ஹிந்தோளம்

ஹிந்தோளம் அப்படின்னு சொன்னவுடனே பலருக்கு சங்கராபரணம் படம்தான் ஞாபகம் வரும். அதிலே நம்ம கதாநாயகி சாமஜ வர கமனேன்னு ஆரம்பிச்சுட்டு அப்படியே எட்டுக்கட்டி சினிமாப் பாட்டுக்குள்ளே போயி, காதல் வசத்திலே ஸ்வரம் தப்பிப் போய் சங்கர சாஸ்திரிகள் "சாரதா!" அப்படீன்னு ஒரு சத்தம் போடுவதை யாரால் மறக்கமுடியும். பாவம்! சோமயாஜுலுவின் கம்பீரமும் இப்ப் திரைக்கு இல்லாம போச்சு.

நம்ம சௌம்யா ஹிந்தோள ராகத்திலே ராகம், தானம், பல்லவி ஒண்ணு கொடுத்திருக்காங்க. சாமகான லோலனே! எனும் பல்லவி. கொஞ்சம் வித்தியாசமா செஞ்சிருக்காங்க. ராகம் பாடறதை ரெண்டு பிரிவா பிரிச்சிக்கிட்டு முதல் பிரிவிலே வயலினை வாசிக்க வச்சு, சரி தானம் ஆரம்பிக்கும் அப்படின்னு நினைக்க வச்சு, ராகத்தை மீண்டும் தொடர்கிறாங்க. அது மட்டுமில்லே, வயலின் போய்க்கிட்டே இருக்கும் போது பின்னால 'ஹம்' வேற! கொஞ்சம் துணிச்சலான சினிமா டெக்னிக்தான்.

ஆனா! இதைக்கேட்டவுடன் எனக்கு பெங்களூர் காலேஜ் ஆப் தோல் வாத்தியம் (!) ஞாபகத்திற்கு வந்தது. ஏன்னா, இந்த புயூஷன் டெக்னிக்கை டி.வி.எஸ்.மணி, இரமாமணி முன்னமே செஞ்சிட்டாங்க. அதுலே ராக ஆலாபனை கொஞ்சம் வரும், அப்புறம் ஒரே தாவலா ஸ்வரப்பிரயோகம் செய்து கீர்த்தனை என்னென்னு தெரிவிக்காமலே பாட்டை முடிச்சுடுவாங்க. இதுக்கு பல இந்திய பக்க வாத்தியங்களோட சார்லி மரியானோவோட சாக்ஸபோன் வேற. அவரோட சக்ஸபோன் கொஞ்சம் 'கமறல் டைப்' அதிலே அவர் ராகத்தை follow up பண்ணறது கிச்சு, கிச்சு மூட்டும். சாக்ஸபோன் ரொம்ப சில்மிஷமான வாத்தியம். அதுலே ரொம்ப வித்தை காட்டமுடியும். ஏ.ரஆர்.ரகுமான் புகுந்து விளையாடுவாரு இதிலே (தாய் மண்ணே வணக்கம் -வந்தே மாதரம்- ஆல்பம் மறக்கக்கூடியதா?)! சார்லி மரியானோ blue style-ல சுயமா வாசிப்பார். சுகமா இருக்கும். நம்ம கோயம்புத்தூர்காரரு சாக்ஸபோனை நாதஸ்வரமா மாத்திட்டாரு. அது சரியில்லை! சாக்ஸபோன்னா ஒரு கமறல் இருக்கணும். நம்ம 'கமகம்' சட்டுனு வரக்கூடாது. மெனக்கிடனும். பாவி! அபஸ்வரம் வாசிக்கப்போறான்னு பரிதவிக்கும் போது கீழ விழுந்துடாத கழக்கூத்தாடி போல கம்பி மேல நடந்து காட்டணும். சார்லி செய்யறாரு அதை. அவர் கச்சேரியை ஜெர்மனியிலே ஏற்பாடு செய்திருக்கோம்.

ஒரு காலத்திலே ஒரு ராகத்தை எடுத்துக்கிட்டு மூணு மணி நேரம் பாடுவாங்க. அப்புறம் அதை அரியக்குடி மாத்தி 'கச்சேரி பந்தா' ஒண்ணு கொடுத்தாரு. அதைத்தான் இதுவரை எல்லோரும் பின்பற்றுகிறார்கள். அப்புறம் இந்த 1 மணி/2 மணி நேரக்கச்சேரியையும் 3 நிமிஷத்திலே சுருக்கி 'மெல்லிசை'ன்னு கொண்டு வந்தாங்க. ஆனா, அதிலே ஒரே ராகத்தை வச்சுக்கிட்டு பாடறதில்லே. லேசா, ராகத்தோட சாயல் காட்டினா போதும். ஹிந்தோளம் சாயல்லே ஆயிரம் பாட்டுச் சொல்ல முடியும். ரொம்ப பாபுலர் ராகம். எளிதாய் இனம் காணக்கூடியது.

ஆனா! இந்த் வித்யாகலை நடத்துற நிகழ்ச்சியிலே வண்டு, சுண்டெல்லாம் ஆயிரம் ராகம் சொல்லுது. வாசிக்கிறவனுக்கு நிச்சயம் ராகத்தோட முழு ஸ்வரூபம் தெரியாது. ஏதோ தனக்குத்தெரிஞ்சதைக் காட்டுவாறு. இதுகள் சட்டுனு புடிச்சுட்டு தேவ காந்தாரிங்கும். இன்னும் என்னென்னமோ சொல்லும்.

புதிய ராகங்கள் உருவாக்க முடியுமா? முடியாதான்னு..ஒரு பாட்டம் பாலசந்தரும், பாலமுரளியும் விகடன்லே சண்டை போட்டுக்கிட்டாங்க...

ஹிந்தோளம்ன்னா என்னென்னமோ ஞாபகம் வருது. கேட்டு ரசியுங்கள்!

11 பின்னூட்டங்கள்:

saravanan 3/30/2005 02:46:00 PM

அருமையாக இருந்தது. அதோடு இந்த குறிப்பிட்ட வலைத்தளமும் எனக்கு புதிது. அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.

ROSAVASANTH 3/30/2005 03:13:00 PM

ராஜ சேகரா..!

http://www.musicindiaonline.com/p/x/g4fgbAR.NFGfHDfOBitZ/

நா.கண்ணன் 3/30/2005 04:41:00 PM

சரவணன்: எனக்கும் ஒரு நண்பர் அறிமுகப்படுத்தியதே.
நன்றி வசந்த்: கண்டசாலாவின் உச்சகாலத்தில் வந்த பாடல். என்ன கம்பீரம். கண்டசாலாவின் தெலுங்கு கலந்த தமிழ் உச்சரிப்பு வேடிக்கையாக இருkகும். உதித் நாராயண் தமிழ் போல் :-))

பத்மா அர்விந்த் 3/30/2005 08:26:00 PM

சின்னஞ்சிறிய கிளியே கூட ஹிந்தோளம் தான். இழைவாக பாடும் படல்களுக்கு தான் இந்த் ராகம் பொருந்தும் என நினைக்கிறேன்.

ROSAVASANTH 3/30/2005 09:44:00 PM

பத்மா, 'எந்த சின்னஞ்சிறு கிளியே'வை சொல்கிறீர்கள்? பாரதி? அது ஹிந்தோளத்தில் பாடி கேட்டதில்லை!

கறுப்பி 3/30/2005 11:46:00 PM

ரோசாவசந்த எந்த "ராசசேகரா"வைச் சொல்லுகின்றீர்கள். "அக்பர்" படப்பாடலா? நான் இப்போதும் முணுமுணுக்கும் பாடல்களில் அதுவும் ஒன்று. "ராஜசேகரா என்னில் மோடி கொள்ளலாகுமா?" அப்படியா வரும். கனடாவில் ஒரு இடமும் அந்தப்பாடல் இல்லை. வானொலி நிலையங்களில் கூட இல்லை. நான் வரிகளை மீட்டு மீட்டுப் பார்த்தேன் ஞாபகம் வர மறுக்கின்றது. யாருக்காவது தெரிந்தால் தளத்தில் போட்டு விடுங்கள். அக்பர் படப்பாடல்கள் அனைத்தையுமே நான் தேடிக்கொண்டிருக்கின்றேன். எல்லாமே அருமையானவை

பத்மா அர்விந்த் 3/31/2005 12:47:00 AM

பாரதியின் பாடல்தான். எந்த ராகத்தில் அந்த பாடல் உள்ளது என்பது எனக்கு தெரியாது. ஆனால், அகில் இந்திய வானொலி நிலையத்தில் இ ரவு 11 மணிக்கு கர்நாடக சங்கீத கச்சேரி ஒலிபரப்புவார்கள். அதை பதிவு செய்வதுண்டு. அதில் ஒருமுறை, ஒரே ரகத்தில் பல கலைஞர்கள் பாடிய, தமிழ், தெலுங்கு ஆகிய இ ரண்டு மொழியிலும் பாடல்கள் ஒலிபரப்பப்பட்டன. அதில் ஹிந்தோளம் ராகத்தில் பாரதியின் பாடலை கேட்டேன். ஏற்கெனவே பிடித்த பாடலென்பதாலும், அதற்கு சில நாட்கள் முன் தான் இந்த பாடலுக்கு சித்ராவின் நடனமும் பார்த்திருந்ததால் மனதில் ஒட்டிக் கொண்டுவிட்டது.

ROSAVASANTH 3/31/2005 10:23:00 AM

நன்றி பத்மா!

கறுப்பி அது அப்பர் அல்ல, அனார்கலி! (அப்பர் மொகல் எ ஆzam என்ற இந்தி படத்தில் டப்பிங்). மேலே மியூசிகிண்டியாவில் பாடலின் உரல் தந்திருக்க்கிறேன். என்சாய்!

ROSAVASANTH 3/31/2005 01:38:00 PM

எழுத நினைத்தது 'அப்பர்' அல்ல. 'அக்பர்'.

நா.கண்ணன் 4/01/2005 08:22:00 AM

நன்றி நண்பர்களே: ஹிந்தோளம் எல்லோருக்கும் பிடிக்கும் ராகம். ஜேசுதாஸ்ஸின் 'ஸ்ரீதேவி என் வாழ்வில் அருள் சூடவா!' என்ற பாடலும் ஹிந்தோளம்தான். பாரதியின் சின்னஞ்சிறு கிளியே பாடலை எல்லோரும் ராகமாலிகையில்தான் பாடுவது வழக்கம். தனியாக ஹிந்தோளத்தில் கேட்டது கிடையாது. அப்பர், அக்பர்...அனார்கலீ..அணார்கலி..லி..லீ...என்னை மோடி செய்யலாகுமா? அம்ம! இந்த 'மோடி' ந்னா என்ன? :-) - கண்ணன்

ஜீவா (Jeeva Venkataraman) 4/11/2005 11:37:00 AM

நீங்கள் கொடுத்துள்ள சுட்டியில் நிறைய ஒலிப்பதிவுகள் உள்ளன!
இனி அலுவகத்திலும், உறங்குவதற்கு முன்னும் தினமும் கேடக வேண்டியதுதான்!
நன்றி.