மாறன் மடல்

001

பார்த்தன் கண்ணனைக் காண மதுரை வருகிறான். அவனது அரண்மனையிலேயே தங்குகிறான். ஒரு நாள் இரவு வாயிலில் யாரோ ஒருவர் புலம்புவதைக் கேட்டு பார்த்தன் விழித்து என்ன விஷயமெனக் கேட்கிறான். வைதீகனொருவன் தன் மனைவி பிரசிவிக்கும் குழந்தைகள் யாவும் பிறந்த சிறு பொழுதில் காணாமல் போய்விடுவதாகவும் இதைக் கண்டறிய வேண்டியது அரசின் கடமை என்பதால் முறையிட வந்துள்ளதாகக் கூறினான். கண்ணன் இன்னும் நித்திரையில்! எனவே பார்த்தன் தானே அக்கடமையை தலையில் போட்டுக்கொண்டு அந்தணனைக் காப்பதாய் உறுதியளிக்கிறான். தான் அதில் தோற்றால் தீக்குளிப்பதாயும் சபதம் செய்கிறான். பார்த்தனின் காப்பிலும் பிறந்த மகவு மறைந்து போகிறது. பார்த்தனும் பல்வேறு லோகங்களுக்கும் பயணப்பட்டு தேடிக் களைத்து இறுதியில் உயிர் துறக்க ஆயத்தமாகிறான். அது பொழுது மாயக்கண்ணன் அவனிடம் வந்து என்ன பிரச்சனை என்றறிந்து தான் உதவுவதாகச் சொல்கிறான். பார்த்தன் போகமுடியாத உலகுகள் உண்டென்றும் அதனதன் அதிபதிகளுடன் சென்றால் அன்றி உட்புகமுடியாது என்று கூறி பார்த்தனையும், வைதீகனையும் அழைத்துக்கொண்டு பரஞ்சோதி குடிகொள்ளும் பரமபதத்திற்கு இட்டுச் செல்கிறான். அங்கிருந்த அந்தணினின் பிள்ளைகள் நால்வரை அவை எவ்வப்பொழுது மறைந்ததோ அக்கணக்கு மாறாமல் அதனதன் வயதில் திருப்பி எடுத்துத்தருகிறான் என்பது கதை.

இதை மாறன் என்ற இயற்பெயர் கொண்ட நம்மாழ்வார் இப்படிப் பாடுகிறார்...

இடரின்றி யேஒரு நாளொரு போழ்தில்எல்
லாஉல கும்ககழியப்
படர்புகழ்ப் பார்த்தனும் வைதிக னும்உடன்
ஏறத்திண் தேர்கடவிச்
சுடர்ஒளி யாய்நின்ற தன்னுடைச் சோதியில்
வைதிகன் பிள்ளைகளை
உடலொடும் கொண்டு கொடுத்த வனைப்பற்றி
ஒன்றும் துயர்இலனே. (தி.மொழி 3-10-4)

பாடல் பொருள் புரியாத அளவு செற்சொற் கொண்டதல்ல. ஆனால் இதைப் புரிந்து கொள்ள வெறும் தமிழறிவு மட்டும் போதாது. புராண, இதிகாசப் பரிட்சயம் வேண்டும். எனவேதான் திருவாய்மொழிக்கு சரியான பொருள் கொள்ள பல்வேறு காலக்கட்டங்களில் பல்வேறு உரையாசிரியர் செய்வித்துத் தந்திருக்கும் உரைகள் முக்கியமாய் படுகின்றன. இக்கதையை திருமங்கை ஆழ்வாரும், பெரியாழ்வாரும், திவ்யகவியும் மேற்கோள் காட்டுகின்றனர்.

இந்தக் கதையில் சூட்சுமமான ஒரு நேர்காணல் பற்றிப் பேசுகிறார் மாறன். அதாவது சுடர் ஒளியாய் நிற்கின்ற பரமபத நாதனை அதன் அங்கமான கண்ணன் தரிசிக்கும் காட்சி. இது எப்படி சாத்தியமாகும்? ஏதோ அறிவியல் புனைவு போல் போகிறது கதை. நம்மை நாமே நேர்காணல் செய்தால் எப்படியிருக்கும். வெறும் நடிப்பாக இல்லாமல் நிஜமாகவே. கண்ணாடி முன் நில்லாமல் நிஜமாகவே நம்மை நாம் எதிர்சேவை செய்ய வேண்டும்.

சமீபத்தில் வந்த ஹாரிபாட்டர் படத்தில் கூட இப்படியொரு காட்சி வருகிறது. அதில் காலப்பயணம் செய்து தாங்கள் செய்த ஒரு சிறுபிழையைத் திருத்துவதாக வரும். அதில் ஹாரிபாட்டர் இடரில் மாட்டிக்கொண்டு உயிர்விடும் தருவாயில் அவனது தந்தை அரூபமாக, ஒளி வடிவில் வந்து காப்பதாக வரும். இதையே ரிவர்சில் போய் பார்க்கும் போதுதான் தெரியும் தன்னைக் காத்தது தன் தந்தையல்ல தானேயென்று. மிக சுவாரசியமான twist. ஆனாலும், கால, வெளிப்பரிமாணங்களில் ஒன்று தன்னையே காணுதல் இயலாது. அப்படிக் கண்டுவிட்டால் சர்வமும் குழம்பிவிடும். எனவே இந்தப்படத்திலும் ஹாரிபாட்டர்-ஹாரிபாட்டர் எதிர்சேவை இருக்காது. ஆனால் பூடகமாக ஒன்று, ஒன்றையே கவனிக்கும், திருத்தும். இந்தப்படம் பார்த்ததும் இந்தக் கதைதான் நினைவிற்கு வருகிறது. எல்லாவகையான சர்ரியலிசமும் நம் புராணங்களில் இருக்கிறது. அள்ள, அள்ளக் குறையாத ஊற்று அது. மகாபாரத்திற்கு ஈடு, மகாபாரதமே!

இந்த நேர்காணல் ஏன் நிகழ்கிறது என்பதின் வியாக்கியானம் அழகு. பரவாசுதேவன் நிர்குணமாக, அரூபனாக, ஞானமூலமாக நிற்கிறார் (நிற்கிறது). ஆனால் அது குணம் கொள்ளும் போது வாழ்வு மிளிர்கிறது, ஆனந்தம் உதிக்கிறது. எனவே கண்ணனின் ராசக்கிரீடைகளில் ஆர்வம் கொண்ட இலக்குமித்தாயாரும் அடிக்கடி பூலோகம் போய்விட, கண்ணனிடம் அப்படி என்னதான் அழகு? என்ன வசீகரம் உள்ளது எனக்காண பரவாசுதேவனே குழந்தைகளை அபகரித்து வருகிறார். இதை சாக்காக வைத்து கண்ணன் வருவான், தான் காணலாமென்று.

மதுராபதியில் அனைத்தும் மதுரம். அவனது கண்கள் மதுரம், நாசி மதுரம், இதழ்கள் மதுரம், அவன் பேச்சு மதுரம். அவனிருப்பதால் அகிலமே மதுரமாய் தெரிகிறது என்கிறார் வல்லபர். இந்த மதுரத்தைக் காண 'பரம்' ஆசை கொள்கிறதாம். நம்மில்கூட எத்தனையோ சௌளந்தர்யங்களுண்டு. நாமே ரசிக்கும் குணங்களுண்டு. நம்மில் ஆகச்சிறந்த அந்தக் குணமுடையவனை(ளை) நாம் சந்திக்க ஆசைப்படமாட்டோமா? அது நிகழ்ந்தால் எவ்வளவு இனிமையாக இருக்கும். நமது குறைகளைக் களைந்து, நம்மில் உள்ள ஆகச்சிறந்த குணங்களை மட்டும் வெளிக்காட்டும் நம்மை நாம் சந்தித்தால்?

அப்படி நிகழும் ஒரு நாளில், ஒரு பொழுதில் உலகம் கழிந்துவிடும்.

**********************************************************

நீங்கள் விரும்பினால் மாறன் தூரிகை மீண்டும் மலரலாம்....

0 பின்னூட்டங்கள்: