உயிர்நிழல் ஆசிரியர் பாரிசில் மறைவு

சில நிமிடங்களுக்கு முன் யாகூ அரட்டையில் வந்த தோழி சுபா, உயிர்நிழல் ஆசிரியர் திரு. கனசிங்கம் கலைச்செல்வன் நேற்று ஏற்பட்ட மாரடைப்பில் உயிர் துறந்தார் என்ற துக்க சேதியைப் பகிர்ந்து கொண்டார். அவருக்கு வயது 45.

கலைச்செல்வன் ஒரு தேர்ந்த பதிப்பாளர், ஆசிரியர், எழுத்தாளர். எக்ஸில் பதிப்பகத்தின் மூலமாக பல நல்ல நூல்களைக் கொண்டுவந்தவர். ஐரோப்பிய மண்ணில் தமிழ் வெளியீடுகளின் முன்னோடி அவர். 80 களிலேயே "பள்ளம்" என்றொரு சிறு பத்திரிக்கை தொடங்கியவர். எக்ஸில் பத்திரிக்கையின் ஆசிரியர் குழுவிலும், பின் உயிர்நிழல் பத்திரிக்கையின் ஆசிரியர் பொறுப்பிலும் இருந்தார்.

கலைச்செல்வன் பழகுவதற்கு இனிமையானவர். எளிமையும், வெகுளித்தனமும் கொண்டவர். கடின உழைப்பாளி. ஐரோப்பிய இலக்கிய சந்திப்புகளின் மூலம் அவரது தோழமை எனக்குக் கிடைத்தது. பாரிசில் நடக்கும் இலக்கிய சந்திப்புக்களின் பின்பலமாக எப்போதும் இருப்பவர். கண்ணெதிரே நிற்கிறது அவர் என்னை பாரிஸ் வட ஸ்டேஷனில் வந்து வரவேற்றது. அதன் பின்தான் எத்தனைமுறை சந்தித்திருக்கிறோம். எவ்வளவு பொழுதுகளை சேர்ந்து களித்திருக்கிறோம்.

நண்பரின் இழப்பில் துக்கமுறும் அதே வேளை அவருடன் இத்தனை நாள் துணையாய் இருந்த தோழி லக்சுமிக்கு எப்படி ஆறுதல் சொல்வதென்று தெரியவில்லை. அவரது பையன் கபிலன்? பாரிஸ் நண்பர்களுக்கு? அவரது இழப்பு எமக்கு மட்டுமோ? தமிழுக்கும்தானே!

3 பின்னூட்டங்கள்:

-/பெயரிலி. 3/05/2005 09:53:00 PM

:-(
போன ஆண்டு இறுதியிலேதான் உயிர்நிழலிலே தொடர்ந்து எழுதிய உமாகாந்தன் பரிஸிலே இறந்தார். இப்போது, கலைச்செல்வன் மறைந்தார் என்ற தகவலைத் தந்திருக்கின்றீர்கள். அவரை நேரடியாகச் சந்தித்திருக்காவிட்டாலுங்கூட, எக்ஸில்+உயிர்நிழலின் வாசகன் என்ற அளவிலே லக்ஷ்மிக்கு என் அனுதாபம். ஒரு காத்திரமான சஞ்சிகையைத் தொடர்ந்து வெளியிட்ட பெருமை அவர்களைச் சார்ந்தது.

ROSAVASANTH 3/06/2005 10:16:00 AM

எனக்கு உயிர்நிழலின் இரண்டு அல்லது மூன்று இதழ்கள் மட்டுமே வாசிக்க கிடைத்திருக்கிறது. கலைசெல்வனை பற்றி அதிகம் எனக்கு தெரியவில்லை. நன்பர்களுடன் இந்த இழப்பின் சோகத்தில் பங்குகொள்கிறேன். என் ஆழ்ந்த அனுதாபங்கள்!

Balaji-Paari 3/08/2005 08:56:00 AM

என் ஆழ்ந்த அனுதாபங்கள்.