மரணம் இருத்தலின் சவால்

கலைச்செல்வன் இறந்த இரண்டாம் நாள் லண்டனிலிருந்து கதைத்த கிருஷ்ணராஜா, "என்ன இப்படிப் பண்ணிட்டான்?" என்றுதான் ஆரம்பித்தார்.

இது யதார்த்தமான வசனம் என்றாலும், பொருள்ள வசனம். இறப்பு என்பது இறந்தவருக்கு வாழ்வின் முடிவு. துக்கத்தின் எல்லை கடந்துவிட்ட தருணம். ஆனால் இருப்பவருக்கு இன்னொரு துக்கம். அதனால்தான் இறப்பின் பழி இறந்தவரையே சாருகிறது! கலைச்செல்வனின் இறப்பு நண்பர்கள் வட்டத்தில் ஒரு அதிர்வு அலையை அனுப்பியுள்ளது. பொ.கருணாகரமூர்த்தி கடிதம் அனிப்பியிருந்தார். சுசி எழுதினார். பிராங்போர்ட் றஞ்சி எழுதினார். இதுதான் ஆறுதல். இறந்தவர் நண்பர்களை இல்லாத போதும் கூட வைக்கிறார். இது இறத்தலின் சிறப்பு. இருப்பு தன் இருத்தலை நெரு(க்)ங்கி இறத்தலை எதிர் கொள்கிறது! ஏனெனில் இருக்கும்வரை இருத்தலால் இறப்பை புரிந்து கொள்ளமுடியாது. எனவே இருப்பு பிற இருப்புகளை நெருங்க வைத்துக்கொண்டு இறப்பை நெருங்கிப் பார்க்கும். அப்போதும் ஒன்றும் புரியாது. ஆனாலும் ஏதோ புரிந்துவிட்ட ஆறுதல்!

இறந்தவர் மீண்டும் பிறப்பார் என்பது கேள்வியை ஒத்தி போடும் உத்தி. ஒரு ஆறுதல். ஏனெனில் இறப்பை எந்தக் காலத்திலும் 'இருப்பால்' புரிந்து கொள்ளமுடியாது. எனவே இறப்பைப் பற்றிய தெளிவான ஞானமே நம் துக்கத்தின் விடுதலையாக அமையும். இறப்பு கசப்பானதல்ல. இறப்பே வாழ்வின் விளைநிலம். அங்கிருந்து தோன்றி அங்கே மீண்டும் சங்கமிக்கிறோம். வாழ்வின் நிச்சியமில்லாத் தன்மையின் நிச்சியம் இறப்பு. எனவே இறப்போடு வாழப்பழகவேண்டும். இறப்பு பற்றிய தியானம் சதா இருக்க வேண்டும். இறப்பு பற்றிய பயமல்ல. தியானம். ஞானம். ஒன்பது ஓட்டையுள்ள உடம்பில் காற்று நிற்பதுதான் அதிசயம். நாம் இருப்பது அதிசயம். பேசுவது அதிசயம். எழுதுவது அதிசயம். வாசிப்பது அதிசயம். நீங்கள் ஒரு அதிசயம். கலைச்செல்வன் ஒரு அதிசயம். கலைச்செல்வியும் அதிசயம்.

இறப்பை நாம் எப்படி எதிர்கொள்ள வேண்டுமென்று ஜே.கேயிடம் பலர் கேட்டிருக்கின்றனர். அவரது பதில் எல்லோரையும் ஆச்சர்யத்தில் இட்டிருக்கிறது. பதில், "நீங்கள் ஒன்றும் செய்ய வேண்டாம்" என்பதே. அழுது, புலம்பி, போட்டோ மாட்டி, பூஜை செய்து, ஒப்பாரி வைத்து ஊர் கூடல் எல்லாம் உங்கள் நினைவிற்கு நீங்கள் ஆற்றும் கிரிகையே. இதனால் இறந்தவனுக்கு ஒன்றும் ஆகப்போவதில்லை என்பதே. இறந்தவரை நினைத்து அழுவது கூட நமது மனச்சாந்திக்கே தவிர வேறொன்றுமில்லை என்கிறார் ஜே.கே! "அழாதே! விடைகொடு" என்பதே அவரின் உபதேசம்.

நண்பர் கலைச்செல்வன் இருந்திருந்தால் இது போல் இன்னும் பல விடயம் கதைத்திருக்கலாம். இல்லை. எனவே உங்களுடன் கதைக்கிறேன்.

2 பின்னூட்டங்கள்:

கறுப்பி 3/12/2005 12:50:00 PM

கலைச்செல்வனின் மறைவு இலக்கிய நண்பர்கள் உறவினர்கள் எல்லோருக்குமே மிகவும் அதிர்வான செய்தியாகும். சிறந்த ஒரு இலக்கியவாதியாகவும் நல்ல ஒரு நடிகனாகவும் எனக்கு அறிமுகமாகிப் பின்னர் உயிர்நிழல் ஆசிரியாக இருந்த போது அச் சஞ்சிகையில் தொடர்ந்து எழுதி வந்த என் எழுத்தை ஊக்கப்படுத்திய ஒரு நல்ல நண்பர். முகமறியாவிட்டாலும் தொலைபேசியில் என்னை அழைத்து என் படைப்புகள் பற்றி அவர் விவாத்தித்தமையை நான் பெருமையாகக் கொள்கின்றேன். கனடாவிற்கு கலைச்செல்வன் வருகை தந்திருந்த போது அவரை நேரில் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது அப்போது பல மணிநேரங்கள் அவரோடு உரையாடும் சந்தர்ப்பத்தில் அவருக்குண்டான அந்த இலக்கிய தாகத்தை என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது. நல்ல இலக்கியங்கள் வளர வேண்டும் என்பதில் மிகவும் ஆர்வமாக இருந்த கலைச்செல்வன் உயிர்நிழலைத் தொடர்ந்து நடத்துவதற்கு மிகுந்த பாடுபட்டார் என்பது எல்லோரும் அறிந்ததே. கலைச்செல்வன் இப்போது எம்மிடத்தில் இல்லை என்பது மிகுந்த துயரத்தைத் தருகின்றது. அவரின் துணைவியார் லக்சுமி சகோதரர் திருமாவளவன் அவரின் குடும்பத்தினர் நண்பர்களுடன் எனது துயரத்தைப் பகிர்ந்து கொள்கின்றேன்.

Sri Rangan 3/12/2005 07:07:00 PM

Dear Kannan,
Consciousness of a fulfilled life and the remembrance of many good hours are the greatest happiness on earth!To search for truth, to love beauty,to want the good and to do the best-that is our destiny.
Besr Regards
P.V.Sri Rangan