பருந்தின் பாதையில் பார்வை

இன்று ஞாயிறு தொடங்கி இரவெல்லாம் பனிகொட்ட ஆரம்பித்து, பின் மழையாக இன்னும் பெய்து கொண்டிருக்கும் காலைப்பொழுது. நல்ல வெய்யிலும் அடிக்கிறது. நமக்கெல்லாம் வெய்யில் என்றாலே சூடு என்று பழகிவிட்டது. ஆனால், ஜெர்மனி, ஆஸ்டிரியா போன்ற நாடுகளில் நல்ல வெய்யில் அடிக்க கண்களில் குளிர் கண்ணாடி போட்டுக்கொண்டு பனிச்செறுக்குச் செய்வார்கள் என்று சொன்னால் நம்மவர்க்குப் புரியாது. வெய்யில் சுடாது என்ற உண்மையை அவர்களுக்கு எப்படிப் புரிய வைப்பது?

இன்று என் வாரத்தின் கடைசி நாள். அது திங்கள் மதியம்வரை நீள்கிறது. நான் எதிர்காலத்தில் ஓடிக்கொண்டிருக்கிறேன் அமெரிக்க நண்பர்களைப் பொறுத்தவரை. என் எழுத்துக்கள் இறைவன் சொல் போல் எதிர்காலத்திலிருந்து நிகழ்காலத்திற்குத் தாவி கடந்த காலத்தில் வஜ்ரப்படுகிறது. இணையத்தின் காலவேடிக்கைகளில் இதுவுமொன்று!

பலருக்கு என் எழுத்து புதிது. அது போல் பின்னூட்டம் தந்த பலர் எனக்குப் புதிதே! அவர்களை அறிந்து கொண்டதில் மகிழ்வே.

இந்த வாரத்தில் இரண்டு விஷயங்கள் முக்கியமாகப் பட்டன. ஒன்று தமிழ் நடை பற்றியது. சுருக்கமாக உரைநடை vs கவிதை என்பது. இரண்டாவது பெண்மொழி-ஆண்மொழி பற்றியது.

இப்போதெல்லாம் குழந்தைகள் 'அரிச்சுவடி' நிலைக்கு வந்ததும் அடுத்த கட்ட நடவடிக்கையாக கவிதை எழுத ஆரம்பித்து விடுகின்றனர் என்று படுகிறது. இல்லையெனில் கவிதை மொழி இவ்வளவு மலினப்பட்டிருக்காது. இது உரைநடைக்காலம். உரைநடை எல்லோருக்கும் புரிகிறது. கவிதை மொழி புரிவதில்லை அல்லது அது மலினப்பட்டுவிட்டதால் உதாசீனப்படுத்தப்படுகிறது (apathy). இந்த முடிவிற்கு வருவதற்கு காரணம் எனது குறுங்கதை ஏற்படுத்திய சுநாமியை என் கவிதை ஏற்படுத்தவில்லை. கவிதைக்கு ஒரு பின்னூட்டம் கூட இல்லை (ஆனால் படிக்கும்படி பரிந்துரைத்துள்ளனர்). தமிழகத்தில் கவிதையால் புரட்சி செய்த கடைசிக் கவிஞன் பாரதி என்று தோன்றுகிறது. அதற்குப்பின் கவிதை தன் வலுவை இழந்து விடுகிறது. உரைநடை கோலோட்டோட்சத் தொடங்குகிறது.

அடுத்து பெண் விடுதலை பற்றியது. இது 'தலித்' எழுத்து போன்று நிறைய முரண்பாடுகள் கொண்ட ஒரு புலம். ஆண்களுக்கு இங்கு இடமில்லை என்பதிலிருந்து ஆண்கள் செய்வது அனைத்தும் செய்து அதற்கு மேலும் செய்வோம் எனும் நீட்சிவரை அது போகிறது. நாம் வாழுகின்ற சூழலைப் பொருத்தும் இக்கருத்தின் வீரியம் அமைகிறது. பருதா போடுகின்ற நாடுகளில், குண்டியில் சாட்டை வைத்து அடிக்கின்ற சிங்கப்பூர் போன்ற நாடுகளில், 'தழல்' எனும் படம் வெளியானவுடன் குண்டர்களை வைத்து சினிமாத் தியேட்டரைக் கொழுத்தும் இந்தியா போன்ற நாட்டில் இருந்து கொண்டு பெண்ணியம் பற்றி அதிகமாய் சிந்தித்து செயல்பட முடியாது. ஐரோப்பிய, அமெரிக்கக் கண்டங்களில் நிறைய சுதந்திரமுண்டு.

ஒவ்வொரு கோடையிலும் கீல் கடற்கரையில் பெண்கள் திறந்த மார்புடன் சிறிய கீழ்மறைப்பு ஒன்றுடன் காற்று வாங்கப்போவது, அதைப் பார்த்து கண்டு கொள்ளாமல் இருப்பது அங்கு வாழும் ஆண்களுக்கு சகஜமாகிப் போனது. முழுநிர்வாண கடற்கரைகளும் உண்டு. பெரியார் உடல் சார்ந்த விடுதலை பெண்ணுக்கு வேண்டும் என்று பேசியவர் ஆதலால் ஜெர்மனி வந்த போது 'நிர்வாண சபையில்' அங்கத்தினராகி மொட்டைக்குண்டியாய் படமெடுத்துக்கொண்டுள்ளார், பெண்களுடன்!

விடுதலை என்பதை எப்படிக்காண வேண்டுமென்று நாம் யாருக்கும் அறிவுரை கூற முடியாது. இப்போது அமெரிக்காவில் மிகவும் பிரபலமாகியிருக்கும் Sex and the City எனும் சீரியலில் அப்பட்டமான பாலியல் விடுதலை பேசப்படுகிறது. இது வெறும் sensationalism அல்ல. அங்கு ஆணுக்குள்ள அனைத்து உரிமையும் பெண்ணிற்கும் கேட்கப்படுகிறது. ஆண்களுக்கான பெண்கள் காபரே போல் பெண்களுக்கான ஆண்கள் காபெரே இப்போது மேலைப் பண்பாடாகவே மாறிவிட்டது! My body, My Freedom என்பது அங்கு வேதவாக்கு. நிற்க.

தமிழகத்தில் என்ன நடக்கிறது என்று எனக்குத் தெரியாது. நான் 85-ல் அந்த நாட்டைவிட்டுக் கிளம்பியவன். இதுவரை அங்கு சென்று சில வாரங்களுக்கு மேல் வாழ்ந்ததில்லை. அலெக்ஸ் பாண்டியன், அமெரிக்காவில் நடக்கும் சமாச்சாரங்கள் அங்கு நடக்கின்றன எனப் பின்னூட்டம் தந்துள்ளார். இது பேசாப்பொருள் போலும், அதனால்தான் இன்னும் கைப்புண்ணைப் பார்க்காமல் கல்லெறிகிறார்கள். அதனால்தான் எனது கதைக்கு அத்தனை பின்னூட்டம்.

அது உரைநடையின் வெற்றியும் கூட. இதையே கவிதையில் எழுதியிருந்தால் (எழுதியிருக்கிறேன், பாரிசிலிருந்து வந்த ஒரு தொகுப்பில்) இவ்வளவு கோபப்பட்டிருக்க மாட்டார்கள் என்று தோன்றுகிறது. தமிழ்நாட்டில் பத்திரிக்கைகள் வந்து உரைநடை வெகுவாக வளர்ந்துவிட்டது. சிறுகதை இலக்கிய வகை மிகவும் பரிட்சயப்பட்டிருக்கிறது.

பெண்கள் இந்த மாதிரி விஷயங்களை எப்படிக் கையாள்வார்கள் என்று பெண்கள் சொன்னால் ஒழிய ஆண்களுக்கு தெரிந்து கொள்ள வாய்ப்பில்லை. கீல் நகரில் எனக்கொரு நர்தகியைத்தெரியும். அவர் ஓரியண்டல் நடனம் எனும் எகிப்திய நடத்தில் தேர்ச்சி பெற்றவர். நான்கு குழந்தைகள் பெற்ற பின்னும், உடலை சிக்கென வைத்துக்கொண்டு (பிள்ளை பெறாமலே பத்மா ஏன் இப்படி உப்பிப்போனார்?) நடனமாடிக்கொண்டிருக்கிறார். அவரது கடைசி மகப்பேறு எப்படி நடந்தது என்று அவர் எங்களிடம் வர்ணித்தது மறக்கவியலாது. எப்போதும் மகப்பேறு என்பது ஆஸ்பத்திரியில், டாக்டர்கள் மத்தியிலேயே நடைபெறுகிறது, எனவே கடைசி மகப்பேற்றை வீட்டில், நண்பர்கள் மத்தியில் வைத்துக் கொள்ள வேண்டுமென்று தீர்மாணித்தார். அதை செய்தும் காட்டினார். அவரது உற்ற நண்பர்களை அழைத்து ஒரு விருந்திற்கு ஏற்பாடு செய்துவிட்டு வீட்டு முற்றத்தில் பெரிய நீர் தடாகம் உருவாக்கி இயற்கை முறையில், குடும்ப சூழலில், நண்பர்கள் சூழ (நண்பர்கள் என்றால் ஆணும் சேர்த்தி) அவர் குழந்தை பெற்றதை வாழ்வின் உன்னதமான பொழுதாகக் கருதுவதாகச் சொன்னார். இதை நம்மவர் எப்படி எடுத்துக்கொள்வர் என்று தெரியாது. நம்மாழ்வார் சொல்வது போல் 'நிறை' கொண்டவள் தமிழ்பெண். எனவே இது ஒரு பினாத்தலாகப் படலாம். ஆனால், இந்தப் போக்குகளிலிருந்து நாம் முழுவதும் நம்மைத்தனிமைப் படுத்திக்கொள்ள முடியாது. இந்துத்வா பாணியில் அவர்கள் காட்டுமிராண்டிகள் என்று பட்டம் கட்டிவிட்டு கண்ணை மூடிக்கொள்ள முடியாது. காண்டோம் கண்டுபிடித்தது அவர்கள். இன்று எய்ட்ஸ் ஆய்வில் முன்னணியில் நிற்பவர்கள் அவர்கள். பாலியல் என்பதன் இலக்கணம் வெகுவாக மாறிவரும் நூற்றாண்டில் நாம் வாழ்கிறோம்.

இவையெல்லாம், பொதுவான அவதானங்கள். பெண்ணின் உணர்வுகள் அவளுக்கே சொந்தமானவை. அந்த சுதந்திரத்தில் தலையிட யாருக்கும் உரிமையில்லை. அவளுக்கு என்ன வேண்டும் என்பது அவளுக்குத் தெரியும். அதை அவள் வேண்டிப் பெறுவாள் என்று நம்பி என் பிதற்றலை முடித்துக் கொள்கிறேன். (இது கடைசிக் கடிதமல்ல :-))

6 பின்னூட்டங்கள்:

துளசி கோபால் 3/06/2005 01:22:00 PM

அன்புள்ள கண்ணன்,

உங்கலது நட்சத்திரப் பதிவுகளளில் சில வேறு கண்ணோட்டத்தில் எழுதப்பட்டது என்று
நம்புகின்றேன்!

//ஒவ்வொரு கோடையிலும் கீல் கடற்கரையில் பெண்கள் திறந்த மார்புடன் சிறிய கீழ்மறைப்பு
ஒன்றுடன் காற்று வாங்கப்போவது, அதைப் பார்த்து கண்டு கொள்ளாமல் இருப்பது
அங்கு வாழும் ஆண்களுக்கு சகஜமாகிப் போனது. //

நம் நாட்டு ஆண்களும் இவற்றைக் கண்டாலும் காணாததுபோல பாவித்துக் கொள்வார்கள். ஆனால்
ஒரே ஒரு விதி மட்டும் உண்டு. இந்தப் பெண்கலில் யாருமே இவர்களுக்கு உறவினராக இருக்கக் கூடாது!

அது போகட்டும், 'சில வார்த்தைகளின்' பிரயோகங்கள் மீது உங்களுக்கு அதீத பிரேமை இருப்பது போல
நான் உணர்ந்தேன். அது அப்படியில்லை என்றால், அப்படி இருப்பதாக உணர்ந்தது என் தவறு!

என்றும் அன்புடன்,
துளசி.

துளசி கோபால் 3/06/2005 01:24:00 PM

'ள' எல்லாம் 'ல' வாக வந்துள்ளது. இந்தத் தவறுக்கு வருந்துகின்றேன்!

அன்புடன்,
துளசி.

நா.கண்ணன் 3/06/2005 02:25:00 PM

:-) அப்படியில்லை. காரணமிருக்கிறது. தேவையானால் விளக்கலாம்!

Thangamani 3/07/2005 04:41:00 AM

கண்டிப்பாக விடுதலையின் வரம்புகளை மற்றவர்க்கு சொல்லமுடியாது; அதுதான் அதை கடவுளுக்கு நிகராக (என்வரையில் கடவுளாக) மாற்றுகிறது. அதை மீள்வரையரை செய்வதல்ல, அதை வரையரை செய்யும் கருதுகோள்களை உடைப்பது ஒன்றே வழி. ஆனால் அதைக் கண்டுகொள்வது ஒவ்வொருவரின் கண்களைப் பொருத்தது. நன்றி

Ramachandranusha 3/07/2005 05:52:00 PM

test

Ramachandranusha 3/07/2005 05:59:00 PM

வரை முறைக்கு அளவு உண்டா? ஊருக்கு, நாட்டுக்கு ஏற்றாற்போல மாறுவதுதானே இது. நிர்வாண ஊரில், கோவணம் கட்டியவன் பைத்தியக்காரன். ஆனால் கண்ணன் சார், நீங்கள் எழுதிய பல விஷயங்கள் என்னை அதிகம் யோசிக்க வைத்தன. அந்த கருத்துக்கள் என் எழுத்தில் மாற்றதைக் கொண்டு வரலாம். அதற்கு நன்றி
உஷா