அன்று வந்தது (சிறுகதை)

அன்று வசந்தம் வந்து இருந்தது. இதையறிந்தே விவசாயிகள் நிலத்தை உழத்தொடங்கியிருந்தனர். நீண்ட பகற் பொழுதுகள் மீண்டும் மீண்டன. ஒன்பதாவது மாடியிலிருந்து விளை நிலங்கள் தெரிந்தன. பனிக்காலத்தில் பர்தா போட்டிருந்த நிலங்கள் இன்று வெட்ட வெளியைக் கண்கூசப்பார்த்து நின்றன. உறைந்து போன ஆறுகள் நேற்றுப் போலுள்ளன. ஆறுகள் மீண்டும் ஓடத்துவங்கியிருந்தன. நட்டு வைத்த செர்ரி மரக்குச்சி கூட துளிர் விடுவதற்குப் பதில் பூப்பூத்து நின்றது. வசந்தம் வந்துவிட்டது.

அவன் தனியாக சமைத்துக் கொண்டிருந்தான். சமையலறையில் அவனைத்தவிர யாருமில்லை. அன்று ஞாயிறு. தனிமையைப் போக்க தமிழ்ச் சினிமாப் பாட்டுக் கேட்டுக்கொண்டிருந்தான். இனிக்க இனிக்கப் பாடும் காதல் பாடல்களைக் கேட்டால் சாப்பாடும் ருசிக்கும் என்று நம்பினான். இந்த நம்பிக்கையில் மட்டும் அவன் என்றும் தளர்ந்ததில்லை. குழம்பு கொதித்துக் கொண்டிருந்தது. லேசாக தலை சுற்றியது! இது என்ன புதுசாக என்று யோசித்துக் கொண்டே அருகே பார்த்த போது குழம்பு கொதிப்பது போலவே குளிர்பதனப் பெட்டியும் குதித்துக் கொண்டிருந்தது. ஒன்றும் புரியாமல் இன்னும் மேலே பார்த்தான், பிரிட்ஜ் மேல் வைத்திருந்த கரண்டி ஸ்டாண்ட் கிலு, கிலுப்பை போல் சத்தம் போட்டுக் கொண்டிருந்தது. செவியின் அருகில் சாதானா சர்க்கம் கொஞ்சிக் கொண்டிருந்தாள். அவள் மென்னியைப் பிடித்துவிட்டு நன்றாகப் பார்த்தான். இவன் நிற்கும் கட்டிடம் ஆடிக்கொண்டிருந்தது. அப்போதுதான் புரிந்தது இது பூகம்பத்தின் அறிகுறி என்று. அவ்வளவுதான். செய்த சமையலை அப்படியே விட்டு, விட்டு, அடுப்பை அணைத்த கையோடு படிகளை நோக்கித் தாவினான். கீழே வந்து நின்ற போது இவனைப் போல் கல்யாணமாகியும் பிரம்மச்சாரிகளாக வாழும் ஒரு தமிழ் கோஷ்டி நின்றிருந்தது. தொப்பையை தூக்கமுடியாமல் தூக்கிக்கொண்டு சுப்பிரமணியம் வந்தார். "என்ன சார் இது? எனக்குத்தான் தலை சுற்றல் என்று பார்த்தால், கட்டடமே ஆடுதே? இடிஞ்சு விழுந்துடுமோ? நாம இங்க நிக்கறது கூட ஆபத்து சார், வாங்க போகலாம். நல்ல வேளை லிப்ட்டிலே கூட்டமில்ல, உடனே வரமுடிஞ்சது!" என்று முடித்தார் சுப்பிரமணியம். "என்னங்க நீங்க ஒண்ணு? இந்த மாதிரி சமயத்திலே படிகளைத்தானே உபயோகிக்கணும். லிப்டிலே வரபோது கரண்ட்டு போச்சுன்னா என்னாகும்? எலிப்பொறியிலே மாட்டிக்கிட்ட மாதிரி சாக வேண்டியதுதான்". "சும்ம இருங்க சுரேஷ்! பயத்திலே என்ன புரியுது? நீங்க வேற இன்னும் களேபரப்படுத்துறீங்க!

எல்லோரும் இப்படியே அரட்டை அடித்துக்கொண்டு அரை மணி நேரம் நின்றிருந்தனர். சில கொரியன்வாசிகளும் இதற்குள் சேர்ந்திருந்தனர். எல்லோரும் இனிமேல் ஒன்றும் நடக்காது என்று சமாதானம் செய்து கொண்டு மீண்டும் லிப்ட்டு இருக்கும் இடத்திற்கு வந்தனர்.

நந்தகுமார் யோசித்தான். வாழ்வு எவ்வளவு நிலையற்றது. இன்று ஜப்பானைத்தாக்கிய பூகம்பம் கொரியாவைத் தாக்கியிருந்தால்? இந்தக் கட்டடம் ஒடிந்து விழுந்தால், அதில் நசுக்கிச் சாவது சுகமானதா? வாழ்வு முடியும் என்றே தோன்றுவதில்லையே! இப்படித்தானே இருந்திருக்கும் செப்டம்பர் 9ம் தேதி உலக வர்த்தக மையத்தில் இருந்தவர்களுக்கும். ஒரே இடி. பொல, பொலவென்று உயிர்கள் பொய்த்துப் போகின்றன. குஞ்சும், குழவியுமாகத்தானே சுனாமி அள்ளிக் கொண்டு போனது? சுற்றுலாக் காண வந்த சிறுவன், தன் பெற்றோரை இழந்துவிட்டு கையில் ஒரு பலகையுடன் நின்றானே. அப்பையனாக நான் இருந்தால். நந்தகுமாருக்கு நெஞ்சு துடித்தது. அல்பம். மகா அல்பம் வாழ்வு! இதற்குப் போய் ஊரை விட்டு, உறவை விட்டு இங்கு தனியாக வாழ்கிறோமே! அம்மா இந்தச் சேதி கேட்டால் பதறி விடுவாள். அவளுக்குத் தாங்காது. உடனே ஊர் திரும்பிவிடு என்பாள். ஊரில் இருந்தால் மட்டும் சாவு விடுமா என்ன? வருவது என்றும் வந்தே சேரும். எவ்வளவு பேசினாலும், யோசித்தாலும் மரணத்தின் பிடிக்குள் பொழுதுகளை கற்பனை செய்ய முடிவதே இல்லை. நினைக்க, நினைக்க வாழ்வு நிலையானது என்றே சொல்கிறது. ஏனெனில் நினைத்தல்தானே வாழ்வு. நினைவற்ற பொழுதுகளை எப்படி நினைக்கமுடியும்? இவ்வளவு நிலையாமையிலும் உலகம் சௌந்தர்யமாக இருந்தது. ஏரி, குளம் போல் கடல் தென்றல் தவழ சிலிர்த்துக் கொண்டிருந்தது. நீலக்கடலுக்கு போட்டி போட்டுக் கொண்டு வானம் வெளிர்த்திருந்தது. மலர்கள் சிரித்தன. மக்கள் சிரித்தனர். மலைகள் சிலிர்த்தன. உலகமே மதுரமாக நின்றது. நந்தகுமார் மெல்ல, மெல்ல நிலையாமை எண்ணத்திலிருந்து விடுபட்டு, முடி வெட்டிக் கொள்ள வேண்டுமென்று பல வாரங்களாக ஒத்தி போட்டதை நினைத்துக் கொண்டான். கால்கள் தானாக முடிவெட்டும் நிலையத்திற்குப் போனது.

ரிச்சார்டு ஹேர் கட்டிங் சலூன் கல, கலவென்று இருந்தது. நிறையப் பெண்கள். எல்லோரும் அன்று இந்தோனிசிய உடையில் இருந்தனர். கலர் புல்லாக இருந்தது! நிறையப் புதிய முகங்கள். மாற்றிக் கொண்டே இருப்பார்கள் போல. கதவைத் திறந்து வரவேற்றவன்...அவன்தான்! அவள் இல்லை! கொரியப் பையன்கள் சுத்தமாக மீசையை வழித்து விடும்போது வித்தியாசமே தெரிவதில்லை. எல்லோருக்கும் குழந்தை முகம். எல்லோரும் கிராப் வெட்டிக் கொள்கின்றனர். எல்லோரும் முடிக்குச் சாயம் பூசிக்கொள்கின்றனர். இவனிடம் கொஞ்சம் பெண் வாடை கூடவே இருந்தது. தொள, தொள என்று அலிபாபா பேண்ட் வேற. பாவடையா? காற்சட்டையா என்று கவனித்துப் பார்த்தால்தான் புரிந்து கொள்ள முடியும்! அவன் என்னை உள்ளே அழைத்து சோபாவில் உட்காரச் சொன்னான். அருகில் ஒரு வாண்டு தனியாக உட்கார்ந்து இருந்தது. அவளை நோக்கி நந்தகுமார், "என் சின்ன ராணியே! நான் உன் அருகில் அமரலாமா?" என்றான். அது இவனைப் பேந்தப் பேந்தப் பார்த்தது. 5 வயது இருக்கலாம். நல்லவேளை இவன் மீசையையும், கிருதாவையும், இன்னும் செதுக்கப்படாத முடியையும் பார்த்து பயந்து "அம்மா!" என்று ஓவென அலறவில்லை. அந்த மட்டுக்கு நல்லது என்று அமர்ந்து கொண்டு வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான். உங்களுக்கு குடிக்க என்ன வேண்டும்? எதாவது ஜூஸ்? தேனீர்? காபி? என்று கேட்டாள் மேனேஜர். அப்படித்தான் இருக்க வேண்டும். இங்கு யார் மேனேஜர், யார் சிப்பந்தி என்பதே தெரிவதில்லை. எல்லொரும் பணிவாக இருக்கிறார்கள். எல்லோரும் வாடிக்கையாளர் மேலேயே கவனமாக இருக்கின்றனர். அவர்களைக் கவர்ந்து தக்க வைத்துக் கொள்வதே வியாபார தந்திரம். காபி எனச் சொல்லிவிட்டு சலூனைப் பார்த்தான். ஏறக்குறைய 20 பேர்களுக்கு மேல் வேலை பார்க்கும் இடத்தில் ஒரு சத்தம் இல்லை. ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ள சின்ன மைக்ரோபோன் வைத்திருந்தனர். என்ன பேசுகிறார்கள் என்று அவர்களுக்கே கேட்குமா? என்று நந்தகுமாருக்குத் தோன்றியது. எல்லோரும் முக மலர்ச்சியுடன் வேலை செய்து கொண்டிருந்தனர். கீழே விழும் முடியை ஒரு பணிப்பெண் சுத்தமாக வாரிக்கொண்டே இருந்தாள். இடம் அவ்வளவு சுத்தமாக இருந்தது. சலூன் என்பது ஊருக்கு ஊர் வித்தியாசப்படுகிறது. நந்தகுமார் வளர்ந்த ஊரில் அரசியல் கிட்டங்கிக்குப் பெயர் சலூன் என்பது. முடி வெட்டுபவர், வெட்டப்படுபவர், உட்கார்ந்து இருப்பவர் என்று எல்லோருமே கார சாரமாகப் பேசிக் கொண்டிருப்பர். சில நேரங்களில் வாக்குவாதம் வந்துவிடும். உங்க தலைவர் என்ன செஞ்சாரு? இவரு வண்டவாளமென்ன? எனக்கேள்வி சூடாகும். முடி வெட்டிக் கொள்ளப்படுவர் தலையைத்திருப்பி பேசவிடாதவாறு திருத்துபவர் இறுக்கிப்பிடித்திருப்பார். ஆத்திரத்தில் ஒரு முறை முடி வெட்டிக் கொண்டிருக்கும் கத்தரிக்கோலைப்பிடிங்கி எதிராளி மேல் எறிந்துவிட்டார். நல்லவேளை நந்தகுமார் தப்பித்தான். இந்தக் கசமுசா, அழுக்குப்பிடித்த, சலவையே செய்யாத துணி, முடி திருத்துவரிடமிருந்து வரும் மலபார் பீடி நாற்றம் இவையெல்லாம் நந்துவை மிரட்டும். அப்பா சொல்கிறாரே என்று முடிவெட்டிக்கொள்ளப் போவான். இல்லையெனில் அடிவிழும்!

அது சலூன் என்பதால் எல்லாவகையான சேவையுமுண்டு. நலுங்காமல், குலுங்காமல் வரும் நங்கைகள் கையிலிருக்கும் நகப்பூச்சை நீக்கிவிட்டு புதிதாக போட்டுக் கொள்ள இங்கு வருவர். சும்மா, முன்னால இருக்கும் இரண்டு முடியைத் திருத்தி வாரக்கடைசியில் புதுமை செய்ய வருவாள் ஒரு பெண். இருக்கின்ற வர்ணத்தைப் போக்கிவிட்டு பச்சை, மஞ்சள் என்று கலந்து அடி என அடம்பிடிப்பாள் ஒரு மாது. நேரான முடியைச் சுருள வைப்பாள் ஒருத்தி, சுருட்ட முடியை நேராக்குவாள் இன்னொருத்தி. பள்ளிச்சிறுவர்கள் மொட்டையடித்துக்கொள்ளாத அளவிற்கு குறையாக முடிக்குறைப்பு செய்வர். சலூன் நடத்துவது சுவாரசியமான தொழில்தான் என நினைத்துக்கொண்டு பக்கத்து வாண்டுவைக் கவனித்தான் நந்தகுமார். அது தனிமையின் சோகத்தில் தூங்கி வழிந்து கொண்டு இருந்தது. அம்மா எங்காவது ஒரு மூலையில் கருப்பு முடியை பளுப்பாக்கிக் கொண்டிருப்பாள். இது தூங்கி ஒரு பக்கம் சாயும். தாங்குவதற்கு ஒன்றுமில்லை என்பதால் துடித்து தலையை நேரே வைக்கும். அடுத்த நொடியில் தலை அங்கு சாயும். மீண்டும் துடிக்கும். நந்தகுமாருக்குக் காணச் சகிக்கவில்லை. குழந்தை என்ன பாடு படுகிறது. கன்னமும், அதுவும் அப்படியே குலாப்ஜாமூன் மாதிரி. அப்படியே விழுங்கிவிடலாம் போன்ற அழகு. முடியை மிக லாவண்யமாக மேலே வைத்து கிளிப் செய்திருந்தது. அதனால் செக்கச் செவேல் என்று காதுகள் கண்ணாடி வெளிச்சத்தில் மின்னின்னின. அப்படியே அள்ளி மடியில் போட்டுக்கொள்ளத் துடித்தது நந்தகுமாருக்கு. யார் பெத்த பிள்ளையோ. இவன் பாட்டுக்கு உரிமை கொண்டாட, அது தப்பாகிவிட்டால். யார் அந்தத் தாயார் என்று ஒரு நேட்டம் விட்டான். யாரும் கண்டு கொள்வதாய் தெரியவில்லை. குழந்தை சரியாகத்தூங்க முடியாமல் அவதிப்பட்டது. மிக நாகரீகம் தெரிந்த குழந்தையாக இருக்க வேண்டும். வாரிச் சுருட்டிக் கொண்டு சோபாவில் விழுந்து படுக்காமல் முடிந்த மட்டும் அம்மா விட்டுப் போன நிலையில், உட்கார்ந்த படியே தூங்கப் பார்த்தது. உடல் என்ன செய்யும்? தூக்கம் வந்தால் தள்ளாடத்தானே செய்யும். பெரியவர்களே தடுமாறும்போது, சிறு குழந்தை என்ன பாடு படும்?

நந்தகுமாரால் இனி ஒரு நிமிடமும் பொறுக்க முடியவில்லை. அப்படியே குழந்தையைத் தூக்கி தன்னருகில் கொண்டு வந்தான். தன் மீது சாய வைத்தான். தூக்கக் கலக்கத்திலிருந்த சிறுமி கண்டு கொள்ளவில்லை. ஆயினும் அதற்கு இன்னும் தோதாக தூங்க வரவில்லை. பக்கத்தில் சிறு, சிறு தலையாணிகள் இருந்தன. சாயும் அடித்து, உலரும் காலம் வரை மடியில் தலையாணி போட்டுக்கொண்டு புத்தகம் வாசிப்பதற்காக உள்ளவை. ஒன்றை எடுத்து தன் மடியில் வைத்தான். குழந்தையை லாவகமாக அணைத்துக் கொண்டான். அது தலையணையில் தலை வைத்து நிம்மதியாகத் தூங்கி விட்டது. அப்பாடா! என்றிருந்தது. கொஞ்ச நேரத்தில் இவனை முடிவெட்ட அழைத்துவிட்டனர். தூக்கம் கலையாமல் குழந்தையை படுக்க வைத்தான். பணிப்பெண் உதவி செய்து குழந்தையை சோபாவிலேயே தூங்க வைத்தாள்.

நந்தகுமாருக்கு இங்கு முடி வெட்டுவது பிடிக்கும். சில நேரம் பெண்கள் வெட்டுவர். அவர்கள் மெல்லிய கைகள் படும்போது இவன் உடல் சிலிர்க்கும். தலையைக்கழுவி சுத்தம் செய்யும் போது சில பெண்கள் மஜாஜ் செய்வர். அதுதான் இவனுக்கு சொர்க்கம். சுரேஷ் கூப்பிடுவான். "வாடா! அப்படியே போய்ட்டு வருவோமென்று". கணக்குப்போட்டுப் பார்த்தான். ஒரு அரைமணி சுகத்திற்கு ஆகும் செலவிற்கு, வீட்டிற்கு அனுப்பினால் தங்கையின் படிப்புச் செலவுக்கு ஆகும் என்று கணக்கு முடியும். எனவே நந்தகுமார் இந்த முடிவெட்டிக்கொள்ளும் சுகமே தாம்பத்ய சுகமென்று பழகிக்கொண்டுவிட்டான். இப்போது அப்படியானதொரு சுகத்தில் இருந்தான். எல்லாம் முடிந்து காசு கட்டிவிட்டு கிளம்பும் போது பணிப்பெண் அச்சிறுமியை பத்திரமாகக் கொண்டு வந்து இவனிடம் ஒப்படைத்தாள். அடக்கடவுளே! இந்தக் குழந்தை பற்றி மறந்தே போனேனே! இது இன்னும் போகலையா? நந்தகுமார் விளக்கப்பார்த்தான், அது தன் குழந்தை இல்லையென்று. அப்படிச் சொல்லக்கூட மனது வரவில்லை. ஒரு கொரியக்குழந்தையின் தந்தை என்று என்னிடம் நீட்டுகிறாள். அவள் கொள்ளும் நம்பிக்கைக்காவது இந்தக் குழந்தையைத் தூக்கிக் கொண்டு போய்விட வேண்டுமென்று ஒரு மனது சொன்னது. இது என்ன விளையாட்டா என்ன? பெற்றோர் பின்னால் தேடிக்கொண்டு வந்தால் என்ன ஆவது? இவன் முழிப்பதைப் பார்த்து பணிப்பெண் ஒருவாறு ஊகித்துவிட்டாள். குழந்தையிடம் உன் அம்மா எங்கேம்மா? என்று கேட்டாள். குழந்தை இவனைப் பார்த்தது. இது என்னடா புது பந்தம். இந்தக் குழந்தைக்கு என் மேல் ஏன் வாஞ்சை வந்தது? என்று அவனுக்குத் தோன்றியது. ஏன் வரக்கூடாது? யாரோ பெற்ற பிள்ளையாக இருந்தாலும் இவன் உள்ளம் உடனே இரங்கியதே. அதை அந்தப் பிஞ்சு உள்ளம் புரிந்து கொள்ளாதா? நந்தகுமாரும் குழந்தை அம்மாவைக் கண்டுவிடும் என்று பார்த்தான். அவள் அம்மாவை அங்கு காணவில்லை. இது என்ன கிரகச்சாரம்! குழந்தையைக் கூட்டிக்கொண்டு வந்தவளுக்கு திரும்ப அழைத்துக்கொண்டு போகத் தெரியாதோ? அப்போதுதான் அவனுக்குத் தோன்றியது, கூட்டிகொண்டு வந்தது ஏன் தந்தையாக இருக்கக்கூடாது? எல்லோரும் அம்மாவைக் காட்டு என்றாள் அந்தச் சிறுமி என்ன செய்வாள்? தாய்க்கு குழந்தை என்பது வேற்றுயிர் அல்லவே. அது அவள் உடை போல் அல்லவா? நீங்காதே!

இவனால் கூட்டிக்கொண்டும் போகமுடியாது, விட்டுவிட்டு வரவும் மனசில்லை. அந்தச் சிறுமி தூங்கிய கண்களுடன் இவனையே பார்த்து நின்றது.

ஜில்லென்ற காற்று வீச அடுக்குமாடிக்கு வரும் போது அவனுக்குத் தோன்றியது, இன்று செத்திருந்தால் இந்த அன்பை அனுபவித்திருக்க முடியாது என்று. அந்தக் குழந்தை அவன் கண்களிலேயே நின்றிருந்தது.

அன்று வசந்தம் வந்திருந்தது அவனுக்கும்.

(எந்தெந்தப் பத்திரிக்கைக்கு எப்படி அனுப்பலாம் என்பது போன்ற யோசனைகள் வரவேற்கப்படுகின்றன ;-)

8 பின்னூட்டங்கள்:

Ramachandranusha 3/20/2005 11:00:00 PM

பத்திரிக்கையா, வந்து வந்து திண்ணைன்னு ஒரு (இணைய) பத்திரிக்கை இருக்கு அதுக்கு அனுப்பலாம்:-) ஆனா அதுக்கூட புதுப்பிக்கப் படுவதில்லை. நல்லா இருக்குன்னு ஒரு நட்சத்திர குத்து குத்திட்டேன்.
உஷா

மதி கந்தசாமி (Mathy) 3/20/2005 11:18:00 PM

கதை நன்றாக இருக்கிறது கண்ணன்.

நல்ல விவரணை. முடிவெட்டிக்கொள்ளும் கதை என்றதும் ரமணிதரனின் கதை ஞாபகம் வந்தது.

//(எந்தெந்தப் பத்திரிக்கைக்கு எப்படி அனுப்பலாம் என்பது போன்ற யோசனைகள் வரவேற்கப்படுகின்றன ;-)//

விமர்சனங்களை நீங்களும் நல்லபடி ஏற்றுக்கொள்வதில்லையோ என்று தோன்றுகிறது கண்ணன்.

ஒரு சிலர் ஏதேதோ சொல்லியிருந்தாலும் பெரும்பாலானவர்(நான் உட்பட) என்ன சொன்னோம் என்பதை நீங்கள் கவனிக்கவில்லை அல்லது கவனிக்க விரும்பவில்லை.

எந்தமாதிரி கதையை நீங்கள் எழுதவேண்டும் என்று சொல்லவில்லை. நீங்கள் எழுதிய கதையில் இருந்து ஓட்டைகளை எடுத்துச் சொன்னேன். அதற்காக ஒரேயடியாக உங்களை எந்தந்த மாதிரி கதைகள் எழுத வேண்டும் என்று சொல்லவில்லை. எந்தந்தப் பத்திரிகைக்கு அனுப்பலாம் என்று ஒருவர் சொன்னதும் விமர்சனந்தான். அதை எல்லோரின் தலையிலும் கட்டாதீர்கள். அடுத்த கதைக்கும் சுமந்துகொண்டு வராதீர்கள்.

வலைப்பதிவிகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாக நீங்கள் எழுதிய மறுமொழிக்ளிலும் உங்கள் வலைப்பதிவுகளிலும் நீங்கள் எழுதிய மறுமொழிகளிலும் நாங்கள் சொன்னதை திசைதிருப்பி விடப்பார்க்கிறீர்கள் என்று புரிந்துகொண்டேன்.

உங்களின் மறுமொழிகள் ஏமாற்றமாய் இருக்கின்றன.

-மதி

Kangs(கங்கா) 3/20/2005 11:44:00 PM

அன்று வந்தது பூகம்பமா?, புதுக் குழந்தையின் நட்பா?.

கதை நன்றாக இருக்கிறது கண்ணன்.

Ramachandranusha 3/20/2005 11:45:00 PM

கண்ணன், நீங்கள்முன்பு எழுதிய கதையைப் படித்ததும் இலக்கிய இதழுக்கு சரியானது என்றேன். ஆனால் அந்த விமர்சனத்தை அத்துடன் மறந்துவிட்டேன்( இது எந்தளவு நீங்கள் நம்புவீர்கள் என்பது எனக்கு சந்தேகம்தான்) இப்பொழுது இந்த கதை நன்றாக இருந்தாலும், பத்திரிக்கைக்கு என்னும் பொழுது, திண்ணையில்தான் போடுவார்கள் என்று சொன்னேன். பிறகு மதியின் மறுமொழியைப் பார்த்த பிறகுதான், போன கதைக்கு என்னுடைய சிபாரிசு ஞாபகம் வந்தது. இவை எல்லாம் சின்ன விஷயம் அல்லது சும்மா ஒரு விட் அடிப்பது என்ற நினைவில்தான் இப்படி மறுமொழி எழுதுகிறேன். இவைக்கு எந்த உள் அர்த்தமோ அல்லது நக்கலோ இல்லை. நான் சொல்ல நினைக்கும் விமர்சனங்கள் படைப்புக்கே தவிர படைப்பாளிக்கு இல்லை. அது நன்றாக இருந்தாலும் சரி, மோசம் என்று என் மனதில் பட்டாலும் சரி, நேராக சொல்லிவிடுவது. ஏன் இந்த சின்ன விஷயங்களை எல்லாம் மனதில் சுமந்து சுமைகளை அதிகரித்துக் கொள்ள வேண்டும் என்பதால் என்னைக் குறித்து சொல்பவையே எனக்கு மறந்துவிடும்.
முகமறியாத நட்புக்கள், ஆனால் இதுவரை எந்த பிரச்சனையும் யாராலும் வந்ததில்லை. இனி வராமல் இருக்க, இத்தகைய மறுமொழிகளை அல்லது மறுமொழி அனுப்புவதையோ நிறுத்திவிடு என்று மனசாட்சி சொல்கிறது.
உஷா

நா.கண்ணன் 3/21/2005 11:57:00 AM

உஷா! எங்கே இந்தக் கதையைப் படிக்காமல் விட்டுவிடுவீர்களோ என்று பயந்தேன்! ஏனெனில் அந்தப் பின் குறிப்பு உங்களுக்குத்தான் :-) எது எங்கு சேரும் என்று நன்கு அறிந்தவர் நீங்கள்தானே :-) உஷா, don't worry, I won't mistake you. என்ன இருந்தாலும் 'தர்ம அடியை' ஆரம்பித்து வைத்த புண்ணியவதி இல்லையா? :-))

நா.கண்ணன் 3/21/2005 12:11:00 PM

மதி: பின்னூட்டத்திற்கு நன்றி. அதில் தெறிப்பது தன் முனைப்புதானே :-) வாசகனுக்கு இருப்பது போல் ஆசிரியனுக்கும் சில எதிர்பார்ப்புகள் உண்டு. வாசகன் விமர்சனம் வைத்தாலும் அவன் காணத்தவறும் குறைகளைக் கண்டு வருத்தப்பட எல்லா உரிமையும் எனக்குமுண்டு. நீங்கள் சொல்வது போல் காண வேண்டியதை விட்டு விமர்சனங்கள் கதைக்கருவை திசை திருப்பி விட்டன என நான் நினைக்கலாம் அல்லவா? இன்னொன்று கவனீத்தீர்களா? என் ஆதங்கத்தின் பின்புலத்தை.... பிரச்சனைகளுடன் உறவு கொள்ளவே வாசகன்/வாசகி துடிக்கிறான்/ள். அந்தக் கதையின் பின்னூட்டம் எத்தனை? இக்கதையின் பின்னூட்டம் எத்தனை? பாலியல் சார்ந்த நாராயணன் மடல்களுக்கு வந்த பின்னூட்டம் எத்தனை? இல்லையென்று மறுத்தாலும் பிராய்டியன் உளவியல்படி அதுதான் நம்மை ஈர்க்கிறது. அதைச் சொன்னால் வம்புதான் :-))

இந்தக்கதையின் அடிக்கோடு, இருத்தலின் சாரம்சமே இந்த அன்பை இனம் காணுதல்தான். சாவு நிரந்தரம். வாழ்வில் கண்டு அடைய வேண்டியது அன்பே. இது பழைய புராணம் போல் படவில்லை!

அந்தப் பின் குறிப்பு உஷாவிற்கு. எல்லோருக்குமல்ல :-)

விமர்சனத்தை விமர்சனம் செய்வதால் பல விஷயங்களைக் கண்டறிய முடியும். பல பேர் மிகச் சுவாரசியமாக எழுதியிருந்தார்களே!

நா.கண்ணன் 3/21/2005 12:12:00 PM

கங்கா நன்றி. பூகம்பம் என்ன சார், பூகம்பம்! குழந்தை கிடைக்குமா :-)

ஜெயந்தி சங்கர் 3/21/2005 12:37:00 PM

கதை நன்றாக இருக்கிறது கண்ணன்.
நன்றி