ஞானபீடக் காற்றே, தமிழ் பக்கம் வீசே!

கொஞ்ச நேரத்திற்கு முன்தான், 'நேசமுடன்' வெங்கடேஷ் ஜெயகாந்தனுக்கு இந்தியாவின் மதிக்கத்தக்க இலக்கிய விருது ஆன ஞான பீடப்பரிசு கிடைத்திருப்பதாகச் சொன்னார். உடனே எழுதுகிறேன்.

குதுகூலமாக இருக்கிறேன். 25 வருடங்களுக்குப் பிறகு. அகிலனுக்குப் பிறகு ஞானபீடக் காற்று தமிழ் பக்கம் வீசியிருக்கிறது. எத்தனையோ முறை இது குறித்த என் ஆற்றாமையை பல மடலாடற்குழுக்களில் தெரிவித்துள்ளேன். சாகித்ய அகாதெமி உ.ஆர்.அனந்தமூர்த்தியை லண்டனில் சந்தித்த போது இது பற்றி கலந்துரையாடி இருக்கிறேன். (அப்போது வெளி வந்த கருத்துக்களும் இம்மடலில் அடக்கம்) இது நிச்சயம் ஒதுக்கமுடியாத அவரின் (ஜெயகாந்தனின்) தங்கத்தமிழுக்குக் கிடைத்த பரிசு. ஆயினும் இவ்வளவு மெத்தனம் தமிழ் இலக்கிய வட்டத்தில் இருக்கக்கூடா!து. இப்படித்தான் ஞானபீடம் தமிழுக்கு வர வேண்டுமெனில் அடுத்த பரிசு வர இன்னும் எத்தனை மாமாங்கங்களோ! தமிழ் எழுத்தாளர் சங்கம் இருந்தென்ன பிரயோஜனம்? தமிழ் நவீன இலக்கியத்தை தமிழ்நாட்டிற்கு புறத்தே உள்ள மானிலங்களுக்கு, நாடுகளுக்கு எடுத்துச் செல்ல வேண்டியது இவர்கள் கடமை இல்லையா? மலையாள, கன்னட எழுத்தாளர்களுக்கிடையே உள்ள Lobbying தந்திரம் ஏன் நமக்கில்லை. எப்போதும் தமிழ் இலக்கிய வட்டத்தில் பொச்சுக்காப்பும் பொறாமையும்தான். ஒருவர் எழுத்தை ஒருவர் புகழுவதில்லை. ஆரோக்கியமான விமர்சனம் என்பதில்லை. அடாவடித்தமும், அழுச்சாட்டியமும்தான் அங்கு கோலோச்சுகிறது. மலேசிய எழுத்தாளர்களைப் பாருங்கள் தங்கள் படைப்புகளைக் கூட்டாக உலக அரங்கிற்கு எடுத்துச் செல்கின்றனர். இலக்கியம் பிசினஸ் அல்ல. எனவே இங்கு போட்டிக்கும், பொறாமைக்கும் ஏது இடம்? இங்கு ரசனை வேறுபாடு இருக்கலாம். ருசி வேறுபாடு இருக்கலாம். ஆனால் வக்கீல் நோட்டீஸ் கொடுப்பது, அடிதடியில் இறங்குவது, கொச்சையாக நோகடிப்பது, வன்முறை இதற்கு இலக்கியத்தில் இடமேது? மனிதனை மேம்படுத்துவது இலக்கியம். காலத்தால் நிற்கும் இலக்கியச் செல்வங்களைக் கண்ட தமிழின் இன்றைய நிலை கவலைக்கிடமாக உள்ளது.

இப்படி நொந்து போயிருக்கும் போழ்தில் அமுதாக இச்சேதி எம் காதுகளில் விழுகிறது. இதில் நண்பர் மாலனின் பங்கும் கணிசமானது. கொஞ்ச நாளுக்கு முன் அவர் ஒரு கணிப்பு நடத்தினார். அதில் ஜெயகாந்தனை முன் மொழிந்தவர்களுள் நானும் ஒருவன்.

ஜெயகாந்தனின் ஞானபீடப் பரிசு நம் கௌரவத்திற்குக் கிடைத்திருக்கும் பரிசு. ஜெயகாந்தனுக்கு என் இதயபூர்வமான வாழ்த்துக்கள். 'திசைகள்' மாலனுக்கு நன்றிகள்.

2 பின்னூட்டங்கள்:

வசந்தன்(Vasanthan) 3/19/2005 07:50:00 PM

இந்த மகிழ்ச்சியில் நானும் பங்கு கொள்கிறேன்.

இராதாகிருஷ்ணன் 3/20/2005 06:02:00 PM

மகிழ்ச்சியான செய்தி. ஜெயகாந்தன் அவர்களுக்கு வாழ்த்துகள்! 2002-ற்கான விருதை 2005-ல் வழங்குகிறார்கள்?!