சாயரட்சை (சிறுகதை)

ஏரிக்கரையில் உட்கார்ந்து கொண்டு அந்த அழகிய வனப்பை ரசித்துக் கொண்டிருந்தான். பனி உருகிக் கசிந்த நீர் ஸ்படிகம் போல் ஜொலித்து, ஜிலு, ஜிலுவென்று அசைந்து கொடுத்தது. நீர் உணர்வதை உடலும் உணர்ந்தது மெல்லிய காற்றின் ஸ்பரிசத்தில். மலை அருகில்தான் இருந்தது. 'வா' என்றது மலை. ஆற்றின் கரையிலிருந்து மலையைப் பார்ப்பது போல் மலை முகட்டிலிருந்து ஆற்றைப் பார்த்தால் எப்படியிருக்கும் என்றொரு எண்ணம் பிறந்து, வளர்ந்து, உந்தித் தள்ளியது. பின்பையைச் சரிசெய்து கொண்டு நடக்க ஆரம்பித்தான். மலை எட்ட இருந்து பார்க்கும் போது கிட்டும் தூரத்தில் இருந்தாலும் நடக்கும் போது நீண்டது. குட்டையாய் எட்ட நின்ற மரங்கள் கெட்டியாய் ஓங்கி இருந்தன அருகில். கோடு போட்ட பாதையில் பழகியவன் அவன். வரைபடமற்று பரந்து கிடந்தது வனம். மேலே, மேலே ஏற, ஏற நதி அருவியாய் கொட்டுவதைக் காண முடிந்தது. மலையின் கசிவு நதியாய் மாறுவதைக் காண முடிந்தது. இலையின் நுனித்துளி கூட ஆறாய், அருவியாய், ஏரியாய் மாறமுடியும் என்று மின்னிச் சொல்லி வடிந்துக் கரைந்தது. இப்போது அவன் ஒரு முகட்டிலிருந்தான். பரந்து பெரிதாயிருந்த ஏரி கண் பரப்பிற்குள் விழுந்து குவிந்தது. வானுக்கும், நீருக்கும் வித்தியாமில்லாமல் நீலம் கரைந்து வரைந்திருந்தது. அப்படியே தவ்விப் பறந்த புள்ளுடன் துணை சேர கால்கள் பரத்தன. உள்ளுள் ஜன்மப்பயம் தரையிலிலேயே நிறுத்தியது. காலம் கசிந்து மணியாய் ஓடியதை அவன் உணரவில்லை. இருட்டத் தொடங்கியது.

இறங்கத் தொடங்கினான். இருட்டுத் தொடர்ந்தது. கானகத்தின் உள்ளே இருட்டு மிக விரைவாகவே புகுந்து விடுகிறது. பாதை சரியாகத் தெரியவில்லை. குத்து மதிப்பாக இறங்கிக் கொண்டிருந்தான். எங்கு போகுமோ? ஒரு நிலையில் அவனுக்கு நம்பிக்கை குறைந்து விட்டது. தன்னைக் கடிந்து கொண்டான். இயற்கை இவனை இழுக்கும். அது தெரிந்ததுதான். ஹைவேயில் கார் ஓட்டிக்கொண்டிருக்கும் போதுதான் சந்திரோதயம் ஆகும். அந்த வட்டச் சொளகு! மஞ்சள் முகம்! நிற்காமல் எப்படி ஓட்ட முடியும்? கூட வரும் மனைவிதான் காவல். இல்லையெனில் என்றோ பரலோகம் போயிருப்பான். ஒரு பார்டியில் ஒரு நடுவயது மாது இவனிடம் வந்து 'உங்களுக்கு சந்திர, சூரியோதயங்கள், நட்சத்திரங்கள் பிடிக்குமோ?' என்றாள். 'உண்மைதான், உங்களுக்கு அது எப்படித் தெரியும்? நாம் முன்ன பின்ன பார்த்ததில்லையே?' 'இப்போது பார்க்கிறோமே! முகம் சொல்கிறது!' என்று போய்விட்டாள். எழுதி வைத்திருக்கிறது போலிருக்கிறது. வீட்டு ஞாபகம் வேறு வந்து விட்டது. கடவுளே! எப்படிப் போய் சேருவேன்? உதவிக்கு ஒரு ஆளைக் காணோமே? அரமணி நேரமாகச் சுற்றிக் கொண்டிருக்கிறான். ஆள் அரவமில்லை. நரிகள் கூட்டமாய் சேர்ந்தால் ஆளைக் கொன்று விடுமாமே?

ஏதோ பாதை பிரிவது போல் கலங்கலாத் தெரிந்தது. எந்தப் பாதையை எடுப்பது? எது எங்கு போகும்? ம்ம்ம்...?

வலது பாதையை எடுத்தீங்கன்னா அருவிக்கரைக்குப் போகும், இடது பாதையை எடுத்தீங்கன்னா ஊருக்குள்ள போகும்.

அப்போதுதான் கவனித்தான், குரல் வந்த திசை நோக்கி. இருட்டிலே ஏதோ பாறாங்கல் என்று நினைத்து விட்டான். யாரோ குனிந்து ஷூ லேஸ் மாட்டிக்கொண்டு இருந்தார்கள்.

தொண்டையக் கனைத்துக் கொண்டான். இதுவரை இருந்த பயத்தைக் காட்டி விடக் கூடாதே என்று கவனமாக இருந்தான்.

"நல்ல வேளை! ஆள் அரவமே இல்லையேன்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன். நீங்க எங்கேயிருந்து வரேங்க?"

"மலையிலிருந்து"

"ஹி..ஹி..அதுதான் தெரியுதே. உள்ளூரான்னு கேட்டேன்" பேச்சை வளர்த்தான். அது பயத்தைப் போக்கும்.

"இல்லை. நானும் பயணிதான். சொந்த ஊர் வடசென்னை"

"அப்படியா? நம்ம ஊர் தான்".

"வட சென்னையிலே எங்கே?"

"ஜவகர் தெரு"

"அட! நம்ம தெருதான். எந்தனாம் நம்பர் வீடு? சாரப் பாத்தது இல்லையே?"

"இருட்டா இருக்கில்லே"

"அட! அதைச்சொல்லலீங்க!"

"35, ஜவகர் தெரு"

"என்னது 35 ஆ!" அவன் வாயைப் பிளப்பது இருட்டில் யாருக்கும் தெரியவில்லை.

"என்ன சார்! ரொம்ப கிட்டக்க வந்துட்டீங்க!"

"இல்லையே! தள்ளித்தானே நடக்கிறேன்"

"அட நீங்க ஒண்ணு, ஜோக் அடிக்கிறதை நிறுத்தமாட்டீங்க போல! 35ம் நம்பர் அபார்ட்மெண்டிலே எந்த மாடி"?

"7ம் மாடி, 7C"

தூக்கிவாரிப்போட்டது அவனுக்கு. ஏனெனில் அது அவன் வீடு.

"என்னையப்பத்தி நல்லா தெரிஞ்சிக்கிட்டு என்கிட்டயே பீலாவுடறீங்க இல்லே! அது என் வீடு சார்"

"உங்களைப்பத்தி நல்லா தெரிஞ்சிக்க முடியும்ன்னு நம்பறீங்களா? வண்டார்குழலிக்கு இன்னும் தெரியலையே!"

என்னது? அடப்பாவி! என் மனைவி பேரைச் சொல்லறான்.

"நீங்க யாரு பிள்ளை? சொல்லுங்க பாப்போம்?"

"நான் அம்மா பிள்ளை!...சரி..சரி..கோபிச்சுக்காதீங்க...அதுதானே நிச்சயம் அதுதான் சொன்னேன். சங்கரநாராயணன் பிள்ளை. ஏன்?"

இவன் அப்படியே ஸ்தம்பித்து நின்று விட்டான். தூர விளக்குகள் தெரிந்தன. கீழிறக்கம் ஆகியிருந்தது. மேலேதான் இருட்டு. கீழே இன்னும் சாயரக்ஷை. மாலை முடிந்து, இரவு புலரும் போது. பகலுமில்லை, இரவுமில்லை. ஒன்றில் ஒன்று கலந்து, நிறம் பிரிக்கமுடியாத வர்ணக்கோர்வையில் வானம் அவனைப்பார்த்து சிரித்தது.

"சரி, இத மட்டும் சரியாச் சொல்லிடுங்க. நீங்க எந்த வருஷம் பிறந்தீங்க? வெளிச்சத்துக்கு வாங்க பார்த்துப்பேசுவோம்"

அவன் பேச்சைக் கேட்க அங்கு வேறொருவர் இல்லை.

2 பின்னூட்டங்கள்:

meena 3/28/2005 09:29:00 PM

கண்ணன்,இந்தக் கதை முதலில் புரியவில்லை திரும்ப திரும்ப படிக்கும் போதுதான் மெல்ல
புரிந்தது(?).

±ýÉ¢§Ä þÕó¾ ´ý¨È ¡ý
«Ã¢ó¾Ð þø¨Ä§Â
±ýÉ¢§Ä þÕó¾ ´ý¨È ¡ý
«È¢óЦ¸¡ñ¼À¢ý
±ýÉ¢§Ä þÕó¾ ´ý¨È ¡÷
¸¡½ ÅøÄŧá?
±ýÉ¢§Ä þÕó¾¢ÕóÐ
¡ý ¯½÷óÐ ¦¸¡ñ§¼§É!

இந்த பாடலின் புரிதலோ இக்கதை!?
என்னவோ அப்படித்தான் தோணுது.
சிந்திக்க வைக்கும் கதை!


\\'உங்களுக்கு சந்திர, சூரியோதயங்கள், நட்சத்திரங்கள் பிடிக்குமோ?' என்றாள்.
'உண்மைதான், உங்களுக்கு அது எப்படித் தெரியும்? நாம் முன்ன பின்ன
பார்த்ததில்லையே?''இப்போது பார்க்கிறோமே! முகம் சொல்கிறது!' என்று
போய்விட்டாள்\\

இங்கேதான் புரியவில்லை.

மீனா

நா.கண்ணன் 3/28/2005 11:22:00 PM

மீனா: முக்கியமான பாயிண்ட் புரிஞ்சிருச்சு உங்களுக்கு. அது போதும். திருமந்திரத்திலேர்ந்து quotation தரீங்க! ம்ம்ம்ம்.
>>>
நாம் முன்ன பின்ன
பார்த்ததில்லையே?''

இப்போது பார்க்கிறோமே!
>>>

இது ஜோக். நகை இல்லாத நடை சோபையில்லை.

>>>>>
முகம் சொல்கிறது!' என்று போய்விட்டாள்\\
>>>>

இதுவொரு கலை. சிலர் முகத்தைப்பார்த்து அவர்களது குணநலன்களைச் சொல்லிவிடுவர். இது பற்றி முன் தமிழ்.வலையில் பேசிய ஞாபகம்.

நன்றி மீனா.