்ளல்ல. அங்கு சீசனுக்கு, சீசன் கோயில் மாறுகிறது. முடிந்தால் எல்லோரும் ஐயப்பன் கோயிலுக்கு மாலை போட்டுவிட்டு குருவாயூரில் காணிக்கை செலுத்திவிட்டு வருகின்றனர். கொடுத்த யானையை வேண்டாமென்று திருப்பித்தருமளவு செல்வக் கொழிப்புள்ள கோயிலது. நம்ம ஊரு கோயில் கேட்பாற்று அநாதையாய் கிடக்கிறது.

நம்மால் என்ன செய்ய முடியும்? சுநாமிக்கு கை கொடுத்தது போல், i mean the help :-) அநாதைக் கோயில்களுக்கும் நம்மால் கை கொடுக்க முடியும்.

1. தமிழ்நாடு வலைஞர்கள் கூடும் போது ஒரு தன்னார்வக்குழுவை உண்டாக்கி முதலில் எத்தனை அநாதைக் கோயில்கள் இருக்கின்றன என்று ஒரு சுற்றுலா-கணக்கு எடுக்கலாம்.
2. எவை மிகவும் பாதுக்கப்பற்ற நிலையில் உள்ளன? எதற்கு உடனடி கவனிப்பு தேவையென்று அடுத்து முன்னுரிமைப் பட்டியல் தயாரிக்கலாம்.
3. உள்ளூர் ஆதரவைத் திரட்டலாம்.
4. அரசு அறங்காவல் நமது திட்டத்தில் மண்ணைப்போடும் அபாயமுண்டா? என்று மைக்ரோ அரசியல் கணிப்பு நடத்தலாம்.
5. ஒரு பிரச்சனையும் வராது எனும் பட்சத்தில் Adopt a Temple என்றொரு வலைப்பூ அமைத்து அதன் மூலம் நம்மில் எத்தனை பேர் அக்கோயில் ஒழுங்கமைப்பில் ஈடுபட முடியும் என்று ஆர்வத்தை உருவாக்கலாம்.
6. தற்போதுள்ள இணைய வசதிகள் கொண்டு கோயில் நிருவாகத்தை கவனிக்கலாம். (பெங்களூரில் ஒரு குருக்கள் கோயில் பூஜையை online-cast செய்து அமெரிக்க அம்பிகளிடம் நன்கொடை வாங்கியது நினைவிற்கு வரலாம்).
7. ஆர்வமுள்ளவர்கள் முதலில் ஒரு வலைப்பூ அமைத்து (அல்லது இருக்கின்ற ஒன்றில் முதலில் ஆரம்பித்து) இது பற்றி யோசிக்கலாம்.

இப்படியொரு எண்ணம் கொஞ்ச காலத்திற்கு முன் எனக்குத் தோன்றியது (சாமில்லாம் வந்து கனவுல சொல்லலீங்க :-) தொழில்நுட்ப வளர்ச்சியில் என்னென்ன செய்யமுடியும் என்று யோசித்து வந்தது!)

அது சமயம் கனடாவில் ஒரு சைவ சமய மாநாடு நடந்தது. அதற்கொரு கட்டுரையாக சமர்பித்தேன். அதை இன்று வலையேற்றியுள்ளேன். அதைப் பின்புல வாசிப்பிற்கு வைத்துக் கொள்ளுங்கள்.

சிங்கப்பூர் வலைஞர்கள் ஆர்வமாய் என்னிடம் கேட்டதால் ஒளியுள்ள போதே தூற்றிக்கொள்ளுகிறேன். கவனித்துக் கொள்ளவும். முன்பு 'பொன்னியின் செல்வி' பவித்ரா இதில் ஆர்வம் காட்டினார். அவருக்கு இது குறித்த சில யோசனைகளுண்டு. அவரும் இதில் கலந்து கொண்டால் நன்று.

இளையாராஜா செயத மாதிரி ஒரு ராஜகோபுரம் நம்மால் கட்ட முடியாவிடிலும், உள்ள கோபுரத்தை நிச்சயம் காப்பாற்ற முடியும்.

2 பின்னூட்டங்கள்:

ambaran 3/05/2005 06:08:00 PM

குழந்தையும் தெய்வமும் கொண்டாடும்
இடத்திலே என்பது உண்மைதான் போலும்.
மின்வலையில் தங்கள் சித்து விளையாட்டினை
காட்டும் வலைஞர்களை போல் முற்காலத்தில்
ஆலயங்கள் மட்டுமே கலைஞர்களின்
கற்பனைத்திறனுக்கு ஆசார வாசலாக
அமைந்திருந்தது.சிற்ப்பிகளை உருவாக்கும்
சிற்ப்பக்ககூடமே ஆலயங்கள்தான்.

நா.கண்ணன் 3/05/2005 09:33:00 PM

அன்புள்ள அம்பரரே!

உங்களைப் போன்ற விஷ்யம் தெரிந்தவர்கள், நாலு பேரிடம் நாசுக்காக பழகுபவர்கள் மனசு வைத்தால் 'மடை' (மன) மாற்றம் செய்விக்கமுடியும். உங்களது உற்சாகம்தான் தொற்றிக்கொள்ளக்கூடியதே! யோசனை சொல்லுங்கள்!