சிந்தனை செயல் இழக்கும் போது உள்ளம் தெளிகிறது

"எழுதுவது என தொடங்கிவிட்டாலே போலித்தனங்கள் வந்து விடுகிறது. நினைப்பதை எழுத இயலாமல், சொற்களை எழுதிக் கொண்டிருக்கிறோம். அர்த்தங்களின் அர்த்தங்களை உணராமல், வெறும் வார்த்தைகளால் நம் சார்பினை முன்வைக்கின்றோம்"

எனும் கிருஷ்ணமூர்த்தியின் மேற்கோளுடன் இந்த நட்சத்திர வாரத்தை தொடங்கியிருக்கிறார் நாராயண். சிந்தனைகளின் குணாம்சமே இன்னொரு சிந்தனையைத் தூண்டுவதுதான். அது ஒரு ரிலே ரேஸ். ஓடிக்கொண்டே இருக்கும். நேர்கோட்டில் அல்ல. சில நேரம் நேரே ஓடும். அப்புறம் ஒரு வட்டமடிக்கும். பின்குறுக்கே பாயும். சடாலென திரும்பிப்பாயும். முன்னே கிளம்பி பின்னே பாயும். சிந்தனையை ஒழுங்காக யாராலும் தொடரவே முடியாது. ஏனெனில் சிந்தனையின் அடிப்படை அமைப்பே ramdom jump-தான். கொஞ்சம் தீப்பொறி மாதிரி. பட்டு, பாட்டு என்று வெடிக்கும். பொறி எங்கு தோன்றும் எத்திசையில் விழும் என்று தெரியாது. ஆனால் பொறித்துக் கொண்டே இருக்கும்.

இப்படிச் சில்லரையாய் தோன்றும் சிந்தனைகளை எழுத்தாக வடிக்க முடியுமா என ஒரு பரிசோதனைக் கதை எழுதினேன். உதிரிப்பூக்கள் என்று பாரிசில் வெளிவரும் பத்திரிக்கையில் வெளியிட்டேன். அதில் தொடர்பு இருப்பதுபோலிருக்கும் தொடர்பு இருக்காது. ஆனால் கிருஷ்ணமூர்த்தி சொல்வது போல் சிந்தனையைப் பார்த்தவுடன் அது அவிந்துவிடும். அந்தப்பக்கம் திரும்பியவுடம் மீண்டும் பொறிக்கும். எனவே நம் எழுத்து என்பது செயற்கையாக ஒருமுகப்படுத்திக் கொண்டு எழுதுவதே. அப்படிச் செய்யவில்லையெனில் எழுதவே முடியாது. ஆனால், அந்த எழுத்து உண்மையின் சரியான பிரதிபலிப்பு என்று சொல்ல முடியாது. இது குவாண்டம் - கற்றை இயற்பியல் பரிசோதனை மாதிரி. சிந்தனை நாம் பார்க்கும் விதமாகவே திரும்பும். நாம் கவனிக்கிறோமென்றால் அது இருக்காது. ஆனால் அதன் உதவியால்தான் எழுத முடியும். ரொம்ப சிக்கலான விஷயம்.

போலியோ, கற்பனையோ...நட்சத்திரம் என்றவுடம் கோர்வையாக நட்சத்திரங்கள் என்ற வார்த்தை தொடர்பான சேதிகளை சேகரித்து எழுதுவது ஒன்றுதான் பிராக்டிகல் வழி. உண்மையாக ஜீவ ஒளியில் எழும் எழுத்து எப்படியிருக்குமென்று தெரியவில்லை.

இப்படி யோசித்தோமெனில் மௌனித்துவிடுவோம் என்று தோன்றுகிறது. இந்த கோயன் எனும் ஜென் கவிதை வடிவம் சிந்தனையை செயல் இழக்க வைக்கும் இடியாப்ப முடிச்சுகள் கொண்டது. சிந்தனை அசந்து போய் அடங்கிவிடும். அப்போது உள்ளம் புலம்படும்.

4 பின்னூட்டங்கள்:

Thangamani 3/14/2005 10:07:00 PM

//சிந்தனையைப் பார்த்தவுடன் அது அவிந்துவிடும்//

கவனிக்கும் போது அது நசித்து அழிகிறது. கவனியாதபோது பெரும் விருட்சமாய் கிளை பரப்புகிறது.

நா.கண்ணன் 3/15/2005 01:09:00 PM

உலகத்திலேயே மிகவும் கடினமான காரியம் இந்த சிந்தையைக் கவனிப்பதுதான். நமக்கு (?) டேக்கா கொடுத்துவிட்டு ஓடிப்போக ஆயிரம் வழிகள் வைத்திருக்கிறது அது!

Sri Rangan 3/16/2005 02:04:00 AM

Dear Kannan Sir,
Ideas are not responsible for what people make out of them.If you want to achieve something you must throw in your whole self;This day can end quite differently, bring new understandings,new insights,new strength.
Regards
P.V.Sri Rangan

நா.கண்ணன் 3/16/2005 07:47:00 AM

நன்றி ரங்கன்: நலம்தானே! சிந்தனை என்பது கையில் ஊற்றிய எண்ணெய் போல் கசியக்கூடியது. காரியம் செய்து கொண்டிருக்கும் போதும். தனியாக இசை கேட்கும் பொழுதுகள். மெல்லியதாய் இசை உங்கள் காதுகளுக்கு மட்டும் கேட்டுக் கொண்டிருக்கிறது. அந்த இசையில் எழும் வரிகள் உங்களை வேறு எங்கோ இட்டுச் சென்றுவிடும். இசை பாட்டுக்கு ஓடிகொண்டிருக்கும். நாம் ஒரு சுற்று, சிற்றி விட்டு வரும் போது பாதிப்பாட்டு முடிந்திருக்கும். செயல் சிந்தனையை செயலிழக்கச் செய்வதில்லை. சிந்தனை அடங்கிப் போவது தியானத்தில் அல்லது 100% ஆச்சர்யத்தில் அல்லது முழு ஈடுபாடான காரியத்தில். மற்ற எல்லா நேரங்களிலும் அது கசிந்து கொண்டே இருக்கும், நம் கைகளிலிருந்து :-)